காதலர் தினமும் பாறு கழுகும்
- நாம் அனைவருமே ஏதாவதொன்றின்மேல் காதல் கொள்கிறோம். காதலன் காதலிக்கும் இடையே அன்பைப் பரிமாறிக்கொள்ளும்போது, நீயின்றி நானில்லை எனவும் வாழ்நாள் முழுதும் உன்னோடுதான் நான் இருப்பேன்; ஏழேழு சென்மம் எடுத்தாலும் நீ தான் எனக்குக் கணவனாய் வரனும் எனப் பெண்ணும் நீதான் எனக்குத் துணைவியாய் வரவேண்டும் என ஆணும் உரையாடுவதை கேட்டிருப்போம்.
- இந்த உரையாடலுக்கு ஏற்றபடி ஒருவனுக்கு ஒருத்தி என்று இணைபிரியாமல் சோடியாகச் சேர்ந்து வாழ்ந்து வரும் பறவை இனங்களை அறிவீர்களா? Bald Eagle, Black Vulture, Laysan Albatross, Mute Swan, Scarlet Macaw, Whooping Crane, California Condor, Atlantic Puffin உள்ளிட்டப் பறவை இனங்கள் சோடியாக வாழ்ந்து வருகின்றன.
- இதேபோலப் பாறு கழுகு இனத்திலும் இணை சேர்ந்த சோடிகள் பெரும்பாலும் சேர்ந்தே வாழ்கின்றன என்று நம்பப்படுகிறது. இவை ஒன்றைவிட்டு ஒன்று பிரிவதில்லை. இதில் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம், இவை இணை சேரும்போது மட்டும் தான் ஆண் எது பெண் எது எனப் பிரித்தறிய முடியும். ஏனைய காலங்களில் இரண்டும் ஒன்று போலத்தான் இருக்கும். ஆணுக்கெனத் தனித்த அம்சம் ஏதும் இவ்வினத்தில் இல்லை. முட்டையை அடைகாப்பதிலிருந்து அதைப் பராமரிப்பதுவரை ஆண் பெண் இரண்டுமே சேர்ந்தே கவனிக்கின்றன. குஞ்சை வளர்த்தெடுப்பதுடன் கூட்டு வாழ்க்கையும் வாழ்கின்றன.
எகிப்தின் நம்பிக்கை:
- மஞ்சள் முகப் பாறு என அழைக்கப்படும் திருக்கழுக்குன்றக் கழுகு ஆண் துணை இன்றி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இயல்புடையது என்று நம்பப்பட்டதால் எகிப்து நாட்டில் இது புனிதமாகக் கருதப்பட்டது. துருக்கியிலும் பல்கேரியாவிலும் இவை ‘அக்புபா’ அதாவது வெள்ளையப்பன் எனக் குறிப்பிடப்படுகிறது.
- இவ்வினத்தில் பெட்டை மட்டுமே உண்டு என்பதும், அவை சேவல் துணையின்றி வழித்தோன்றலை உருவாக்கும் என்பதும், அதாவது தானே கருத்தரித்து முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் ஆற்றல் பெற்றவை என்பதும் பண்டைய எகிப்தியர்களின் நம்பிக்கையாக இருந்தது. இதனால் அவை தூய்மையானதாகவும் தாய்மையின் குறியீடாகவும் கருதப்பட்டதுடன் எகிப்தை ஆண்ட பண்டைய ‘பாரோ’ மன்னர்களால் புனிதமாகவும் வணங்கப்பட்டன.
- மேலும் இவை ஆதியில் ‘இசிஸ்’ எனப்படும் குலக் கடவுளாக வணங்கப்பட்டு, பின்பு ‘நெக்பத்‘ (Nehbeth) எனும் தேவதையாக வணங்கப்பட்டதாகத் தெரிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு, முன்னர் அடைப்பிடத்தில் தனியே அடைக்கப்பட்ட ஒரு பாறு கழுகு ஆண் சேர்க்கையின்றி முட்டையிட்டதாகச் செய்தியில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது குஞ்சு பொரித்ததா எனத் தெரியவில்லை.
பாறு கழுகுகள்:
- அண்மையில் ’இயல்பிராங்க்’ குழுவினர் மேற்கொண்ட ஆய்வின்படி தெற்காசியாவில் பாறு கழுகுகள் இல்லாமல் போனதால் 2000 - 2005 ஆண்டுகளுக்கு இடையில் 500,000 மக்கள் இறக்க நேரிட்டது என்றும், வருடத்திற்குக் கிட்டத்தட்ட 70 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கிறது. பாறு கழுகுகள் இல்லாததால் இறந்துபோன கால்நடைகளின் சடலங்கள் கெட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பல கொடிய தொற்றுநோய் பாக்டீரியாக்கள் பல்கிப்பெருகிப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
- பாறு கழுககளின் இடத்தை எலிகள் மற்றும் நாய்கள் எடுத்துக்கொண்டதால் வெறி நோய்த் தொற்று ஏற்படுகிறது. இதனால் 2023 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெறி நோய்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
- இப்படிப்பட்ட இவ்வினத்தைக் காதலர்களுக்கு உவமையாக்காமல் நமது கார்ட்டூனிஸ்டுகளும், இயக்குநர்களும் அதனை வில்லனாக்குவதிலே கவனம் செலுத்துகின்றனர். நாட்டுக்கிடையே நடைபெறும் சண்டையையும் மனிதர்களுக்கிடையேயான சுரண்டல் போக்கையும் அரசியல்வாதிகளின் கயமைத்தனத்தையும் காட்ட பாறு கழுகைக் காட்டுகின்றனர். அவை இறந்த விலங்கை போட்டிபோட்டு உண்ணும் காட்சியை மனதில் வைத்து அதனை கொடூரமாகவே சித்தரிக்கின்றனர்.
- ஆனால், அவை இறந்த விலங்கை உண்டு நோய்நொடி பரவாமல் காக்கும் அற்புதமான செயலை நாம் மறந்து விடுகின்றோம். காதலர்கள் தினத்தில் இது போன்ற பறவைகளையும் நினைவுகூர்வோம். காரணம் இவை அழிவின் விளிம்பில் இருக்கின்றன. ஆம். இந்தியாவில் காணப்படும் 9 வகையில் 4 வகை அழியும் ஆபாயத்தில் இருப்பதாக ஐயுசிஎன் அமைப்பு எச்சரித்துள்ளது. இவற்றின் அழிவுக்கு முதன்மைக்காரணமாக வலி மருந்துகள் உள்ளன என்பதை அசைக்க முடியாத ஆய்வுகளின் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
- இதைத் தொடர்ந்து இந்திய அரசு டைக்குளோபினாக் மருந்தை 2006 ஆம் ஆண்டும் கீட்டோபுரோபேன் மற்றும் அசிக்குளோபினாக் மருந்துகளை 2023 ஆம் ஆண்டிலும், நிமிசுலைடு மருந்தை 2025 ஆம் ஆண்டிலும் தடை செய்தது.
- தடை செய்தால் மட்டும் போதாது அம்மருந்துகள் கால்நடைகள் பயன்பாட்டுக்கு கிடைக்காவண்ணம் உறுதி செய்யவேண்டும். இவ்வினம் மீண்டு வருவதற்கு ஏதுவாக இறந்த கால்நடைகள், காட்டுயிர்கள் ஆகியவற்றின் சடலங்களைப் புதைக்காமல் விடவேண்டும். கிடைக்கும் இரை விஷம் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். சாலையிலும் மின்சாரத்திலும் அடிபடும் உயிரினங்களைப் புதைக்காமல் அவை உண்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.
- மழைக்காலம் தொடங்குமுன் வந்துவிடுவேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டுச் சென்ற தன் தலைவன் மழைக்காலம் தொடங்கிய பின்னும் திரும்பி வராத வருத்தத்தில் தோழியிடம் தலைவி கூறுவதாகச் சொல்கிறது இந்த அகநானுறு பாடல். வறண்ட பாலை நிலம் வழியே தன் தலைவன் சென்றுள்ளான். அந்த வழியில் செல்லும் வழிப்போக்கர்களின் உயிரை ஆறலைக் கள்வர்கள் அம்பு எய்து வீழ்த்துவர். அப்படி வீழ்த்தப்பட்டு முடை நாற்றம் எடுக்கும் உடலை பாறு தன் கூட்டத்தோடு வந்து பிய்த்துத் தின்னும் என்பது கீழ்க்கண்ட பாடலின் செய்தி..
- 'வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
- வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
- விடு தொறும் விளிக்கும் வெவ்வாய் வாளி
- ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின்
- பாறு கிளை பயிர்ந்து படு முடை கவரும்”
- என்கிறது அகநானூறு (175) பாடல்.
- இதே போன்றதொரு செய்தி நற்றிணையிலும் வருகிறது. பாலை நிலம் வழியே செல்லும் வழிப்போக்கர்களை ஆறலைக் கள்வர்கள் அம்பு எய்து மாய்ப்பர். வயது முதிர்ந்த பாறு இறக்கையை விரித்தபடி தனது கூட்டத்தை முண்டியடித்துக்கொண்டு முடை நாற்றம் வீசிக் கிடக்கும் பிணத்தை வெறியோடு கிழித்துப் பசியோடு கூட்டிலிருக்கும் தன் குஞ்சுக்கு எடுத்துக்கொண்டு போகும். அப்போது அதன் சிறகிலிருந்து தூவி உதிரும். அந்தத் தூவியை ஆறலைக் கள்வர்கள் தங்களது வில்லில் பூட்டுவர். இப்படிப்பட்ட பாலை நிலம் வழியே தலைவன் சென்றுள்ளான். ஆனாலும் அவன் நல்லவன். சொன்ன சொல்லைக் கண்டிப்பாகக் காப்பாற்றுவான், வருந்தாதே என்று தோழி தலைவியை நோக்கிக் கூறுவதாக மருதங்கிழார் எழுதிய இந்தப் பாடல் அமைகிறது.
- ’வரையா நயவினர் நிரையம் பேணார்
- கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
- இடு முடை மருங்கில் தொடும் இடம் பெறாஅது
- புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு
- இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி’
- என்கிறது நற்றிணை (329) பாடல்.
- சங்க இலக்கியம் முதல் இன்று வரை காதலைப் போற்றாத இலக்கியங்களே இல்லை. காதலைப் போற்றுவோம்.
- காதலர்கள் தினத்தில் பாறு கழுகை நினைவுகூர்வோம். காதலர்தின வாழ்த்துகள்.
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 02 – 2025)