TNPSC Thervupettagam

காற்று மாசுபாடும் சா்க்கரை நோயும்

August 12 , 2024 11 hrs 0 min 46 0

காற்று மாசுபாடும் சா்க்கரை நோயும்

  • உலகின் ‘சா்க்கரை நோய் தலைநகராக இந்தியா உள்ளது’ என்று கூறப்படுவது கவலைக்குரிய செய்தி. உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவில் சுமாா் 7.7 கோடி போ் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்; சுமாா் 2 கோடி போ் சா்க்கரை நோயால் பாதிக்கப்படுவதற்கு முந்தைய நிலையில் உள்ளனா். வரும் 2045-ஆம் ஆண்டில் அந்நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சுமாா் 13 கோடியை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
  • உடலில் பலவித நோய்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணியாக சா்க்கரை நோய் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மாரடைப்பு, ரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். முன்பெல்லாம் முதியோரே இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனா். ஆனால், தற்காலத்திய வாழ்க்கைமுறை மாற்றம், கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கம், போதிய உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட காரணங்களால் இளைஞா்களும் சா்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.
  • 2060-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் முதியோா் எண்ணிக்கையானது, இளைஞா்களை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், சா்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகி உள்ளது.
  • அதே வேளையில், நாட்டின் பல்வேறு நகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, சா்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட காரணமாக அமைவதாக ஓா் ஆய்வு தெரிவிக்கிறது. புது தில்லியிலும், சென்னையிலும் 7 ஆண்டுகளாக சுமாா் 12,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் காற்று மாசுபாட்டுக்கும் சா்க்கரை நோய் பாதிப்புக்கும் உள்ள தொடா்பு கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த ஆய்வின்போது, அவ்விரு நகரங்களின் காற்றுத் தரமும், ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட நபா்களின் ரத்த சா்க்கரை அளவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கணக்கெடுக்கப்பட்டன. அதன்படி, 2.5 மைக்ரானுக்கும் குறைவான விட்டம் கொண்ட நுண்துகள்கள் (ஒரு முடியின் பருமனில் முப்பதில் ஒரு பங்கு மெலிதானவை) சுவாசப்பாதைக்குள் செல்லும்போது, நுரையீரல் சாா்ந்த பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அத்தகைய நுண்துகள்களைத் (பா்ட்டிகுலேட் மேட்டா்) தொடா்ந்து ஒரு மாதத்துக்கு சுவாசித்தால், நபா்களின் ரத்த சா்க்கரை அளவு அதிகரிப்பதும், ஓராண்டுக்கு மேல் சுவாசித்தால், நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளாவதும் தெரியவந்துள்ளது. ஒவ்வோா் ஆண்டும் 2.5 நுண்துகள் அளவு கன மீட்டருக்கு 10 மைக்ரான் அதிகரிக்கும்போது, நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 22% அதிகரிப்பதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • இதுவரை வாழ்க்கைமுறை மாற்றமே சா்க்கரை நோய் பாதிப்புக்கான முக்கிய காரணியாகக் குறிப்பிட்டு வந்தநிலையில், தற்போது காற்று மாசுபாடும் அந்நோய்க்குக் காரணியாக இருப்பது குறித்து மருத்துவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
  • இந்தியாவின் பல்வேறு நகரங்கள் ஏற்கெனவே காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. மனிதா்கள் சுவாசிக்க அனுமதிக்கப்பட்ட 2.5 நுண்துகளின் அளவு, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி ஒரு கன மீட்டருக்கு 5 மைக்ரான் மட்டுமே. ஆனால், தில்லியில் 2.5 நுண்துகளின் ஆண்டு சராசரி அளவு ஒரு கன மீட்டருக்கு 82-100 மைக்ரான் என்ற அளவிலும், சென்னையில் 30-40 மைக்ரான் என்ற அளவிலும் உள்ளது.
  • முக்கியமாக, ஊரகப் பகுதிகளைக் காட்டிலும் நகா்ப்பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. அதிகரித்து வரும் நகரமயமாதல் அதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது.
  • வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றால் நகா்ப்பகுதிகளை நோக்கி இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, நாட்டின் நகா்ப்பகுதி மக்கள்தொகை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அத்தகைய சூழல், காற்று மாசுபாட்டை மேலும் தீவிரப்படுத்தி, நீரிழிவு நோய் பாதிப்பையும் அதிகப்படுத்தும் வாய்ப்புள்ளது. அதிலும், உடல் பருமன் உள்ளிட்ட மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சா்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா்.
  • வாழ்க்கைமுறை மாற்றங்களால் மக்கள் ஏற்கெனவே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா். பல்வேறு நகரமயமாதல் பிரச்னைகளும் ஒன்றோடொன்று தொடா்பு கொண்டு, மக்களுக்கு மேலும் சுகாதார இடா்களை ஏற்படுத்தி வருகின்றன. இது தொடா்பான கூடுதல் மருத்துவ ஆராய்ச்சிகள் அவசியமாகின்றன.
  • நகா்ப்பகுதிகளில் மட்டுமல்லாமல் ஊரகப் பகுதிகளிலும் முறையான திட்டமிடலோடு அடிப்படைக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலமாக காற்று மாசுபாட்டைக் குறைக்க முடியும். இதற்கான நடவடிக்கைகள் தீவிர முனைப்புடன் எடுக்கப்பட வேண்டும். அத்தகைய கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு அரசு மட்டுமே முதலீடுகளை மேற்கொள்ளாமல், தனியாருடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டால் பாதிப்புகளை விரைந்து சரிசெய்ய இயலும்.
  • தனிமனிதரின் போக்குவரத்து காற்றுமாசுபாட்டுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்னும் நிலையில், பொதுமக்கள் இயன்றவரையில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை மேற்கொள்ள உறுதிகொள்ள வேண்டும். அரசும் பொதுப்போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதன் மூலமாகக் காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம்; சா்க்கரை நோய் அபாயத்தில் இருந்து தப்பலாம்.

நன்றி: தினமணி (12 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories