காணொளி வலையிலிருந்து பதின்பருவத்தினரைக் காக்கும் வழிமுறைகள்
- பதின்பருவத்தினர் காணொளிகள் பார்ப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு முதல் முறையாக வெளியிட்டுள்ளது. திறன்பேசிகளில் அழைப்பது, குறுஞ்செய்திகள் அனுப்புவது உள்ளிட்ட கருத்துப் பரிமாற்றச் செயல்களை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, காணொளிகள் காண்பதற்காகப் பதின்பருவத்தினர் செலவிடும் நேரம் அதிவேகமாக அதிகரித்துவருவதாக 2024 நவம்பர் வரை உலகம் முழுவதும் வெளியான அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.
காணொளிகளின் உள்ளடக்கம்:
- காணொளிகள் எந்த வகையைச் சேர்ந்தவையாக இருந்தாலும், எந்தத் தளத்தில், எத்தகைய வழியில் வந்தாலும் அதன் உள்ளடக்கமே பதின்பருவத்தினரை அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் தொடர்ச்சியாக வெளிப்படுத்துகின்றன. பதின்பருவத்தில் எல்லாம் தெரிந்ததுபோல வெளியில் காட்டிக்கொண்டாலும், குழப்பத்துடனும் அவநம்பிக்கையுடனும்தான் அவர்கள் வளருகிறார்கள்.
- தமக்கான அடையாளத்தைக் குடும்பத்திலும் சமூகத்திலும் தேடுகிறார்கள். சில காணொளிகளின் உள்ளடக்கங்கள், பதின்பருவத்தினர் தங்கள் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளவும், இலக்கு நோக்கிப் பயணிக்கவும், பாதுகாப்பான நண்பர்களைக் கண்டடையவும், கற்பனை வளத்தை வளர்க்கவும் உதவுகின்றன.
- ஆயினும், எல்லா பதின்பருவத்தினருக்கும் உடல், உள்ள மாற்றங்கள் ஒரே வயதில், ஒரே மாதிரி நிகழ்வதில்லையே. அவரவர் வாழும் முறை, குடும்பச் சூழல், சமூகக் கட்டமைப்பு, கவலைகள், மன அழுத்தங்கள் அனைத்தின் பிரதியாகவும் தனித்தன்மையுடனும்தானே அவர்கள் வளர்கிறார்கள். அதனால், எதையெல்லாம் பதின்பருவத்தினர் பார்க்கக் கூடாது எனப் பெற்றோர் மறைத்து வைத்தாலும், ஆசிரியர்கள் அறிவுறுத்தினாலும் சிலர் எப்படியாவது அதைத் தேடிப் பார்த்துவிடுகிறார்கள்.
- எந்த உள்ளடக்கக் காணொளியை ஒருவர் பார்க்கிறார், எதைக் கடந்து போகிறார், என்னென்ன வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடுகிறார் என்பதைச் செயற்கை நுண்ணறிவு மென்பொருளைப் பயன்படுத்திச் சமூக வலைதளங்களும், இணைய சேவைச் செயலிகளும் சேகரிக்கின்றன.
- பதின்பருவத்தினர் விரும்பும் காணொளிகளைப் பரிந்துரைக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றொரு காட்சிக்கு அடுத்தடுத்து மாறுகின்றன. அவர்கள் தேர்ந்தெடுக்காமலேயே காட்சிகளைக் காட்டுகின்றன. பின்னூட்டம் இடவைப்பதுடன், முடிந்தமட்டும் அவர்களின் ஆர்வத்தைத் தக்கவைக்கின்றன.
- தங்களின் உடல் அமைப்பு, நிறம், திறமை, தைரியம், கல்வி, பெற்றோர், சமூகச் சுரண்டல் உள்ளிட்ட காரணிகளால் ஏற்கெனவே மனதளவில் பலம் இழந்திருப்பவர்களைக் குற்றஉணர்வுக்கும், இயலாமைக்கும், தாழ்வுமனப்பான்மைக்கும் இக்காணொளிகள் தள்ளுகின்றன. குற்றம் செய்யத் தூண்டுகின்றன. இதெல்லாம் தவறே இல்லை என ஆபத்தான நடத்தைகளை நம்பவைக்கின்றன. அடுத்தவர் பாதிக்கப்படுவது குறித்த உணர்வு, எண்ணம், வருத்தம் ஏதுமில்லாத ஒரு சமூகத்தை வளர்க்கின்றன.
- முன்பெல்லாம், சோகமான உள்ளடக்கக் காணொளியைப் பார்த்துக்கொண்டே பின்னூட்டங்களை வாசிக்கச் சென்றால், அதில் ஆறுதல் மொழிகளும், தன்னம்பிக்கையும் கொட்டிக்கிடக்கும். இதெல்லாம் இப்போது மாறிக்கொண்டே வருகிறது. இன்னொருவர் மகிழ்ச்சியாக இருக்கும் காணொளிகளின் பின்னூட்டங்கள்கூட மிக மோசமான, வக்கிரமான வார்த்தைகளால் நிறைந்திருக்கின்றன.
- வயதுக்கு, அறிவுக்கு, ஒருவரின் அனுபவத்துக்கு மதிப்பு ஏதுமின்றி யாரையும் எளிதில் தூற்றிவிடுகிறார்கள். பொதுவாக, வீடுகளிலும் தெருக்களிலும், அலுவலகங்களிலும்கூட ஒருவர் இவ்வளவு வக்கிரமாகப் பேசிக் கேட்டிருக்க மாட்டோம். பிறகு, எங்கிருந்து கற்கிறார்கள்? காணொளிகளின் உள்ளடக்கம் இதில் பெரும் பங்கு வகிக்கிறது.
குடும்பமும் அரசும்:
- இதிலிருந்து பதின்பருவத்தினரைக் காத்து நல்வழிப்படுத்த பெற்றோரின் பங்கு பெருமளவு தேவைப்படுகிறது. காட்சிகளின் உள்ளடக்கம் குறித்தும், எப்போது, எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பது பற்றியும் பெற்றோரும் குழந்தைகளும் கலந்துரையாடுவதன் வழியாக எதைத் தேர்ந்தெடுத்துப் பார்க்க வேண்டும் என்பதை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். கலந்துரையாடல் ஏதுமின்றி, பெற்றோரும் குழந்தைகளும் ஆபத்தான கருத்துள்ள காணொளிகளைச் சேர்ந்து பார்க்கும்போது பதின்பருவத்தினர் மிக அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
- உரையாடல் ஏதுமின்றிப் பெற்றோர்கள் கடந்துபோகும்போது, அவர்களின் அமைதியை, தாங்கள் பார்க்கும் காட்சிகளுக்கான சம்மதமாகக் குழந்தைகள் எடுத்துக்கொள்கிறார்கள். அதேவேளையில், உரையாடல் இருந்தால், குடும்பத்தில் சொல்லி வளர்க்கப்பட்ட நல்லொழுக்க மதிப்பீடுகளுக்கும் காட்சியில் உள்ள தவறான மதிப்பீடுகளுக்கும் இடையிலான வேறுபாட்டை அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
- ஆனால், தமிழ்நாட்டில் அதீத வன்முறைகள், பாலியல் சீண்டல்கள், பெண்களை விரட்டி, மிரட்டிக் காதலிப்பது, ஆசிரியர்களைப் பள்ளியில் கேலி செய்வது, வகுப்பறையில் ரெளடித்தனம் செய்வதைப் பாராட்டுவது, பெற்றோரை இழித்துப் பேசுவது போன்ற காணொளிகளை, நாடகங்களை, திரைக் காட்சிகளைக் குழந்தைகளுடன் சேர்ந்தே பெற்றோர் பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள். இங்கே உரையாடல் நிகழ்வதில்லை.
