காவல் துறை யாருடைய நண்பன்?
- குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்து, சட்டம் – ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது. அண்மையில், பண மோசடி வழக்கு ஒன்றில் காவல் துறையைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திராவும் இது குறித்து வேதனை தெரிவித்திருக்கிறார்.
- திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜுனைத் அகமது, தன் ஊழியரான சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸிடம் மருத்துவக் கருவிகள் வாங்க ரூ.20 லட்சம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அந்தப் பணத்தை ஹவாலா பணம் எனக் கூறிப் பறிமுதல் செய்த திருவல்லிக்கேணி சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித் துறையைச் சேர்ந்த தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோருடன் சேர்ந்து அதில் ரூ.15 லட்சத்தை எடுத்துக்கொண்டார்.
- இந்த வழக்கில் ராஜாசிங் உள்பட நான்கு பேரையும் திருவல்லிக்கேணி காவல் துறை கைதுசெய்தது. இந்த வழக்கின் மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, “வேலியே பயிரை மேய்வதுபோல் குற்றச் செயல்களில் ஈடுபடும் காவல் துறையினர் மீதான வழக்கைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.
- காவல் துறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடுவது புதிதல்ல. 2024 ஆகஸ்ட்டில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் காவல் துறையினரின் அராஜகப் போக்கு குறித்துக் கேள்வி எழுப்பியதோடு, “மக்கள் எவ்வித அச்சமும் இன்றி நீதிமன்றத்துக்கும் மருத்துவமனைக்கும் ஆட்சியர் அலுவலகத்துக்கும் செல்வதுபோல் காவல் நிலையங்களுக்குச் செல்ல முடிகிறதா? காவல் துறையினர் தங்களை மக்களின் நண்பன் என்று சொல்வது உண்மையாக இருந்தால், மக்கள் ஏன் காவல் நிலையப் படிகளை மிதிக்க அஞ்ச வேண்டும்?” என்று வினவியது இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தியது.
- 2020இல் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் பொய்ப் புகாரில் கைதுசெய்யப்பட்டுக் காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்; ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட ஒன்பது காவல் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்.
- அப்போது உண்மையின் பக்கம் நின்று சாட்சி சொன்ன இரண்டு பெண் காவலர்களில் ஒருவருக்குக் காவல் துறையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தன் கடமையைச் செய்ததற்காகக் காவல் அதிகாரிக்கே பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய சூழலில், மக்களின் பாதுகாப்பு குறித்து பலத்த கேள்வி எழுந்தது.
- அண்மையில், சென்னை அண்ணா நகரில் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிக்கு உடந்தையாகச் செயல்பட்டதற்காகக் காவல் ஆய்வாளர் ராஜி கைது செய்யப்பட்டது, காவல் துறையினர் நினைத்தால் எளியவர்களுக்கு நீதி கிடைக்காமல் தடுத்துவிட முடியும் என்கிற நிதர்சனத்தை உணர்த்துகிறது.
- காவல் நிலைய மரணங்கள், பொய்ப் புகார்கள், பண மோசடிகள், அதிகார வர்க்கத்துடன் இணைந்து குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவது, பாலியல் குற்றங்கள், லஞ்சம் எனப் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களில் காவல் துறையினரில் சிலர் ஈடுபடுவது காவல் துறை மீது மக்களுக்குத் தீவிர அவநம்பிக்கையை ஏற்படுத்திவிடும்.
- திருவல்லிக்கேணி சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரின் பண மோசடி வழக்கு இன்று (ஜனவரி 28) விசாரணைக்கு வரும் நிலையில் அதில் வழங்கப்படும் தீர்ப்பு, தவறு செய்யும் அதிகாரிகளுக்குப் பாடமாகவும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் அமைய வேண்டும். அதுதான், காவல் துறை மக்களின் நண்பன் என்னும் முழக்கத்துக்கு உண்மையான அர்த்தம் சேர்க்கும்!
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 01 – 2025)