கழிவுநீர் அகற்றும் தொழிலாளர்கள் காக்கப்பட வேண்டும்!
- தனியாருக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிச் சுத்தம் செய்யும் தொழிலாளர் உயிரிழக்க நேரிட்டால், அந்தக் குடியிருப்பின் உரிமையாளரே அதற்கு முழுப் பொறுப்பு என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அவரே இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், இதுபோன்ற மரணங்கள் நிகழாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதே இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.
- சென்னை விநாயகபுரத்தில் 2013இல் யோகேஷ் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பில் கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி முனுசாமி, விஷவாயு தாக்கி உயிரிழந்தார். அவருடைய குடும்பத்துக்குக் கருணை அடிப்படையில் ரூ.55 ஆயிரத்தை யோகேஷ் வழங்கினார்.
- பாதிக்கப்பட்ட முனுசாமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்படி யோகேஷுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில்தான் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.
- பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு சென்னை மாநகராட்சி ரூ.10 லட்சத்தை முன்பே வழங்கியதால், அந்தத் தொகையைக் குடியிருப்பின் உரிமையாளரிடமிருந்து வசூலிக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கழிவுநீரை அகற்றும்போது ஏற்படும் மரணங்களைத் தடுப்பதில் அரசுக்கு மட்டுமல்ல, சமூகமாக வாழும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.
- எந்தத் தனியார் குடியிருப்பிலும் கழிவுநீர்த் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டால், அந்த அடைப்பை நீக்கப் பொதுவாக யாரும் முன்வருவதில்லை. இதற்காகக் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் விளிம்புநிலை மக்களை மட்டுமே ஈடுபடுத்தும் அவல நிலை நீடிக்கிறது.
- அந்த வகையில், உயிரைப் பணயம் வைத்துக் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கும் தொழிலாளிக்கு ஏதேனும் நேர்ந்தால், அவருடைய குடும்பம் பொருளாதாரரீதியில் பாதிக்கப்படாமல் இருக்கத் தனியாரையும் பொறுப்பாக்கும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.
- என்றாலும் குறிப்பிட்ட ஒரு வீட்டில் இதுபோன்ற மரணம் நிகழ்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கத் தனிப்பட்ட உரிமையாளர் பணம் திரட்டுவதற்கு நடைமுறையில் சிக்கல் ஏற்படும் என்பதையும் மறுக்க முடியாது. கழிவுநீரை அகற்றும்போது தொழிலாளர்கள் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்குக் குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் 2023இல் உத்தரவிட்டதும் நினைவுகூரத்தக்கது.
- அதேநேரத்தில் மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் இதுபோன்ற மரணம் நிகழாதவாறு நடவடிக்கைகளை எடுப்பதே அர்த்தமுள்ளதாக இருக்கும். உள்ளாட்சி அமைப்புகளில் பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைவுபடுத்திக் கழிவுநீர் இணைப்புகளைத் துரிதமாக வழங்க நடவடிக்கை எடுப்பது அவற்றில் ஒன்று.
- கழிவுநீர் அகற்றும் பணிகள் எங்கு மேற்கொள்ளப்பட்டாலும் உள்ளாட்சி நிர்வாகங்களின் கண்காணிப்பிலேயே நடைபெற வேண்டும். இயந்திரங்கள் மூலம் கழிவுநீரைச் சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் என்பது 80 ஆண்டுகள் பழமையானது. மெக்சிகோ போன்ற வளரும் நாடுகளில் இதுபோன்ற தொழில்நுட்பம் செயல்பாட்டில் உள்ளது. நம் நாட்டிலும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீர் அகற்றுவது அல்லது சுத்தம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
- மனிதக் கழிவை மனிதனே கையால் அகற்றுதலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வுத் திருத்தச் சட்டம் 2013 நடைமுறையில் இருந்தாலும், அச்சட்டம் செயலிழந்து கிடக்கிறது என்பதை இதுபோன்ற மரணங்கள் நிரூபிக்கின்றன. சட்டத்தை மீறி ஒரு நபரை இப்பணியில் ஈடுபடுத்துவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதும் கசப்பான உண்மை.
- கழிவுநீரைச் சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்தும் இழிவை ஒழிக்கச் சட்டம் மட்டும் போதாது. இத்தொழில்கள் தேவையில்லை என்கிற நிலை உருவாக்கப்பட வேண்டும். அதுவே, கழிவுநீரை அகற்றுவதில் ஏற்படும் மரணங்களை நிரந்தரமாகத் தடுக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 02 – 2025)