TNPSC Thervupettagam

சீதாராம் யெச்சூரி - ஒரு ஞானச் சூரியன் மறைந்தது!

September 16 , 2024 6 hrs 0 min 43 0

சீதாராம் யெச்சூரி - ஒரு ஞானச் சூரியன் மறைந்தது!

  • த.மு.எ.ச.வின் (இப்போது த.மு.எ.க.ச) வெள்ளிவிழா மாநாடு கோவையில் 1999 மே மாதம் நடைபெற்றது. மாநாட்​டையொட்டி அமைத்​திருந்த கருத்​தரங்கில் பேச தோழர் சீதாராம் யெச்சூரியை அழைத்​திருந்​தோம். அப்போது தமுஎசவின் பொதுச்​செய​லாளர் நான். கோவைக்கு வந்தவரை வரவேற்று, நானும் சில தோழர்​களும் பேசிக்​கொண்​டிருந்​தோம்.
  • அப்போது, “இன்றைய அரசியல்​-பொருளா​தாரம் பற்றி எழுத்​தாளர்​களுக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ஓர் ஆலோசனை வந்திருக்​கிறது. அதைப் பேசவா அல்லது பின்-நவீனத்துவம் உள்ளிட்ட இலக்கியக் கோட்பாடுகள் பற்றிப் பேசவா?” என்று யெச்சூரி கேட்டார். நாங்கள் அனைவரும் ஒரே குரலில், “தோழர், நீங்கள் இலக்கியக் கோட்பாடுகள் பற்றிப் பேசுங்கள்; அதுவே பொருத்தமாக இருக்​கும்” என்றோம். அவர் மெலிதாகச் சிரித்​தார்.

இலக்கி​யத்தின் அரசியலில்...

  • கருத்​தரங்கம் தொடங்​கியது. நான்தான் மொழிபெயர்ப்​பாளர். ‘இவர் அரசியல் பேசுவாரா, இலக்கியம் பேசுவாரா?’ என்று எனக்குள் ஒரே பரபரப்பு. பேச ஆரம்பித்தவர் தேச அரசியலின் சாரத்தைச் சொல்லி​விட்டு, இலக்கியத்தின் அரசியலுக்குள் புகுந்​தார். புகுந்தார் என்றால்... புகுந்து விளையாடி​னார்.
  • இலக்கியக் கோட்பாடு​களுக்குள் இருக்கும் அரசியலைப் புட்டுப் புட்டு வைத்தார். பின்-நவீனத்துவம் எனப்பட்டதன் உள்ளிருக்கும் அரதப் பழசான அரசியலைப் பிரமாதமாக அடையாளம் காட்டி​னார். யதார்த்​தவாதம் என்னும் இலக்கியக் கோட்பாடே முற்போக்கு எழுத்​தாளர்​களுக்கு மட்டுமல்ல, எந்தவொரு எழுத்​தாள​ருக்கும் ஏற்றது என்றார். அதேநேரத்​தில், அதை விரிந்த நோக்கில் புரிந்​து​கொள்ள வேண்டும், கைக்கொள்ள வேண்டும் என்றார். ஓர் அரசியல் தலைவர் இவ்வளவு ஆழமாக இலக்கிய நடப்புகளை அறிந்து வைத்திருப்​பாரா, இவ்வளவு அழகாக எடுத்துச் சொல்வாரா என்று அனைவரும் அசந்து​போனார்கள். ஒரு சரியான அரசியல்வாதி உள்ளார்ந்த இலக்கிய​வா​தி​யாகவும் இருப்பார் என்பது அன்று உறுதி​யானது. அந்தப் பேச்சு, ‘இலக்கைத் தேடும் இலக்கியம்’ என்று சிறு பிரசுர​மாகவும் வெளிவந்தது.

அரசியல் யதார்த்​தங்களை எதிர்​கொண்டவர்:

  • 1975இல் வந்த நெருக்​கடிநிலை எனும் சர்வா​தி​காரத்தை எதிர்த்த அரசியலில் முகிழ்த்த தலைவர்​களில் ஒருவர் யெச்சூரி. அப்போது அவர் காங்கிரஸ் அரசால் கைது செய்யப்​பட்​டார். ஆனால், உறுதி குலைய​வில்லை. டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்​கழகம் (ஜேஎன்யூ) இடதுசாரி இளைஞர்​களின் பிறப்​பிட​மாகத் திகழ்ந்த காலத்​தில், இவர் அந்த மாணவர்​களின் உறுதியான தலைவராக உயர்ந்​தார். பின்னர், மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, அதற்கு முழுமை​யாகத் தன்னை ஒப்படைத்​துக்​கொண்​டார்.
  • வாழ்க்கை வினோத​மானது. எதை எதிர்த்துப் புறப்​பட்டோமோ அதன் துணையைத் தேடும் காலமும் வரலாம். காங்கிரஸை எதிர்த்துப் புறப்பட்ட அந்த இளம் தலைவர், பாஜக என்னும் பெரும் எதிரி கண் முன்னால் எழுந்​தவுடன் அதை வீழ்த்தப் புறப்​பட்டார். இப்படி மாறுவது ஒரு தனிமனிதருக்குச் சாதாரண விஷயமல்ல; உளவியல் பிரச்​சினைகளை உருவாக்கக் கூடியது. ‘இன்றைய பிரதான எதிரி பாஜக என்பதால், அதை முறியடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அணிவகுப்பை உருவாக்க வேண்டும்’ என்னும் கருத்து எழுந்த​போது, ஒரு மூத்த தோழர், “அருணன், காங்கிரஸ் எதிர்ப்​பிலேயே வந்த எனக்கெல்லாம் இதை ஏற்பது கடினம்” என்று என்னிடம் சொன்னார். தனிமனித உணர்வின் இயல்பான, நேர்மையான வெளிப்பாடு அது.
  • தோழர் யெச்சூரியும் இதை எதிர்​கொண்​டிருப்​பார். ஆனால், அதை எல்லாம் சட்டென்று தாண்டிப் புதிதாக எழுந்​துள்ள யதார்த்த நிலைமையைப் புரிந்​து​கொண்டு, அதற்கேற்ப அரசியல் வியூகம் வகுப்பதே மார்க்​சியச் செயல்முறை என்பதை உள்வாங்​கியவர் அவர்.
  • அகில இந்திய மாநாடு​களில் யெச்சூரி ஆற்றிய உரைகள் கடந்த காலம் உருவாக்கிய தனிமனித உணர்வைத் தாண்டி, அவர் சமகாலம் காட்டும் நிதர்​சனங்களை ஏற்ற மகத்தான தலைவர் என்பதைப் பறைசாற்றின. இன்று ‘இண்டியா’ எனும் எதிர்க்​கட்​சிகளின் கட்டமைப்பு ஒன்று உருவாகி, அது பாஜகவைப் பலவீனப்​படுத்​தி​யிருக்​கிறது என்றால், அதில் தோழர் யெச்சூரியின் மகத்தான பங்களிப்பு உள்ளது.

சித்தாந்தக் கலங்கரை விளக்கு:

  • இந்தியாவில் பாஜகவின் எழுச்​சியைப் போல உலகில் சோவியத் ஒன்றியம் தகர்ந்​ததும், அங்கே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி வீழ்ந்​ததும் மார்க்​சி​யர்​களாகிய எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி தந்த நிகழ்வுகள். இந்தச் சரிவைப் புரிந்​து​கொள்ளக் கட்சி முயன்றது. அவரவர் தனிப்பட்ட முறையிலும் அதற்கான ஆய்வினை மேற்கொண்​டனர்.
  • 1992இல் நடந்த கட்சியின் அகில இந்திய மாநாட்​டில், ‘சில சித்தாந்தப் பிரச்​சினைகள்’ என்னும் ஆவணத்தைத் தோழர் யெச்சூரி முன்வைத்த விதமும், தொகுப்புரை தந்த வகையும் அவர் இந்த விஷயத்தில் எவ்வளவு ஆழமாகச் சிந்தித்​திருக்​கிறார் என்பதை உணரவைத்தன. 2012இல் நடந்த அகில இந்திய மாநாடும் சித்தாந்த நிலைப்​பாடு​களைச் செழுமைப்​படுத்​தியது. அதை முன்வைத்​தவரும் அவரே.
  • தோழர்கள் இ.எம்​.எஸ்​.நம்​பூ​திரிபாட், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் போன்ற​வர்​களுக்குப் பிறகு, கட்சியின் சித்தாந்தக் கலங்கரை விளக்காக ஜொலித்​தவர். உலக அளவில் வலதுசாரிச் சக்தி​களின் கை பெரிதும் ஓங்கி நின்ற வேளையிலும், இந்தியாவில் மார்க்​சி​யத்​துக்​கும், அதன் கட்சிக்கும் ஒரு தனித்த மரியாதை இருக்​கிறது என்றால், அதன் காரணி​களில் ஒருவர் தோழர் யெச்சூரி.
  • ‘ஆமாம், நான் சீதாராம்​தான்!’ - யெச்சூரி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்​கழகத்தில் பொருளா​தாரம் படித்​தவர். ஆனால், அரசியல் பல்கலைக்​கழகத்தில் வாழ்வின் அனைத்துப் பாடங்​களையும் படித்​தவர். ஒருவருக்கு தர்க்க நியாயம் கைவரப்​பெற்றால், அவரால் எந்தத் துறையின் உண்மை​களையும் உணர முடியும்.
  • அப்படி நாட்டின் தொன்மங்களை விமர்சன நோக்கோடு படித்து, அவற்றை மார்க்​சியப் பரப்பு​ரைக்குப் பயன்படுத்​தியவர் தோழர் யெச்சூரி. அவருடைய முழுப் பெயர் சீதாராம் யெச்சூரி. பாபர் மசூதியை இடித்துக் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அவரை அழைத்​தவர்கள் “நீங்கள் சீதாராம்; ஆகவே அவசியம் வர வேண்டும்” என்றார்கள். அதற்கு அவர், “ஆமாம், நான் சீதாராம்​தான். அதனால், ராமரை வைத்து நீங்கள் நடத்துகிற பிளவுவாத அரசியல் எனக்கு நன்றாகத் தெரியும். நான் வர மாட்டேன்” என்றார்.

தமிழ் மீதான பற்று:

  • தமிழ் மீதும், தமிழர் மீதும் அலாதியான பிரியம் கொண்டிருந்​தார். அவர் பிறந்தது சென்னையில் என்பது ஒரு காரணமாக இருக்​கலாம்.
  • அத்தோடு தமிழின் வளமை, தமிழரின் தொன்மை பற்றி அவருக்கு தெளிவான ஞானம் இருந்தது. 2010இல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவர் ஆற்றிய உரை அதற்கான அழியா சாட்சியம்.
  • “தேசிய இனத்தை வரையறை செய்யும் நான்கு அவசியமான அம்சங்​களில் ஒன்றாக மொழியை நாங்கள் கருதுகிறோம். விடுதலைப் போராட்டம் நடந்து​கொண்​டிருந்த காலத்​தில், இத்தகைய உணர்வின் அடிப்​படை​யில்தான் மொழிவழி மாநிலம் என்ற முழக்​கத்தை முன்வைத்​தோம்” என்றார். “தமிழுக்குப் பழமையான மரபு உண்டு; இன்றைக்கும் பொருந்தக் கூடிய பெருமைமிகு இலக்கி​யங்​களைத் தமிழ் தன்னகத்தே கொண்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
  • தமிழ்​நாட்டின் சிறப்பு அரசியல் இயக்கங்​களின் வரலாற்றுப் பாத்திரத்தை அவர் உணர்ந்திருந்தார். “தமிழ்ச் சமூகமானது தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், தலித் மற்றும் பெண்ணுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்​களால் செழுமையடைந்த ஒன்று” என்று கச்சிதமாக எடுத்​துரைத்​தார்.
  • அதேநேரத்​தில், இன்றைய கால வேகத்தில் மனிதர்கள் ஏற்கெனவே போடப்பட்ட வட்டத்தைத் தாண்டி, பன்முகப்​பட்டு நிற்பதைத் தன்னையே உதாரண​மாகக் காட்டி விளக்​கினார். “இங்கு நின்று​கொண்​டிருக்கும் நான் தமிழ்​நாட்டில் பிறந்​தேன். என் தாய்மொழி தெலுங்கு. இந்தி மொழி பேசும் டெல்லியில் பணியாற்றுகிறேன். நாடாளு​மன்​றத்தில் மேற்கு வங்க மாநில மக்களைப் பிரதி​நி​தித்து​வப்​படுத்து​கிறேன். இப்போது உலகம் முழுவது​மிருந்து இங்கு குழுமி​யுள்ள தமிழ் மக்களிடையே உரையாற்றிக்​கொண்​டிருக்​கிறேன். இதுதான் இந்தியா.”
  • இவர்தான் தோழர் யெச்சூரி. அவரது மறைவால் உலகம் ஒரு ஞானச் சூரியனை இழந்தது. நான் எனது குருநாதரை இழந்தேன். ஒருவருடைய ஆங்கில உரையைப் பல்லா​யிரம் மக்கள் முன்பு மொழிபெயர்ப்பது உள்ளூரப் பெரும் பதற்றத்தை உருவாக்கக் கூடியது. ஆனால், தோழர் யெச்சூரியின் உரையை மொழிபெயர்ப்பது சுகமாக இருந்தது. வாக்கினிலே அவ்வளவு தெளிவு. மதுரைக்கு வரும்​போதெல்லாம் சந்திப்​பேன், தொலைபேசி​யிலாவது பேசுவேன். அடுத்து எப்போது வருவார் எனக் காத்திருப்​பேன். இனி?

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories