குவாண்டம் ஆண்டின் மகத்துவம்!
- ஐக்கிய நாடுகள் அவை, 2025ஆம் ஆண்டை சர்வதேச குவாண்டம் அறிவியல் - தொழில்நுட்ப ஆண்டாக அறிவித்துள்ளது. 2024 ஜூன் மாதம் 7ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2025 குவாண்டம் ஆண்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?
குவாண்டம் அறிவியல் என்றால்...
- குவாண்டம் அறிவியலைப் புரிந்துகொள்வது எளிது. இந்தப் பிரபஞ்சம் இரண்டு வகையான பொருள்களால் ஆனது. அதில் ஒருவகையான பொருள் உலகம். மிகப் பிரம்மாண்டமானது. நம் கண்ணுக்குத் தெரியும் அனைத்துப் பொருள்களும்தான் அந்த உலகின் அங்கங்கள். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள், சூரிய மண்டலத்தைப் போலவே அந்த நட்சத்திரங்களைச் சுற்றிவரும் கோள்கள் - இப்படிக் கண்ணுக்குத் தெரிந்த பெரிய உலகம் பற்றிய அறிவியல் ஆய்வு என்பது ஒருவகை.
- அதேவேளை, வெறும் கண்களால் பார்க்க முடியாத பொருள்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன. அவை அணுக்களுக்கு உள்ளே உள்ளன. ஒவ்வொரு பொருளும் அணுக்களால் ஆனது. அணுக்கள் ஒன்றுகூடி மூலக்கூறுகள் ஆகின்றன. மூலக்கூறுகள் ஒன்றுகூடி வேதிப்பொருள்கள் ஆகின்றன. இவற்றின் கலவைகளாக உலோகங்கள், நாம் பயன்படுத்தும் - பார்க்கும் பொருள்கள், நம்முடைய உடல் உள்பட அனைத்தும் உள்ளன.
அணுவுக்கு உள்ளே என்ன இருக்கிறது?
- எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்னும் துகள்களும், அவற்றுக்குள் நுண்துகள்களும் உள்ளன. இந்த உலகத்தைத்தான் வெறும் கண்களால் காண முடியாது. அவற்றைப் பார்ப்பதற்கென்று ‘நானோ’ தொலைநோக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நுண் உலகைக் குறித்த அறிவியல்தான் குவாண்டம் அறிவியல்.
குவாண்டம் அறிவியல் ஆண்டு:
- குவாண்டம் கோட்பாடு என்கிற ஒரு முக்கிய அறிவியல் கோட்பாடு 1925இல் முன்வைக்கப்பட்டது. அதனை முன்வைத்தவர்கள் எர்வின் ஷ்ரோடிங்கர், மேக்ஸ் பார்ன், சத்யேந்திரநாத் போஸ், பாஸ்கல் ஜோர்டான், வெர்னர் ஹேய்சன்பார்க் ஆகியோர். குவாண்டம் கோட்பாடு முன்வைக்கப்பட்ட நூறாவது ஆண்டை 2025ஆம் ஆண்டு குறிக்கிறது. எனவே, இந்த ஆண்டை குவாண்டம் அறிவியல் - தொழில்நுட்ப ஆண்டாக ஐ.நா. அவை அறிவித்தது.
நமக்கு எப்படிப் பயன்படுகிறது?
- குவாண்டம் அறிவியல் / தொழில்நுட்பம் இன்றைக்குப் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. நம்முடைய கைபேசிகள், திறன்பேசிகளில் அன்றாடம் நாம் எதிர்கொள்கின்ற வலைப்பின்னல் உள்ளிட்ட இணையத்தின் செயல்பாடுகள் ‘குவாண்டம் கீ விநியோகம்’ (Quantum Key Distribution) என்று அழைக்கப்படும் முறைப்படிதான் செயல்படுத்தப்படுகின்றன.
- எதிர்காலத்தில் குவாண்டம் கணினிகள் அறிமுகமாக உள்ளன. குவாண்டம் குறியாக்கம், ஹேக் செய்யக் கடினமாக இருக்கின்ற, பாதுகாப்பான தகவல் தொடர்பு அலைவரிசைகளை உருவாக்க இவை பயன்படும். இன்றைக்குக் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் தீவிரமடைந்து வருவதை நாம் அறிவோம். ஓர் இடத்தில் உருவாகக்கூடிய புயல் அல்லது நிலநடுக்கத்தை முன்அறிவிப்பதற்கான உள்ளீடுகளை ‘குவாண்டம் கம்ப்யூட்டிங்’ முறைப்படி அறியலாம்.
- குவாண்டம் தொழில்நுட்பம் மூலம்தான் ஓர் இடத்துக்குச் சென்றடைவதற்காகத் திறன்பேசியில் இருக்கும் ஜிபிஎஸ் இடங்காட்டிகள் வேலைசெய்கின்றன. இதைத் தவிர, மருத்துவத் துறையில் நோய் கண்டறியும் கருவிகளுக்கு உள்ளேயும் ராணுவத் தளவாடங்களிலும் குவாண்டம் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. ‘பிக் டேட்டா’ என்று அழைக்கப்படும் பெரும்தரவுக் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம். இந்தக் காலக்கட்டத்தில் மனிதர்களின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் குவாண்டம் இயந்திரவியலின் பயன்பாடு எதிர்காலத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் விழிப்புணர்வு:
- 2025ஆம் ஆண்டை நான்கு வகையாகக் கொண்டாட வேண்டும் என்று ஐ.நா. அவை அறிவித்துள்ளது. குவாண்டம் கோட்பாட்டை முன்வைத்த வரலாற்றின் முக்கிய அறிவியலாளர்களை அடுத்த சந்ததி, கல்லூரி மாணவர்கள், மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களைக் கொண்டாட வேண்டும் என்கிறது ஐ.நா. அவை. குவாண்டம் அறிவியலின் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். குவாண்டம் கல்வி, வாய்ப்புகளை அனைவரும் அணுகும் வகையில் அனைத்து நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டும்.
- உலகெங்கிலும் உள்ள மக்கள் குவாண்டம் தொழில்நுட்பங்கள் மூலம் பயனடையக்கூடிய வகையில் அனைவருக்கும் அந்த அறிவியல் கொண்டுசேர்க்கப்பட வேண்டும். தொழில்நுட்பம், பண்பாடு, இயற்கை உலகைப் பற்றிய நம் புரிதலில் குவாண்டம் அறிவியலின் தாக்கங்களைத் தனியாக வரிசைப்படுத்திக் கொண்டாட வேண்டும்.
- அடிப்படை அறிவியல், நம்முடைய அறிவியல் கல்வியில் குவாண்டம் இயந்திரவியல் சார்ந்த திறன்களை வலுப்படுத்த வேண்டும். நிலையான வளர்ச்சிக்கு குவாண்டம் அறிவியலின் முக்கியத்துவம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். பிக் டேட்டா போன்றவற்றைப் பாதுகாப்பாக எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வழங்க வேண்டும். இப்படிப் பல்வேறு வகைகளில் இந்த ஆண்டைக் கொண்டாட வேண்டும் என்று ஐ.நா. அவை அறிவித்திருக்கிறது.
- அதே வேளையில், குவாண்டம் இயந்திரவியல் முன்னேற்றங்கள் குறித்துப் போட்டிகள் நடத்தி, ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து, அறிவியல் மாதிரிகள் தயாரித்து, புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து, இந்தத் துறையை நாம் கொண்டாட வேண்டும். டிஜிட்டல் உள்கட்டமைப்பு, சைபர் பாதுகாப்பு, இணைய மோசடிகள் குறித்தும் அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறும் ஐ.நா. அவை, குவாண்டம் அறிவியல் தொழில்நுட்ப ஆண்டின் ஒரு பகுதியாக இணையப் பாதுகாப்பு ஆண்டாகவும் அறிவித்துள்ளது.
- ஐ.நா.வின் துணை அமைப்பான யுனெஸ்கோ, ‘அமெரிக்கன் ஃபிசிகல் சொசைட்டி’, ஜெர்மனியின் ‘குவாண்டம் ஃபிசிக்ஸ் சொசைட்டி’ ஆகியவை உலகெங்கிலும் உள்ள அறிவியல் அமைப்புகளோடு இணைந்து உலகளாவிய ஒருங்கிணைப்பு - வழிநடத்தும் குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் உள்ள குவாண்டம் அறிவியல் துறை சார்ந்த வல்லுநர்கள் இந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளார்கள். இந்த மிகப் பெரிய அறிவியல் தருணத்தை அறிவியலர்களுடன் இணைந்து சமூகமும் கொண்டாடுவது அடுத்துவரும் தலைமுறைக்கு ஓர் பெரும் அடிக்கல்லாக அமையும்!
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 01 – 2025)