TNPSC Thervupettagam

சந்தேகப்பட வைக்கிறது ‘வக்ஃப்’ மசோதா!

August 18 , 2024 3 hrs 0 min 6 0

சந்தேகப்பட வைக்கிறது ‘வக்ஃப்’ மசோதா!

  • நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த வக்ஃப் (திருத்த) மசோதா, 2024 ஒரு நாடகத்துக்குப் பிறகு, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. சிறுபான்மைச் சமூகம் தொடர்பாக இந்த அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளையும்போல இதற்கும் உள்நோக்கம் இருப்பது குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
  • இந்தியா முழுவதும் உள்ள, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் இந்த உத்தேச திருத்தத்துக்கு எதிராகக் குரல் எழுப்பிவிட்டன ஜமாத்-இ-இஸ்லமி ஹிந்த், ஜமாத் உலேமா-இ-ஹிந்த், அனைத்திந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம், ஃபிராங்கி மஹால், இஸ்லாமிய மத குருக்களின் அமைப்புகள் உள்பட ஏராளமான அமைப்புகள் இதில் உள்ளன.

எதிர்ப்பு ஏன்?

  • வக்ஃப் சொத்துகளுடன் வெவ்வேறு வகைகளில் தொடர்புள்ள பங்கேற்பாளர்களிடம் ஆலோசனையே கலக்காமல், அவர்களுடைய நலன்களுக்கு எதிராக இந்தத் திருத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது, அத்துடன் அரசமைப்புச் சட்டத்தின் 24 முதல் 28 வரையிலான பிரிவுகளில் கூறப்பட்டுள்ள கொள்கைகளுக்கு முரணாக இந்தச் செயல் இருக்கிறது என்று எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் தலையிடும் முயற்சிதான் இது என்று நாடாளுமன்றத்தில் எல்லா எதிர்க்கட்சிகளும் கண்டித்துள்ளன.
  • நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் பொதுப் பயன்பாட்டுக்கென்று அளித்த நிலங்களையும் பிற உடைமைகளையும் கைக்கொள்வதற்கு அரசு மேற்கொள்ளும் இறுதி முயற்சி இது என்று சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்தே சுமார் 1,400 ஆண்டுகளாக, ‘வக்ஃப்’ என்ற ஏற்பாடும் இருக்கிறது. ‘வக்ஃப்’ என்பது முஸ்லிமுடைய தனிச் சொத்து அதை அவர் மதம் சார்ந்த நடவடிக்கைக்காகவோ, கல்வி உள்ளிட்ட அறச் செயலுக்காகவோ, புரவலரின் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதியோ வழங்கப்படும் உடைமையாகும்.
  • ஒரு பெண்ணுக்குச் சொந்தமான எந்த உடைமையையும், அவரும் வக்ஃபாக கொடையளிக்கலாம். வக்ஃப் என்பது நிரந்தரமானது அல்லது தொடர்ந்து நீடிப்பது, வக்ஃப் ஆக கொடுத்தவற்றை, முதலில் கொடுத்தவரே விரும்பினாலும் திரும்ப எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு சொத்தை, இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் வாய்மொழியாகவோ அல்லது வக்ஃப் நாமா என்ற பெயரில் எழுத்துப்பூர்வமாகவோ கொடையாக அளிக்கலாம். 1913 முதல் வெவ்வேறு அரசுகள் வக்ஃப் நிர்வாகம் முறையாகவும் நேர்மையாகவும் நடக்கிறதா என்று கண்காணித்துவருகின்றன.
  • 1995 வக்ஃப் சட்டத்துக்கான கடைசி திருத்தம் 2013இல் கொண்டுவரப்பட்டது. வக்ஃப் சட்டத்தில் ஆக்கிரமிப்புகள், விற்பனை அல்லது உரிமை மாறுதல் போன்றவற்றை எவரேனும் தவறாகச் செய்தால் அவர்களுக்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க அந்த திருத்தம் வகை செய்துள்ளது.

வக்ஃப் வாரியங்கள்

  • ஒவ்வொரு மாநிலத்திலும் வக்ஃப் சொத்துகளை அந்தந்த வக்ஃப் வாரியங்கள் நிர்வகிக்கின்றன. வாரியத்துக்கு தலைவரும் உறுப்பினர்களும் அந்தந்த மாநில அரசுகளால் நியமிக்கப்படுகின்றனர். நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களும், முஸ்லிம் மத குருமார்களும், முத்தவல்லிகளும்தான் பெரும்பாலும் இந்தப் பதவிகளில் நியமனம் பெறுகின்றனர்.
  • உறுப்பினராக நியமிப்பதற்கான தகுதி, நேர்மை ஆகியவை அவர்களுக்கு இருக்கிறதா என்று பார்த்து நியமிக்குமாறு எந்தவித கட்டாயமும் கிடையாது. அரசு நிர்வாகத்தில் உள்ள பெரிய குறையே இதுதான். வக்ஃப் சொத்து தொடர்பான புகார்களை மாநில அரசு நியமிக்கும் நடுவர் மன்றங்கள்தான் விசாரிக்கின்றன. மாநில நீதித் துறையைச் சேர்ந்த நீதிபதி தலைமை வகிப்பார், மாநில அரசு நியமிக்கும் வேறு இரண்டு பேர் அதில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
  • பிரச்சினையின் மையப்புள்ளியே இங்குதான் இருக்கிறது. வக்ஃப் சொத்துகளை நிர்வகிப்பதில் பெரும் ஊழல் நிகழ்வதாகவும், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காமல் சிவப்பு நாடா முறை தடுப்பதாகவும், வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாகப் பயன்படுத்தாமல் வீணடிப்பதாகவும், சுரண்டுவதாகவும், தங்களுக்கு வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டப் பயன்படுத்துவதாகவும் புகார்கள் – பெரும்பாலும் முஸ்லிம்களால்தான் – கூறப்படுகின்றன.
  • வக்ஃப்-அலால்-அவ்லத் என்று அழைக்கப்படும் சொத்துகளிடமிருந்து கிடைக்கும் பயன்கள், யாருக்காக அளிக்கப்பட்டதோ அவர்களுக்குக்தான் போய்ச் சேர வேண்டும். பயனாளிகள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று வழக்கு தொடுத்தால் அதை விசாரித்து முடிக்க ஆண்டுகள் பல ஆகின்றன. இதனால் பயன்பெற வேண்டிய ஏழைகளுடைய குடும்பங்கள் மேலும் வறுமையில் ஆழ்ந்துவிடுகின்றன. எனவே, வக்ஃப் வாரியத்துக்கு நியமிக்கப்படுபவர்களுக்குக் குறைந்தபட்ச தகுதிகள் நிர்ணயிக்கப்படுவதும், வாரியச் செயல்பாடுகளை முறைப்படுத்துவதும் அவசியமாகும்.
  • ஆனால், அப்படி எதுவும் நடக்காது. காரணம் வக்ஃப் சொத்துகளைப் பணம் காய்ச்சி மரமாகத்தான் பார்க்கிறார்கள். ஆளுங்கட்சிகள் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு ஆட்சியிலோ கட்சியிலோ பெரிய பதவிகளைத் தர முடியாதபோது சோர்வைப் போக்க இதில் நியமிப்பதை ஒரு உத்தியாகக் கடைப்பிடிக்கிறார்கள். வக்ஃப் வாரியத்திடம் உள்ள, அதிக வருவாய் தரக்கூடிய சொத்துகள் அவர்களுக்கு நல்ல மேய்ச்சல்காடாகிவிடுகிறது.

சீர்திருத்த நாடகம்

  • வக்ஃப் வாரியங்கள் சரியாக நிர்வகிக்கப்படுவதில்லை என்பது உண்மையாக இருந்தாலும் அதைச் சீர்திருத்தம் செய்ய விரும்புவதாக அரசு கூறுவது உண்மையான தன்னுடைய நோக்கத்தை மறைக்கும் உத்தியாகும். அரசின் நோக்கம் அதுவாக இருந்திருந்தால் அது முஸ்லிம் சமுதாயத்திடையே விரிவான ஆலோசனைகளை முதலில் நடத்தியிருக்கும் அப்படிச் செய்திருந்தால் இந்த அளவுக்கு எதிர்ப்புகள் தோன்றியிருக்காது.
  • கடந்த பத்தாண்டுக்கால ஆட்சியில் எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் சொல்வது ஒன்றாகவும் நடைமுறை இன்னொன்றாகவும் இருக்கிறது. முஸ்லிம்களைத் தாஜா செய்வது சரியல்ல, அவர்களையும் சமமாகவே பாவிக்கிறோம், அவர்களுடைய நலனுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி முஸ்லிம்களை ஒதுக்கும் செயல்களைத்தான் தொடர்கின்றனர்.
  • குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) போன்ற நடவடிக்கைகள் மூலம் சிறுபான்மைச் சமூகத்தவரை, குறிப்பாக முஸ்லிம்களை – கிறிஸ்தவர்களை அச்சுறுத்திவருகின்றனர். சிறுபான்மைச் சமூகத்தவர் வீடுகளை இடித்து தரைமட்டமாக்குகின்றனர். முஸ்லிம்களுடைய துயரங்களைத் தீர்க்காமல் அவர்களுடைய நலனுக்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களை ஒவ்வொன்றாக திருத்த முற்படுவது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
  • முஸ்லிம்களுடைய வக்ஃப் சட்டத்தைத் திருத்துவதாக இருந்தால் முஸ்லிம்களின் அனைத்து தரப்பினருடனும் முதலில் விரிவாக ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். சட்டம் என்னவென்றே தெரியாத மக்களிடையே அரசின் முயற்சியும் வெவ்வேறு தலைவர்களின் அறிக்கைகளும் சந்தேகத்தையே வலுப்படுத்தும். அரசு உத்தேசித்துள்ள பெரும்பாலான திருத்தங்கள் தொடர்பாக முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஏதுமில்லை என்பதும் உண்மை.

ஷியாக்களை கலந்தனரா?

  • வக்ஃப் சட்ட திருத்தத்தில் முஸ்லிம்களின் அனைத்துப் பிரிவினரையும் குறிப்பாக ஷியா, போரா, ஆகாகானிகள் ஆகியோரை சேர்த்திருப்பதை ஆட்சேபிக்க ஏதுமில்லை. ஷியாக்கள் தனியாக வக்ஃப் வாரியம் வைத்திருக்கின்றனர், அவர்களுடனாவது அரசு ஆலோசனை கலந்ததா என்று தெரியவில்லை.
  • போரா முஸ்லிம்கள் நன்கு படித்தவர்கள், எண்ணிக்கையில் குறைவானவர்கள், சையத்னா என்ற தங்களுடைய தலைவரைப் பின்பற்றுகிறவர்கள், அவர் தனக்கென தனி அந்தஸ்து பெற்றுள்ளவர். ஷியா, சுன்னி பிரிவினர்தான் முஸ்லிம்களில் எண்ணிக்கையில் அதிகம், அரசியலிலும் தீவிரமாகச் செயல்படுகிறவர்கள், அப்படியிருக்க அவர்களுடன் தங்களைச் சேர்த்ததை போரா முஸ்லிம்கள் வரவேற்பார்களா என்றும் தெரியவேண்டும்.

பிற்போக்கு நடவடிக்கை

  • வக்ஃப் சொத்துகள் தொடர்பாக அரசு நியமித்துள்ள நில அளவையாளர்களை (சர்வேயர்கள்) நீக்க திருத்தம் வழிசெய்கிறது. இது பிற்போக்கான நடவடிக்கை. வக்ஃப் சொத்துகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் முழு அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்குத் தரப்படவிருக்கிறது. மாவட்ட ஆட்சியர்கள் ஏற்கெனவே கடுமையான பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • மாவட்ட நிதி நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு நிலைநாட்டல், வளரச்சிப் பணிகள், மக்களிடம் குறை கேட்டல், முக்கியப் பிரமுகர்கள் மாவட்டத்துக்கு வந்தால் அவர்களை வரவேற்பது, ஆலோசனைகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, வழியனுப்புவது, தேர்தல் நடத்துவது, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்று பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியவர்கள். இப்போதுள்ள நில அளவையாளர்களே (சர்வேயர்கள்) நல்ல அனுபவம் பெற்றவர்கள். அவர்களுக்குப் பதிலாக இன்னொருவரிடம் பொறுப்பை ஒப்படைப்பது சரியல்ல.

பெண்களுக்கு வாய்ப்பு

  • வக்ஃப் வாரிய சொத்துகளைப் பராமரிக்கும் குழுவில் பெண்களைச் சேர்ப்பது குறித்து மசோதா கூறுகிறது. வக்ஃப் நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபட எந்தக் காலத்திலும் தடை நிலவியதில்லை. இஸ்லாமியச் சட்டப்படியே அவர்கள் சொத்துகளுக்கு உடமையாளர்களாகவும் ஆகிறார்கள். பெண்கள் முத்தவல்லிகளாகவும் சொத்துகளைப் பராமரிக்கிறவர்களாகவும் (கர்த்தா) இருக்கின்றனர்.
  • இஸ்லாத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்படுகின்றனர், உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்று பரவலாகக் கூறப்படும் தவறான புரிதல் அடிப்படையில், திருத்த மசோதாவில் இதைச் சேர்த்திருக்கிறார்கள். தூதர் முகம்மதின் இறுதி உரையில் என்ன பேசியிருக்கிறார் என்ற பகுதியை இந்தத் திருத்தம் கொண்டுவந்தவர்களுக்கு அனுப்பத் தயாராக இருக்கிறோம். அதில் பெண்களுக்கு ஆடவர்களும் சமூகமும் செய்ய வேண்டிய கடமைகளைத் தெளிவாக சொல்லியிருக்கிறார். எனவே, இது ஏற்கெனவே இஸ்லாத்தில் உள்ள நடைமுறையைத்தான் வலியுறுத்துகிறது என்பதால் புதியதும் அல்ல.
  • நாடு முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துகள் பற்றிய தகவல்களைத் திரட்டி பெரிய தகவல் களஞ்சியத்தை ஆறு மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்கிறது மசோதா. இந்த யோசனை வரவேற்புக்குரியதுதான் என்றாலும் நகரங்கள், கிராமங்கள் என்று பல்வேறு மாநிலங்களிலும் உள்ள லட்சக்கணக்கான சொத்துகளின் விவரங்களைத் திரட்டிவிட ஆறு மாதங்கள் போதாது, இந்த வேலையே பல வருடங்களுக்கு இழுத்துவிடும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் கூடாது

  • வக்ஃப் சொத்துகள் முஸ்லிம்களால் வழங்கப்படுபவை. அதைப் பராமரிப்பதற்கான வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்கக் கூடாது. இந்து, சீக்கியர், கிறிஸ்தவர்கள், பார்சிகள் எப்படி அவரவர் அறக்கட்டளைகளை அவரவர்களே நிர்வகிக்கிறார்களோ அப்படித்தான் முஸ்லிம்கள் சொத்துகளையும் முஸ்லிம்கள் மட்டுமே நிர்வகிக்க வேண்டும். வக்ஃப் வாரியங்கள் முறையாகச் செயல்படுவதையும் தகுதியுள்ளவர்கள் அதில் நியமிக்கப்படுவதையும் மட்டுமே அரசு உறுதிசெய்ய வேண்டும்.
  • உலகம் முழுவதிலும் - அதிலும் இந்தியாவில் - மத அடிப்படையில் மக்களைத் திரளச் செய்வது அதிகமாகிவரும் வேளையில் முஸ்லிம்கள் அச்சம் கொள்கிறார்கள். இதைப் புரிந்துகொண்டு அரசும் கவனமாகச் செயல்பட வேண்டும். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் எல்லாவிதச் சொத்து வாரியங்களையும் தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம் நிர்வகிக்கச் செய்யும் போக்கே அதிகமாகிவருகிறது.
  • இந்த மசோதாவின் பின்னணியில், சிறுபான்மைச் சமூகத்தை அச்சுறுத்தவும் பழிவாங்கவும் நினைக்கும் பேரினவாத ஆதிக்க உணர்வு தெரிகிறது. சமூகங்களிடையே கருத்து வேறுபாடுகளைக் குறைக்கவும் ஒற்றுமையை வலுப்படுத்துவுமே அரசுகள் கவனம் செலுத்த வேண்டும், சமூக – பொருளாதார வேறுபாடுகளை அதிகப்படுத்தும் முயற்சிகளில் இறங்கக் கூடாது.
  • சமாதானம், அன்பு, சமரசம் போன்ற காந்தியக் கொள்கைகளை நோக்கி இந்தியா நடைபோட வேண்டும், மக்களில் ஒரு பிரிவினருடைய மன உறுதியைக் குலைக்கும் செயல்களில், சட்டம் மூலம் முயற்சி மேற்கொள்ளக் கூடாது. ஊடகங்கள் – அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்தும் – மக்களிடையே ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வளர்க்கும் வகையில் விவாதங்களை ஊக்குவிக்க வேண்டும். மாறாக வெறுப்பை மேலும் வளர்க்கும் செயல்களில் இறங்கக் கூடாது.

நன்றி: அருஞ்சொல் (18 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories