சிக்கிம் பெருவெள்ளத்துக்குக் காலநிலை மாற்றம் காரணமா?
- 2023 அக்டோபரில் சிக்கிமில் மிகப் பெரிய பனி ஏரி வெடித்ததால் உண்டான பெருவெள்ளத்துக்கு நீரிடி (cloudburst) காரணம் எனக் கருதப்பட்டுவந்தது. இந்தப் பேரழிவில் டீஸ்டா ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த 1,200 மெகாவாட் அணை அடித்துச் செல்லப்பட்டது. 55 பேர் பலியானார்கள், ராணுவ வீரர்கள் உள்பட 74 பேர் காணாமல் போயினர், 25,999 கட்டிடங்கள், 31 முக்கியப் பாலங்கள், நான்கு அணைகள், 276 சதுர கி.மீ. வேளாண் நிலங்கள் பாதிக்கப்பட்டன. அத்துடன் 45 நிலச்சரிவுகளும் தூண்டப்பட்டன.
- இந்த இயற்கைப் பேரழிவுக்கான உண்மையான காரணம் நீரிடி அல்ல. இமாலய சுனாமி எனப்படும் பெருமளவு பாறை, பனி, வண்டல் ஆகியவை பனி ஏரிக்குள் திடீரென சரிந்ததால் ஏற்பட்ட உந்துதலே வெடிப்புக்கும், பெருவெள்ளத்துக்கும் காரணம் எனப் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. பொதுவாகத் தற்போது நிகழும் பெரும்பாலான இயற்கைப் பேரழிவுகளுக்குக் காலநிலை மாற்றம் காரணமாகச் சுட்டப்படுகிறது. அதிலும் குறிப்பாக நீரிடியும் காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
- சிக்கிமில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு நீரிடிதான் காரணம் என மாநில அரசு கூறியுள்ளது. ஆனால், நீரிடி உண்மைக் காரணம் அல்ல எனக் கூறும் மேற்குறித்த ஆய்வை 9 நாடுகளைச் சேர்ந்த 34 அறிவியலாளர்கள் குழு கண்டறிந் துள்ளது. ‘தி சயின்ஸ்’ இதழில் வெளியான இந்த ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர் புவனேஸ்வர் ஐ.ஐ.டி. உதவிப் பேராசிரியர் ஆஷிம் சட்டார்.
- இமயமலைப் பகுதி 0.1 சதுர கி.மீ. பரப்பைவிடப் பெரிய 2,400 பனி ஏரிகளைக் கொண்டுள்ளது. இவை தொடர்ந்து பெரிதாகி வருகின்றன. இதைக்கருத்தில் கொள்ளாமல் இந்தப் பகுதியில் 650-க்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
- அணைகள் கட்டுவதன் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காகப்பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டுவருகின்றன. இந்தத் திட்டங்கள் மிகவும் ஆபத்தானவை, இவற்றைக் கைவிட வேண்டும் எனச் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.டீஸ்டா மூன்றாவது அணை 2023இல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், 118 மீட்டர் உயரமுள்ள அணையை மீண்டும் கட்ட சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகக் குழு அனுமதி அளித்துள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 02 – 2025)