கழிவுநீர் கலப்பு பிரச்சினை: ஆறுகளைக் காக்கும் அறிவு!
- நெல்லையின் அடையாளமாக உள்ள தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், கழிவுநீரை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை 7 மாதங்களாக செயல்படுத்தாத அதிகாரிகளை நீதிபதிகள் கடிந்து கொண்டதாக செய்தி வெளிவந்தது.
- தாமிரபரணியில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது, தாமிரபரணிக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்ல. காவிரி, கொள்ளிடம், வைகை, பவானி, அடையாறு, கூவம் என தமிழகத்தில் உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் இதேநிலை நீடிக்கிறது. வைகை ஆற்றில் 177 இடங்களில் கழிவுநீர் கலப்பதாக ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் கழிவுநீருடன் மருந்துப் பொருட்கள், பிளாஸ்டிக் உள்ளிட்டவை கலப்பதாக ஐஐடி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுகள் ஆற்றில் கலப்பதால் ஏற்படும் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை.
- சென்னையில் கூவம், அடையாறு பற்றி சொல்லவே தேவையில்லை. வீடுகள், அலுவலகங்கள் அனைத்திலும் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த ஆறுகள் வழியாகவே கடத்தப்படுகிறது. குறிப்பாக, ஆறு ஓடும் பாதைக்கும், கழிவுநீர் செல்லும் கால்வாய்க்கும் உள்ள அடிப்படை வேறுபாடு பலருக்கும் புரியாததன் விளைவே இது. இரண்டுமே தண்ணீர் என்ற தவறான எண்ணமே இப்பிரச்சினைக்கு வித்திடுகிறது. நல்ல நீர் ஓடும் ஆறு மற்றும் கழிவுநீர் ஓடும் கால்வாய் ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை பள்ளிக் குழந்தைகள் முதலே கற்பிக்க வேண்டும்.
- இந்த அடிப்படை அறிவுதான் ஆறுகளை பாதுகாக்கும் அவசியத்தை நமக்கு உணர்த்தும். ஆறுகளில் கலக்கும் கழிவுநீரை தடுத்து சுத்தம் செய்து மரங்களுக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்த வேண்டும் என்பது நிபுணர்களின் பரிந்துரை. சென்னை, புறநகர் பகுதிகளில் கழிவுநீர் எடுத்துச் செல்லும் லாரிகள் இயங்கி வருகின்றன. இவை இரவோடு இரவாக ஆறுகளில் கழிவுநீரை திறந்து விடுகின்றன. இந்த லாரிகளை பெரும்பாலும் அரசியல்வாதிகள் இயக்குவதால், அவர்கள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
- ஆறுகளை சுத்தம் செய்ய பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பெயரளவுக்கு மட்டுமே பணிகள் நடக்கின்றன. ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை நிறுத்தாமல், வெறுமனே சுத்தம்செய்வதற்கான பணிகளை மேற்கொள்வது எந்த அளவுக்குஅறிவுடைமை என்பதை உரியவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது அடையாறு ஒரேநாளில் சுத்தமடைந்தது.
- வெள்ளம் வடிந்ததும் மெரினா கடற்கரையில் இருப்பதைப் போன்ற மணற்பரப்பு அடையாறில் காணப்பட்டது. ஆறுகளை சுத்தம் செய்ய கோடிகளில் நிதி ஒதுக்கத்தேவையில்லை. அது தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும் தன்மையைப் பெற்றுள்ளது. அதில் கழிவுநீர், குப்பைகள் கலப்பதை தடுத்தாலே போதும். அதுதான் அடுத்ததலைமுறைக்கு நாம் செய்யும் நல்ல காரியமாக இருக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 11 – 2024)