- திரைப்படம், சின்னத்திரை, இணையவழிக் காணொளிகளை மனசாட்சியுடன் தணிக்கை செய்ய அறநெறி மிகுந்த எந்த அரசும் துணிந்து செயலாற்றும். ஆனால், கள யதார்த்தம் அப்படி இல்லை! இருப்பினும், காணொளி வெளியிடும் வெவ்வேறு தளங்கள், காணொளிக்கான உள்ளடக்கத்தை எழுதும் எழுத்தாளர்கள், பெற்றோர்கள், பாதுகாவலர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்பத் துறை நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அனைவரின் சமூகக் கடமையாகக் கீழ்க்காணும் பரிந்துரைகளை அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு முன்வைத்திருக்கிறது.
பரிந்துரைகள்:
- வன்முறை, கோபம், வெறுப்பு, போதை, பாலியல் துன்புறுத்தல், தன்னைக் காயப்படுத்துதல், இணையக் கேலி, உறவுசார்ந்த கொச்சையான மொழிகள், உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவது, ஒருவரைக் குறிவைத்துக் கேலி செய்வது ஆகிய காட்சிகளைப் பார்ப்பதைக் குறைக்க வையுங்கள். குறிப்பாக, பின்னூட்டம் இட வாய்ப்பளிக்கும் தளங்களைப் பார்க்க அனுமதிக்காதீர்கள். அது ஆபத்தான நடத்தையை, சரியான செயல்தான் என ஊக்கப்படுத்தலாம்.
- பரிவு, புதியன கற்றுக்கொள்ளுதல், மகிழ்ச்சி, உணர்வுகளைப் பக்குவப்படுத்துதல் தொடர்பான காணொளிகளைப் பார்க்க ஊக்கப்படுத்துங்கள். தரமான, உண்மையான உள்ளடக்கம் உள்ள காணொளிகளைத் தேர்வுசெய்யச் சொல்லுங்கள். அதிலும் குறிப்பாக உடல், மன நலன் சார்ந்த காணொளிகளைப் பார்க்கும்போது, அந்தந்தத் துறையில் உரிமம் பெற்ற வல்லுநர்களின் காணொளிகளை மட்டும் பார்க்கும்படி வழிநடத்துங்கள்.
- ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தெடுக்க வழிகாட்டும் காணொளிகளைப் பார்க்க ஊக்கப்படுத்துங்கள். சிலரது நடவடிக்கையைப் பார்த்துப் பதின்பருவத்தினர் அதன்பால் ஈர்க்கப்படுவார்கள். அவர்களைப் போலச் செய்து பார்க்க ஆசைப்படுவார்கள். அதைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துங்கள், நெறிப்படுத்துங்கள். எவ்வளவு நேரம் காணொளிகளைப் பார்க்கலாம் என்பதை வரையறை செய்யுங்கள். இதனால் பதின்பருவத்தினரின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் தூக்கம், உடற்பயிற்சி, நல்ல பழக்கவழக்கங்கள், நண்பர்களுடனான நேரடி நேரங்களைத் தவறவிட மாட்டார்கள்.
- தானாகவே அடுத்தடுத்து காணொளிகள் வருவதும், பின்னூட்ட வாய்ப்புகள் இருப்பதும் சிக்கல்களை அதிகரிக்கவே செய்கின்றன. எனவே, பதின்பருவத்தினரின் உடல், மன நலன் வளர்ச்சி, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் காணொளிகளுக்கு இணைய சேவை நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கேற்ப நிரல் படிமுறையை (Algorithm) மாற்றி அமைக்க வேண்டும். பதின்பருவத்தினருக்கான காணொளிகளின் நேரம் குறைவாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இது எண்ணற்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும்.
- உண்மைக்குப் புறம்பான, பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அல்லது ஒருதலைப்பட்சமான தகவல்கள், பிற ஆபத்துக்களை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு குறித்துக் கற்றுக்கொடுங்கள். அவர்கள் விளம்பரங்கள் பார்ப்பதைக் குறைக்க வையுங்கள், விளம்பரங்கள் இல்லாத காணொளிகளைப் பார்க்க ஊக்கப்படுத்துங்கள். உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பதின்பருவத்தினரிடம் நடத்தப்பட்ட ஒட்டுமொத்த ஆய்வுகளின் அடிப்படையில் இப்பரிந்துரைகள் வந்திருக்கின்றன. ஆரோக்கியமான சமுதாயம் அமைய அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவை.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 02 – 2025)