சந்தை சலுகைகள் போதும்! - கண்துடைப்பு மகளிர் தின கொண்டாட்டத்துக்கு முற்று எப்போது?
- இன்றைய காலக்கட்டத்தில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லை, ஒவ்வொரு தினமும் கொண்டாட்டங்களாக மாறிவிட்டன. வருடத்தின் 365 நாட்களையும் கொண்டாடி தீர்க்கிறார்கள் மக்கள். அப்படி இருக்கும் பட்சத்தில், மார்ச் 8... உலக சர்வதேச மகளிர் தினம் என்பது மட்டும் விதிவிலக்கா என்ன?, சர்வதேச மகளிர் தினமும் ஒருநாள் கொண்டாட்டமாக மிகைப்படுத்தப்பட்டு வருகிறதா?, மகளிர் தினம் என்றாலே 'ஆஃபர்ஸ்' மட்டும்தானா? இந்தச் சமூகமும், பன்னாட்டு நிறுவனங்களும் Women's Day Sale போன்ற ஆஃபரை அள்ளி கொடுத்தால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா?, பெண்களை மையப்படுத்தி வியாபாரச் சந்தைகள் தந்திரமாக காய் நகர்த்தி வருவதாக தோன்றுகிறது. இது மகளிர் தினத்தின் உண்மையான நோக்கத்தை மறைக்கிறதா? என்பது குறித்து பார்க்கலாம்.
- இன்று மகளிர் தினம் என்பது, அந்நாளின் முக்கியத்துவத்தை இழந்து மனமகிழ்ச்சிக்கு அல்லது கொண்டாட்டத்துக்கு மட்டுமே என சொல்லும் அளவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. பெண்களை கொண்டாட ஒரு தனி தினம் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், அதன் பின்னால் இருக்கும் வரலாற்றையும், தற்போதுள்ள வணிகமயமாக்கலையும் சற்று கூர்ந்து பார்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், சமூகத்தில் ஆண்களை விட பெண்களை மட்டம் தட்டி பார்க்கும் மனநிலை இன்னும் அதிகமாகவே இருக்கிறது. குழந்தை பருவம், பதின்ம வயது, முதுமை காலம் என பெண்கள் பிறப்பு முதல் இறப்பு வரை இந்த சமூகத்தின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகாமல் இருக்கவில்லை.
- கள்ளிப்பால், குழந்தை திருமணம், வாக்களிப்பதில் சிக்கல், நிறுவனங்களில் ஊதிய குறைபாடு, பாலியல் அட்டூழியங்கள், அழகு சார்ந்து பெண்கள் மீது பூசப்படும் வன்ம கருத்துகள் என இன்னும் எண்ணிலடங்கா எடுத்துக்காட்டுகளை கூறிவிடலாம். நவீன உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், இந்த சமூகம் பெண்களுக்கு என்று முழு பாதுகாப்பு அரணாக இருந்ததா, என்றால் அது கேள்விக்குறியே.
வணிகமயமாகும் மகளிர் தினம்:
- மகளிர் தினம் இன்றைய நவீன யுகத்தில், மகளிர் தின கொண்டாட்டத்தின் நோக்கம் தான் என்ன?, அது எப்படி வணிகமயமாக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி பல்வேறு கேள்விகள் மனதில் எழ ஆரம்பித்தது. சற்று விரிவாக ஆராய்ந்தால், இது குறித்து புரிந்து கொள்ளலாம். பெண்கள் எல்லாத் துறைகளிலும் கால் பதித்துவிட்டார்கள் என சொல்லும் அளவுக்கு முன்னேறி வருகிறார்கள். அதற்கு மத்திய, மாநில அரசுகளின் முன்னெடுப்புகளும் உள்ளன. பெண் விடுதலை, பெண் கல்வி, பெண் உரிமைகள் குறித்த புரிதல் ஓரளவு மக்களிடம் ஏற்பட்டுள்ளது எனலாம்.
- காதலர் தினம் என்றால் ரோஜா பூக்கள் தான் நினைவுக்கு வரும், அதுவே மகளிர் தினம் என்றால் ஆஃபர்ஸ் தான் நினைவுக்கு வருகிறது. பெண்களை மையப்படுத்தி வியாபாரச் சந்தைகள் தந்திரமாக காய் நகர்த்தி வருவதாக தோன்றுகிறது. ஏன் அப்படி நினைக்கத் தோன்றுகிறது என்றால், மகளிர் தினம் வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே அதை கவனித்தால் தெரியும். போனை திறந்தாலே Women's Day Sale, Pamper your hair with the Sale – Women’s Day 2025!, Cosmetics with unique offers for Women's Day! என்ற விளம்பரங்களை தான் அதிகமாக காண முடிகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படி ஆஃபரை அள்ளி கொடுத்தால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா..... ஏன் இந்த சமூகம் பெண்களை அழகு சார்ந்த கட்டமைப்புக்குள் அடைக்கப் பார்க்கிறது.
- மிருதுவான, வெள்ளையான, பளபளப்பான சருமம் தான் அழகானது. முகத்தில் இதையெல்லாம் பூசிக் கொள்வதுதான் சரியான செல்ஃப் கேர் என நம்பப்படுகிறது. ஆண்கள் கருப்பாக இருந்தாலும், குண்டாக இருந்தாலும் அது இந்த சமூகத்தின் கண்களை மறைக்காது. ஆனால்... பார்க்கவே ஸ்லிம்மாக கட்டழகுடன் இருக்கும் பெண்கள்தான் அழகு என்னும் எண்ணம் மக்களிடம் விதைக்கப்பட்டுவிட்டது. இந்தச் சமூகமும் அதற்கு, கண், காது, மூக்கு எல்லாம் கொடுத்து ஒரு உருவத்தை திணித்து கட்டமைத்துவிட்டது. அதை ஒரு ஆயுதமாக கையில் எடுத்துள்ளனர் பல பன்னாட்டு நிறுவனங்கள். ஒரு பேஸ் கிரீம் வாங்கினால், ஒரு லிப்ஸ்டிக் இலவசம், இரண்டு பேஸ் பேக் வாங்கினால், ஒரு காஜல் இலவசம் என களத்தில் வரிசைக் கட்ட ஆரம்பித்துவிட்டனர்.
- ஆண்களே வாயில் கை வைத்து பார்க்கும் அளவுக்கு, பெண்களுக்கு ஆஃபர்கள் கொடுக்கப்படுகிறது. ஐ லைனர் தொடங்கி காஜல், மஸ்காரா, மாய்ஸ்சரைஸர், சன்ஸ்க்ரீன், நெயில் பாலிஸ், பேஸ் பேக், ஹேர் பேக், பாடி வாஷ், க்ளென்ஸர், ஃபேஸ் சீரம், ஐ க்ரீம், லிப்ஸ்டிக், வாசனை திரவியங்கள் என லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். இவ்வாறு பெண்களை டார்கெட்டாக செய்து பெரிய வணிகமே நடக்கிறது. இந்த நிகழ்வு பெண்களின் பெயரால் நடக்கும், வணிக சுரண்டலுக்கான ஒரு கருவியாக மாறி வருகிறது. இது மகளிர் தினத்தின் உண்மையான நோக்கத்தை மறைப்பதாக தோன்றுகிறது.
- பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் தங்கள் வியாபாரத் தளங்களை ஏற்படுத்தவும், அதை வலுவாக கட்டமைத்துக் கொள்ளவும் அவர்கள் எடுத்த ஆயுதம்தான் பெண்களின் அழகும், அது சார்ந்த எண்ணனும். இதன் காரணமாக தான் அந்நிறுவனங்கள் பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்கள், ஆடைகள் போன்றவைகளின் கிளைகளை இந்தியாவில் சற்று ஆழமாக பரப்பினார்கள் எனலாம்.
- அந்த நிறுவனங்களும் அழகு சாதனப் பொருள்களை சந்தைப்படுத்திக் கொண்டனர். பெண்களும் அதை நம்பி அந்த மாய வலைக்குள் விழுந்துவிட்டனர். மேக் அப் பொருட்கள் மட்டுமல்ல.... டெல்லி, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில், பிரபல ரெஸ்ட்ராடண்டுகளிலும் மகளிர் தின ஸ்பெஷல் ஆபர் என பல்வேறு உணவு வகைகளை அறிவித்திருப்பதை காணும் போது சற்று வித்தியாசமாக இருந்தது. ஜிம்களில் கூட மகளிர் தின சலுகை என கட் அவுட் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
- இதன் தொடர்ச்சியாகவே சர்வதேச பெண்கள் தினமும் அப்படியொரு வணிக சந்தையில் சிக்கிக்கொண்டதோ என நினைக்க தோன்றுகிறது. குழந்தைகள், பெண்களுக்கென அரசாங்கம் பெண்களுக்கு பல்வேறு தினங்களை அறிவித்திருக்கிறது. அதைக் கொண்டாடியும் வருகிறது. இவ்வாறு கொண்டாடுவதன் மூலமாக அதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர்வார்கள், அது ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்காகத் தான்.
- ஆனால், சர்வதேச மகளிர் தினமும் ஒருநாள் கொண்டாட்டமாக மிகைப்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் தினம், கொண்டாடுவதற்கு மட்டுமல்ல...... மகளிர் தினம் என்பது வெறும் ஒரு நாள் கொண்டாட்டம் மட்டும்தானா என்றால் நிச்சயமாக இல்லை. அரசியல் வாதிகளும் இந்த ஒரு நாளில் மட்டும் பெண்கள் தொடர்பான, வசனங்களை பேசிவிட்டு நகர்வது எந்த அளவுக்கு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.
புரட்சியின் அடையாளம்:
- ஆண்களுக்கு நிகராக பெண்கள் பணியாற்றியபோதிலும் உரிமையிலும், ஊதியத்திலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த பெண்கள் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1910-ல் மாபெரும் உரிமை மாநாட்டை நடத்தினர். இதன் பிறகு பல்வேறு போராட்டங்கள், புரட்சிகள் என பெண்களின் குரல் ஓங்கி ஒலித்தது. இதன் பிறகு தான் பெண்களின் முக்கியத்துவத்தை போற்றவும் அவர்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு பல வரலாற்று போராட்டகளை உள்ளடக்கிடது தான் இந்த தினம்.
பெண்களுக்கு எது கொண்டாட்டம்:
- எப்போது பெண்கள் நள்ளிரவில் நடுவீதிகளில் நகைகளை அணிந்தபடி அச்சமின்றிச் சுதந்திரமாக நடந்துசெல்ல முடிகிறதோ அந்த நாள்தான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த நாள் என்று மகாத்மா காந்தியடிகள் கூறியிருக்கிறார். ஆனால், இந்தியா விடுதலையடைந்து 78 ஆண்டுகளாகியும் அது இன்னும் சாத்தியமாகவில்லை.
- பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். அரசாங்கம் பெண்களுக்கு கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு சம வாய்ப்பு, சம உரிமை, சுதந்திரம் ஆகியவைதான் நல்ல அங்கீகாரத்தை கொடுக்குமே தவிர, ஆடையோ, அணிகலன்களுக்கு அளிக்கப்படும் ஆஃபர்களோ அல்ல. இந்த சமூகம், ஒருபுறம் மகளிர் தினத்தை அதிகமாக ரொமாண்ட்டிசைஸ் செய்துகொண்டே, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழி கொடுக்கிறது.
- அவர்களும் பெண்களை டார்கெட் செய்து , தங்களின் பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்கிறார்கள். ஆணுக்கு இணையாக பெண்கள் முன்னேற வேண்டும், சாதனை படைக்க வேண்டும் என்பது தான் முக்கியமானது. அந்த நோக்கங்கள் எட்டப்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு உரிமையும், விடுதலையும் வழங்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான கற்பிதங்களை உடைக்க வேண்டும். தாய், மனைவி, மகள் என ஒரு சமூகத்தின் முக்கிய அங்கம் பெண்கள்தான்.
- ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றாலும் சரி.. ஒரு குடும்பத்தில் தலைமுறையே உயர வேண்டும் என்றாலும் பெண்களின் கல்வி அவசியமானது. மகளிர் தினத்தைக் கொண்டாடும் பல நிறுவனங்கள், பெண் ஊழியர்களுக்கு குறைவாகவே ஊதியம் வழங்குகின்றன. மகப்பேறு சலுகை, மாதவிடாய் விடுமுறை போன்றவைகளை வழங்க வேண்டும். பெண்களின் போராட்டங்களை கொண்டாடவும், சாதனைகளை அங்கீகரிக்கவும் ஒரு நாளாகத் தொடங்கிய மகளிர் தினம் இப்போது நிறுவனங்களின் லாபம் சார்ந்த தந்திரமாக மாறியுள்ளது.
- இந்த கண்துடைப்பு மகளிர் தின கொண்டாட்டத்தை விட்டுவிட்டு, பெண்களை பெண்களாக இருக்க அனுமதிப்பதே உண்மையான மகளிர் தினத்தின் இலக்காக இருக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 03 – 2025)