TNPSC Thervupettagam

கைம்பெண்களின் கண்ணீரைத் துடைப்பது எப்போது?

October 22 , 2024 4 days 52 0

கைம்பெண்களின் கண்ணீரைத் துடைப்பது எப்போது?

  • தமிழ்நாடு அரசின் சமூக நலன் - மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்​படும் ‘கைம்​பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நல வாரியம்’ ஆரம்பிக்​கப்​பட்டு, இரண்டு ஆண்டுகள் (2022-2024) நிறைவடைந்​து​விட்டன. ஆனால், இந்த வாரியத்தின் மூலமாகக் கைம்பெண்கள், வறுமைக்​கோட்டுக்குக் கீழே உள்ள பெண்கள் பெரிய அளவுக்கு முன்னேற்றம் அடைந்​த​தாகத் தெரிய​வில்லை.
  • 2011ஆம் ஆண்டு மக்கள்​தொகைக் கணக்கெடுப்​பின்படி, தமிழ்​நாட்டில் 38 லட்சத்து 58 ஆயிரம் கைம்பெண்கள் இருப்​ப​தாகக் கணக்கிடப்​பட்​டுள்ளது. குடிப்​பழக்கம், குணப்​படுத்த முடியாத நோய்கள், சாலை விபத்து, தற்கொலை போன்ற காரணங்​களால் ஆண்கள் இறந்து​கொண்டேதான் இருக்​கிறார்கள்.
  • இதன் விளைவாகக் கைம்பெண்​களின் எண்ணிக்கை நாளுக்​குநாள் அதிகரித்​துக்​கொண்டே இருக்​கிறது. எனவே, இந்த நல வாரியத்தின் மூலமாக உடனடி​யாகத் தமிழ்​நாடெங்கும் கைம்பெண்கள் குறித்த சரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு என்னென்ன நலத்திட்​டங்கள் வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்க முடியும். ஆனால், இதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம் இருக்​கின்றன.

பேசப்பட வேண்டிய பிரச்​சினைகள்:

  • அண்மை​யில், கைம்பெண்​களின் கணக்கெடுப்​புக்காக ஒரு புதிய செயலியை உருவாக்கி, அதன் மூலமாகக் கைம்பெண்​களின் தரவுகளைப் பதிவுசெய்​வதற்குத் தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது.
  • எனினும், கிராமப்பு​றங்​களிலும் சரி, நகர்ப்பு​றங்​களிலும் சரி, திறன்பேசி பயன்படுத்தாத / பயன்படுத்தத் தெரியாத, படிப்​பறி​வில்லாத, வயது முதிர்ந்த கைம்பெண்கள் அந்தச் செயலியைத் திறந்து, தங்களுடைய தரவுகளைப் பதிவிட இயலாமல் தவிக்​கிறார்கள். திறன்பேசி வைத்திருப்​பவர்​களின் உதவியை அவர்கள் நாட வேண்டி​யிருக்​கிறது. அப்படியான சூழலிலும், பலரால் சரியான விதத்தில் தகவலைப் பதிவேற்றம் செய்ய முடியாமல் போகிறது.
  • இந்த நல வாரியம் கைம்பெண்​களுக்காக உடனடி​யாகச் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்​கின்றன. அவர்கள் சுதந்​திர​மாகத் தங்கு​வதற்கு வீடு இல்லாமல் அல்லலுறுகிறார்கள். குடிசை, தகரம் போட்ட வீடு, வாடகை வீடு அல்லது உறவினர்கள் வீடு என்று நிரந்​தரமில்​லாமல் வாழ்கிறார்கள். குறிப்பாக, நகர்ப்பு​றங்​களில் கைம்பெண் என்று தெரிந்தால் வாடகை வீடு தர மறுக்​கப்​படு​கிறது.
  • இதனால், அவர்கள் கணவர் இருப்​பதுபோல காட்டிக்​கொள்ள வேண்டிய தேவை இருக்​கிறது. அது அவர்களுக்குப் பாதுகாப்​பையும் சமூக அந்தஸ்​தையும் அங்கீ​காரத்​தையும் கொடுக்​கிறது. கஷ்டப்​பட்டு எங்காவது ஒரு வாடகை வீடு எடுத்​தால், மாதந்​தோறும் அவர்கள் வாடகை கட்ட முடியாமல் தவிக்​கிறார்கள். வாடகைப் பணம் கட்டு​வதற்​கென்றே வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்​படு​கிறார்கள்.
  • வீடு இல்லாத கைம்பெண்களை அரசு தற்காலிக​மாகத் தங்கும் இல்லங்​களில் வந்து தங்குமாறு அறிவுறுத்து​கிறது. ஆனால், நடைமுறை வாழ்வில் அது சாத்தியம் இல்லை. ஏனென்​றால், கைம்பெண்கள் தங்களுடைய உறவினர்​களோடும் பேரப்​பிள்​ளை​களோடும் சேர்ந்து இருக்​கத்தான் விரும்​பு​கின்​றனர். தற்காலிக​மாகத் தங்கும் இல்லங்​களில், ஆதரவற்​றவர்​கள்போல இருக்க அவர்கள் விரும்​புவ​தில்லை. எனவே, கைம்பெண்​களுக்கு வீடு கட்டு​வதற்காக அரசு கூடுதலாகக் கடன் ஒதுக்க வேண்டும். வீட்டு மனை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருளா​தாரத் தன்னிறைவு:

  • கைம்பெண்கள் - முதியோ​ருக்கான ஓய்வூ​தியமாக வழங்கப்​படும் ரூ.1,200-ஐ ரூ.3,000ஆக உயர்த்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களது அன்றாடத் தேவைகளை​யும், மருத்​துவச் செலவு​களையும் சமாளிக்க முடியும். மேலும், பொருளா​தா​ரத்தில் சொந்தக் காலில் நிற்கும் அளவுக்குக் கைம்பெண்​களுக்கான வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கித் தர வேண்டும்.
  • அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் உள்ள வேலைவாய்ப்பு​களில் குறைந்​த​பட்சம் 10 சதவீத​மாவது கைம்பெண்​களுக்கு என்று ஒதுக்க வேண்டும். மேலும், சுயதொழில் செய்கின்ற அளவுக்கு அரசு மானியத்​துடன் தொழில் முனைவோருக்கான கடன்களை வழங்க வேண்டும். சமீபத்தில் பதிவுசெய்​யப்பட்ட ஒவ்வொரு கைம்பெண்​ணுக்கும் ரூ.50 ஆயிரம் கடன் உதவியாக வழங்கப்​படும் என்ற அரசாணை வெளிவந்தது. ஆனால், தகவல் சேகரிப்​ப​தற்கு முன்பாகவே அது நிறுத்​திவைக்​கப்​பட்​டுள்ளது. அரசிடம் நிதி இல்லை என்று காரணம் சொல்லப்​படு​கிறது.

மனநலம் காக்க...

  • கைம்பெண்​களில் பெரும்​பாலானோர் தங்கள் எதிர்​காலம் எப்படி இருக்குமோ என்கிற பயத்திலும் அச்சத்​தி​லும்தான் வாழ்கிறார்கள். குழந்தை​களோடு இருக்​கின்ற கைம்பெண்கள் எதிர்​கொள்ளும் சவால்கள் அதிகம். இப்படிப் பல்வேறு பிரச்​சினைகளை எதிர்​கொள்​வ​தால், மிகப்​பெரிய மன உளைச்​சலுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். இதிலிருந்து அவர்கள் வெளிவரு​வதற்குத் தனியார் அமைப்பு​களோடு இணைந்து இலவசமாக அவர்களுக்கு மனநல ஆலோசனையை அரசு வழங்க வேண்டும்.
  • மேலும், பல்வேறு ஆக்கபூர்வமான செயல்​பாடு​களில் அவர்களை ஈடுபட வைக்க வேண்டும். குறிப்பாக, மாவட்ட அளவிலான பெண்கள் கண்காணிப்புக் குழு, கிராம மேம்பாட்டுக் குழு, கல்வி மேம்பாட்டுக் குழு, விவசா​யிகள் குறை தீர்ப்புக் குழு ஆகிய குழுக்களை உருவாக்கு​வதோடு, அரசுத் துறை சார்ந்த குழுக்​களிலும் கைம்பெண்களை ஈடுபடுத்து​கின்​ற​போது, அவர்கள் தங்கள் கவலையை மறந்து இந்தச் செயல்​பாடு​களில் தங்களை ஈடுபடுத்​திக்​கொள்ள முடியும்.

சட்டப் பாதுகாப்பு:

  • சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் கைம்பெண்​களின் சமத்துவ உரிமைகள் நிலைநாட்​டப்​படு​வதும் அவர்களின் சுதந்​திரம் உறுதிப்​படுத்​தப்​படு​வதும் காலத்தின் தேவை. இதை மனதில் வைத்து, கைம்பெண்கள் பாகுபாடு - வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். கைம்பெண்​களுக்கு ஏற்படு​கின்ற பல்வேறு விதமான அநீதி​களைப் பதிவுசெய்​வதற்​கும், அவற்றுக்குத் தீர்வு காணவும் ஒவ்வொரு மாவட்​டத்​திலும் ஒரு சட்டப் பாதுகாப்புக் குழு அமைக்​கப்பட வேண்டும்.
  • மொத்தத்​தில், கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்​கப்பட்ட பிறகு, அவர்களுடைய வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்கிற நம்பிக்கை உருவானது. ஆனால், வாரியத்​துக்​கென்று அரசு போதுமான நிதி ஒதுக்​காத​தா​லும், ஆக்கபூர்வமான செயல்​பாடுகளை முன்னெடுக்​காத​தாலும் அந்த நம்பிக்கை முழுமையாக நிறைவேற​வில்லை. மகளிர் நலத் திட்டங்​களில் தீவிரக் கவனம் செலுத்தும் திமுக அரசு, இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories