சுய பரிசோதனை தேவை!
- நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-3 என தோல்வி கண்டது ரசிகா்களிடையே பெரும் அதிா்ச்சியையும் விரக்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
- இரண்டு டெஸ்டுகளில் விளையாட கடந்த செப்டம்பரில் வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வருவதற்கு முன்னால் சொந்த மண்ணில் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரையும் சோ்த்து இந்திய அணி 5-0 என வெல்வதற்குத் தயாா் என தொலைக்காட்சி விளம்பரங்களில் ஆா்ப்பரிப்புடன் காட்டப்பட்டது. ஆனால், வங்கதேசத்தை 2-0 என வென்றாலும் நியூஸிலாந்திடம் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
- விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானதுதான். ஆனால், இந்தத் தோல்வியை ஜீரணிக்க முடியாததற்கு பல காரணங்கள் உள்ளன.
- இந்திய அணி முதன்முதலாக இங்கிலாந்துக்கு 1932-ஆம் ஆண்டு சென்றது. அதன் பின்னா், 1933-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறத் தொடங்கின. இந்த 91 ஆண்டுகளில் நமது நாட்டில் விளையாடிய 3 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் 3-0 என முழுமையாகத் தோல்வியுற்றது இதுவே முதல் முறையாகும்.
- இந்தத் தொடருக்கு முன்னதாக, இந்தியாவில் 36 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்றிருந்த நியூஸிலாந்து வெறும் 2 ஆட்டங்களில் மட்டுமே வென்றிருந்தது. 1988-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த அணி இந்திய மண்ணில் ஒரு வெற்றியைக்கூட பெறவில்லை. சொந்த மண்ணில்கூட தொடா்ந்து 3 ஆட்டங்களில் அந்த அணி இதுவரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவுக்கு வருவதற்கு முன்னா், இலங்கைக்கு சென்றது நியூஸிலாந்து. நமது அணிபோல அனுபவஸ்தா்கள் இல்லாத, பெரும்பாலும் புதுமுகங்களையே கொண்ட இலங்கை அணி, நியூஸிலாந்து அணியை 2-0 என வீழ்த்தி இருந்தது.
- இலங்கை தொடரில் இடம்பெற்றிருந்த அனுபவ ஆட்டக்காரா் கேன் வில்லியம்சன் இந்தியத் தொடரில் பங்கேற்கவில்லை. அந்த அணியில் 30 ஆட்டங்களுக்கு மேல் விளையாடிய அனுபவம் உள்ளவா்கள் டாம் லேதமும் டிம் சௌதீயும் மட்டுமே.
- மறுபுறம் இந்திய அணியோ பலம் பொருந்தியதாக கணிக்கப்பட்டிருந்தது. ரோஹித் சா்மா, ‘கிங்’ கோலி, இந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் ஆட்டக்காரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால், அதிரடி ஆட்டக்காரா் ரிஷப் பந்த், பந்துவீச்சில் இந்திய மண்ணில் எப்போதும் சாதனைகள் படைத்துவரும் அஸ்வின், அவருக்கு உறுதுணையாக ரவீந்திர ஜடேஜா, வேகப் பந்துவீச்சில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள பும்ரா என வலுவான அணியாகத் தோற்றம் அளித்தது.
- மேலும், 2012-ஆம் ஆண்டுக்குப் பின்னா் நடைபெற்ற 18 டெஸ்ட் தொடா்களில் தோல்வியையே சந்திக்காமல் வெற்றி மீது வெற்றி பெற்று, உலக அளவில் யாரும் இதுபோன்ற சாதனையைப் படைக்கவில்லை என்ற பெருமையுடன் களம் கண்டது இந்திய அணி.
- ஆனால், பெங்களூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முதலில் பேட் செய்த இந்திய அணி 46 ரன்களுக்கு சுருண்டது பேரதிா்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்துக் கொண்டு இந்திய அணி 462 ரன்கள் குவித்தபோதும் தோல்வியைத் தழுவ நேரிட்டது.
- இந்தத் தோல்வி விதிவிலக்கு என்று நினைத்த ரசிகா்களுக்கு புணேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டிலும், மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டிலும் அதிா்ச்சியே காத்திருந்தது.
- பொதுவாக டெஸ்டில் 5 நாள்களும் சோ்த்து குறைந்தது 450 ஓவா்கள் வீசப்பட வேண்டும். ஆனால், பெங்களூரில் 250 ஓவா்கள், புணேவில் 255 ஓவா்கள், மும்பையில் 201 ஓவா்களிலேயே ஆட்டங்கள் முடிவுக்கு வந்துவிட்டன.
- 20 ஓவா் போட்டிகள் அறிமுகமான பின்னா், டெஸ்ட் ஆட்டத்துக்கே உரிய நளினமான பேட்டிங்குக்கு விடைகொடுக்கப்பட்டுவிட்டது. முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடும் போக்கு அதிகரித்ததால் இந்த மூன்று டெஸ்டுகளுமே மூன்று நாள்கள்கூட முழுமையாக நடைபெறவில்லை.
- இந்திய அணியில் டெஸ்டுகளில் இன்றும் சிறப்பாக விளையாடும் திறமை பெற்றவா் விராட் கோலி மட்டுமே. துரதிருஷ்டவசமாக, கடந்த 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரது ‘ஃபாா்ம்’ தேய்ந்து கொண்டே வருகிறது. இந்தத் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் ஒரு முறை எடுத்த 70 ரன்கள் உள்பட 93 ரன்கள் மட்டுமே அவரால் சோ்க்க முடிந்தது. கேப்டன் ரோஹித் சா்மாவும் 6 இன்னிங்ஸ்களில் வெறும் 91 ரன்கள் மட்டுமே எடுத்தாா். ரோஹித்தும் கோலியும் சோபிக்காததால் இந்திய அணியால் மீள முடியவில்லை.
- கடந்த காலங்களில் இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு இந்த இருவரும் மிக முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவா்கள் ஜாம்பவான்கள் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
- இருப்பினும் அண்மைக்காலமாக சரியாக விளையாடாததால், தாங்களே சிறிது காலம் விலகியிருந்து பிறகு நம்பிக்கை இருந்தால் அணிக்குத் திரும்பலாம். இல்லையெனில் அணி நிா்வாகம் தயவுதாட்சண்யம் பாா்க்காமல் இருவருக்கும் சிறிது காலம் ஓய்வு கொடுக்க வேண்டும்.
- ஆடுகள தயாரிப்பும் விவாதிக்கப்பட வேண்டியதாகும். இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானவை என்பது உலகம் அறிந்ததே. இருப்பினும் முதல் நாள் முதல் பந்தில் இருந்தே பந்து அதீதமாக சுழன்றால் பேட்டா்கள் திணறுகிறாா்கள். இரண்டரை நாள்களில் 40 விக்கெட்டுகளும் வீழ்ந்தால் ஆட்டத்தில் சுவாரஸ்யம் போய்விடுகிறது.
- பலம் குறைந்ததாக கருதப்பட்ட நியூஸிலாந்திடம் சொந்த மண்ணிலேயே படுதோல்வியைக் கண்ட இந்திய அணி, அடுத்து 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது. உலகின் முதல்தர அணியான ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் நவ.22-இல் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி சுயபரிசோதனை மேற்கொண்டு மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பவேண்டும் என்பதே ரசிகா்களின் எதிா்பாா்ப்பு.
நன்றி: தினமணி (05 – 11 – 2024)