கவிக்கோ என்கிற ஆளுமை
- இயக்குநரும் கவிஞருமான பிருந்தாசாரதியின் இயக்கத்தில், சமீபத்தில் வெளியாகியுள்ள கவிக்கோ அப்துல்ரகுமான் குறித்த ஆவணப்படம், தமிழ்ப் புதுக்கவிதையில் புதிய பாய்ச்சலை நிகழ்த்திய கவிக்கோ அப்துல் ரகுமானின் வாழ்க்கையை, இலக்கியப் பங்களிப்பை சிறப்பாக பதிவுசெய்துள்ளது. அப்துல் ரகுமான் காலத்திய கவிஞர்கள், அவரால் உருவான கவிஞர்கள், அவரது படைப்புகள் மூலம் இலக்கிய உலகத்திற்குள் நுழைந்த கவிஞர்கள் ஆகிய மூன்று காலக்கட்ட ஆளுமைகளின் பார்வைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்தப் படிநிலைகளை இணைக்கும் சரடாக வளர்ந்து வரும் இன்றைய இளைய தலைமுறை இலக்கிய ஆளுமைகள் கவிக்கோ குறித்து முன் வைக்கும் கருத்துகளை ஆங்காங்கே கொடுத்துள்ளது சிறப்புக்கு உரியது.
- தமிழில் ஹைக்கூ, கஸல், சூஃபி கவிதை எனப் பல புதிய கவிதை வடிவங்களை அறிமுகப்படுத்திப் பரப்பியவர் கவிக்கோ என்பதை கவிஞர்கள் அறிவுமதி, தமிழச்சி தங்கப்பாண்டியன், இயக்குநர், கவிஞர் லிங்குசாமி, கஸல் கவிஞர் ஜின்னா ஆகியோர் உதாரணக் கவிதைகளுடன் இப்படத்தில் விளக்குகிறார்கள். திராவிட இயக்கங்களோடு அரசியல் சார்புநிலை கொண்டிருந்த கவிக்கோ, இறை நம்பிக்கையும், பிற மதங்களிடம் சமய நல்லிணக்கமும் கடைப்பிடித்தவர். இலக்கியத்தில், கம்பனையும் உமர்கயாமையும் உள்வாங்கி வெளிப்படுத்தியவர். கவிராத்திரி, கவியரங்கம், இலக்கிய மேடைகள் என நிகழ்த்து வடிவங்களையும் அலங்கரித்தவர். தமிழே அவருக்கான மூலமாக இருந்தாலும், அரபும், உருதும் அறிந்திருந்த கவிக்கோ அதன் ஒலியையும், கவிதைப் படிமங்களையும் தமிழில் புகுத்தி கவிதைக்கான சொல்லாடலில் புதிய சுவை கூட்டியவர்.
- உலகெங்கும் இருக்கின்ற கவிஞர்களை தமிழுக்குக் கொண்டுவந்து தமிழ்க் கவிதையை உலகத் தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்பதே அவருடைய வேட்கையாக இருந்ததை, தமிழறிஞர் ஔவை நடராசன், கவிப்பேரரசு வைரமுத்து, வி.ஐ.டி வேந்தர் கோ.விசுவநாதன் உள்ளிட்ட பலரும் தமிழ் இலக்கிய வெளியில் கவிக்கோவின் புலமையையும், தமிழ் கவியரங்கத்திற்குக் கவிக்கோ புகுத்திய புது ரத்த ஓட்டத்தையும் விவரிக்கிறார்கள். கவிக்கோ பற்றிய ஆவணப்படம் என்று சொல்லும்போது, அவரது படைப்புகளைப்போலவே புதிய உத்திகள் இருக்கத்தானே வேண்டும். இதை நன்குணர்ந்த பிருந்தாசாரதி, கவிக்கோவின் மறைவுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தில் கவிக்கோ ஒரு பாத்திரமாகவே இடம்பெறுவதும், கவிக்கோவின் இளமைப் பருவத்தைத் திரைப்படம்போல உருவாக்கி இணைத்திருப்பதும் பாராட்டப்பட வேண்டியவை. ஆவணப்படங்களுக்கான பொதுத்தன்மையையும் கவிக்கோ ஆவணப்படம் மாற்றி அமைத்து காட்சிகளுடன் இணங்க வைக்கும் உத்தியைக் கொண்டுள்ளது.
- சி.ஜெ.ராஜ்குமாரின் ஒளிப்பதிவும், கவிக்கோ அவர்களுடன் நெருங்கிப் பழகிய இசையமைப்பாளர் தாஜ்நூரின் இசையும் ஆவணப் படத்திற்குக் கூடுதல் சிறப்பை வழங்கியிருக்கின்றன. சிங்கப்பூர் முஸ்தபா இதைத் தயாரித்துள்ளார். கவிக்கோவின் உள்ளும் புறமும் பயணித்து அப்துல் ரகுமான் என்ற கவிஞர் ஏன் கவிக்கோ என்று கொண்டாடப்படுகிறார் என்ற கேள்விக்கு விடையளிக்கிறது பிருந்தாசாரதியின் இந்தப் படம். 80 வயது வரை ஓய்வின்றி உழைத்த ஒரு பெரும் கவிஞரின் வாழ்வையும் பணியையும் ஒருமணி நேரத்தில் இந்த ஆவணப்படம் முழுமையாக நமக்குள் புகுத்திவிடுவது ஒரு வியப்பான அனுபவம்.
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 02 – 2025)