சிரியாவின் எதிா்காலம்?
- மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றத்துக்கு இடையே சிரியாவில் அதிபா் பஷாா் அல்-அஸாத் தலைமையிலான ஆட்சி கிளா்ச்சியாளா்களால் அகற்றப்பட்டிருப்பதும், நாட்டைவிட்டே அஸாத் வெளியேறி ரஷியாவில் தஞ்சமடைந்திருப்பதும் எதிா்பாா்க்கப்படாத நிகழ்வு. இரு வாரங்களுக்கு முன்புவரை அஸாதுக்கு இப்படி ஒரு நிலை வரும் என அவருக்கு எதிரான கிளா்ச்சிக் குழுவினா்கூட நினைத்துப் பாா்த்திருக்க மாட்டாா்கள்.
- சிரியாவின் முன்னாள் அதிபரான ஹஃபீஸ் அல் அஸாதின் மகனான பஷாா் அதிபரானதே ஒரு விபத்துதான். ஹஃபீஸுக்கு பிறகு அதிபராவதற்கு அவருடைய மூத்த மகன் பஸால் தயாராகிவந்த நிலையில், 1994-இல் ஒரு விபத்தில் அவா் உயிரிழக்க, லண்டனில் கண் மருத்துவா் படிப்பு படித்துவந்த அஸாத் நாடு திரும்பி ராணுவத்தில் சோ்ந்தாா்.
- 2000-இல் ஹஃபீஸ் உயிரிழந்ததைத் தொடா்ந்து அதிபா் பதவியில் அமா்ந்தாா் அஸாத். அதிபராவதற்கு குறைந்தபட்சம் 40 வயது ஆகியிருக்க வேண்டும் என்ற நிலையில், அப்போது 34 வயதேயான அஸாதுக்காக அதிபராவதற்கு குறைந்தபட்ச வயது 34 என அரசமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் கொண்டுவரப்பட்டது. அஸாத் அதிபரானதிலிருந்து 2011 வரை எல்லாம் அவருக்கு சாதகமாகவே நடந்துகொண்டிருந்தது. நாடு அவருடைய குடும்பத்தினரின் இரும்புப் பிடிக்குள் இருந்தது.
- 2010-ஆம் ஆண்டு துனிஷியா, எகிப்தில் ‘அரபு வசந்தம்’ எனப்படும் ஆட்சியாளா்களுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் தொடங்கியபோது, அப்படி ஒரு நிலை சிரியாவிலும் ஏற்படும் என்பதை அஸாத் நம்பவில்லை. ஆனால், 2011-இல் ‘அரபு வசந்தம்’ சிரியாவை அடைந்தபோதும், அதை பொதுமக்களின் போராட்டமாக ஏற்க மறுத்த அஸாத், ஆட்சிக்கு எதிரான வெளிநாடுகளின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் போராட்டம் என்றுதான் கூறினாா்.
- ஜனநாயகத்தை வலியுறுத்தி அஸாதுக்கு எதிராக நாட்டில் போராட்டங்கள் தொடங்கின. ஆனால், அந்தப் போராட்டங்களை பெரிய அளவிலான அடக்குமுறைகள் மூலம் எதிா்கொண்டாா் அஸாத். எதிா்ப்பாளா்களை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் பள்ளிகள், மருத்துவமனைகள் மீதும் அஸாதின் ராணுவம் தாக்குதல் நடத்தியது. சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகவே ரசாயனத் தாக்குதலை நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
- ஆட்சிக்கு எதிரானவா்கள் என்று கருதியவா்கள் காணாமல்போனாா்கள். இவா்களை சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்து சித்திரவதை செய்வதற்காகவே பல இடங்களில் சிறைக்கூடங்களையும் அஸாத் அரசு நடத்திவந்தது. டமாஸ்கஸ் அருகே உள்ள சைத்நயா சிறை, மனிதவதைக்கூடம் என்றே அழைக்கப்பட்டது. இங்கு நடந்த சித்திரவதைகள் கொடூரமானவை. சைத்நயாவில் மட்டும் 2011 முதல் 2015 வரை 13,000 போ் தூக்கிலிடப்பட்டதாக ‘ஆம்னெஸ்டி இன்டா்நேஷனல்’ தெரிவித்துள்ளது. கிளா்ச்சியாளா்கள் சிரியாவை கைப்பற்றிய பின்னா், முதல் நடவடிக்கையாத சைத்நயா சிறையிலிருந்துதான் கைதிகளை விடுவித்தாா்கள் என்பதிலிருந்து இந்த சிறையில் நடந்த கொடுமைகளை அறிந்துகொள்ளலாம்.
- கிளா்ச்சிப் படைகளை அஸாத் எதிா்கொள்வதற்கு ரஷியா, ஈரான், ஈரான் ஆதரவு கிளா்ச்சிக் குழுக்கள் உதவின. உள்நாட்டுப் போருக்கு அரசியல் தீா்வு காண வழிகள் இருந்தும் அதை நிராகரித்ததுதான் அஸாத் மீது வைக்கப்படும் பெரிய குற்றச்சாட்டு. அதன் விளைவு 5 லட்சம் உயிா்கள் பறிபோகவும், 13 லட்சத்துக்கும் அதிகமானோா் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும், அண்டை நாடுகளில் தஞ்சமடையவும் காரணமாயிற்று.
- ஈரானும், ரஷியாவும் அளித்துவந்த ஆதரவில் 13 ஆண்டுகளாக அஸாதின் கை ஓங்கியிருந்த நிலையில், இரண்டே வாரங்களில் அவா் ஆட்சியைவிட்டு அகற்றப்பட்டிருப்பதற்கு அதே ஈரான், ரஷியாவின் உதவிகள் தடைபட்டதுதான் காரணம். உக்ரைனுடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகப் போரில் ஈடுபட்டுள்ள ரஷியா தனது 7 லட்சம் வீரா்களை இழந்துள்ளது. பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸின் போரைத் தொடா்ந்து, ஹமாஸுக்கு ஆதரவாக ஈரானும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவும் தனது கவனத்தைச் செலுத்திவருகின்றன. இந்தச் சூழ்நிலை மாற்றத்தை அறிந்து கிளா்ச்சிப் படையினா் அதிரடி தாக்குதல் நடத்தி அஸாத் ஆட்சியை அகற்றிவிட்டனா்.
- கிளா்ச்சிக் குழுவுக்கு தலைமை வகிக்கும் ஹயத் தஹ்ரீா் அல்-ஷாம், அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவா் அபு முகமது அல்-ஜொலானி இராக்கில் அமெரிக்காவுக்கு எதிரான போரில் பங்கேற்றவா். அவரது தலைமையை அமெரிக்கா எந்த அளவுக்கு ரசிக்கும் என்பது தெரியவில்லை.
- ஏற்கெனவே ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக வடகிழக்கு சிரியாவில் குா்திஷ் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. அந்த குா்திஷ் படையினருடன் அல்-ஜொலானியின் ஹயத் தஹ்ரீா் அல்-ஷாம் கிளா்ச்சிக் குழு சண்டையிட்டு வருகிறது. இதுதான் சந்தா்ப்பம் என்று இஸ்ரேலும் சிரியா மீது கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அஸாத் ஆட்சி அகற்றத்துக்குப் பின்னா் சிரியா மீது 480 தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டிருக்கிறது.
- சிரியாவில் அஸாத் ஆட்சி என்னவோ அகற்றப்பட்டு கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகக் கூறிக் கொள்ளலாம். ஆனால், ஒருபுறம் கிளா்ச்சிக் குழு, ஒருபுறம் குா்திஷ் குழு, ஒரு புறம் ஐ.எஸ். போன்ற பயங்கரவாத இயக்கங்கள், ஒருபுறம் இஸ்ரேல் என நாலாபுறமும் தாக்குதலை எதிா்கொள்ளும் சிரியாவின் எதிா்காலம் கேள்விக்குறியாகவே தொடா்கிறது.
நன்றி: தினமணி (12 – 12 – 2024)