சிந்துவெளி நாகரிக இந்தியா மையங்களும் விளிம்புகளும்
- இந்தியாவின் பழங்கால வரலாற்றில் ஒரு மைல்கல்லான சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை சர் ஜான் மார்ஷல் அறிவித்து 100 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன. இந்த நாகரிகத்தின் முத்திரையில் கிடைத்துள்ள எழுத்துகள் என்ன மொழியில் உள்ளன என்பது இன்னும் படித்தறியப்படவில்லை.
- அண்மையில், சிந்துவெளி நாகரிகத்தின் நூறு ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடிய தமிழ்நாடு அரசு, இந்த எழுத்துகளைப் படித்தறிபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசை அறிவித்திருக்கிறது. சிந்துவெளி நாகரிகத்தின் மீதான அதிகமான ஆர்வத்துக்கு முக்கியக் காரணம் என்ன?
- உலகின் ஒரு சில வெண்கலக் கால நாகரிகங்களில் ஒன்று சிந்துவெளி நாகரிகம். சுமார் 4,500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சிந்துவெளி நாகரிகம், பழங்கால இந்தியாவின் அடையாளமாக, சாதனையாகப் பார்க்கப்படுகிறது. காலனியாதிக்கம் எழுப்பிய இந்தியாவின் சாதனை குறித்த கேள்விக்கான பதிலாக இதன் கண்டுபிடிப்பு பார்க்கப்பட்டது.
- பள்ளி, கல்லூரிகளில் இந்நாகரிகம் குறித்த அறிவுறுத்தலும், படித்தறியப்படாத எழுத்தும், திட்டமிடப்பட்ட நகரக் கூறுகளும், வணிகத் தொடர்புகளும், பொருள் உற்பத்தியும், தொழில்நுட்பமும் பொதுவெளியில் இதன் மீதும் அதன் தோற்றத்திலும் அதிகமான ஆர்வம் உருவாவதற்கான காரணங்கள் எனக் கருதலாம்.
நகரங்களும் ஊர்களும்:
- சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பில் நாம் சர் ஜான் மார்ஷலை மட்டுமே நினைவுகூர்ந்தாலும், ராக்கல்தாஸ் பானர்ஜி, தயாராம் சாஹ்னி போன்ற இந்திய அறிஞர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வரலாற்றாசிரியர் நயன்ஜோத் லஹரி, சிந்துவெளி நாகரிகம் ஒரு நிறுவனத்தின் (இந்திய அரசு தொல்லியல் துறை) கண்டுபிடிப்பு என்கிறார். சிந்துவெளி நாகரிகத்தில் பெருநகரங்கள் குறைவாகவே இருந்தன. அவை, ஐந்து மட்டுமே. ஆனால், அங்கு 1,400க்கும் மேற்பட்ட ஊர்கள் இருந்தன.
- சிந்துவெளி நாகரிகம் ஓர் ஊர் சார்ந்த நாகரிகம் என பரேக், கமரோன் பெட்ரி ஆகிய அறிஞர்கள், ‘இந்தியாவின் சமகாலக் கிராமங்கள் போல சிந்துவெளி நாகரிகத்தின் ஊர்களும் முக்கியமான வாழ்விடங்களாக இருந்தன’ எனப் பதிவுசெய்கின்றனர். நகரவாசிகள், நாடோடிகள், மேய்ச்சல் சமூகங்கள், வணிகர்கள், கைத்தொழில் வினைஞர்கள், கற்கருவி பயன்படுத்தும் மக்கள் எனப் பல குழுக்கள் அப்பகுதியில் இருந்தன.
- சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த நடனப் பெண்ணின் உருவமும், பூசாரி எனப்படும் குருமார் ஒருவரின் உருவமும், வேறு சில உருவங்களும் முக்கியமானவை. இங்கு இருந்த மக்களின் உருவத்தோற்றத்திலும் வேறுபாடுகள் இருந்ததை இது தெளிவாக உணர்த்துகின்றது. அண்மை டிஎன்ஏ ஆய்வுகள், வட இந்திய, தென்னிந்திய முன்னோர்களின் மரபணுக்களை சிந்துவெளி நாகரிகம் வெளிப்படுத்துவதாகக் கருதுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
- சிந்துவெளி இந்தியாவில், சிந்துவெளி நாகரிகத்துக்கும் பிற பண்பாடுகளுக்கும் கிடைமட்ட (பிற பகுதிகளுடன்), செங்குத்து (முந்தைய, பிந்தைய கால அளவிலான) தொடர்ச்சியும் உறவுகளும் இருந்துள்ளன. பொதுவாக, நாம் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிப் படிக்கிறோம், ஆனால் இந்தியாவில் இருந்த பல ஊர்ப்புற, நாட்டுப்புற, காட்டுப்புறப் பண்பாடுகளைக் கருதுவதே இல்லை.
செங்குத்துத் தொடர்ச்சி:
- சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மக்கள் எங்கு, எவ்வாறு புலம்பெயர்ந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், சிந்துவெளியின் பண்பாட்டுத் தொடர்ச்சி, தொழில்நுட்பக் கூறுகள் பிற்காலப் பண்பாடுகளில் காணப்படுகின்றன. சில கூறுகள் வட இந்தியாவின் காவிநிறப் பானை வகைப் பண்பாட்டிலும், சில செம்புக்காலப் பண்பாடுகளிலும் காணப்படுகின்றன. சிந்துவெளி நாகரிகத்தின் மரபு அறிவின் தொடர்ச்சி செம்புக்காலத்திலும், இரும்புக்காலத்திலும், வரலாற்றுத் தொடக்கக் காலத்திலும் இருந்தது.
- சங்க இலக்கியத்தில் இருக்கக்கூடிய சில தகவல்கள் ஐராவதம் மகாதேவன், ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறுவதுபோலப் பழங்கால நினைவுகளின் தொகுப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பழங்கால இந்திய அறிவு மரபுகளின் கருத்துகள் சங்க இலக்கியத்தில் இருப்பதன் மூலம், சங்க இலக்கியம் இந்திய வரலாற்றுப் பண்பாட்டுக் கருத்துகளின் தொகுப்பாக அமைந்தது என்றும், இந்திய வரலாற்றையும் பண்பாட்டையும் மீட்டுருவாக்க உதவும் சான்றுகளில் ஒன்று என்றும் திண்ணமாகக் கருதலாம். ஊர்ப் பெயராய்வை வரலாற்றாய்வாளர்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை எனலாம். ஊர்ப் பெயர்களில் சில, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக இருந்திருக்க வாய்ப்புண்டு.
கிடைமட்டத் தொடர்ச்சி (சமகாலத்தில்)
- சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தில் (பொ.ஆ.மு 3300-1350) இந்தியாவில் பல பண்பாடுகளும் இனக்குழுக்களும் இருந்துள்ளன. இந்தியாவில் பலவகைப் பண்பாடுகள் அவற்றின் வட்டாரங்களில் சூழலுக்கு ஏற்ப வளர்ந்துள்ளன. இந்தியாவின் பல பகுதிகளிலும் மக்கள் வசித்தனர். அவர்கள், இந்தியப் பண்பாட்டுக்குப் பல பங்களிப்பைச் செய்துள்ளனர். தென்னிந்திய மேய்ச்சலியப் பண்பாடு தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பகுதிகளில் காணப்படுகிறது.
- இம்மக்கள் சாம்பல் மேடுகளை உருவாக்கினார்கள். ஆடு மாடுகளை வளர்த்தார்கள். இவர்களின் காலம் பொ.ஆ.மு 3000 முதல் 1200 வரை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசத்தில் இருந்த தக்காணப் பண்பாடுகள் செம்புக்காலப் பண்பாடுகள் என அழைக்கப்பட்டாலும், அவை மேய்ச்சலிய-வேளாண் பண்பாடுகள்; அங்கு வாழ்ந்தவர்கள் செம்புக்கருவிகளை அதிகமாகப் பயன்படுத்தினர். இவற்றின் காலமும் பொ.ஆ.மு 2400-1000 எனக் கருதப்படுகிறது.
- வேட்டையாடும் மக்கள் குழுக்கள் மேற்குத் தொடர்ச்சி மலை, மத்திய இந்தியா, ராஜஸ்தான், கிழக்கிந்தியா, வடகிழக்கிந்தியா, இலங்கை, அந்தமான் உள்ளிட்ட பல பகுதிகளில் வாழ்ந்துள்ளனர். அகார் பாணாஸ் ஆற்றுப்பண்பாடு செம்புப் பொருள்களைப் பயன்படுத்திய சிந்துவெளியின் சமகாலப் பண்பாடு. இவர்கள் சிந்துவெளி நாகரிக மக்களுக்கு அண்மையில் ராஜஸ்தானத்தில் இருந்தவர்கள். இவர்கள் செம்புத் தாதுக்களைச் சிந்துவெளிப் பண்பாட்டுக்குப் பரிமாற்றம் செய்திருக்கலாம்.
- கங்கைச் சமவெளியிலும் விந்திய மலைப்பகுதியிலும், கிழக்கிந்தியாவிலும், காஷ்மீரிலும் வேளாண்-மேய்ச்சல் சமூகங்கள் இருந்தன. வடகிழக்கு இந்தியாவில் வேட்டையாடும், வேளாண் சமூகங்கள் இருந்தன. இப்பண்பாடுகளின் வேளாண் உற்பத்தியும் இயற்கைசார்ந்த அறிவும் இந்தியப் பண்பாட்டு மரபிற்குச் சிறந்த பங்கை அளித்துள்ளன. பிற பண்பாடுகளை ஒப்பிடும்போது, நாம் சிந்துவெளி நாகரிகத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
- சிந்துவெளி மக்கள் வேளாண்மை, ஆடு மாடு வளர்த்தல் மட்டுமல்லாமல், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பொருள்களை உருவாக்கு வதிலும், கைவினைத் தொழிலிலும் ஈடுபட்டது நகர வளர்ச்சிக்கான காரணங்களில் ஒன்று எனலாம். மற்ற பண்பாடுகளை ஒப்பிடும்போது வணிகம், கைவினைத்தொழில், பொருள் உற்பத்தி, சந்தைப்படுத்தும் திறன், தொழில் திறன் இவர்களிடம் மிகுந்திருந்தது. இவர்கள் தொழில்மயமாக்க சமூகமாக இருந்திருக்க வேண்டும்.
- மேலும் எழுத்து முறை, தொழில்நுட்பம், வணிகம் ஆகியவையும் நகர உருவாக்கத்திற்கான காரணம் எனலாம். ஊர்ப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் அதிகமான மக்கள் வளமாக வாழ முடிந்தது. இதற்குக் காரணம், கூட்டுறவு போன்ற கருத்தியல் முறையில் செயல்பட்டதுதான்.
- இந்தியாவில் இந்தோ-ஆரிய, திராவிட, ஆஸ்திரோ ஆசிய, திபெத்தோ-பர்மிய மொழிக் குடும்பங்கள் இருக்கின்றன என்பதை நாம் நினைவுகூர வேண்டும். இந்தியாவில் இருந்த பல வகையான இனக்குழுக்களும் சுற்றுச்சூழலும் பல வகையான பண்பாடுகள் வந்தடையும் ஒருவழிக் கூடு (cul de sac) போன்று இந்தியாவின் கடல் சூழ்ந்த அமைவிடம் இந்தியப் பெருங்கடற்பகுதியில் இருப்பதும் இதற்கான காரணம் எனலாம்.
- இந்திய வரலாற்றை நாம் ஒற்றைப் பொருண்மையில் நேர்க்கோட்டில் கடக்கும் போது தொல்பழங்காலம், சிந்துவெளி, வேதகாலம், ஜனபதா எனக் கடந்துவிடுகிறோம். சில நாகரிகங்களுக்கு மட்டுமே சிறப்பிடம் அளிக்கிறோம். இங்கு இருந்த பண்பாட்டுப் பன்முகத்தன்மையை நாம் நினைப்பதில்லை. பண்பாடு ஒற்றை நேர்க்கோட்டில் வளரவில்லை என்பதைத் தொல்காப்பியரின் திணைக்கோட்பாடு விளக்குகிறது.
- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் ஆய்வில் வெளிப்படும் பழங்கால இரும்புத் தொழில்நுட்பத்தின் காலம் மிகப் பழையது எனில் அதுவும் குறிப்பிடத்தக்கதாகும். இங்குதான் பல வரலாற்றறிஞர்கள் கூறும் இந்தியாவின் வரலாறு காவிரியிலிருந்து, வைகையிலிருந்து, பொருநையிலிருந்து தொடங்க வேண்டும் என்கிற கருத்தாடல் சிறப்பிடம் பெறுகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 01 – 2025)