சமூகத்தில் குற்றங்களும் சீர்திருத்தங்களும்
- படிநிலைச் சாதிய சமூகக் கட்டமைப்பின் சிக்கல்களில் பழையன நீடிப்பதும் புதியன உருவாவதும் அமைதியற்ற சூழல் நீடித்திருக்க வழிவகுக்கின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டு, அரசமைப்புச் சட்டத்திலும் அதன் பின்னரும் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள், சமூகத்தில் ஒவ்வொரு நபரும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்குத் தேவையான உரிமைகளை உத்தரவாதம் செய்துள்ளன.
- இருப்பினும், சட்ட உரிமைகள் அபகரிக்கப்படுவது தொடர்ந்து நீடிக்கிறது. தனி நபர்களோ, சமூகங்களோ, கும்பல்களோ ஒருவரது சுயமரியாதையை வெவ்வேறு வடிவங்களில் அத்துமீறுகிறபோது அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் அமைப்புகளும் கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றன.
- இதிலும் வாக்கு அரசியலுக்காக விமர்சனத்துக்குப் பதில் குற்றச்சாட்டுகளே மேலோங்குகின்றன. இதன்வழி சட்டத்துக்கு எதிராக நிகழ்த்தப்படும் சமூகக் கேடான செயல்களுக்கும் சமூகக் கட்டமைப்புக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.
- குற்றச்சாட்டுகளைக் கூறுவோர் தங்களை நியாயவாதிகளாகவும், சுத்தமானவர்களாகவும் சொல்லிக்கொள்கிறார்கள். குற்றச்சாட்டு அரசியலால் குற்றங்களுக்கான சூழல் ஒழிவதற்கான சாத்தியம் இல்லை. ஆளும் கட்சிகள் மாறிக்கொண்டிருந்தாலும் குற்றங்கள் தொடர்கின்றன.
- குற்றங்கள் உருவாவதற்குச் சமூகக் கட்டமைப்பும் அதன் நிலை மாறாமல் இருப்பதும் காரணமாக இருப்பது புறக்கணிக்கப்படுகிறது. வர்க்கத்துடன் பிணைந்துள்ள சாதியாதிக்க, ஆணாதிக்க மனநிலையானது மாற்றங்களை ஏற்க இயலாமல் குற்றங்களைச் செய்கிறது. மாற மறுக்கும் மனங்களைச் சீர்திருத்தும் இயக்கமற்ற போக்கே சமூகக் கேடுகள் பரவலாவதற்கு வித்திடுகிறது.
மாற்றமும் மனமாற்றமும்:
- காலனிய காலத்தில் பாரம்பரியமான பொருளியல் உற்பத்தி நவீன நிலைக்கு மாற்றப்பட்டபோது, பண்டைய பண்பாடுகளான தீண்டாமை, குழந்தை மணம், கைம்பெண், சதி போன்றவை சமூகக் கேடுகள் என்று உணரப்பட்டன. இவற்றை ஒழிப்பதற்கும், பெண் கல்வி, விதவை மறுமணம், விவாகரத்து, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் போன்ற நேர்மறையான மாற்றங்களுக்கும் வித்திடப்பட்டது.
- இவற்றுக்குச் சட்ட அங்கீகாரம் கோரப்பட்ட அதேவேளை, இந்த மாற்றங்களை ஏற்கும் நிலைக்குச் சமூகத்தின் மனநிலையை மாற்றவும் சாதி, சமூக, மகளிர், ஆன்மிக, அரசியல் இயக்கங்களும் அச்சு ஊடகங்களும் சீர்திருத்தங்களை முன்னெடுத்தன. இவை குறித்த கூர்மையான விவாதங்கள் சமூகமயமாயின. அரசியலில் முரண்பட்ட கொள்கைகளைக் கொண்டிருந்த இயக்கங்கள்கூட சமூகக் கேடுகளை ஒழிப்பதில் ஒருமித்த கருத்துகளைக் கொண்டிருந்தன.
- முரண்பட்ட அரசியல் கருத்துகளைக் கொண்டிருந்த ஆளுமைகளான அம்பேத்கரும் காந்தியும், பெரியாரும் ராஜாஜியும் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணத்தைக் கொண்டிருந்தனர். இவற்றைச் செய்வதற்கான பாதைகள் வேறுபட்டிருந்தன. அக்காலத்தில் நடத்தப்பட்ட மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் ஆளுமைகளின் உரைகளும் இதற்குச் சாட்சிகள். ஆதிக்கச் சாதியினரும் ஆண்களும் வெளியிட்ட கலை இலக்கியப் படைப்புகளும் ஆதிக்கர்களின் மனநிலையைச் சீர்திருத்துவதாகவே முடிவடைந்தன.
- அதேவேளை, சமூகக் கேடுகளால் பாதிக்கப்பட்டவர்களை முன்னேற்றுவதற்கான செயல்களும் நிறைவேற்றப்பட்டன. இவை ஏக காலத்தில் செயல்படுத்தப்பட்டன. சமூகக் கட்டமைப்பின் துணை விளைவுதான் சமூகக் கேடுகள் என உணரப்பட்டதால், அக்கட்டமைப்பை எதிர்ப்போருக்கும் அதைப் பாதுகாக்க விரும்பியோருக்கும் கருத்தியல் முரண்பாடு கூர்மை பெற்றது. இதில் தனிநபர் தாக்குதல் இல்லை. சமூகச் சிக்கல்களைக் களைவதில் சமூகமும் அரசும் பங்கேற்றது மிகவும் கவனத்துக்குரியது.
- சுதந்திர இந்தியாவின் தேசியமய அரசியல் பொருளாதார ஆண்டுகளான 1950-1980களின் இறுதி வரையிலும், 1990கள் முதல் தனியார்மயப் பொருளாதாரச் சூழலிலும் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் பொருளாதார நடவடிக்கைகளால் ஒவ்வொரு சாதிக்குள்ளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வர்க்க வேறுபாடுகளும் புதிய சமூகச் சிக்கல்களும் பெருமளவில் உருவாகியுள்ளன. சுதந்திர இந்தியாவில் காலனிய கால மாற்றங்கள் கூடுதலாகப் பரவலாகியதும் நவீன வளர்ச்சியும் புதிய வகைக் குற்றங்களுக்குக் காரணமாகியுள்ளன.
- காவல் துறையின் ஒரு நூற்றாண்டு கால ஆண்டு அறிக்கைகளை நோக்கினால் காலனிய காலத்தில் இல்லாத குற்றங்கள் பின்காலனியக் காலத்தில் புதிதாக ஏற்பட்டிருப்பதைக் காணலாம். பெட்டிக் கடைகளைப் போல் புதிய புதிய அரசியல் கட்சிகள் உருவாகுதல், சமூக முன்னேற்றம் என்கிற பெயரில் ஒவ்வொரு சாதிக்குள்ளேயும் காளான்கள்போல் கணக்கற்ற சங்கங்கள் செயல்படுதல், ஆன்மிகமும், சமூகச் சேவையும் மறைந்து குருமார்களுக்கும் பாதிரியார்களுக்கும் பதிலாகத் தனியார் சாமியார்களும் ஊழியக்காரர்களும் ஆன்மிகத்தை வியாபாரச் சரக்காக்கியது, சமூகக் குண்டர்களின் தோற்றம் போன்றவை அதைச் செய்வோரின் குடும்பங்களின் தன்னலன்களுக்காக மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றன.
- சாதித் தலைவர்கள், சாமியார்கள், ஊழியக்காரர்கள் அறக்கட்டளைகளை நிறுவித் தங்கள் உற்றார் உறவினர்களை உறுப்பினராக்குவதும் கல்வி நிலையம், மருத்துவமனை, ஊடகம் போன்ற சொத்துகளைத் தங்கள் குடும்பக் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கின்றனர். இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் அரசியல் அதிகாரத்தையும் பொருளாதார லாபத்தையும் இலக்காகக் கொண்டிருப்பதால் இன, மொழி, தேசம் போன்ற பொது அடையாளங்களுக்குப் பதிலாகச் சாதி, மதம் ஆகிய குறுகிய அடையாளங்களைத் திட்டமிட்டு வளர்க்கின்றனர்.
- சாதி, மத அமைப்புகள் வெளிப்படையாகச் செயல்படுத்துவதை அரசியல் கட்சிகள் தங்களின் தேவைக்கேற்பச் செய்கின்றன. அரசியல் கட்சிகளின் கொள்கைகள் அக்கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்களின் செயல்களைத் தீர்மானிக்கின்றன. இச்செயல்பாடுகளின் பின்புலத்தில்தான், சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மறுப்பதும் அவற்றை அடைய முற்படுவோரையும், வாழ்க்கைத் துணையைச் சுயமாகத் தேடுவோரையும் கொல்லுதல், பாலியல் வன்முறை போன்ற சமூகக் கேடுகள் நிகழ்கின்றன.
