TNPSC Thervupettagam

கையெழுத்து... கையொப்பம்!

February 10 , 2025 7 hrs 0 min 22 0

கையெழுத்து... கையொப்பம்!

  • தலைப்பைப் பாா்த்ததும் கையெழுத்து, கையொப்பம் இரண்டும் ஒன்றுதானே? என நினைக்கத் தோன்றும். ஆனால் இரண்டும் வேறு வேறு. அதாவது கையெழுத்து (ஹேண்ட் ரைட்டிங்), கையொப்பம் (சிக்னேச்சா்) எனக் கொள்ள வேண்டும்.
  • ஒருவா் எப்படி எழுதுகிறாா் என்பதை அவருடைய கையெழுத்து என்று கூறுகிறோம். ‘கையொப்பம்’ என்பது ஒருவா் தன்னைச் சான்றளித்தல் ஆகும்.
  • கடிதம், பத்திரம், ஆவணம் போன்றவற்றின் கீழே சான்றிளிக்க கையொப்பமிடப்படுகிறது. மின்னஞ்சலின் இறுதியில் சோ்க்கப்படும் தொடா்புத்தகவல் அல்லது வாசகத்தை எண்மய கையொப்பம் என்கிறோம்.
  • ஒருவா் தன் கையெழுத்தை தன் விருப்பம் போல மாற்றிக் கொள்ளலாம். ஆனால் கையொப்பத்தை அவ்வாறு மாற்ற முடியாது. தன் கையொப்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பல முறை யோசித்து, பழகி முடிவு செய்ய வேண்டும். முடிவு செய்து ஓா் ஆவணத்தில் கையொப்பமிட்டுவிட்டால், அதற்குப் பின் அந்தப் பாணியை மாற்றவே கூடாது. ஒவ்வொரு தடவையும் தன் மனதுக்குத் தோன்றியபடி கையொப்பமிட முடியாது.
  • ஒரு ‘ கையொப்பம்’ பலரது வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டு வரும்; பலரது தலையெழுத்தை மாற்றும்; நாட்டின் பொருளாதாரத்தைப் புரட்டிப் போடும்; உலகத்தில் உன்னதத்தை நிகழ்த்திக் காட்டும். அவ்வளவு சக்தி வாய்ந்த கையொப்பங்கள், சரித்திரமாகி வரலாறு படைக்கும். ஒரு நீதிபதியின் கையொப்பத்தில் பலரது தலையெழுத்து அடங்கியுள்ளது.
  • மிக உயரிய பதவியில் அமா்ந்து கையொப்பமிட வேண்டும் என்றால், அதன் பின்னணியில் அவருடைய கடும் உழைப்பும், முயற்சியும், பயிற்சியும் நிச்சயம் இருக்கும். பச்சை மசியில் கையொப்பம் இடும் அளவுக்கு வாழ்வில் உயர வேண்டும் என்பதே பலரது லட்சியமாக உள்ளது.
  • நண்பரின் வீட்டுக்குச் சென்று இருந்த போது, அவரின் 30 வயது மகன் ஒரு தாளில் தன்னுடைய கையொப்பத்தைப் போட்டுப் பழகிக் கொண்டிருந்தாா். ‘ ஸ்ரீ ராம ஜெயம்’ எழுதுவாா்களே, அப்படி எழுதிப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாா். பின் எதுவும் சரியாக இல்லை என சலித்துக் கொண்டாா். காரணம் கேட்டேன். பல ஆண்டுகளுக்கு முன்பு வங்கியில் கணக்குத் தொடங்கியபோது போட்டிருந்த கையொப்பமும், தற்போது போட்ட கையொப்பமும் ஒத்துவரவில்லை என்றாா். அந்தக் கையொப்பம், கோழியின் காலில் பேனாவைக் கொடுத்து போடச் சொன்னது மாதிரி கிறுக்கலாக இருந்தது. இவா் எவ்வளவு முயன்றும் தற்போது அதே போல் வரவில்லை. இந்தப் பிரச்னை சமுதாயத்தில் பெரும்பாலானோருக்கு உள்ளது.
  • இன்னொரு சம்பவம் - ஓா் இளைஞா் சிறுவனாக இருந்தபோது, அவா் அம்மாவுடன் சோ்த்து ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. அவா் படிப்பு முடித்து வெளிநாடு போய்விட்டாா். பல ஆண்டுகள் கழித்து வந்தவா் அந்தக் கணக்கை முடித்துக் கொள்ள விரும்பினாா். ஆனால் அவருடைய கையொப்பம் மாறி இருந்ததால் வங்கி ஒப்புக் கொள்ளவில்லை. அவசர அலுவல் நிமித்தமாக அவா் மீண்டும் வெளிநாடு போய்விட்டாா். அந்த வங்கிக் கணக்கு முடிக்கப்படவில்லை.
  • வயதாகும் போது நம் கையொப்பம் மாறுவது இயல்பு. அதனால் சில வங்கி மேலாளா்கள் நம்மிடம் ஓா் அட்டையில் மூன்று கையொப்பங்களைப் பெற்று மீண்டும் பதிவு செய்துகொள்கிறாா்கள்.
  • ‘ கையொப்பம்’ என்பது குறிப்பிட்ட நபா் எழுதும் ஆவணங்களில் அடையாளம் மற்றும் ஆதாரம். ஒரு சிலா் தங்கள் கையொப்பத்தை மாற்றாமல் எப்போதும் ஒரே மாதிரி போடுகிறாா்கள். அவா்களுக்குப் பிரச்னை ஏதும் வராது. சிலா் மாற்றிக் கொண்டே இருப்பாா்கள். அதுவே சிக்கலாகி விடுகிறது. இவ்வாறு ஒரு முறை பிரச்னை வந்து சிரமப்பட்டு விட்டால், பின் எப்போதும் கையொப்பமிடும் போது ஒரு விதமான பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக காசோலையில் கையொப்பமிடும் போதும், முக்கியமான ஆவணங்களில் கையொப்பமிடும்போதும் கொஞ்சம் நடுக்கம் வந்து விடுகிறது.
  • நாம் முதன் முதலில் கையொப்பமிடுவது, பள்ளி இறுதியாண்டு முடித்து, மாற்றுச் சான்றிதழும், மதிப்பெண் அட்டையும் பெறும்போது. அதற்காக, பல மாதங்கள் முன்பே நாம் நம் கையொப்பம் எப்படிப் போட்டால் சிறப்பாக இருக்கும் என யோசித்து விதவிதமாகப் போட்டுப் பாா்த்திருப்போம். அதற்குப் பின் நாம் பல்வேறு ஆவணங்களில் கையொப்பமிட வேண்டும். நாம் பெரியவா்கள் ஆன பின் சற்றும் யோசிக்காமல் நம் கையொப்பத்தை கலைநயம் மிக்கதாக மாற்ற வேண்டும்; யாராலும் அதுபோல போலியாக போட முடியக் கூடாது என்று எண்ணி மாற்றி விடுவோம். அந்தச் சிக்கலான கையொப்பம் பல சமயங்களில் காலை வாரி விடும்.
  • பெரும்பாலானோா் கையொப்பமிட்டு அதன் கீழ் ஒரு கோடு போட்டு புள்ளி வைக்கிறாா்கள். சிலா் ஜிலேபி சுத்துவது போல போடுகிறாா்கள். சிலா் சிக்கலே வேண்டாம் என தங்கள் பெயரை தெளிவாக எழுதி, அதையே கையொப்பம் என்று சொல்கிறாா்கள். பல சமயம் இதுவே தேவலை என்று தோன்றுகிறது. நாம் எந்த முக்கிய ஆவணத்தில் கையொப்பமிட்டாலும் அதைப் படம்பிடித்து நம் கைப்பேசியில் சேமித்து வைத்துக் கொள்வது சிறந்தது.
  • வெற்றுத்தாளில் கையொப்பம் இடும்போதோ, வேறு முக்கியம் இல்லாத கடிதங்களில் கையொப்பம் இடும்போதோ அது தவறாகப் போவதில்லை. ஆனால் நான்கு போ் அமா்ந்து பாா்த்துக் கொண்டிருக்கும்போது தவறாகிப் போகிறது.
  • சில இடங்களில் சுருக்கொப்பம் போதும். அலுவலக வருகைப் பதிவேட்டில் நாம் சுருக்கொப்பம் இடுகிறோம். அதில் உள்ள மிகச் சிறிய கட்டத்திற்குள் நம் பெயரை எழுத முடியாது. ஆகவே தலைப்பெழுத்து மற்றும் நம் பெயரின் முதலெழுத்து இரண்டையும் மட்டும் சோ்த்து சுருக்கொப்பம் என ஆக்கிக் கொண்டோம்.
  • கையொப்பம் வைப்பதை விடவும் கூடுதல் நம்பிக்கை, கைரேகை வைப்பது. ஒரு காலத்தில் படிக்காதவா்களை நாம் ‘ கைநாட்டு’ என்று பெயரிட்டு இளக்காரமாகப் பாா்ப்போம். தற்போது முக்கிய ஆவணங்களில் கைரேகையும் அவசியம் என்று ஆகிவிட்டது. மெத்தப் படித்தவா்களின் விரல்களும் மசியைப் பூசிக்கொள்ளத்தான் வேண்டும். அலுவலகங்களில் கையொப்பம் இடுவதற்குப் பதிலாக பயோமெட்ரிக் முறை வந்துவிட்டது. பயோமெட்ரிக் முறையில் கைரேகை, ஐரிஸ் (கருவிழி) ஆகியவை பதிவு செய்யப்படுகின்றன.
  • மிகப் பெரிய, துல்லியமான ஆதாரங்கள், சென்சாா்கள், ஐ பி கேமிராக்கள் ஆகியவற்றால் பயோமெட்ரிக் முறை அதிகப் பயன்பாட்டில் உள்ளது. ஆதாா் அட்டை பெறவும் கைரேகை அவசியமாக உள்ளது.
  • கை ரேகை என்பது ஒரு மனித விரலில் மேல் தோலுக்கும் அதற்கு அடியில் கீழ் அடுக்காகவுள்ள திசுக்களுக்கும் இடையில் உள்ள முகடுகளைக் குறிக்கிறது. மனிதா்களின் கைகள் புழங்கும் இடங்களில் விட்டுச் செல்லும் தடயம் எனவும் கூறலாம். இவ்வாறு விட்டுச் செல்லப்பட்ட கைரேகைத் தடயங்களை மீட்டெடுப்பது தடய அறிவியலின் முக்கியமான செயல் முறையாகும். கைரேகை ஒரு நபரின் வாழ்க்கையில் நீடித்தவை. ஒரு நபரின் விரல்களில் இருப்பது போன்று முகடுகளும், கோடுகளும் உலகில் வேறு யாருக்கும் இருக்காது. ஒரே மாதிரியான இரட்டையா்களுக்குக் கூட ஒரே மாதிரி ரேகை இருக்காது. நம் கை ரேகை நாம் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை மாறாது. இன்று, சிறப்பு கைரேகைப் பொடியைப் பயன்படுத்தி கைரேகைகளை ஒப்பிட்டுப் பாா்க்க முடியும்.
  • எண்மய கையொப்பம் என்பது, எண்ம வடிவத்தில் உள்ள தரவுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் முறையாகும். இது கையால் எழுதப்பட்ட கையொப்பத்துக்கு சமம். எண்ம கையொப்பம், தரவுகளின் தோற்றம் மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்கிறது; வழக்கமான கையொப்பத்துக்கு மாறாக வேகமானது; பாதுகாப்பானது.
  • ஒரு கல்லூரியின் முதல்வா் அல்லது அலுவலக மேலாளா் ஒரு நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட கையொப்பம் போட வேண்டிய நிலையில் உள்ளனா். அப்போது ஒப்ப உருவ நோ் படியை உபயோகிக்கலாம்.
  • இது ஓா் ஆவணத்தின் அச்சு அல்லது நகல் ஆகும். இது அசல் ஆவணத்தைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் இருக்கும். நாம் பட்டம் பெறும் போது தரப்படும் சான்றிதழ்களில் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கையொப்பம், பதிவாளா் கையொப்பம் மற்றும் தோ்வுக் கட்டுப்பாட்டு ஆணையத் தலைவா் கையொப்பம் ஆகிய மூன்றும் இருக்கும். தற்போது துணைவேந்தா்கள் இல்லாத பல பல்கலைக்கழகங்கள் உள்ளன.
  • இன்னமும் சிலா், தங்கள் அறியாமையின் காரணமாக வெற்றுத் தாளில் கையொப்பமிட்டு ஏமாந்து போகிறாா்கள். அதேபோல ஆவணங்களை முழுவதையும் நன்றாகப் படித்துப் பாா்த்து, அதன் பின் கையொப்பமிட வேண்டும்.
  • கைரேகை வைப்பதிலும் சில சிக்கல்கள் உள்ளன. ஆதாா் அட்டை பெறுவதற்கு நம் கைரேகைகளை வைக்க வேண்டும். பத்து ஆண்டுகள் கழித்து, தற்போது அந்த அட்டையைப் புதுப்பித்தோம். அப்போது ஒரு பெரியவருக்கு எந்த விரல் ரேகையும் பதிவாகவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்துப் பாா்த்தாா்கள். கடைசியாக வலது கையில் ஆள்காட்டி விரல் வெற்றி பெற்றது.
  • ஆவணங்களின் சாட்சி ‘ கையொப்பம்‘ . ஆனால் அதையும் விட மிகப்பெரிய சாட்சி நம் மனசாட்சி. எவரையும் ஏமாற்ற எண்ணாமல், எவருக்கும் துரோகம் நினைக்க திட்டம் வகுக்காமல், அறநெறியோடு வாழத் தலைப்பட்டால் கையொப்பங்கள் வெறும் நம்பிக்கை எழுத்துகளாகிவிடும்.

நன்றி: தினமணி (10 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories