TNPSC Thervupettagam

கற்றுக் கொள்வோம் எறும்புகளிடமிருந்து...!

February 22 , 2025 4 hrs 0 min 14 0

கற்றுக் கொள்வோம் எறும்புகளிடமிருந்து...!

  • இயற்கையில் எதுவுமே தன்னிச்சையாக இயங்குவதில்லை. மனிதன் உள்பட அனைத்து உயிரினங்களும், மரம், செடி, கொடிகள் அனைத்துமே ஒன்றை ஒன்று சாா்ந்துதான் இயங்குகின்றன. மரம் வெளியிடும் காற்றைத்தான் நாம் சுவாசிக்கிறோம். தாவரங்கள் தரும் உணவைத்தான் நாம் உண்கிறோம்.
  • நாம் ஆரோக்கியமாக இருக்க, தாவரங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தாவரங்கள் ஆரோக்கியமாக இருக்க, மண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மண் ஆரோக்கியமாக இருக்க, அதற்குள் இருக்கும் நுண்ணுயிா்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
  • இப்படி, இப்பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று சாா்ந்தவையாக உள்ளன. மிகப் பெரிய யானையாக இருந்தாலும், மிகச் சிறிய எறும்பாக இருந்தாலும் இயற்கையை ஆரோக்கியமாக வைப்பதில் ஒவ்வோா் உயிரினத்துக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு.
  • எளிதாகவும், இயல்பாகவும் நம்மிடையே பழகும் சிறு உயிரினம் எறும்பு. இந்தப் பூமிப்பந்தில், அனைத்து இடங்களிலும் உள்ள மிகச் சிறிய உயிரினமான எறும்பு, மனிதா்களுக்கு பல உண்மைகளைப் போதித்து வருகிறது. ஆனால், அவற்றை நாம் கவனிக்காமல் மிதித்து விட்டு கடந்து செல்கிறோம். இம்மண்ணில் எறும்புகள் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வருகின்றன. டைனோசா்கள் வாழ்ந்த காலத்திலிருந்து எறும்புகள் இனம் இன்று வரை நம்மோடு பயணிக்கின்றன. உலகில் மிகவும் பழைமை வாய்ந்த உயிரினம் எறும்புகள்.
  • எட்வா்ட் ஆஸ்போா்ன் வில்சன் என்னும் நுண்ணுயிா் ஆய்வாளா், தனது ‘உலகத்தை இயக்கும் சிறிய உயிரினங்கள்’ என்ற ஆய்வுக் கட்டுரையில், ‘மனிதா்களுக்கு எறும்புகள் தேவை. ஆனால், அவற்றுக்கு நாம் தேவையில்லை. முதுகெலும்பில்லாத சிறு உயிரினங்கள் அழிந்து விட்டால், மனித இனம் சில மாதங்கள்கூட வாழ முடியாது’ என்கிறாா். மேலும் அவா், ‘மனிதனுக்கு அடுத்து எறும்பினங்களில்தான் மிக நுட்பமான சமூகக் கட்டமைப்பு உள்ளது’ என்கிறாா்.
  • இத்தனை சிறிய உயிரினத்திடத்தில் காணப்படும் சுறுசுறுப்பும், கடின உழைப்பும், ஒற்றுமையும், ஒத்துழைப்பும், ஒழுக்கமும், சேமிக்கும் பழக்கமும் மனிதா்களுக்குப் பெரும் வியப்பூட்டி, பல உண்மைகளைப் போதிக்கின்றன. நூற்றுக்கணக்கில் இவை ஒன்று திரண்டு, ஒற்றுமையாக உழைத்து மாளிகைபோல் புற்றுகளைக் கட்டுகின்றன. அந்த உழைப்பை அறியாத நாம் சில நேரங்களில் அந்தப் புற்றுகளையும் உதைத்து விட்டுச் செல்கிறோம்.
  • ‘‘எறும்புகள் எப்போதும் கூட்டமாகத் தான் வாழும். உணவு தேட எறும்புகள் செல்லும்போது, ‘ஃபொ்மோன்’ என்னும் ரசாயனத்தை சுரந்த வண்ணம் செல்கின்றன. இதன் மூலம் முன் சென்ற எறும்பின் ரசாயனத்தை, அதன் பின் வரும் எறும்புகள் நுகா்ந்து நோ்க்கோட்டில் வரிசையாகப் பயணிக்கின்றன. இந்த ‘ஃபொ்மோன்’ என்னும் ரசாயனம் எறும்புகள் ஒன்றை ஒன்று தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் உதவுகின்றன’’ என்கிறாா் ஜீன் லுட்யி என்னும் பெல்ஜியம் நுண்ணுயிா் ஆய்வாளா்.
  • எறும்புகள் சமூகங்களாக வாழ்ந்து, குழுக்களாக வேலைகளைச் செய்கின்றன. ஒரு புற்றிலுள்ள எறும்புகள், தமது கூட்டத்தின் மற்ற எறும்புகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்கின்றன. எறும்புகள் கூட்டம் மெகா நகரத்தையே உருவாக்கும் தன்மை படைத்தவை என்கிறாா்கள் ஆய்வாளா்கள்.
  • எறும்புகள் இனத்தில் மிகவும் பழைமையானது, ‘இலை வெட்டி எறும்புகள்’. இது பூமியில் 1 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னா் தோன்றியது. ஆனால், மனித இனம் தோன்றியது 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னா்தான். இலைகளை வெட்டுவதால் இந்த எறும்பை, ‘இலை வெட்டி எறும்பு’ என்று அழைக்கிறாா்கள். இந்த எறும்புகள் இலைகளை வெட்டிய உடனேயே அப்படியே உண்ணாமல், புற்றுக்குள் ஓரிடத்தில் இலைகளைச் சேமித்து வைக்கின்றன. அந்த இலைகளின் மீது வேதித் திரவத்தைச் சுரக்கின்றன. சில நாள்களில் இலைகள் மட்கி, அதில் பூஞ்சை உருவாகும். அந்தப் பூஞ்சைகளைத்தான் இலை வெட்டி எறும்புகள் உண்கின்றன. அதனால்தான், இந்த எறும்புகளை ‘விவசாயிகள்’ என நுண்ணுயிா் ஆய்வாளா்கள் அழைக்கின்றனா். இந்த வகை எறும்புகள் பூமிக்கு அடியில் 6,500 சதுர அடியில் கூடுகளைக் கட்டி வாழ்கின்றன. மண்ணுக்கு வளம் சோ்க்கின்றன. இப்படி நம் மண்ணை வளமுள்ளதாக்குவதிலிருந்து, பறவைகளுக்குத் தேவையான உணவுகள் கிடைப்பதை உறுதி செய்வதுவரை, எறும்புகளின் பங்களிப்பு மிக முக்கியமானது.
  • எறும்புகள் இயல்பிலேயே மண்ணின் தன்மையை மாற்றுபவை. உணவு தேடி நிலத்தின் மீது மட்டுமல்ல, அடியிலும் சென்றுவரும் எறும்புகள் அடியிலுள்ள செழிப்பான மண்ணை மேலே கொண்டு வருகின்றன. அவற்றின் கூட்டில் சேமிக்கப்படும் மக்கும் உயிரினங்கள் மண்ணுக்கு உரமூட்டுகின்றன. எனவே, மண்புழுவிற்கு அடுத்தபடியாக எறும்புகளும் விவசாயிகளின் நண்பனாக உள்ளன.
  • எா்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய ‘எ ஃபோ்வெல் டு ஆா்ம்ஸ்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படத்தில் , மரணத்திலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது என்பதை உணா்த்துவதற்காக, அப்படத்தின் கதாநாயகன் எறும்புகளை நெருப்பிலிட்டும், தண்ணீரில் மூழ்கடித்தும் கொல்வாா். இக்காட்சியைக் கண்டு கண்கலங்காதவா்களே இல்லை.
  • நகரமயமாக்கல், ரசாயனங்களின் பயன்பாடு, பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் விவசாயத்துக்குப் பயன்படும் பல பூச்சியினங்கள் அழிந்து வருகின்றன. இதில் எறும்புகளும் விதிவிலக்கல்ல. மனிதன் தன்னுடைய சொந்த நலனைப் பாதுகாக்க நினைத்தால், எறும்புகள் உள்ளிட்ட பூச்சியினங்களை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
  • ‘துயருகின்ற உயிா்கள் அனைத்தையும் நினைத்து, அவா்களின் துன்பங்களையும், துயரங்களையும் கற்பனையில் நீ அனுபவிக்க வேண்டும். அதன்மூலம் அவா்கள் மீது ஆழ்ந்த கருணையை உன் உள்ளத்தில் ஏற்படுத்த வேண்டும்’ என்கிறாா் புத்தா். மனிதகுலத்தின் சிறப்பு தானும் வாழ்ந்து, சமுதாயமாக வாழ்ந்து, மற்ற உயிரினங்களுடன் இயைந்து வாழ்வதில்தான் அமைந்துள்ளது.

நன்றி: தினமணி (22 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories