TNPSC Thervupettagam

செம்மூக்கு ஆள்காட்டி குடும்பத்தின் கதை

February 1 , 2025 6 hrs 0 min 8 0

செம்மூக்கு ஆள்காட்டி குடும்பத்தின் கதை

  • கோடை விடுமுறையில் என் எட்டு வயது மகளுடன் ஒரு மலைப்பகுதியில் பறவை நோக்கும் பயிற்சிக்குச் சென்றிருந்தேன். அங்குப் பல வகைப் பறவைகளை வழிகாட்டுதலுடன் கண்டுவிட்டு, சென்னை வந்து வீட்டிற்கு அருகில் பறவைகளைத் தேட ஆரம்பித்தேன். வீட்டிற்கு அருகில் புற்கள் மண்டி இருக்கும் காலி நிலத்தில் சிறு பறவைகள் இரண்டைக் கண்டேன்.
  • அவை கறுப்புப் புள்ளிகள் கொண்ட பொன்னிறத் தலையும், அதேபோல் மேல் உடலும், கழுத்தில் கறுப்புப் பட்டையும், வெள்ளைக் கீழுடலும், வெளுத்த கால்களும் கொண்டிருந்தன. இரண்டும் புல்தரையில் தம் அலகால் கொத்திக் கொண்டிருந்தன.
  • சில நொடிகளுக்கு மட்டுமே அவற்றைக் காண முடிந்தது. புற்களின் நடுவே சட்டென்று மறைந்துவிட்டன. அவற்றை என்ன பறவை என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவற்றின் அடர்ந்த இளம் சிறகுகளும் பயந்த சுபாவமும் அவை குஞ்சுகள் என்பது எனக்குப் புரியவே இரண்டு நாள்கள் பிடித்தன.
  • அதுவும் கூடவே இருந்த முதிர்ந்த செம்மூக்கு ஆள்காட்டியை வைத்தே அவற்றை அறிந்துகொள்ள முடிந்தது. குழந்தையுடன் பெற்றோரும் சேர்ந்து வளருவதுபோல, அக்குஞ்சுகள் இரண்டும் வளரவளரப் பறவைகள் மீதான என் ஈடுபாடும் சேர்ந்து வளர்ந்தது. தினமும் மாலையில் இப்பறவைகளை இருகண்நோக்கி மூலம் கவனித்துவந்தேன்.

பாதுகாத்த பெற்றோர்:

  • நான் முதலில் பார்த்த குஞ்சுகள், முட்டையில் இருந்து வெளிவந்து ஒரு வாரத்திற்குள் இருக்க வேண்டும். முதிர்ந்த பறவையின் கூடவே இரண்டு குஞ்சுகளும் சுற்றின. பெற்றோரின் டிட்...டிட்... சத்தத்தின்போது இரண்டும் புற்களுக்கு நடுவில் சென்று மறைந்துவிடும். பின்பு வெளியே வந்து மண்ணைக் கொத்திக்கொண்டிருக்கும். தாய்ப் பறவையும் தந்தைப் பறவையும் இவற்றைப் பாதுகாத்தன.
  • தோற்றத்தில் ஆண் பெண் வேறுபாட்டைக் கண்டுகொள்ள இயலாததால், எந்த வேலையை எது செய்கிறது என்று பிரித்தறிய இயலவில்லை. பெற்றோரில் ஒன்று குஞ்சுகளுடன் இருக்க, மற்றொன்று தள்ளி நின்று காவல் காத்தது. இந்தப் பருவத்தில், குஞ்சுகள் அவற்றின் உணவைத் தாமே தேடிக்கொள்ள, முதிர்ந்த பறவைகளின் வேலை அவற்றைப் பாதுகாப்பதாக இருந்தது.
  • ஓர் அடி உயரத்திற்கும் குறைவான புற்கள். அதுவும் ஜூன் மாதத்தில் காய்ந்திருக்க, புற்களின் மறைவில் இருந்து குஞ்சுகள் வெளியே வந்தால் எளிதாக எதிரியின் கண்களுக்கு அகப்பட்டுவிடும். காகம், நாய், கீரிப்பிள்ளை எனப் பல எதிரிகள் இப்பறவைகளுக்கு உண்டு.
  • சுற்றுவட்டாரத்தில் ஏதேனும் எதிரி உள்ளே நுழைந்தால், தள்ளி நின்று காவல் காக்கும் பெற்றோர் ஆள்காட்டிகள் டிட்..யு..டூ..இட்... டிட்..யு..டூ..இட் எனச் சத்தமிட்டுக் கொண்டே வானில் வட்டமடிக்கும். இது குஞ்சுகளுக்கும் அவற்றுடன் இருக்கும் பெரிய பறவைக்கும் எச்சரிக்கை ஒலியாக இருக்கும். குஞ்சுகள் புற்களுக்குள் மறைந்துகொள்ளும். இந்தச் சத்தத்தில் மற்ற பறவைகளும் சுதாரித்துக்கொள்ளும். அதனாலேயே இப்பறவைக்கு ஆள்காட்டி என்கிற பெயரும் வந்தது.

காணாத குஞ்சுப் பறவை:

  • ஒரு முறை குஞ்சுகளின் அருகில் நாய்கள் இரண்டு வர, பெற்றோர் பறந்து வந்து மோதுவதுபோல மிரட்டி அந்நாய்களை விரட்டியடித்தன. குஞ்சுகளுடன் மைனாக்கள் உலாவின, ஆனால் கானாங்கோழியை அண்ட விடாமல் பெற்றோர் துரத்தின. தம் குஞ்சுகளுக்கு ஆள்காட்டி பறவைகள் எடுக்கும் சிரத்தையைப் பார்த்தபோது இயற்கையைப் புதியதொரு கோணத்தில் காணமுடிந்தது.
  • நாளுக்கு நாள் அக்குஞ்சுகளின் உருவமும் உயரமும் மாறிவந்தன. தலையிலும், மேலுடலிலும் இருந்த பொன்னிறம், பழுப்பு நிறமாக மாற ஆரம்பித்தது. அலகில் இளஞ்சிவப்பு தெரிய ஆரம்பித்தது. கழுத்தில் இருக்கும் கறுப்புப் பட்டை கீழுடல்வரை நீண்டது. அவை பெரிய பறவைகளின் அரவணைப்பில் இருந்து சிறிது தூரம் சென்றன. ஆனாலும் பெற்றோர் மேற்பார்வை பார்த்துவந்தன. இரண்டு வாரங்களுக்குப் பின் குஞ்சுகளில் ஒன்றைக் காணவில்லை. ஒன்றை மட்டும் பெற்றோர் தொடர்ந்து பாதுகாத்து வந்தன.

அவதானிப்பும் புத்தகமும்:

  • ஒவ்வொரு நாளும் பறவை நோக்குதலுக்குப் பின்னர் சாலிம் அலியின் புத்தகத்தை (The Book of Indian Birds) எடுத்துப் பார்க்கும்போது, களத்தில் அவதானித்ததும் புத்தகத்தில் இருந்ததும் ஒத்துப்போவதைக் கண்டு அளவிலா வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். மற்ற பறவைகளின் தோற்றத்தில் உள்ள வேறுபாடு, அவற்றின் வாழ்விடம், உணவு, கூடு எனக் கவனித்து மேலும்மேலும் அறியத் தூண்டியது. எத்தனை நாள்தான் ஆள்காட்டி பறவைகள் இந்தக் காவல் போராட்டத்தைத் தொடர வேண்டும் எனக் காத்திருக்க, நான்காவது வாரத்தில்
  • இளம்பறவை பறந்ததைக் கண்டேன். சிறிது தூரம் இளம் பறவை பறக்க, கூட இருந்த முதிர்ந்த பறவையும் பறந்தது. சில வேளை இளம் பறவை மட்டும் பறந்துவிட்டு, திரும்ப அதே இடத்திற்கு வந்து சேர்ந்தது. சில நொடிகள்தான் பறந்தது. மற்ற நேரம் நின்றுகொண்டும் மண்ணைக் கொத்திக்கொண்டும் இருந்தது. பெற்றோரில் ஒன்று பல வேளைகளில் தென்படவில்லை. சில நாள் கழித்து மூன்றும் ஒன்றாகப் பறந்து வந்ததைக் கண்டேன்.

திரும்ப வந்த பறவை:

  • மூன்று மாதங்கள் கடந்த பின்னும் ஆள்காட்டி குடும்பத்தை அதே இடத்தில் கண்டேன். இளம் பறவையின் கண்ணிற்குக் கீழ் இருக்கும் சிவப்புச் சதை முழுவதுமாக வளர்ந்திருக்கவில்லை. ஆனால், தனியாக உலாவியது. தனியாகப் பறந்தது. மிகச் சமீபத்தில் முதிர்ந்த பறவைகள் அவற்றின் வழக்கமான இடத்திலிருந்து பறந்துவந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல, அவற்றைப் பின்தொடர்ந்தேன்.
  • அதுவும் அதிகம் பயன்படுத்தப்படாத புல் படர்ந்த சிறு காலி நிலம். அங்கு இரண்டு முதிர் பறவைகளையும் இரண்டு இளம்பறவைகளையும் கண்டேன். இரண்டாவது குஞ்சை மற்றோர் இடத்தில் வைத்து அந்தப் பெற்றோர் வளர்த்திருக்கலாம். நான்கும் ஒரே இடத்தில் இருந்தன. நான் கவனிப்பதைப் பார்த்ததும் ஒன்று டிட்..யு..டூ..இட் என்று தன் குடும்பத்தை எச்சரித்தது. மனதில் ஒருவித நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் கடந்து சென்றேன்.
  • அப்பறவைகள் இயல்பாகச் செய்துமுடித்த இந்த வளர்ப்புப் பணி ஆச்சரியம் அளித்தது. அதே வேளை, உள்ளுக்குள் பல கேள்விகளை எழுப்பியது. நாம் பல நேரம் இயற்கையை உணராமல் நம்மை மட்டுமே முன்னிறுத்தி நம்மைச் சுற்றியுள்ள இடங்களை அழிக்கிறோம். வீட்டைச் சுற்றி இருக்கும் குற்றுச்செடிகள், புழுக்கள், பூச்சிகள், பாம்புகள் ஆகியவற்றை நமக்குத் தீங்கிழைப்பவையாகப் பார்க்கிறோம்.
  • ஒழுங்குபடுத்துவதாக நினைத்து இவற்றை அழிக்கிறோம். இது எப்படிச் சரியாகும்? காலி நிலங்களிலும், காய்ந்துபோன புதர்களிலும்கூட பல்லுயிர்கள் வாழ்கின்றன. இந்த உயிரினங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவையும் நமது சுற்றுப்புறத்தின் ஓர் அங்கம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் அவற்றையும், அவை வாழும் இடங்களையும் பாதுகாக்கவும் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவும் தூண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories