சுற்றுலா வாகனங்களுக்கான கட்டுப்பாடு அவசியமானதே!
- ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஊட்டிக்கு வார நாட்களில் 6.000 வாகனங்கள். வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். அதேபோன்று கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4,000 மற்றும் வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும் என்ற உத்தரவு வரவேற்கத்தக்கது.
- மலைவாசஸ்தலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல். வன உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சீர்கேடுகளை தடுக்கும் நோக்கத்துடன் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டிய உத்தரவாகும். இந்த உத்தரவால் வியாபாரிகள் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக குறைபட்டுக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது. இருந்தாலும் சுற்றுச்சூழல் நலன்கருதி அனைவரும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடப்பது அவசியம்.
- உள்ளூர் வாகனங்கள் மற்றும் விவசாயப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதும் நல்ல விஷயம். இ-பாஸ் வழங்கும் நடைமுறையில் மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற உத்தரவும் சுற்றுச்சூழல் மீதான அக்கறையுடன் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவாகவே அமைந்துள்ளது.
- இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி, ஜூன் 30-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கப் போகும் இடைக்கால உத்தரவாக இருந்தாலும், இந்த உத்தரவுக்கு சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், உள்ளூர் மக்கள், அதிகாரிகள் என அனைவரும் முழுமனதுடன் ஒத்துழைப்பு வழங்குவது தலையாய கடமையாகும். ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த நிரந்தரமான தீர்வை எட்டுவது அவசியம்.
- இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்டுள்ள சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்களின் பரிந்துரைகள் நீதிமன்றத்துக்கு கிடைக்க இன்னும் 9 மாதங்கள் வரை தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்தவுடன் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளுக்கும் அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிப்பது அவசியம்.
- நீதிமன்றத்தில் வழக்கு விவாதத்தின்போது. ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியின் அடிவாரத்திலேயே வாகனங்களை நிறுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த பிரத்யேக வாகனங்களின் மூலம் பயணிகள் மலைக்கு மேல் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதுபோன்று சுற்றுலா வாகனங்களை மலைக்கு கீழேயே தடுத்து நிறுத்தும்போது, சுற்றுச்சூழல் பாதிப்பு பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது.
- சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காக பிரத்யேக வாகனங்களை மட்டுமே அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேலேயும் மீண்டும் திரும்பி வருவதற்கும் இயக்கும்போது.சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது முற்றிலும் தடுக்கப்படும். சுற்றுலா பயணிகளும் கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி பாட்டில்களை வீசி எறிவது. அசுத்தம் செய்வது போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளும் தடுக்கப்படும்.
- எனவே, இதுபோன்ற முயற்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் திட்டமிட்டு நீதிமன்றத்துக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும்போது சுற்றுலா பயணிகள் மேலாண்மையில் தமிழகம் சிறந்து விளங்க முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 03 – 2025)