TNPSC Thervupettagam

சாதியத்தை ஒழிக்க நினைத்த லோகியா

June 30 , 2024 3 hrs 0 min 110 0
  • இந்தியாவில் பிரிட்டிஷார் ஆண்ட கடைசி பத்தாண்டுகளில், காலனியாதிக்கத்துக்கு எதிராக சோஷலிஸ்டுகளும் (சமத்துவவாதிகள்), கம்யூனிஸ்டுகளும் தீவிரமாகச் செயல்பட்டனர். நாடு சுதந்திரம் அடைந்த முதல் பத்தாண்டுகளில் இரண்டு குழுக்களுமே காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தை எதிர்ப்பதில் முக்கிய இடம் வகித்தன.
  • முதல் தலைமுறை சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் நெஞ்சுரமும் கொள்கைப் பிடிப்பும் மிக்கவர்கள், எல்லாவிதமான நற்குணங்களுக்கும் உறைவிடமாகத் திகழ்ந்தனர். இருப்பினும் இரண்டு தரப்பினருமே இந்திய சமூகத்தில் நிலவிய சாதிப்பாகுபாடு குறித்து போதிய விழிப்புணர்வும், எதிர் செயல்திட்டமும் இல்லாமல் கோட்டைவிட்டுவிட்டனர். ஆனால், இதிலும்கூட விதிவிலக்காக இருந்தவர் சோஷலிஸ சிந்தனையாளரும், அரசியல் தலைவருமான ராம்மனோகர் லோகியா (1910-1967).

லோகியாவின் புத்தகம்

  • சாதிகள் குறித்து லோகியா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அவருடைய வாழ்நாளிலேயே அவருடைய ஆதரவாளர்களால் ஹைதராபாதில் புத்தகமாக வெளியிடப்பட்டது. முதல் பதிப்புக்குப் பிறகு அந்தப் புத்தகம் நீண்ட காலமாக அச்சிடப்படாமலேயே இருந்தது. அதன் திருத்திய பதிப்பை, அதே ஹைதராபாதைச் சேர்ந்த இன்னொரு பதிப்பாளர் சமீபத்தில் வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.
  • “பொருளாதார சமத்துவத்துக்குப் பாடுபட்டால் போதும், சாதிய ஏற்றத்தாழ்வுகள் தானாகவே மறைந்துவிடும் என்று பெரும்பாலான சோஷலிஸ்ட் தோழர்கள் நேர்மையாக – ஆனால் தவறாக சிந்திக்கின்றனர்; பொருளாதார ஏற்றத்தாழ்வும் சாதிய வேறுபாடுகளும் இரட்டை அசுரர்கள், இரண்டுமே அழிக்கப்பட வேண்டியவை என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் தவறுகின்றனர்” என்று லோகியா துல்லியமாக அடையாளம் கண்டிருக்கிறார்.
  • இந்தியச் சமூகத்தில் சாதியம்தான் மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்துகிறது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். சாதி கூடாது என்று கூறுகிறவர்கள்கூட அதை நடைமுறையில் கடைப்பிடிக்கின்றனர் என்கிறார். “வாழ்க்கையின் முக்கியமான ஒவ்வொரு தருணங்களிலும் – பிறப்பு, இறப்பு, திருமணம், பொது விருந்து, சடங்குகள் என்று எல்லாவற்றின்போதும், சாதிய சட்டகங்களுக்குள்தான் எல்லாமே இயங்குகின்றன. இத்தகைய செயல்களில் ஒரே சாதியைச் சேர்ந்த ஆண்கள் ஒருவருக்கொருவர் உதவிகளைச் செய்து அதை மேலும் வலுப்படுத்துகின்றனர்” என்கிறார்.
  • “சாதி முறையானது இப்போதுள்ள எல்லா கயமைத்தனங்களையும் கீழ்மைகளையும் அவமதிப்புகளையும் பொய்களையும் மறையவிடாமல் நிலைப்படுத்துகிறது; மக்களைப் பாகுபடுத்தவே சாதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. முற்பட்ட சாதியினர் தங்களுடைய அதிகாரத்தைத் தொடர வேண்டும், அரசியல் – பொருளாதாரரீதியாக மட்டுமல்ல மதம் சார்ந்தும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே சாதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இதைத் துப்பாக்கி முனையில் மட்டும் அமல்செய்துவிட முடியாது. யாரை ஆள நினைக்கிறார்களோ, யாரைச் சுரண்ட நினைக்கிறார்களோ அவர்கள் தங்களைத் தாழ்ந்தவர்களாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே சாதியைப் புகுத்தினர்” என்கிறார் லோகியா.

பிராமணர்கள் – ஹரிஜனங்கள்

  • தலித்துகளுக்கு எதிராகவும் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன என்பதையும் அவர் புறக்கணிக்கவில்லை. தலித்துகளை அக்கால வழக்கப்படி ‘ஹரிஜனங்கள்’ என்று குறிப்பிடுகிறார். அவருடைய எழுத்தின் இலக்கு, சவர்ணர்கள் அல்லது துவிஜாக்கள் (இரு பிறப்பாளர்கள் – பிராமணர்கள்) பிரிவுக்கும், சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்ட ‘பிராமணர் அல்லாதவர்களுக்கும்’ இடையிலான பாகுபாடுகள்தான்.
  • அரசியல், அரசு நிர்வாகம், உயர்தொழில்கள், வர்த்தகம், அறிவுசார் துறைகள் ஆகியவற்றில், மக்கள்தொகையில் குறைவாக உள்ள பிராமணர்களே ஆதிக்கம் செலுத்துவதையும், மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ள மற்றவர்கள் பிரதிநிதித்துவம் இல்லாமலேயே இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவாக இருக்கும் பிராமணர்கள், நாட்டின் நான்கு முக்கிய துறைகளில் உயர்பதவிகளில் ஐந்தில் நான்கு பங்கை ஆக்கிரமித்துள்ளனர் என்று சாடுகிறார். ராணுவம், அரசு அதிகாரப் பதவிகள், அரசியல் கட்சிகள், வர்த்தகம் ஆகியவை அந்த நான்கு துறைகள்.
  • நாடு வளர்ச்சி காண வேண்டும் என்றால் இந்த அசமத்துவம் நீக்கப்பட வேண்டும் என்கிறார். சமூகத்தில் மிகவும் அழுத்தப்பட்ட நிலையில் இருக்கும் மகளிர், சூத்திரர்கள், ஹரிஜனங்கள், முஸ்லிம்கள், ஆதிவாசிகள் ஆகியோரை மேல்நிலைக்குக் கொண்டுவர, அவர்கள் எப்படிப்பட்ட தகுதியில் இருந்தாலும் தலைமைத்துவத்துக்குத் தயார்படுத்த சோஷலிஸ்ட் தோழர்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்.
  • அதற்கான தகுதிகள் அவர்களுக்கு இப்போது குறைவு. ஆனால், தலைமைத்துவத்துக்கான தகுதியைப் பெறுவதற்கான தேர்வுமுறைகளும் முற்பட்ட சாதியினருக்கு சாதகமாகவே இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆண்டுக்கணக்காக மக்களை அடக்கிவைத்த கொடுமைகளுக்கு எதிராக, நாமும் பெரிய போர் நடத்தித்தான் உரிமைகளை மீட்டாக வேண்டும் என்கிறார்.

சாதி மறுப்புத் திருமணம்

  • வெவ்வேறு சாதிகள் – வர்ணங்களுக்கு இடையில் திருமண உறவு ஏற்பட சோஷலிஸ்டுகள் ஊக்குவிக்க வேண்டும் என்கிறார். சாதியத் தடைகள் உடைக்கப்பட்டால் அல்லது நெகிழ்த்தப்பட்டால் இரு பிறப்பாளர்களான பிராமண இளைஞர்கள், சூத்திரப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள முன்வருவார்கள், அதேபோல சூத்திர சாதிகளைச் சேர்ந்த பையன்களும், பிராமண சாதிப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்கிறார். இரு தரப்பாரும் திருமணம் செய்துகொண்டு பிள்ளைகளைப் பெறுவதுடன் சாதி மறுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, சாதியற்ற சமூகம் வளர உள்ளுணர்வோடு ஈடுபடுவார்கள் என்கிறார்.
  • ‘சாதிகளை ஆராயவும் அழிப்பதற்குமான சங்கம்’ என்ற அமைப்பை 1960இல் தொடங்கினார் லோகியா. அந்தச் சங்கத்துக்கு 8 குறிப்பான இலக்குகளையும் வகுத்தளித்தார். அதில் இரண்டை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது, மதத்தை கறைப்படுத்தும் சாதிப் பிரிவினைகளைக் கைவிட்டு, சாதி மறுப்புத் திருமணங்களைச் செய்து - சாதிகளை மறையச் செய்ய வேண்டும் என்பது. இதற்காக சாதிகளை மக்கள் தாங்களாகவே கைவிட வேண்டும், பொதுச் சடங்கு – பொது விருந்து ஆகியவற்றை ஏற்படுத்த அறிவியல்பூர்வ வழிகளையும் நிகழ்த்துக் கலைகளையும் பயன்படுத்த வேண்டும் என்றார்.
  • இரண்டாவதாக, அரசு நிர்வாகம், அரசியல் கட்சிகள், வர்த்தகம், ராணுவ படைப்பிரிவுகள், ஆகியவற்றில் பிராமணர் அல்லாத சாதிகளுக்கு 60% இடங்களை சட்டப்பூர்வமாகவோ, மரபாகவோ ஒதுக்க வேண்டும் என்று கோருவோம், அது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மகளிர், சூத்திரர்கள், ஹரிஜனங்கள், ஆதிவாசிகள், சிறுபான்மைச் சமூகங்களிலேயே கீழ்நிலையில் உள்ள சாதிப் பிரிவினர் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டும் என்றார். பிற்படுத்தப்பட்ட பிரிவுகளிலும்கூட, எண்ணிக்கையிலும் சமூக பலத்திலும் ஆதிக்கம் செலுத்தும் பிரிவுகளே எல்லா இடங்களையும் கைப்பற்றி விடாமலும் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

அம்பேத்கருக்குக் கடிதம்

  • அந்தப் புத்தகத்தின் மிகவும் சுவாரசியமான பகுதி, 1955 – 1956இல் லோகியா தன்னுடைய சோஷலிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் எழுதிய கடிதங்களாகும். 1957 பொதுத் தேர்தலை தங்களுடைய ஆதரவாளர்களுடன் இணைத்து சந்திப்பதற்காக விரும்பி அம்பேத்கருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் லோகியா.
  • “ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அனுதாபம் - தார்மிகமான கோபத்துடன் ஒன்று கலக்க வேண்டும், பட்டியல் இன மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்திய மக்களுக்கும் நீங்கள் தலைவராக வேண்டும்” என்று அம்பேத்கருக்கு எழுதிய கடிதத்தைத் தொடங்குகிறார் லோகியா. லோகியாவுக்கு பதில் கடிதம் எழுதிய அம்பேத்கர், 1956 அக்டோபர் 2ஆம் நாள் (அன்றைக்கு காந்தி ஜெயந்தி), தம்மை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுக்கிறார். ஊர் ஊராகச் சுற்றும் லோகியாவின் பொதுவாழ்க்கை காரணமாகவும், அம்பேத்கரின் உடல் நலிவு காரணமாகவும் இரு தலைவர்களும் சந்திக்க முடியாமலேயே போய்விட்டது.
  • பாபாசாஹேப் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6ஆம் நாள் மறைவு எய்தினார். “காந்திஜி அல்லாமல் இந்திய அரசியலில் மிகப் பெரிய அரசியல் தலைவராக நான் கருதுவது டாக்டர் அம்பேத்கரைத்தான். சாதி இந்துத் தலைவர்களைப் போல சிறந்தவர் அம்பேத்கர். அவரைப் பற்றிய இந்தச் சிந்தனைதான் சாதிகளை ஒழித்துவிட முடியும் என்ற நம்பிக்கையையும் மன நிம்மதியையும் எனக்கு அளிக்கிறது” என்று மது லிமாயிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் லோகியா. “அம்பேத்கர் நன்கு படித்தவர், நேர்மையானவர், துணிச்சலும் சுதந்திர உணர்வும் மிக்கவர். நேர்மையான இந்தியாவுக்கு அடையாளமாக வெளியுலகுக்கு அடையாளம் காட்டப்படக்கூடியவர் அம்பேத்கர். ஆனால், மற்ற இந்தியர்களுடைய செயல்களால் அவர் மிகவும் மனம் வெதும்பி கசப்புணர்வோடு, தம்மை தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்கிறார். ஹரிஜனங்கள் அல்லாதவர்களுக்குத் தலைமை ஏற்க மறுக்கிறார்” என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கிறார் லோகியா.
  • “அம்பேத்கரைப் பின்பற்றுவதும், அவர் நினைவைப் போற்றுவதும் சிறந்த அஞ்சலியாகும், அதைவிட முக்கியம் அவருக்கிருந்த கசப்புணர்வை நீக்கி அனைத்து தரப்பு மக்களுடனும் சேர்ந்து சாதிகளை ஒழிக்க அம்பேத்கரின் தொண்டர்கள் முன்வருவதாகும், ஹரிஜனங்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் தலைவர் அம்பேத்கர்” என்றும் கூறியிருக்கிறார் லோகியா.
  • சாதியப் பாகுபாடுகளையும் அதன் தீமைகளையும் துல்லியமாக அறிந்துவைத்ததால், மற்ற சோஷலிஸ்டுகளிடமிருந்து வேறுபடுகிறார். சாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதிலும் தீவிரமாகச் சிந்தித்துள்ளார். “உலகிலேயே இந்தியர்கள்தான் சோகமானவர்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களைப் பிரிக்கும் சாதி – ஆண்,பெண் வேறுபாடு என்ற பாலினப் பாகுபாடு ஆகியவைதான். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை, ஒன்று மற்றொன்றை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார் லோகியா.

ஆணுக்கு எது இடம்?

  • ஆணாதிக்க சமுதாயம், பெண்களுக்கு அடுப்பங்கரைதான் உலகம் என்கிறது. சமைப்பது பெண்கள் வேலை என்றால், குழந்தைகளைப் பராமரிப்பது ஆண்களின் வேலை என்று சோஷலிஸ்டுகள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிறார் லோகியா. குழந்தைகளைக் குளிப்பாட்டி, சோறூட்டி, கதைகள் சொல்லி தூங்கவைத்து பராமரிப்பது தந்தையர்களின் கடமையுமாகும் என்று வெகு காலத்துக்கு முன்பே வலியுறுத்தியிருக்கிறார் லோகியா. இன்றுவரை ஆண் சமூகம் அதைப் பெரும்பாலும் செய்யாமலேயே பெண்கள் தலையில் சுமத்திவருகிறது.

ராஜேந்திர பிரசாத்துக்குக் கண்டனம்

  • காசியில் (பனாரஸ்) பிராமணர்களின் கால்களைக் கங்கை நீரால் கழுவி பாத பூஜை செய்த குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்தின் செயலைக் கண்டித்து 1953இல் காட்டமாக ஒரு கட்டுரையை எழுதினார் லோகியா. அதுதான் இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயம். நாட்டின் குடியரசுத் தலைவராக இருப்பவர் இப்படிச் செய்ததன் மூலம் என்னைப்போல பல லட்சக்கணக்கானவர்களின் மரியாதையை இழந்துவிட்டார் என்று துணிவுடன் கண்டித்திருக்கிறார். சாதி, பாலின ஆதிக்கங்களைத் தொடர்ந்து வன்மையாகக் கண்டித்துவந்த அவர், பனாரஸ் சம்பவத்தைக் கண்டிப்பது ஏன் என்று விளக்கியிருக்கிறார்.
  • இந்தியாவில் இப்போது (1950களில்) ஒரு ‘கரும் துயரம்’ நிலவுகிறது. சடங்குகளைச் செய்யும் பூசாரிப் பெண்மணியும் - செருப்பு தைக்கும் கலைஞரும், கல்வி கற்றுத்தரும் ஆசிரியரும் - துணி வெளுக்கும் ஈரங்கொல்லிகளும் சந்தித்து மனம் விட்டுப் பேசும் நிலை சமூகத்தில் இல்லை. இப்படிப்பட்ட நாட்டில் பிராமணர்களின் கால்களைக் கழுவும் சடங்கைக் குடியரசுத் தலைவர் செய்வது வேதனையாக இருக்கிறது” என்று வருத்தப்பட்டிருக்கிறார். அம்பேத்கர் அதை நிச்சயம் வரவேற்று அங்கீகரித்திருப்பார்.
  • இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளும் உரைகளும் 1953 முதல் 1961ஆம் ஆண்டுகள் வரையிலானவை. 1950களில் ஆதிக்கம் செலுத்திய அளவுக்குப் பிராமணர்கள் இப்போது அரசியலில் நேரடியாக ஆதிக்கம் செய்கிறவர்களாக இல்லாமலிருக்கலாம், கலாச்சாரம், பொருளாதார வாழ்க்கையில் அவர்களுடைய ஆதிக்கம் இன்னமும் தொடர்கிறது.
  • மக்கள்தொகையில் அவர்களுடைய குறைந்த எண்ணிக்கைக்கு சற்றும் பொருந்தாத வகையில் - சமூகத்தில் அவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கின்றனர். எனவே, பல வகைகளில் சாதி ஆதிக்கம் குறித்து லோகியா கொண்டிருந்த சிந்தனைகளும் எழுத்தும் இன்றைக்கும் பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன.

நன்றி: அருஞ்சொல் (30 – 06 – 2024)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories