சுதந்திரத்துக்கும் பொறுப்புணர்வுக்கும் இடையிலான சமநிலை
- கருத்துச் சுதந்திரம் என்பது எதை வேண்டுமானாலும் அனுமதிக்கும் ‘தலையிடாமைச் செயல்’ அல்ல; தணிக்கையையும் பொதுவெளியில் கருத்துகள் விவாதிக்கப்படுவதற்கான தடைகளையும் விலக்குவதற்கான கோட்பாடு. இதைப் புரிந்துகொள்வது அவசியம். அண்மையில், எக்ஸ் (முன்பு டிவிட்டர்) தளத்தில் தனது அதிகாரபூர்வக் கணக்குகளிலிருந்து பதிவுகளை வெளியிடுவதை நிறுத்த பிரிட்டனைச் சேர்ந்த ஊடக நிறுவனமான ‘தி கார்டியன்’ முடிவு செய்துள்ளது.
- பிரிட்டனின் பாரம்பரிய ஊடக நிறுவனமான ‘தி கார்டியன்’ இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை மிகுந்த கவனத்துடன் வாசிக்க வேண்டும். ‘நாங்கள் நீண்ட காலமாகப் பரிசீலித்துவந்த முடிவு இது. தீவிர வலதுசாரி சதிக் கோட்பாடுகள், இனவாதக் கருத்துகள் உள்பட இந்தத் தளத்தில் அதிகமாக முன்னிறுத்தப்படும் உள்ளடக்கம் பெரும்பாலும் உளைச்சல் அளிப்பதாகவே இருந்துவந்துள்ளது.
- ‘எக்ஸ்’ நச்சுத்தன்மை வாய்ந்த ஊடகத் தளம் என்றும் அதன் உரிமையாளரான எலான் மஸ்க் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் உரையாடல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவராக இருந்துள்ளார் என்றும் நாங்கள் நீண்ட காலமாகக் கருதிவந்தோம். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் இதனை உறுதிப்படுத்துவதாகவே அமைந்தது’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது முதல் நிகழ்வு அல்ல:
- ‘தி கார்டியன்’ போன்ற ஒரு முன்னணிச் செய்தி ஊடக நிறுவனம் ‘எக்ஸ்’ தளத்திலிருந்து விலகும் முதல் நிகழ்வு இதுவல்ல என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் எக்ஸ் தளத்தின் உரிமையாளர் ஆனதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்காவைச் சேர்ந்த ‘நேஷனல் பப்ளிக் ரேடியோ (என்.பி.ஆர்)’ ஏப்ரல் 2023இல் எக்ஸ்-இலிருந்து வெளியேறியது.
- இது தொடர்பாக என்.பி.ஆர். நிறுவனத்துக்குள் இருப்பவர்களுடன் மட்டும் பகிரப்பட்ட குறிப்பு ஒன்றின் அடிப்படையில் ‘நீமேன் லேப்’ (Nieman Lab) இணைய இதழில் வெளியான செய்திக் கட்டுரை, எக்ஸ் தளத்திலிருந்து வெளியேறிய பிறகு, என்.பி.ஆர். ஊடகத்தின் பயனர்கள் வருகை ஒரு சதவீதம் மட்டுமே குறைந்திருப்பதாகக் கூறுகிறது. மஸ்க்கின் தலைமையின் கீழ் எக்ஸ் தளத்தில் தினமும் அதிக நேரம் செலவிடும் பயனர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதை விளக்கும் வகையில் ‘மாஷபில்’ (Mashable) இணைய இதழ் செப்டம்பர் 2023இல் ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டிருந்தது.
- நாம் இந்த மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து மஸ்க் முன்வைக்கும் வாதங்களைக் கட்டவிழ்த்தாக வேண்டியுள்ளது. எக்ஸ் தளத்தில் இயல்பான தன்மையாக ஆகிவிட்ட நச்சு உள்ளடக்கங்களின் காரணமாக, அதிலிருந்து விலகியிருப்பது ‘என்.பி.ஆர்’, ‘தி கார்டியன்’ போன்ற பாரம்பரிய ஊடகங்கள் மட்டும் அல்ல.
- டிஜிட்டல் தளங்களில் வெறுப்புப் பேச்சைக் கண்காணித்துத் தடுப்பதற்கான அமைப்பான ‘தி சென்டர் ஃபார் கவுன்டரிங் டிஜிட்டல் ஹேட்’ (The Center for Countering Digital Hate, (CCDH)) எக்ஸ் தளத்திலிருந்து விலகிவிட்டது. இதற்கு, “எக்ஸ் தளத்தின் சேவை நிபந்தனைகளில் நிகழவிருக்கும் மாற்றங்களால் நீதிமன்ற வழக்குகளை எங்களது லாபநோக்கற்ற நிறுவனம் எதிர்கொள்வது மிகவும் சிரமம் ஆகிவிடும்” என்பன உள்ளிட்ட காரணங்களை அது பட்டியலிட்டிருந்தது.
- புதிய நிபந்தனைகளின்படி எக்ஸ் தளம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் டெக்சாஸ் மாகாணத்தின் வடக்கு மாவட்டத்துக்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் அல்லது டெக்சாஸ் கவுன்ட்டியின் மாகாண நீதிமன்றங்களில் மட்டுமே விசாரிக்கப்படும். இதனால் விளையக்கூடிய ஆபத்தை சி.சி.டி.ஹெச்.
- அறிக்கையில் உள்ள பின்வரும் வரிகள் சுட்டிக்காட்டுகின்றன: ‘பெரும் பணக்காரரான மஸ்க் தனது தளத்தில் தன்னுடன் முரண்படுகிற யாருக்கு எதிராக வேண்டுமானாலும் வழக்குத் தொடர்ந்து அவரைத் தனக்குத் தோதான நீதிமன்றங்களில் நிறுத்திவிட முடியும். எக்ஸ் தளம் மேலும் மோசமாகிவிட்டதாலேயே நாங்கள் அதிலிருந்து விலகும் முடிவை எடுத்தோம்.’
- பாரம்பரிய ஊடகங்கள் மிகக் கடுமையான நிதி நெருக்கடியிலும், அவை பொறாமைகொள்ளத்தக்க வகையில் சமூக ஊடகத் தளங்கள் தொழில்நுட்பத்தின் துணையுடன் அனைவரையும் சென்றடையும் நிலையிலும் இருக்கும் சூழலில், இந்த மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. போலிச் செய்திகளுக்கும் சமூக ஊடகங்களின் அல்காரிதங்களுக்கும் தொடர்பிருப்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
- சமூக ஊடகத் தளங்களின் பக்கச்சார்பு கொண்ட உரிமையாளர்களால் இந்தப் போக்கு வளர்த்தெடுக்கப்படுகிறது. கருத்துச் சுதந்திரம் என்னும் பெயரில் வெறுப்பு, பொய்த் தகவல்கள், தவறான தகவல்கள், இவற்றால் விளையும் குழப்பம் ஆகியவற்றை இந்தத் தளங்கள் பரப்புகின்றன. கருத்துச் சுதந்திரத்துக்கும் பொறுப்புணர்வுக்கும் இடையிலான சமநிலையைப் பேணுவது என்னும் சிந்தனைக்கு மஸ்க்கினுடைய கதையாடலில் இடமில்லை.
ஜனநாயகமும் நம்பகமான தகவலும்:
- ஒரு வலுவான ஜனநாயகத்துக்கும் நம்பகமான தகவல் அளிக்கும் சூழலுக்கும் இடையில் இயல்பானதொரு உறவு உள்ளது. மக்கள் அறிவார்ந்த தெரிவுகளை மேற்கொள்வதில் ஊடகங்கள் ஆற்றும் பங்கு குறித்து இந்தக் கட்டுரையாளர் பிற தளங்களில் விரிவாக எழுதியுள்ளார். ஆதாரத்தின் அடிப்படையிலானதை மட்டுமே தேர்வு செய்யும் சிந்தனை, பாரம்பரிய ஊடகங்களின் மைய அம்சம் ஆகும்.
- தொழில்நுட்பங்களைத் தவறாகப் பயன்படுத்தி, ஒருவரின் விருப்பு வெறுப்புகளைத் திணிக்கும் சிந்தனை சமூக ஊடகத் தளங்களின் இயங்குவிசையாக உள்ளது. அல்காரிதங்களால் வழிநடத்தப்படும் சமூக ஊடகங்களின் குறைகளைப் பேசுவது பாரம்பரிய ஊடகங்களின் தோல்விகளை மறைப்பதற்கு அல்ல.
- தமக்குத் தோதான கருத்துகளையே மீண்டும் மீண்டும் எதிரொலிப்பது, வருவாய்க் குறைவு, களத்தில் செய்திகளைச் சேகரித்து எழுதுவதற்கு மாறாக, கருத்துகளை எழுதுவதிலேயே குறியாக இருப்பது, முக்கியமான பிரச்சினைகளில் சாதுரியமாக மெளனம் காப்பது எனப் பாரம்பரிய ஊடகங்களின் குறைபாடுகள் பலதரப்பட்டவை. இந்தச் சாதுரிய மெளனங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுபவை. அந்த வகையில் மேற்கத்திய நாடுகளின் ஊடகங்களுக்கு காஸா போர் என்றால் இந்திய ஊடகங்களுக்கு அரசமைப்புச் சட்டக்கூறு 370 நீக்கம் போன்ற விவகாரங்கள்.
- ஆனால், சமூக ஊடகத் தளங்களும் இதுபோன்ற சிக்கலான கேள்விகளுக்கு விடை அளிப்பதில்லை. மாறாக, அவை பிரச்சினைகளை ஒன்றாகக் கலந்து, சமரசத்துக்கும் காயங்கள் ஆறுவதற்குமான வெளியை அகற்றி, அதிகார மையங்களின் கரங்கள் வலுவடைவதை நியாயப்படுத்துகின்றன. இதனால், மக்களுக்கு அதிகாரமளித்தல் தடைபடுகிறது. சமூக ஊடகங்களின் தீவிரப் பரவலினால் பாரம்பரிய ஊடகங்களும் தாக்கம்பெற்றுவருகின்றன என்பதும் உண்மை.
ஆய்வு முடிவுகள்:
- ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சைன்சஸ் போ (Sciences Po) பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைப் பேராசிரியர் ஜூலியா கேஜ் (Julia Cagé) அவருடைய குழுவினருடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வு ஒன்று, எக்ஸ் தளம் எவ்வாறு மையநீரோட்ட ஊடகங்களின் செயல்திட்டத்தைத் தீர்மானிக்கிறது என்பதையும், இதழாளர்கள் எக்ஸ் தளத்தைச் சார்ந்திருப்பது அவர்கள் தமது செய்திகளின் மூலமாக அளிக்கும் தகவல்கள் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவற்றுக்கு மாறானவையாக திரிக்கப்படக்கூடும் என்பதையும் அம்பலப்படுத்தியது.
- பாரம்பரிய ஊடகங்கள் கடைப்பிடிக்கும் வணிக மாதிரி, சமூக ஊடகத் தளங்களின் நலன் சார்ந்த விளைவுகள் ஆகியவை குறித்த ஐயங்களை இந்த ஆய்வு எழுப்புகிறது. எக்ஸ் போன்ற தளங்கள் இல்லாவிட்டால் மக்கள் இன்னும் சரியான தகவல்களைப் பெற முடியுமா என்றும் இதழியலுக்கும் ஜனநாயகத்துக்கும் சமூக ஊடகங்கள் ஊறு விளைவிக்கின்றனவா என்றும் கேள்விகளை எழுப்புகிறது.
- கருத்துச் சுதந்திரத்துக்கான முக்கியக் குறியீடு என்று சமூக ஊடகங்களை வலுப்படுத்துவதன் மூலம் ‘பதில் கூறும் பொறுப்பு’ என்கிற நம் பொதுவெளியின் முக்கியமான அம்சத்தை வலுவிழக்கச்செய்கிறோம். எக்ஸ் தளத்திலிருந்து விலகும் ‘தி கார்டியனி’ன் முடிவு, பதில்கூறும் பொறுப்பினை மீட்டெடுப்பதற்காக எடுத்துவைக்கப்பட்ட முதல் அடியாக இருக்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 11 – 2024)