TNPSC Thervupettagam

சனாதன வாரியம் அமைக்க கோரிக்கை வலுப்பது ஏன்?

January 1 , 2025 3 days 27 0

சனாதன வாரியம் அமைக்க கோரிக்கை வலுப்பது ஏன்?

  • இந்த ஆண்டின் மாபெரும் திருவிழாவாக மகா கும்பமேளா வரும் 13-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 16-ம் தேதி வரை உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கிறது. இந்தியாவின் பல பகுதிகள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த இந்து மடாதிபதிகள், தலைமை பீடாதிபதிகள், பக்தர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.
  • வரும் 26-ம் தேதி திரிவேணி சங்கமத்தில் நான்கு சங்கராச்சார்யார்கள் மற்றும் 13 அகாரா அமைப்பின் தலைவர்கள் கூடி, சனாதன வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர். இந்த தீர்மானம் இந்துக்களின் சார்பில், மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு சனாதன வாரியத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க நெருக்கடி தர திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சனாதன தர்மத்தைக் காக்கவும், இந்து கோயில்கள், நிலங்களை மீட்கவும் சனாதன வாரியம் அவசியம் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
  • முஸ்லிம்களுக்கு வக்பு வாரியம் இருப்பதைப் போல், இந்துக்களுக்கு சனாதன வாரியம் இருக்க வேண்டும் என்று கர்நாடகாவின் லிங்காயத் மடம் உள்ளிட்ட இதர இந்து மத தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். நாட்டிலுள்ள மற்ற சிறுபான்மை மதங்களான ஜெயின், புத்தமதம், சீக்கிய மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு இல்லாத உரிமை வக்பு வாரியம் மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
  • வக்பு வாரியம் 1913-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது, பின்னர் 1923-ம் ஆண்டு முசல்மான் வக்ப் சட்டம் கொண்டு வரப்பட்டது. சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் 1954 மற்றும் 1995-ம் ஆண்டுகளிலும் சட்டம் திருத்தப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியம் இயங்கி வருகிறது. இது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்ற வாதத்தை ஒருதரப்பினர் எடுத்துவைக்கின்றனர். வக்பு வாரியத்தை நீக்க வேண்டும் அல்லது சனாதன வாரியத்தை சட்டப்பூர்வமாக கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
  • மத்தியில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்துவரும் நிலையில், இந்துமத துறவிகள் மற்றும் மடாதிபதிகளின் நெருக்கடி மத்திய அரசுக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. முஸ்லிம்களின் சொத்துகளை காப்பதற்காகவும், பிரிவினையை உருவாக்குவதற்காகவும் வக்பு வாரியத்தை ஆங்கிலேய அரசு உருவாக்கியது. அது பல்வேறு காலகட்டங்களைத் தாண்டி இன்றைக்கும் நடைமுறையில் இருக்கும்போது, அதை ஒரு தரப்பினர் கேள்வி கேட்கின்றனர், அதற்கு பதில் சொல்லவேண்டிய நெருக்கடி மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
  • சனாதன வாரியத்தின் மூலம் இந்துக்களின் கோயில்களை அரசின் பிடியிலிருந்து விடுவித்து இந்துக்களே நிர்வகிக்கப்போகிறோம் என்று மத தலைவர்கள் அறிவிப்பது இந்துக்கள் மத்தியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். மத விவகாரங்கள் எப்போதுமே எளிதில் சர்ச்சையை உருவாக்குபவை. அதுவும் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் சிறுசலசலப்புகூட புயலைக் கிளப்பிவிடும் என்பதால் அறிவார்ந்த தலைவர்கள் தங்கள் புத்திக்கூர்மையை பயன்படுத்தி, இது போன்ற நெருக்கடிகளை சாதுர்யமாக கையாண்டு சுமூகமான தீர்வை எட்ட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories