கிராமத்து இளைஞனின் அனுபவங்கள்
- இரா.செல்வத்தின் நாவல் ஒன்றை ஏற்கெனவே வாசித்திருக்கிறேன். ‘பனையடி’ என்பது நாவலின் தலைப்பு. அடிப்படை வசதிகளே இல்லாத ஒரு கிராமத்து மாணவன் சோர்வுறா தனது முயற்சியால் உயரிய இடத்தை எட்டும் நம்பிக்கையைப் படைப்பாக்கிய முயற்சி அது. தொடர்ந்து தற்போது வாசிக்க நேர்ந்தது ‘ஹார்வர்டு நாட்கள்’ என்கிற அவரது கட்டுரை நூல்.
- இந்திய அரசின் ஆட்சிப் பணியில் அமர்ந்த பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற அனுபவங்களும் அது சார்ந்த சிந்தனைகளும் கொண்ட நூல் இது. 170 பக்க அளவிலான நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நேர்த்தியாக வெளியிட்டுள்ளது. ‘அய்யப்பன் நாயக்கன் பேட்டை அரசுப் பள்ளியிலிருந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு’எனும் முதல் கட்டுரையிலிருந்து ‘இரா.செல்வத்துடன் ஓர் உரையாடல்’ வரை 13 அங்கங்கள் கொண்ட தொகுப்பு இது.
- மேற்படிப்புக்கான பயணம் என்றதும் அங்கு அவரது அனுபவங்கள், கல்வி, நிர்வாகம், வளம், இயற்கை போன்ற பகுப்புக்களில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான ஒப்பீடு பல தளங்களில் விரிவாக அணுகப்பெற்றுள்ளது. 2012ஆம் ஆண்டு 58 நாட்கள் எனது அமெரிக்க இலக்கியப் பயணத்தின்போது ஹார்வர்டு பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன்.
- அங்கு முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து திரிந்ததும் அப்போது அங்கு நிகழ்ந்த பட்டமளிப்பு விழா ஒன்றும் நினைவில் உள்ளது. கிராண்ட் கேன்யான் பள்ளத்தாக்கு, கொலாராடா நதி, ஹோசிமிட்டி நேஷனல் பார்க், மவுண்ட் சாஸ்தா எனப் பல நினைவுகள்.
- ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இந்தியாவில் பணிபுரிந்தாலும் நமது நிர்வாகத்தின் பல குறைகளை ஒப்பீட்டளவில் ஆங்காங்கே நூல் முழுக்கச் சுட்டிக் காட்டுகிறார். ‘விவசாயிகள் தற்கொலை என்னும் தேசிய அவமானம்’ கட்டுரையில் பேசப்படும் உண்மைகள் அதற்கோர் எடுத்துக் காட்டு. நான் பம்பாயில் வாழ்ந்த காலத்தில் மழையற்றுப் போன ஒரு பஞ்ச நேரத்தில் தனது குறியை அறுத்து கடவுள் சிலைக்கு அபிஷேகம் செய்த எளிய விவசாயியின் செயல் நினைவில் உள்ளது.
- சென்னையின் வெள்ளம், இயற்கைப் பேரிடர் பற்றிப் பேசும்போது உணவுப் பொட்டலங்கள் வழங்குவதும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களைக் கரை கடத்துவதும் ஆடைகள் தருவதும் மட்டும்தான் பேரிடர் காலத்தில் அரசின் பணியா என்கிற வினா மிகத் தீவிரமானது. ஒரு கட்டுரையில் ‘இந்தியாவில் சொத்துகள் அபகரிப்பும் சொத்துக் குவிப்பும் தொடர்ந்து நடக்கின்றன’ என்கிறார். ‘இந்திய நீதித் துறை தரவின்படி 2023 வரை இந்தியாவில் ஐந்து கோடிக்கும் மேலான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
- அதில் 1,69,000 வழக்குகள் மாவட்ட, உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன’ என ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். ‘நீதி ஆயோக் அறிக்கையின்படி நிலுவை உள்ள வழக்குகளை முடிக்க குறைந்தது 324 வருடங்கள் ஆகும்’ என்கிற தகவலையும் கூடுதலாகச் சொல்கிறார். இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கையும் பெயர்களுமே நமக்குச் சரியாகத் தெரியாது. ஆனால், சினிமா நடிகர், நடிகையின் பயோ டேட்டா மனப் பாடமாகத் தெரியும்.
- இந்தச் சூழலில் இமய மலைத் தொடரில் அமைந்துள்ள லாஹௌல், ஸ்பிதி மாவட்டம் பற்றி எங்ஙனம் அறிந்திருக்கப்போகிறோம்? அந்த மாவட்டத்தின் ஆட்சியராகப் பணிபுரிந்த செல்வத்தின் அனுபவங்கள் இவை; நமக்குப் புதியவை; இதற்கு முன் கேள்விப்பட்டிராதவை. கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரே இருக்கும் பிரதேசத்தின் வாழ்க்கை, இயற்கைச் சூழல் யாவும் அச்சமும் பிரமிப்பும் ஊட்டுபவை. இந்நூலில் பல புதிய செய்திகள் விரிவாக அறியத் தரப்பட்டுள்ளன. வாழ்க்கையில் சாதிக்கும் ஆர்வமும் கனவும் கொண்ட இளைஞர்களும் மாணவர்களும் வாசித்துப் பார்க்க வேண்டிய நூல் இது.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 01 – 2025)