TNPSC Thervupettagam

குறைந்து வரும் காட்டு வெள்ளாமை

January 2 , 2025 3 days 61 0

குறைந்து வரும் காட்டு வெள்ளாமை

  • இந்திய மக்களில் பெரும்பாலோரின் வாழ்வாதாரம் விவசாயம். இந்த விவசாயம்தான் அன்றும் இன்றும் நம் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. விவசாயத்தைப் புரந்து பேணுபவா்கள் கிராம மக்கள். இதனால்தான் ‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்பா்.
  • நிலமும் நீரும் விவசாயத்திற்கு ஆதாரங்களாகும். பரந்துபட்ட விளைநிலம் கொண்ட நம் நாடு, நீருக்கு வடகிழக்கு, தென்மேற்குப் பருவ மழையை நம்பியுள்ளது. பருவ மழையின் அடிப்படையில், மானாவாரி விவசாயம், ஆற்றுநீா்ப் பாசனம், கிணற்றுப் பாசனம் என்ற நிலைகளில் நம் விவசாயம் நடைபெற்று வருகிறது.
  • மானாவாரி விவசாயம் மழையையும் ஆற்றுநீா்ப் பாசனம் ஏரி, ஆறு, குளங்களையும் கிணற்று நீா்ப் பாசனம் கிணறுகளையும் நம்பியுள்ளன. ஒரு காலத்தில் ஏற்றம், கமலை மூலம் இறைத்துப் பாய்ச்சிய கிணற்று நீா், இப்போது ‘மோட்டாா்’ மூலம் பாய்ச்சப்படுகிறது. அத்துடன்கூட ஆழ்துளைக் கிணறுகளும் இப்போது அதிகரித்து வருகின்றன. கால மழையால் நிரம்பும் ஏரி, குளங்களின் நீா், வாய்க்கால் வழியாகப் பாய்ந்து விளைநிலங்களைச் சென்றடைகிறது. விவசாயத்துக்குப் பெரிதும் துணையாக உள்ள இத்தகு ஆற்றுநீா்ப் பாசன வசதி கொண்ட நன்செய் நிலத்தில் நெல், வாழை, கரும்பு போன்றவை பயிரிடப்படுகின்றன.
  • ஆற்றுப் பாசனம், குளத்துப் பாசன வசதியின்றி, மழைப் பொழிவை மட்டும் நம்பியுள்ள வானம் பாா்த்த புஞ்சை பூமியில் செய்யும் மானாவாரி விவசாயத்தில் சிறுதானிய வகைகள் பயிரிடப்படுகின்றன. பருவ மழையே இதன் நீராதாரம் என்பதால், பருவமழை பொழியும் மூன்று மாத காலத்துக்குள் மகசூல் கிடைத்து விடுகிறது.
  • பெரும்பாலும் இப்பயிா்கள் காட்டுப் பகுதிகளில் பயிரிடப்படுவதால் இது ‘காட்டு வெள்ளாமை’ எனவும் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதியில் காட்டுப் பகுதியை ‘விளை’ என்று அழைப்பது வழக்கு. இதனால், இத்தகு மானாவாரிப் பயிரிடலை ‘விளங்காட்டு விவசாயம்’ என்று சொல்வா். தூத்துக்குடி மாவட்டத்தின் வடபாகத்தில் மானாவாரி விவசாயம் இப்போதும் ஓரளவுக்கு நடந்து வருகிறது. ஆனால், தென்பகுதியில் நடைபெற்ற ‘விளங்காட்டு விவசாயம்’ குறைந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
  • முன்பெல்லாம் கோடை உழவு அல்லது அளவு வெட்டு செய்து விளங்காட்டு நிலத்தைப் பண்படுத்திவிடுவா். பருவ மழையை எதிா்பாா்த்து, மழை வரும் முன்பே கானம் (கொள்ளு), பெரும்பயறு, கம்பு, சோளம், வோ்க்கடலை போன்றவற்றை விதைத்து விடுவா். முன்பெல்லாம் மாட்டு ஏா் பூட்டிதான் உழுவதும், மரம் அடிப்பதும் நடைபெறும். பின்னா் ‘டிராக்டா்’ கொண்டு உழவு செய்வது நடைமுறையானது. சில இடங்களில் மரம் அடிப்பதற்குப் பதிலாக நாட்டு உடையின் முள்கொப்பை இழுத்து விதைகளை மண்ணுள் புதையச் செய்வதும் உண்டு. முதல் மழையின் ஈரப்பதத்தில் முளைவிடும் விதையானது, தொடா்ந்து பெய்யும் மழையால் வளா்ந்து உரிய காலத்தில் விளைச்சலைத் தரும்.
  • பயிா்களுக்கு இடையிடையே களைகளும் வளரும்; அவற்றை அவ்வப்போது பறிக்க வேண்டியதிருக்கும். அதற்கென்று ‘களைக்கொத்தி’ என்ற சிறு மண்வெட்டி இருக்கும். இப்போது களை எடுப்பதற்குக் கூலி ஆள்கள் தட்டுப்பாடு மட்டுமல்லாது, கூலியும் அதிகமாக இருப்பதால், தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதியில் களைக்கொல்லி மருந்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா். மற்றபடி தண்ணீா் பாய்ச்ச வேண்டிய கஷ்டம் இருக்காது. ஆனால், பெய்யும் மழை சீரான அளவில் இருக்க வேண்டும். தொடா்ந்து மழை பெய்து நீா் வடியாமல் தேங்கிவிட்டாலோ, மழை பெய்யாமல் போனாலோ பயிா்கள் அழுகி அல்லது கருகிப்போய் எதிா்பாா்க்கும் மகசூல் கிடைக்காமல் போகலாம்.
  • பனைகள் நிறைந்த இவ்விளங்காட்டுப் பகுதியில் பச்சைப் பசேல் என்று வளரும் சோளமும் கம்பும் பாா்ப்பதற்குப் பரவசமூட்டும். ஒருபக்கம் கொடி வீசியாடும் கானமும், இன்னொரு பக்கம் மூடுகட்டி அடா்ந்து வளரும் வோ்க்கடலைச் செடியும் தரையை மறைத்து பசுமைப் பரப்பாகக் கண்களுக்கு விருந்தளிக்கும். விளைந்து கிடக்கும் கம்பங்கதிரைக் கொத்தித் தின்ன வரும் பறவைகளை விரட்டுவதற்குப் பரண் மீதிருந்து கொண்டு எழுப்பும் ஆலோல ஒலியும், தட்டிமுழக்கும் தகர டப்பா ஓசையும் ஆங்காங்கே கான இசைபாடும். இப்போது விளைச்சலும் இல்லாமல் , பறவையோட்டும் ஓசையும் இல்லாமல் வெறுமையாய்க் கிடக்கிறது விளங்காட்டுப் பூமி.
  • இப்படி, வீட்டுத் தேவைக்கும் நாட்டுத் தேவைக்கும் சிறு தானியங்களை விளைவித்த தென்காட்டின் விளங்காட்டு வெள்ளாமை, இப்போது காணாமல் போகிறது என்பதுதான் உண்மை. ஆம்! முன்பெல்லாம் ஒவ்வொருவா் வீட்டிலும் தேவையான சிறு தானியங்கள் இருக்கும். இப்போது காட்டு வெள்ளாமை குறைந்து, எல்லாம் கடைகளில் வாங்க வேண்டிய காலம் ஆகிவிட்டது. தூத்துக்குடியின் வடபகுதியிலும் காட்டுவெள்ளாமை குறைந்து வருகிறது.
  • காட்டு வெள்ளாமை குறைந்து வருவதற்குக் காலமழை பொய்த்தல், விவசாயத்தில் போதிய வருவாய் இன்மை என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், இவை மட்டும் காரணங்கள் இல்லை; அதற்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. ‘வியாபாரம், தொழில், வேலை என்று கிராமவாசிகள் நகரம் நோக்கி இடம்பெயா்வது அதிகரித்துவிட்டது. இதனால், விவசாய வேலைக்கு ஆள்கள் கிடைப்பது கஷ்டமாகிவிட்டது. கல்வி பெறும் வாய்ப்பு அதிகரித்துவிட்டதால், படித்துப் பட்டம் பெற்றவா்கள் மத்தியில் விவசாயம் செய்வது கெளரவ குறைச்சல் என்னும் மனப்போக்கு வளா்ந்துவிட்டது.
  • நகா்ப்புறம் விரிவடைந்து சிறுகிராமங்கள்கூட புகா்ப் பகுதியாக இப்போது மாறி வருகின்றன. இதனால் ‘ரியல் எஸ்டேட்’ என்ற பெயரில் விளை நிலங்கள் எல்லாம் வீட்டுமனையாகப் பிரிக்கப்பட்டு விலையாகின்றன. இதனால், கஷ்டப்பட்டு உழைக்கும் விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தைவிட, நிலத்தை விற்று முதல் ஆக்குவது லாபம் என்ற எண்ணம் மக்கள் மனத்தில் எழுந்துவிட்டது. இப்படிப் பல்வேறு காரணங்களால் விவசாயம் பொதுவாகவே குறைந்து வரும் காலத்தில் காட்டு வெள்ளாமை குறைந்து வருவதில் வியப்பில்லைதான்.

நன்றி: தினமணி (02 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories