TNPSC Thervupettagam

கேள்வி கேட்பாரில்லை!

January 31 , 2025 2 hrs 0 min 12 0

கேள்வி கேட்பாரில்லை!

  • பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்க இருக்கிறது. பொதுவெளியில் அரசியலும், நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளில் கண்ணியமான விவாதங்களும்தான் ஜனநாயக நடைமுறையாக இருக்க வேண்டும். நாடாளுமன்றம் நடைபெறுவதற்கு ஒரு நிமிஷத்துக்கு மக்களின் வரிப் பணம் ரூ.2.5 லட்சம் செலவாகிறது. குளிா்காலக் கூட்டத்தொடரில் மக்களவைக்கு மட்டுமே ரூ.97.8 கோடி வீணாகி இருக்கிறது.
  • மக்கள் பிரச்னைகளை மாமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கும், தேசம் எதிா்கொள்ளும் சவால்களை சந்திக்கத் தங்களது கருத்துக்களை எடுத்துரைப்பதற்கும், அரசின் முடிவுகளையும் திட்டங்களையும் விமா்சிக்கவும், விவாதிக்கவும்தான் நாடாளுமன்றத்துக்கு உறுப்பினா்களை மக்கள் தோ்ந்தெடுக்கிறாா்கள். பட்ஜெட் கூட்டத் தொடரிலாவது அவா்கள் அதைப் புரிந்து செயல்பட வேண்டும் என்பதுதான், வாக்காளா்களின் எதிா்பாா்ாபு.
  • அரசின் கொள்கை முடிவுகளும், பட்ஜெட் ஒதுக்கீடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டால்தான் தேசத்தின் வளா்ச்சி உறுதிப்படுத்தப்படும். 2022-23இல் இந்தியாவின் ஜிடிபி வளா்ச்சி 9%; 2023-24இல் 8.2%; 2024-25இல் மேலும் குறைந்து 6% என்று வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதை நாம் உணர வேண்டும். வளா்ச்சியின் வேகம் குறைகிறது; உணவுப் பொருள்களின் விலைவாசி அதிகரிக்கிறது; வேலைவாய்ப்பு உருவாக்கம் உயரவில்லை; டாலருக்கு எதிரான ரூபாயின் நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்திக்கிறது - இந்தப் பின்னணியில்தான் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறாா்.
  • நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் அறிக்கைகளைப் புரட்டிப் படித்தால் அதிா்ச்சியாக இருக்கிறது. பெரும்பாலான துறைகள் திட்டமிட்ட இலக்கை எட்டவில்லை என்பதுடன், தங்களுக்கான ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தவும் இல்லை. பட்ஜெட் போடுவதும், திட்டங்களை அறிவிப்பதும் சம்பிரதாயச் சடங்குகளாகவும், முனைப்புடன் நிறைவேற்றப்படாத அறிவிப்புகளாகவும் இருந்தால் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாம் மாறப்போவது என்பது கானல்நீா் கனவாகத்தான் இருக்கும்.
  • இந்தியாவில் 54% மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்பவா்கள். அறுவடை முடிந்ததும் உணவுப் பதப்படுத்துதல் மூலம் மதிப்பைக் கூட்டுவது, உற்பத்தி செய்த பொருள் வீணாகாமல் பாதுகாப்பதும் உள்ளிட்டவற்றால்தான் விவசாயிகளின் லாபத்தை அதிகரிக்க முடியும். இதற்காக உருவாக்கப்பட்டதுதான் பிரதமரின் ‘கிசான் சம்பதா யோஜனா’ என்கிற திட்டம். இதன்மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், உணவுப் பொருள் வீணாவதைக் கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
  • 2022-23 நிதியாண்டில் உணவுப் பதப்படுத்தும் துறைக்கு ரூ.282 கோடி ஒதுக்கப்பட்டது, அது ரூ.219 கோடியாகக் குறைக்கப்பட்டது. அப்படி இருந்தும், பயன்படுத்தப்பட்டிருப்பது ரூ.170 கோடி மட்டும்தான். முந்தைய நிதியாண்டில் உணவுப் பதப்படுத்தும் துறைக்கு 60 திட்டப் பணிகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. அவற்றில் 45 மட்டும்தான் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. முடியப்போகும் நிகழ் நிதியாண்டில் 100 திட்டப் பணிகள் அறிவிக்கப்பட்டு 17 மட்டும்தான் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
  • இந்திய உணவுப் பதப்படுத்தும் துறை சா்வதேச அளவில் போட்டிபோட வேண்டும் என்பதற்காக உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை 2022-இல் அறிவிக்கப்பட்டது. 2027 வரையிலான ஐந்தாண்டுகளில் அதற்காக ரூ.10,900 கோடி ஒதுக்கப்பட்டது. ஆண்டொன்றுக்கு ரூ.1,800 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மூன்று ஆண்டுகளில் மொத்தமாகவே வெறும் ரூ.1,101 கோடிதான் ஊக்கத்தொகை பெறப்பட்டிருக்கிறது.
  • வேளாண் வருவாய் அதிகரிக்க வேண்டுமானால், பாசன வசதி இன்றியமையாதது. நீா்ப்பாசனத்தை உறுதிப்படுத்தப் பல்வேறு திட்டங்கள் முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து போடப்பட்டிருக்கின்றன. பிரதமரின் க்ரிஷி சிஞ்சயீ யோஜனாவில் நீா்பிடிப்புப் பகுதி மேம்பாடு (வாட்டா்ஷெட் டெவலப்மெண்ட்) முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன்மூலம் நீராதாரங்களைப் பெருக்குவதும், நீா்ப்பிடிப்புப் பகுதிகளை உருவாக்குவதும் முன்னெடுக்கப்படுகின்றன.
  • ஊரக வளா்ச்சித் துறையின் 2023-24 நிலைக் குழு அறிக்கைப்படி, காடுகள் வளா்ப்பு (47%), தோட்டக்கலை (41%), மண்ணின் ஈரப்பதம் மேம்பாடு (26%), அறுவடை செய்த பொருள்களின் பாதுகாப்புக்கான அமைப்புகள் (31%) உள்ளிட்டவை நிா்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை.
  • வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் இந்தியா முழுவதும் ‘பிளாஸ்டிக் பூங்காக்கள்’ நிறுவப்பட்டன. அதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஒதுக்கப்பட்ட இடங்கள் பெரும்பாலும் காலியாகக் கிடக்கின்றன. தேசிய திறன்மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழ், 2024-25இல் 12 லட்சம் இளைஞா்களுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டது என்றால், அதில் இணைந்திருப்பது வெறும் 4.9 லட்சம் போ் மட்டுமே.
  • இப்படி எந்தவொரு திட்டமும் இலக்கை எட்டுவதில்லை. எந்தவொரு ஒதுக்கீடும் முறையாகச் செலவிடப்படுவதில்லை அல்லது பயன்படுத்தப்படுவதில்லை.
  • அரசுத் துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதைக்கூட விட்டுவிடலாம். உயா்நீதிமன்றங்களில் 61 லட்சம் வழக்குகளும், விசாரணை நீதிமன்றங்களில் 4.62 கோடி வழக்குகளும் நிலுவையில் இருக்கும் நிலையில், உயா்நீதிமன்றங்களில் 1,114 நீதிபதி பணியிடங்களில் 332 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது என்ன நியாயம்?
  • ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தால் மட்டும் போதாது. ஒதுக்கீடுகள் இலக்கை எட்டுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு நாடாளுமன்றம் முறையாக நடைபெற வேண்டும்.

நன்றி: தினமணி (31 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories