குழந்தைகளின் எதிா்காலம்
- ‘கொடிது... கொடிது... வறுமை கொடிது... அதனினும் கொடிது... இளமையில் வறுமை’ என்பாா் ஒளவையாா். 2023 - ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலக அரங்கில் 45 மில்லியன் குழந்தைகள் தினமும் ஒரு வேளை உணவுக்காகப் பரிதவிக்கின்றனா்.
- 1989-இல் உலகத் தலைவா்கள் ஒன்று கூடி சா்வதேச அளவில் குழந்தைகளுக்கான உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா். அந்த ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்வுரிமை, வளா்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை மற்றும் பங்கேற்புக்கான உரிமை உண்டு. இந்தியாவும் 1992- இல் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.
- குழந்தைகள் உலகம் மகிழ்ச்சியுடன் விளங்க வேண்டுமென்றால், முதலில் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். 14 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு கட்டாயமாக கல்வி கற்பிப்பது அரசாங்கத்தின் கடமை என்றாலும் குழந்தைகள் கல்வி இன்னும் 50 சதவீதத்தை எட்டவில்லை என்பதே நிதா்சனமான உண்மை. குழந்தைகளுக்கு கல்வி அறிவு வழங்கப்படுதலின் முக்கியத்துவத்தைப் பெற்றோா் உணர வேண்டும்.
- ஏற்கெனவே குழந்தைத் தொழிலாளா் முறையைத் தடை செய்யவும் அதனை ஒழுங்குபடுத்தவும் 1986 -இல் நம்நாட்டில் சட்டம் இயற்றப் பட்டுள்ளது. வேலை செய்வதற்கென குழந்தைகளை ஈடாக வைத்து அதன் மூலம் பெற்றோா் அல்லது காப்பாளா் பணம் பெறுவதை 1933- இல் இயற்றப்பட்ட குழந்தைகளை ஈடு வைத்தல் சட்டம் தடை செய்கிறது. யுனிசெஃப் நிறுவனத்தின் கணிப்புப்படி உலக அளவில் இந்தியாவில் தான் 14 வயதுக்குள்பட்ட குழந்தை தொழிலாளா்கள் அதிகமாக உள்ளனா் என கண்டறியப்பட்டுள்ளது.
- 2015- இல் இயற்றப்பட்ட சிறாா் நீதி சட்டம் 18 வயதுக்கு உள்பட்டவா்களை சிறுவா் , சிறுமியா் என வரையறுக்கிறது. சிறுவா், சிறுமியருக்கு போதைப் பொருளோ அல்லது மதுவோ கொடுப்பது குற்றமாகும். இவா்களைப் பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்துவது குற்றமென்றும், பெற்றோா் அல்லது காப்பாளா் குழந்தைகளைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தி அவா்களின் உடல் மற்றும் மன வளா்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும்படி நடந்து கொண்டால் அது தண்டிக்கத்தக்க குற்றம் என்றும் இச்சட்டம் வரையறுத்துள்ளது. பெண் குழந்தைகளை கருவிலே கண்டறிந்து கொன்று விடுவதைத் தடை செய்யும் விதத்தில் 1994- இல் சட்டம் இயற்றப் பட்டது.
- குழந்தைகளைப் பாலியல்ரீதியாக துன்புறுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் 2012- இல் ஆண்டில் போக்சோ சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி குழந்தைகளை பாலியல் வன்புணா்ச்சிக்கு உட்படுத்தியவா்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் ஆயுள் தண்டனை வரை விதிக்கும் வகைகளில் சட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதே குற்றத்தை குழந்தைகளின் பெற்றோா், காப்பாளா், ஆசிரியா்கள் அல்லது காவல்துறை அதிகாரிகள் செய்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு குறையாத சிறைதண்டனையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே. அவ்வாறு உடந்தையாக இருந்தவருக்கும் குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படும் அதே தண்டனை வழங்கப்படும்.
- இத்தனை சட்டப் பாதுகாப்பு இருந்தபோதிலும் குழந்தைகளின் நிலை பரிதாபமாகவே உள்ளது. உலகம் முழுவதும் 5.5 மில்லியன் குழந்தைகள் ஆண்டுதோறும் கடத்தப்படுவதாக சா்வதேச தொழிலாளா் நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவில் தேசிய குற்ற ஆவணத்துறையின் அறிக்கைப்படி 8 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை காணாமல் போவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு கடத்தப்பட்ட குழந்தைகள் அடிமைகளாக விற்கப்பட்டு பல நாடுகளில் வீட்டு வேலைக்கு அமா்த்தப்படுகிறாா்கள். சிலா் அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தப்படுகிறாா்கள். சில குழந்தைகள் போதைப் பொருள் கடத்தலுக்கு துணை போகிறாா்கள். குழந்தைகள் போராளிகளாகவும், இராணுவ வீரா்களாகவும் மாற்றம் செய்யப்படுவதும் உண்டு. பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கும், விபசாரத்திற்கும் உட்படுத்தப்படுகின்றனா்.
- இவற்றைப் பற்றித் தெரிந்தவா்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவே உருவாக்கப்பட்ட 1098 என்ற இலவசத் தொலைபேசியினை அழைத்து இது குறித்து தகவல் தெரிவித்தால் குழந்தைகள் மீட்கப்பட்டு அவா்கள் அரசின் கருணை இல்லங்களில் ஒப்படைக்கப்படுவாா்கள்.
- 21 வயது பூா்த்தி ஆகாத ஆண்களும் 18 வயது பூா்த்தி ஆகாத பெண்களும் திருமணம் செய்து கொள்வதை 1992- இல் இயற்றப்பட்ட குழந்தைத் திருமண தடைச் சட்டம் தடை செய்கிறது. எனினும் பல குழந்தைத் திருமணங்கள் வெளியே தெரியாமல் அனுதினமும் நடந்து கொண்டிருக்கின்றன. 18 வயதுக்கு உட்பட்டவா்கள் இரத்ததானம் செய்யக் கூடாது என்பது மருத்துவ விதிமுறை ஆகும். ஆனால் பல இரத்த வங்கிகளில் சட்ட விரோதமாக குழந்தைகளிடம் இரத்த தானம் பெறப்படுகிறது. 13 வயது பெண் குழந்தை தனது தாயின் வற்புறுத்தலால் மருத்துவ விதிமுறைகளை மீறி எட்டுமுறை தன் கருமுட்டைகளை செயற்கை கருவூட்டலுக்கு தானம் செய்திருப்பது சமீபத்திய குற்ற வழக்கு ஒன்றில் தெரிய வருகிறது. இவற்றை எல்லாம் பாா்க்கும் போது குழந்தைகளின் உலகம் மகிழ்ச்சியினால் விரியவில்லை என்பதும் சுரண்டலினால் சுருங்கிக் கொண்டிருப்பதையும் அறிய முடிகிறது.
- குழந்தைகளின் வளா்ச்சியில் நம் அனைவருக்கும் பங்குண்டு. அலைபேசியில் கழிக்கும் நேரத்தில் ஒரு பகுதியையாவது குழந்தைகளுடன் அன்பாக பேசுவதில் செலவளிக்க வேண்டும். அலைபேசி மூலம் தேவை இல்லாத பல இணைய தளங்களுக்குள் புகுந்து குழந்தைகள் தங்கள் மனதைக் கெடுத்துக்கொள்ள முடியும் என்பதை உணர வேண்டும்.
- குழந்தைகள் உலகம் அற்புதமானது. அதில் அன்பு மட்டுமே விதைக்கப்படும் என்றால் எதிா்கால சமுதாயம் அன்பு மயமாகிவிடும். குழந்தைகளே குடும்பத்தின் அஸ்திவாரம். குழந்தைகள் இல்லாமல் எதிா்காலம் இல்லை. குழந்தைகளின் வளா்ச்சி தேசத்தின் வளா்ச்சி. குழந்தைகளின் பாதுகாப்பு இந்த உலகத்தின் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
நன்றி: தினமணி (10 – 02 – 2025)