சமூகமும் ஆட்சியும்:
- மக்களின் வாக்குகள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதால் அரசியல் கட்சிகள் சாதி, மதம், மொழி போன்றவற்றை வாக்குகளுக்கான மூலதனமாகப் பயன்படுத்துகின்றன. ஆட்சியாளர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறினாலும், சமூகக் குற்றங்கள் நிலையாக இருக்கின்றன.
- இன்றைய ஆளும் கட்சி நேற்றைய எதிர்க் கட்சியாகவும், இன்றைய எதிர்க் கட்சி நாளைய ஆளும் கட்சியாகவும் இருப்பதால், குறிப்பிட்ட கட்சிதான் குற்றங்களுக்கான காரணம் எனக் கூற இயலாது. அதேவேளை, சமூகக் குற்றங்கள் அரசியல் கட்சிகளுக்கு உட்பட்டும், அப்பாற்பட்டும் நிகழ்கின்றன.
- சில குற்றங்கள் நடைபெறக்கூடும் என்பதை அரசுகள் முன்கூட்டியே அறிந்திருக்கின்றன. ஆளும் கட்சிகளுக்குக் குற்றங்களைக் களைவது மட்டுமன்றி, வருங்காலத்தில் அவை உருவாவதைத் தடுக்கும் கூடுதல் பொறுப்பும் இருக்கிறது. சட்டத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்யத் தூண்டும் மனநிலைக்கு வரலாற்றின் இடைக்காலத்தில் தோன்றிய வர்க்கத்துடன் பிணைந்துள்ள படிநிலைச் சாதியச் சமூகமும் ஆணாதிக்கமும் அவற்றை நியாயப்படுத்தும் மத நிறுவனங்களும் அடிப்படைக் காரணமாக இருக்கின்றன. எனவே இவற்றை வலுவிழக்கச் செய்வதில் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
- இந்த அடிப்படைக் காரணிகளே சமூகம், அரசாங்க நிர்வாகம், அரசு எனச் சகலத்திலும் பாதகமான தாக்கத்தைச் செலுத்துகின்றன. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் செயல்படும் அரசாங்கம் அதற்கு முரணாக இயங்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற அமைச்சர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகள், பணியாளர்களையும் சமூகத்தையும் அரசாங்கமே சீர்திருத்த வேண்டும்.
- சமூகம், அரசு, அரசாங்கம் ஆகியன அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். இதற்குத் தொடக்கப் பள்ளி முதல் அனைத்து முதுகலைப் பட்டம் வரை அவரவருக்குரிய சட்டங்களையும் மனித உரிமைகளையும் பாடத்திட்டங்களில் இருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
- சட்டத்துக்கு எதிரான குற்றங்களைச் சொந்தக் கிராமத்தினர், பெற்றோர், ரத்த உறவினர் என நன்கு அறியப்பட்டோரும், கொள்ளை, கொலைகளில் அறியப்படாதோரும் ஈடுபடுவதால் குற்றங்களுக்கான காரணங்களைக் குற்றவாளிகளும் பாதிப்படைவோரும் ஏற்கெனவே நன்கு அறிவர். வாக்குகளுக்காகக் குற்றவாளிகளைத் தண்டிப்பதில் சமரசம் செய்துகொள்வது மீண்டும் குற்றங்கள் செய்வதற்கு வழிவிடுவதாக அமையும்.
- பாதிக்கப்பட்டோருக்கு அரசு கொடுக்கும் நிவாரணத் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையைக் குற்றவாளிகளிடம் கண்டிப்பாக வசூலிக்க வேண்டும். குற்றங்களின் தன்மைக்கேற்பக் குற்றவாளிகளின் வாக்குரிமையைத் தடை செய்ய வேண்டும்.
- உணவு, உடை போன்ற புழங்கு பொருள்கள் நவநாகரிகமாக மாறியபோதிலும் இவற்றுக்கு ஏற்ப மாறாத மனநிலையை அரசமைப்புச் சட்டம் மாற்றும். வீடுகள்தோறும் அது இருக்கின்ற நிலையைக் கட்டாயப்படுத்த வேண்டும். சமூகச் சீர்திருத்தத்தின் தொடக்கப் புள்ளி அரசமைப்புச் சட்டமே!
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 02 – 2025)