காணாமல் போகும் குழந்தைகள்: தீவிர நடவடிக்கைகள் தேவை!
- இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என்பதும் அவர்களில் 36 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்படவில்லை என்பதும் அதிர்ச்சியளிக்கின்றன. காணாமல் போகும் குழந்தைகள் தொடர்பாக அரசுசாரா நிறுவனம் ஒன்று பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
- பிப்ரவரி 14 அன்று நடைபெற்ற அதன் மீதான விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபர்ணா பட், குழந்தைகள் கடத்தலில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கச்சிதமான வலைப்பின்னல் அமைத்துக் குற்றவாளிகள் செயல்படுவதால் கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார். முன்னதாக, காணாமல் போன குழந்தைகளின் பட்டியலையும் மீட்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலையும் மாநிலவாரியாகச் சமர்ப்பிக்கும்படி உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.
- அதைத் தொடர்ந்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, 2020க்குப் பிறகு இந்தியா முழுவதும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயிருப்பதாகத் தெரிவித்தார். காணாமல் போன குழந்தைகளை மீட்பது தொடர்பாக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளையும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு அவர் கொண்டுவந்தார்.
- குழந்தைகள் காணாமல் போனதிலிருந்து நான்கு மாதங்களுக்குள் மாநில அரசால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அந்த வழக்குகளை ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்ற மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அதேபோல் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆள் கடத்தல் தடுப்பு மையத்தை அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதோடு, அதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் 100 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா தெரிவித்தார்.
- இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் கடத்தப்படும் மாநிலமாக உத்தரப் பிரதேசமும் நகரமாக டெல்லியும் உள்ளன. 2023 நிலவரப்படி இந்தியாவில் தினமும் சராசரியாக 294 குழந்தைகள் காணாமல் போகிறார்கள் அல்லது கடத்தப்படுகிறார்கள் என்கிறது மத்தியக் குற்ற ஆவணக் காப்பகம். 2022ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள்.
- இவர்களில் 70%க்கும் அதிகமானோர் பெண் குழந்தைகள். இந்தியாவில் நடைபெறும் குற்றங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களே 51% பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, ஆள் கடத்தல் குற்றங்களே அதிகம். குழந்தைகளின் பாதுகாப்பில் மாநில, மத்திய அரசுகளின் அக்கறையின்மையைத்தான் இது வெளிப்படுத்துகிறது.
- குற்றச் செயல்களில் ஈடுபடுத்தவும், தடைசெய்யப்பட்ட பணிகளுக்காகவும் கொத்தடிமைகளாக வேலை செய்யவுமே பெரும்பாலான குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். பெண் குழந்தைகள் பாலியல் விடுதிகளிலும் பாலியல் படம் எடுக்கும் கும்பல்களிடமும் விற்கப்படுகிறார்கள். குழந்தைகள் இப்படிக் கடத்தப்பட்டு அவர்களின் எதிர்காலம் சூறையாடப்படுவதால் அவர்களது குடும்பங்கள் மட்டுமன்றி, அவர்கள் சார்ந்த சமூகமும் பாதிப்புக்குள்ளாகிறது.
- குழந்தைகள் காணாமல் போன வழக்குகளின் தரவுகளைப் பலமுறை கேட்டும் டெல்லி, நாகாலாந்து, ஜார்க்கண்ட், பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரம் போன்ற மாநிலங்கள், தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டியிருப்பதும் கவனிக்கத்தக்கது. குழந்தைகளின் பாதுகாப்பு என்பது, நாட்டின் வளமான எதிர்காலத்துக்கான அடித்தளம் என்பதை அரசுகள் மறந்துவிடக் கூடாது.
- மாவட்டம்தோறும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு மையங்களை அமைப்பதுடன், மக்களுக்கு அது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இனி, எந்தவொரு குழந்தையும் கடத்தப்படாத அளவுக்குச் சட்டத்தையும் பாதுகாப்பு அம்சங்களையும் அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 02 – 2025)