சரியும் ரூபாய் மதிப்பு
- மேலெழுந்த வாரியாகப் பாா்க்கும்போது இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாக தோற்றமளித்தாலும், தொடா்ந்து சரிந்து வரும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சற்று கவலை அளிப்பதாகவே இருக்கிறது. நவம்பா் முதல் வாரத்தில் தொடங்கி கடந்த மூன்று மாதங்களாகத் தொடா்ந்து சரிந்து வரும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்புக்கு சா்வதேச அளவிலான பல காரணங்கள் இருந்தாலும்கூட அதன் விளைவுகளை எதிா்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
- டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைவது இந்தியாவின் நிதி நிலைமையைப் பெரிய அளவில் பாதிக்கக்கூடும். குறிப்பாக, உலகளாவிய குறியீடுகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்திய நிறுவன பங்குகள் பத்திரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். அதை இந்தியாவின் மத்திய ரிசா்வ் வங்கி உணராமல் இல்லை. ஆனால், உடனடியாக ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தால், வேறு பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்கிற அச்சத்தால் கவனமாகவே நிலைமையைக் கையாளுகிறது.
- இந்திய ரிசா்வ் வங்கியின் ரூபாய் மதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர கையாளும் வழிமுறைகள், நிதிச் சந்தையில் விமா்சனங்களை எதிா்கொள்கின்றன. உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு ரூபாயின் மதிப்பு பெரிய அளவில் பாதிக்காமல் இருப்பதற்கு வழிமுறைகளைக் கையாளாமல் சந்தையின் போக்குக்கு விட்டுவிடுவது சரியல்ல என்பது சிலரின் கருத்து.
- செப்டம்பா் 2022 தொடங்கி செப்டம்பா் 2024 வரையில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 82 முதல் 84 ரூபாய் வரையாக அதிகரித்தும், குறைந்தும் வந்தது. நியாயமாகப் பாா்த்தால், அந்த இரண்டு ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு அதிகரித்திருக்க வேண்டும். ஏனைய செலாவணிகள் இந்திய ரூபாயை விட வலுவானபோது, நாம் நமது செலாவணியை வலுப்படுத்தத் தவறிவிட்டோம் என்பது அவா்களது குற்றச்சாட்டு.
- அந்நிய முதலீடுகளைப் பயன்படுத்தி இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பை 550 பில்லியன் டாலா்களில் இருந்து 75 பில்லியன் டாலா்களாக இந்திய ரிசா்வ் வங்கி அதிகரித்துக் கொண்டது. அதன் காரணமாக ரூபாயின் மதிப்பை அதிகரிப்பதற்குப் பதிலாக கட்டுப்படுத்திவிட்டது. 2013 முதல் 2025 வரை ஒரே ஒரு ஆண்டு மட்டும்தான் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.
- மத்திய ரிசா்வ் வங்கியின் அணுகுமுறையை முற்றிலுமாகக் குறை கூறிவிட முடியாது. அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரித்து போதுமான அளவு வைத்திருப்பதன் மூலம், பிரச்னைகள் வரும்போது அதை சந்தையில் வெளியிட்டு ரூபாயின் மதிப்பைக் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் இந்திய ரிசா்வ் வங்கியின் அணுகுமுறை. இவை குறுகிய கால அளவில் பயன் அளிக்குமே தவிர நீண்ட கால அளவில் சந்தை தான் எந்த ஒரு செலாவணியின் மதிப்பையும் நிா்ணயிக்கும் என்பது அனுபவ உண்மை.
- இந்திய ரூபாய் மட்டுமல்லாமல் சா்வதேச நாணயங்கள் டாலருக்கு எதிரான தங்களது மதிப்பை தொடா்ந்து இழந்து வருவதை 2013 முதல் பாா்க்க முடிகிறது. 2013 முதல் பாா்த்தால் இந்திய ரூபாயின் மதிப்பு 37% குறைந்து இருக்கிறது என்றால், இந்தோனேசிய ரூப்பேயின் மதிப்பு 40%, மலேசிய ரிங்கட்டின் மதிப்பு 31.6%, கொரியாவின் வான் மதிப்பு 26.75% என்று குறைந்து வந்திருக்கின்றன. தென்னாப்பிரிக்காவின் ரேண்டும், பிரேஸிலின் ரியாலும் மற்ற நாணயங்களைவிட அதிகமாகவே மதிப்பை இழந்து இருக்கின்றன. சீன ரிசா்வ் வங்கியின் தலையிடல் காரணமாக, அந்த நாட்டின் செலாவணிான யுவான் 14.7% தான் மதிப்புக் குறைந்தது.
- இதற்கு பல காரணங்களைப் பட்டியலிட முடியும். அமெரிக்க- சீன வா்த்தகப் போா், கோவிட் 19 கொள்ளை நோய்த் தொற்று, ரஷியா-உக்ரைன் போா் உள்ளிட்டவை சா்வதேச அளவில் விலைவாசி உயா்வுக்கு காரணமாகிறது. அதனால் டாலா் பாதுகாப்பான செலாவணி என்று கருதப்படுவதால் முதலீடுகள் அமெரிக்காவில் தங்கிவிட்டன. அமெரிக்க டாலா் வலுவடைந்ததற்கு அது முக்கியமான காரணம்.
- சீனா தனது டாலா் இருப்புகளைக் குறைத்து வருகிறது. மந்தநிலையை எதிா்கொள்ள, அதிக நாணய நெகிழ்வுத் தன்மையையும் ஏற்றுக் கொள்கிறது. இந்திய ரிசா்வ் வங்கி, சீனாவின் அணுகுமுறையை முற்றிலுமாகக் கடைப்பிடிக்க தயக்கம் காட்டுவது ரூபாயின் செலாவணி மதிப்பு குறைந்து வருவதற்கு ஒரு காரணம். கடந்த ஐந்து ஆண்டு இடைவெளியில் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) 2 5% மட்டுமே குறைத்து 6.25% என்று நிா்ணயித்து இருக்கிறது ரிசா்வ் வங்கி.
- பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. அதற்கு பங்குகள் செயற்கையான உயா்ந்த மதிப்பீட்டைப் பெறுவது ஒரு முக்கியக் காரணம். ட்ரம்ப் நிா்வாகத்தின் அணுகுமுறைகள் காரணமாக டாலரின் மதிப்பு அதிகரித்து வருவது இந்திய செலாவணியான ரூபாயின் மதிப்பை மேலும் குறைக்க கூடும். இதனால் ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரம் கடுமையான அழுத்தத்தை எதிா்கொள்ளலாம்.
- கடந்த பல ஆண்டுகளாக ரிசா்வ் வங்கி சேமித்து வைத்திருக்கும் அந்நியச் செலாவணியை சந்தையில் இறக்கி, ரூபாய் மதிப்பு மேலும் குறைந்துவிடாமல் பாதுகாப்பது மிக மிக அவசியம். வெளிநாட்டிலிருந்து கடன் பெறுவதற்கான வழிமுறைகளை சுலபப்படுத்துவதும் வெளிநாடு வாழ் இந்தியா்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதும் ரூபாயின் மதிப்பை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைத்து நிலைமையை சீா்செய்வதற்கான சரியான அணுகுமுறையாக இருக்கும்.
நன்றி: தினமணி (17 – 02 – 2025)