TNPSC Thervupettagam

சட்டவிரோதத்தில் ஈடுபடுபவர்களா தெருவோர வியாபாரிகள்?

August 8 , 2024 9 hrs 0 min 17 0
  • தெரு​வோரத்தில் வியாபாரம் செய்யும் ஏழை மக்கள் மீது அரசு அதிகாரிகள் நிகழ்த்தும் அத்து​மீறல் எல்லை கடந்து சென்று​கொண்டிருக்​கிறது. சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் தெருவோரத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்களை ‘ஆக்கிரமிப்​பாளர்கள்’ என வரையறுத்து காவல் துறை உதவியோடு மாநகராட்சி அதிகாரிகள் ஜூன் 13ஆம் தேதி கடைகளை அப்புறப்​படுத்த ஆரம்பித்​தனர்.
  • தனது பழக்கூடையைப் பாதுகாக்க முயன்ற தலித் பெண் கிருஷ்ணவேணி அம்மாள் அவசரமாக ஓடியதில், அதே இடத்தில் மாரடைப்பால் உயிரிழந்​தார். அதிகாரி​களின் அத்து​மீறலால் வாழ்வை இழக்கும் அப்பாவி​களின் ரத்த சாட்சி​ய​மாகி​யிருக்​கிறார் கிருஷ்ணவேணி அம்மாள்.

சட்டத்தை மதிக்காத அதிகாரிகள்:

  • கோடம்​பாக்கம் ரயில் நிலையம் அருகில் 50 ஆண்டுகளாகத் தெருவோரத்தில் வியாபாரம் செய்துவந்த கடைகளை ஜூலை 19ஆம் தேதி எந்தவித முன்னறி​விப்பும் இன்றி மாநகராட்சி அதிகாரி​களும் காவல் துறையினரும் ‘பொக்​லைன்’ இயந்திரத்தால் அடித்து நொறுக்​கினர்.
  • இதில் அரசின் அனுமதி பெற்று, நீதிமன்ற உத்தர​வின்படி செயல்​படும் மாற்றுத்​திறனாளி​களின் கடைகளும் அடக்கம். இது குறித்து மாநகர மேயரிடம் மனு அளித்​த​போது, இனி அவ்வாறு நடக்காது என உறுதி​யளித்​தார். விசாரித்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்​ப​தாகவும் தெரிவித்​தார்.
  • ஆனால், அடுத்த சில நாள்களில் திருவொற்றியூர் காலடிப்​பேட்​டையில் நள்ளிரவு 2 மணிக்கு, தெருவோரத்தில் வியாபாரம் செய்துவந்த 300க்கும் மேற்பட்ட கடைகளை ‘பொக்​லைன்’ இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரி​களும் காவல் துறையினரும் அழித்துச் சேதப்​படுத்தி​யுள்​ளனர். தெருவோரக் கடைகள் நிர்மூலமாக்​கப்​படு​வதும் வியாபாரப் பொருள்கள் நாசமாக்​கப்​படு​வதும் தொடர்​கதையாகி​விட்டது. மாநகராட்சி அதிகாரி​களும் காவல் துறையினரும் மேற்கொள்ளும் இந்தச் செயல்​பாடுகள், இந்திய நாடாளு​மன்​றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு எதிரானவை.

நீதிமன்​றத்தால் அங்கீகரிக்​கப்பட்ட வியாபாரம்:

  • உண்மை​யில், நாட்டின் பொருளாதார வளர்ச்​சிக்கு அள்ளிக் கொடுக்கும் கருவூலங்களாக இருப்பவை தெருவோரத்தில் நடைபெறும் வியாபாரங்கள். எளிய மக்களுக்கான மலிவு விலைப் பொருள்களை எங்கெங்கோ இருந்து வாங்கிவந்து வெயிலிலும் மழையிலும் படாத பாடுபட்டு விற்றுப் பிழைப்பு நடத்துவோர், இந்தச் சின்னஞ்சிறு வியாபாரிகள்.
  • இந்த எளிய வியாபாரி​களின் நலன் காப்ப​தற்காக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்​டங்​களின் விளைவாகத்தான் 2010இல் தெருவோர வியாபாரத்தை வாழ்வாதாரமாக உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. மேலும், வியாபாரி​களின் போராட்​டங்​களின் விளைவாகவும், உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின் காரணமாகவும் தெருவோர வியாபாரிகள் (வாழ்​வாதாரம் மற்றும் தெருவோர வியாபாரத்தை ஒழுங்​குபடுத்​துதல்) சட்டம், 2014இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்​றப்​பட்டது.
  • தெருவோர வியாபாரி​களின் நலன்களைப் பாதுகாக்​கக்​கூடிய இந்தச் சட்டத்தைத் தமிழ்​நாட்டில் அமல்படுத்தக் கோரி ஏராளமான போராட்​டங்களை சிஐடியு முன்னெடுத்தது. மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்​பினர்கள் சட்டமன்​றத்தில் குரல் கொடுத்​தார்கள். நீதிமன்​றத்​திலும் சட்டப் போராட்டம் முன்னெடுக்​கப்​பட்டது. இதைத் தொடர்ந்து, 2017இல் சென்னை மாநகராட்​சியில் மட்டும் 15 மண்டலங்​களிலும் நாடாளு​மன்றச் சட்டத்தின்படி நகர விற்பனைக் குழு (vending committee) அமைக்​கப்​பட்டது.

சட்டம் சொல்வது என்ன?

  • தெருவோரம் மேற்கொள்ளப்படும் வியாபாரத்துக்குச் சட்டபூர்வமான அங்கீகாரம் உண்டு. தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஒரு பகுதியில் தெருவோரத்தில் வியாபாரம் நடைபெற்று​வந்​தால், அதை ‘இயற்​கையான சந்தை’ என அங்கீகரிக்க வேண்டும்; ஆக்கிரமிப்பு என அகற்றக் கூடாது. தெருவோரத்தில் வியாபாரம் செய்வதற்​குரிய பகுதிகளை அங்கீகரித்து, அப்பகுதி​களில் வியாபாரம் செய்வதற்கு உறுதி​யளிக்க வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது.
  • அங்கீகரிக்​கப்படாத தெருவோரக் கடையை அகற்ற வேண்டு​மானால் மாற்று இடம் தராமல் அகற்ற முடியாது. அப்படி ஒரு பகுதியில் தெருவோர வியாபாரம் செய்கிறவர்களை அகற்ற வேண்டுமென்​றால், அதிகாரிகள் மட்டும் நினைத்தால் முடியாது. தெருவோர வியாபாரி​களின் பிரதிநிதி​களையும் அதிகாரி​களையும் உள்ளடக்கிய நகர விற்பனைக் குழுதான் முடிவுசெய்ய வேண்டும்.
  • தெருவோரக் கடைகளை அகற்று​வதற்கு 30 நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். குறைதீர்க்கும் குழுவிடம் (Redressal committee) முறையிட வாய்ப்​பளிக்க வேண்டும். அப்படியே 30 நாள்கள் முடிவடைந்​தாலும் ஒரு நாளைக்கு 250 ரூபாய் வரை பொருள்​களுக்கு அபராதம் விதிக்கலாம்; அதன் பின்புதான் வெளியேற்​றலாம் என்கிறது சட்டம்.

சூறையாடும் அதிகார வர்க்கம்:

  • பதினைந்து பேர் கொண்டது நகர விற்பனைக் குழு. மாநகராட்சி ஆணையர் (ஐஏஎஸ்) அதன் தலைவர். காவல் துறை துணை ஆணையர் (சட்டம் - ஒழுங்கு), போக்கு​வரத்துக் காவல் துணை ஆணையர், மாநகராட்சி தலைமைப் பொறியாளர், மாநகராட்சி சுகாதார அதிகாரி ஆகியோரால் நியமிக்​கப்பட்ட நான்கு பேர் என ஒன்பது பேர். வியாபாரி​களால் தேர்ந்​தெடுக்​கப்பட்ட ஆறு தெருவோர வியாபாரிகள்.
  • இந்தக் குழுவில் வியாபாரி​களின் பிரச்​சினைகளை விவாதித்து, வியாபாரி​களுக்கான நலத் திட்டத்தை உருவாக்கு​வதோடு, இதில் அங்கம் வகிக்கும் அதிகாரிகள் தமது துறையின் மூலம் திட்டத்தை நிறைவேற்று​வதற்குப் பொறுப்​பேற்க வேண்டும். தாம் எடுத்த நடவடிக்​கைகளைக் குழுவில் வியாபாரிப் பிரதிநிதி​களுக்குச் சொல்லி, அவர்களை மேம்படுத்த வேண்டும். இதுதான் இக்குழுவின் முதன்​மையான பணியாகும்.
  • ஆனால், இங்கே நிலைமை தலைகீழாகவே இருக்​கிறது. முறையான அழைப்​பிதழ், விவாதப் பொருள் ஆகியவற்றின் அடிப்​படையில் நகர விற்பனைக் குழு கூட்டத்தைக் கூட்டாமல், தேர்ந்​தெடுக்​கப்பட்ட தெருவோர வியாபாரி​களின் கருத்தைக் கேட்காமல், தன்னிச்​சையாக அதிகாரிகளே ‘ஆக்கிரமிப்புக் கடைகள்’ என வரையறுத்து நடவடிக்கை எடுத்து​வரு​கின்​றனர்.
  • தெருவோர வியாபாரிகளை ஆக்கிரமிப்​பாளராகக் கருதக் கூடாது எனச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்​பிடப்​பட்​டிருந்த​போதும் ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்றே பேசுகின்​றனர். அக்கருத்தை மக்களின் பொதுப்​புத்தி​யிலும் பதியவைக்​கின்​றனர். நீதிமன்​றங்​களும் பல நேரம் இக்கருத்தை அப்படியே எதிரொலிப்​பதைப் பார்க்​கமுடிகிறது.

சட்டத்தை மீறிச் செயல்​படும் அதிகாரிகள்:

  • தெருவோர வியாபாரி​களின் சட்டம் குறித்துப் பெரும்​பாலான அதிகாரி​களுக்குத் தெளிவில்லை. பலருக்கு இப்படியொரு சட்டம் இருப்பதே தெரிய​வில்லை. தெருவோர வியாபாரம் பெரும்​பாலும் விருப்​பத்தின் அடிப்​படையில் செய்யப்​படும் தொழில் அல்ல. சமூக, பொருளாதாரப் பின்புலம் இல்லாதவர்கள், தங்களின் வாழ்வாதாரத் தேவைக்காக இத்தொழிலில் ஈடுபடு​கின்​றனர்.
  • படித்த இளைஞர்கள் பெரும்​பாலானோர் உணவுப் பொருள்கள், காய்கறிகள், பழ வகைகள், ஆடைகள், மின்னணுச் சாதனங்கள் போன்றவற்றைத் தெருவோரங்​களில் நடைபாதைகளில் விற்பதைப் பார்க்க முடியும். தள்ளுவண்டிகள் மூலமாகவும் பலர் பொருள்களை விற்பனை செய்து​வரு​கின்​றனர்.
  • நகரமய​மாக்​கப்பட்ட தமிழகப் பொருளாதா​ரத்தில் தெருவோர வியாபாரம் குறிப்​பிடத்தக்க பங்களிப்பை எப்போதும் செலுத்​திவரு​கிறது. அரசின் ஆவணங்​களும் நீதிமன்றத் தீர்ப்பு​களும் இதை உறுதி​செய்​துள்ளன. இத்தகைய வியாபாரத்தில் ஈடுபடும் தொழிலா​ளர்களில் பெரும்​பாலும் பிற்படுத்​தப்​பட்ட, பட்டியல் சாதிகளைச் சேர்ந்​தவர்கள்.
  • சிறுபான்​மை​யினர், பெண்கள் கணிசமான எண்ணிக்​கையில் உள்ளனர். எனவே, தெருவோர வியாபாரி​களின் உரிமைகளை நாடாளு​மன்​றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் உறுதிப்​படுத்த வேண்டிய பொறுப்பு தேர்ந்​தெடுக்​கப்பட்ட அரசு அமைப்பு​களுக்குக் கூடுதலாகவே இருக்​கிறது.

செய்ய வேண்டியது என்ன?

  • தெருவோர வியாபாரிகள் (வாழ்​வாதா​ரம்​-தெருவோர வியாபாரத்தை ஒழுங்​குபடுத்​துதல்) சட்டம்​-2014இன்படி அதிகாரிகள் செயல்​படுவதை அரசு உறுதி​செய்ய வேண்டும். இந்தச் சட்டம் குறித்துப் போதிய விழிப்​புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி அதிகாரி​களுக்கும் காவல் துறையினருக்கும் பயிற்று​விக்க வேண்டும்.
  • தெருவோர வியாபாரிகளை முழுமையாகக் கணக்கெடுக்க வேண்டும். வியாபாரம் நடத்தப்​படும் பகுதிகளை வரையறுத்து, வியாபாரத்தில் ஈடுபடு​பவர்​களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். தமிழ்​நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்பு​களிலும் விற்பனைக் குழு அமைத்திட வேண்டும்.
  • பெருநகர சென்னை மாநகராட்​சிக்கு ஒரே ஒரு விற்பனைக் குழு என்பதற்கு மாறாக, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு குழு அமைக்​கப்பட வேண்டும். தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் பகுதிகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தன்னிச்​சையாக அகற்றும் அதிகாரிகள், காவல் துறையினர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்​ளப்பட வேண்டும்.
  • அரசுக்கு வருவாய் ஈட்டித் தந்து, மக்களுக்குக் குறைந்த விலையில் பொருள்​களையும் விற்பனை செய்யும் தெருவோர வியாபாரி​களின் வாழ்வாதா​ரத்தைப் பாதுகாப்பது பொதுச் சமுகத்தின் கடமையும்​கூட!

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories