TNPSC Thervupettagam

சீமான் vs பெரியாரிஸ்டுகள்: பொதுவெளியில் எதற்கு இந்த பலப்பிரயோகம்?

January 23 , 2025 13 hrs 0 min 4 0

சீமான் vs பெரியாரிஸ்டுகள்: பொதுவெளியில் எதற்கு இந்த பலப்பிரயோகம்?

  • பெரி​யார் ஈ.வெ.ரா. குறித்து தவறான கருத்துகளை பேசி வருவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. இதன் ஒரு பகுதி​யாக, அவரது வீட்டை முற்றுகை​யிடும் போராட்டம் அறிவிக்​கப்​பட்​டது.
  • தந்தை பெரி​யார் திரா​விடர் கழகம், மே 17 இயக்​கம், திரா​விடர் விடு​தலைக் கழகம் உள்ளிட்ட 30-க்​கும் மேற்​பட்ட பெரி​யாரிய உணர்​வாளர்கள் கூட்​டமைப்பு மூலம் இந்த போராட்டம் அறிவிக்​கப்​பட்​டது. மறுபுறம், நாம் தமிழர் கட்சி சார்​பில் பாது​காப்​புக்காக அவரது கட்சி​யினர் சீமான் வீட்​டில் முன்​தினம் இரவு முதலே குவிந்து பாது​காப்பு கொடுத்​துள்ளனர். அவர்​களுக்கு சிக்கன் பிரி​யாணி விருந்து வழங்​கப்​பட்​டுள்​ளது.
  • காவல் துறை கண்முன்பே பெரி​யாரிய உணர்​வாளர்கள் கூடி சீமானின் உருவ பொம்​மையை எரித்து, பதாகைகளை ஏந்தி சீமானுக்கு எதிராக கோஷம் எழுப்​பி​யுள்​ளனர். ஒப்பாரி போராட்​ட​மும் நடத்​தி​யுள்​ளனர். சீமான் வீடு உள்ள பகுதி வரை அவர்களை காவல் துறை​யினர் அனும​தித்த செயல் விமர்​சனத்​துக்​குரியது.
  • இது ஒருபுறம் இருக்க, சீமான் வீட்​டில் பாது​காப்​புக்காக நின்​றிருந்த தொண்​டர்கள் - குறிப்பாக பெண்கள் - கையில் உருட்டுக் கட்டைகளுடன் நின்று, ‘யாராவது வரட்டும், அவர்களை நன்றாக கவனிக்​கிறோம்’ என்ற தொனி​யில் மிரட்​டி​யுள்​ளனர். இங்கே வருபவர்​களுக்கு ‘விருந்து’ வைக்க தயாராக இருக்​கிறோம் என்று பகிரங்​கமாக ஊடகங்​கள்​ மூலம் மிரட்​டி​யுள்​ளனர்.
  • இதுபோன்ற அடிதடிக்கு இரண்டு தரப்​பினர் தயாராவதை வேடிக்கை பார்த்​துக் கொண்​டிருப்​பது​தான் காவல் துறை​யின் கடமையா? இதுவே இப்போது நம்முன் உள்ள கேள்வி. தமிழக அரசியல் வரலாற்றில் சமூக சீர்​திருத்த இயக்​கத்தை தொடங்கி, அதன்​மூலம் பல்வேறு பிரதான கட்சிகள் உருவாக காரணமாக இருந்​தவர் பெரி​யார் ஈ.வெ.ரா. அவரது கருத்து​களை​யும், கொள்​கைகளை​யும் ஆதரிக்​கும் ஒரு தரப்பும் தொடர்ந்து இருந்தே வருகிறது.
  • அந்த கொள்​கை​களின் அடிப்​படை​யில் இயங்​கு​கிறோம் என்று​தான் திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களின் வாக்​குகளை பெற்று அரசியல் அதிகாரத்​தி​லும் இருந்து வருகின்றன. புதிதாக தொடங்​கப்​பட்ட நடிகர் விஜய்​யின் தவெக​வும் பெரி​யாரின் கொள்​கைகளை தூக்​கிப் பிடித்து​வரும் நிலை​யில், பெரி​யாருக்கு எதிராக சீமான் குரல் எழுப்பி, அவரின் கருத்துகளை கேள்விக்கு உள்ளாக்கி​ இருப்​பது தமிழக அரசி​யலில் கலகத்தை உருவாக்கி​யுள்​ளது.
  • சீமானுக்கு எதிராக 100-க்​கும் மேற்​பட்ட காவல் நிலை​யங்​களில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. நீதி​மன்​றத்​தில் உரிய ஆதாரத்தை சமர்ப்​பிக்​கிறேன் என்று அவரும் தெரி​வித்து​விட்​டார். நீதி​மன்​றத்​தில் முடிவாக வேண்டிய ஒரு விவகாரத்​துக்கு எதற்காக பொது​வெளி​யில் மக்களை அச்சுறுத்​தும் வகையில் இருதரப்​பினர் பலப்​பிரயோகம் நடத்த வேண்​டும்?
  • நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறை​யில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டாலே அனுமதி மறுக்​கும் காவல் துறை​யினர், இதுபோன்ற வன்முறை பலப்​பிரயோக காட்சிகளை தடுக்​காமல் வேடிக்கை பார்ப்பது நியாயமா? போராட்டம் அறிவித்​தவுடனே முன்னெச்​சரிக்கையாக முக்கிய நபர்களை கைது செய்​வது​தானே நடைமுறை.
  • வன்முறைக்கு எளிதில் ஆட்படக்​கூடிய இரு பிரி​வினரை நெருங்​க​விட்டு வேடிக்கை பார்ப்பது சட்​டம் - ஒழுங்கை ​காக்​கும் ​காவல் துறைக்​கும், அரசுக்​கும் அழகல்ல. ஒரு​வேளை இது​போன்ற மோதல்​கள் மூலம் மக்​கள் பிரச்​சினை​கள் ​திசை​திரும்​பினால் அது​வும் நல்​லது​தான் என்று நினைக்கிறார்​களோ?

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories