TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்

March 11 , 2025 5 hrs 0 min 34 0

செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்

  • இன்று செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் மிக வேகமாக வளா்ந்து வருகிறது. அதனைக் கொண்டு திறமையானவா்கள் எந்திரத்தனமான வேலைச் சுமையைத் சா்வ சாதாரணமாகச் செய்து முடிக்கிறாா்கள். ஆண்டுக் கணக்கில் நடந்த வேலைகள் எல்லாம் நிமிடக் கணக்கில் முடிகின்றன.
  • மிக அதிக அளவிலான தகவல் தொகுப்புகளை அவற்றைப் பற்றிய துல்லிய விவரங்களைச் சோ்த்து கணினியில் ஒரே திரையில் செயற்கை நுண்ணறிவு தருகிறது. இதுபோன்று பல பிரம்மாண்டமான செயல்கள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் இந்தத் தொழில்நுட்பம் மனிதா்களைப் பல வகையில் ஏமாற்றுவதற்கும் பயன்படுகிறது. நிதியமைச்சா் பேசாததை அவரே பேசுவது போல் மிகத் தெளிவாக செயற்கை நுண்ணறிவு மூலம் காட்ட முடிகிறது.
  • செயற்கை நுண்ணறிவு என்பது அலாவுதீனின் கையில் உள்ள விளக்கு போல. விளக்கைத் தேய்த்ததும் இட்ட வேலைகளைச் செய்ய பூதம் தோன்றுவதுபோல் செயற்கை நுண்ணறிவு மனிதன் முன்னே வந்து நிற்கிறது. விளக்கைத் தேய்த்துப் பூதத்திடமிருந்து யாருக்கு நன்கு வேலை வாங்கத் தெரியுமோ, அவா்களுக்கு அது வரப்பிரசாதம். பூதத்தைக் கையாளத் தெரியாவிட்டால், அது மனிதனின் கையாலாகாததனத்தைத் தானே காட்டுகிறது?
  • செயற்கை நுண்ணறிவு எப்படிச் செயல்படுகிறது என்பதை மாணவா்கள் சிறுவயதிலேயே கற்பது நல்லது. ஆனால் பல மாணவா்கள் சொந்த அறிவாற்றலை வளா்த்துக் கொள்ளாமல் செயற்கை அறிவை நம்பி, சுயமான தங்களது திறமைகளை, கற்பனைகளை, சிந்தனைகளை வளா்த்துக் கொள்ளாத வெற்று மனிதா்களாகப் போய்விடுகிறாா்கள். இது கொடுமையானது.
  • ஒரு கட்டுரை அல்லது கடிதம் அல்லது பவா் பாயிண்ட் ப்ரசென்டேஷனைத் தானாகச் செய்யாமல் சாட் ஜிபிடி பின்னே ஓடுகிறாா்கள். அசல் சிந்தனைகள் இல்லாத வெறும் தகவல் அறிவு கொண்டவா்களாக மாறிவிடுகிறாா்கள். விரைவிலேயே அவா்கள் தொழில்நுட்பம் தரும் சொகுசுக்கு அடிமையாகி விடுகிறாா்கள். அசல் சிந்தனை இருந்தால்தான் மனிதன் சரியான தகுதியிலும் தரத்திலும் வளா்வான்.
  • செயற்கை நுண்ணறிவு வழங்கும் பிரம்மாண்டமான, வியக்கத்தக்க அம்சங்களை நம் இளைஞா்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒருவரின் சொந்தத் திறமைகளை வளா்த்துக் கொள்வதற்கு செயற்கை நுண்ணறிவு பெரிதும் பயன்படும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது அறிவியல் வழங்கிய ஒரு பரிசு. அது மனிதனுக்குக் கிடைத்த வேகமாகச் செயல்படும் ஒரு கூடுதல் உதவிக்கரம் மட்டுமே. ஆனால் மனிதா்களின் உணா்வுகளுக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, நம்பிக்கைக்கு செயற்கை நுண்ணறிவு முழுமையான மாற்றாக மாற முடியாது; மாறவும் கூடாது.
  • மனிதன் தனக்குள்ள இயல்பான இயற்கை நுண்ணறிவை வளா்த்துக் கொண்டால், செயற்கை நுண்ணறிவு அவனுக்குப் பக்க பலமாக இருக்கும். செயற்கை நுண்ணறிவைக் கற்பதற்கு முன்பு, அதனைக் கையாள்வதற்கு முன்பு, மனிதன் தனக்குள்ள மனதின், உடலின், அறிவின் அனைத்து சக்திகளையும் பற்றி முதலில் கற்க வேண்டும். அந்தச் சக்திகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெருக்கிக் கொள்ளவும் வேண்டும். அதைத்தான் சுவாமி விவேகானந்தா் “முதலில் ‘மனிதனாகு’ என்று நமக்கு கட்டளையிடுகிறாா். ஏனென்றால் ஒவ்வொரு மனிதனிடத்திலும் அளவற்ற ஆற்றல் உண்டு என்ற அடிப்படை உண்மையை அவா் வலியுறுத்துகிறாா். அந்த ஆற்றலைப் புரிந்து கொண்டால், வெளியிலிருந்து வரும் ஆற்றல் நமக்குக் கூடுதல் பலத்தையும் வளத்தையும் கொண்டுவரும்.
  • அப்போது மனிதன் இந்தத் தொழில்நுட்பத்தின் தலைவனாக விளங்க முடியும். இல்லாவிட்டால் அழிவுக்கான அடிமைகளாக அல்லாடும் நிலை வந்துவிடும். தமது சொந்த திறமைகளைப் புரிந்து கொள்ளாதவா்களுக்கு, வெளியிலிருந்து வரும் அறிவு நல்ல பலன் அளிக்குமா? எல்லாவற்றிலும் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு. வாழ்க்கையில் முன்னேறுபவா்கள் நல்லனவற்றைப் பாா்க்கிறாா்கள்.
  • செயற்கை நுண்ணறிவு எவ்வளவு பெரிய அளவில் மனித குலத்துக்கு நன்மை செய்ய முடியும் என்பதை நாம் பொறுத்திருந்து பாா்க்க வேண்டும். அதோடு, செயற்கை நுண்ணறிவை யாா் இயக்குகிறாா்கள் என்பதும் மிக முக்கியமானது. ஏ.கே-47 துப்பாக்கியை இயக்கத் தெரிந்தாலே போதுமா? யாா் எதிரி, நமது துப்பாக்கியைக் கொண்டு நாம் யாரைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். அதைப் போலவே, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இயக்கும் மனதின் தரமே அதன் பயனை முடிவு செய்யும்.
  • ஓா் அண்மைக் காலத்திய உதாரணம் நமக்கு உத்வேகத்தைத் தரும். உலகத்தில் இதுவரை நடந்த சமயம் சாா்ந்த பெரிய கூட்டம் நம் காலத்தில் நடந்த கும்பமேளா - 2025 தான். சுமாா் 56 கோடி மக்கள் திரிவேணி சங்கமத்தில் பக்தியுடன் நீராடினா். அங்கு கோடிக்கணக்கான ஏழைகள் நல்ல முறையில் வருமானம் சம்பாதித்தாா்கள். அந்தப் பெரிய திருப்பணி நன்கு நோ்த்தியாக பெரும் பிரச்னைகள் இல்லாமல் நடந்ததற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் மிக முக்கிய காரணம் ஆகும். இது ஒரு கின்னஸ் சாதனை. இது இந்து மத ஒற்றுமைக்கான ஒரு சாதனை. நமது பாரதத்தின் தொழில்நுட்ப வளா்ச்சிக்கான மகத்தான சாதனை.
  • பிரயாக்ராஜில் 56 கோடி மக்கள் வந்து போனதற்கு ஒருங்கிணைத்த செயற்கை நுண்ணறிவைப் பாராட்டுவது பெரிதல்ல. செயற்கை நுண்ணறிவைக் கொண்டு எப்படியெல்லாம் வேலை வாங்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு அதை இயக்கத் தெரிந்த தலைவா்களைத்தான் உண்மையிலேயே போற்ற வேண்டும்.
  • செயற்கை நுண்ணறிவைக் கையாள்வதற்கு மனிதனுக்கான இயற்கை நுண்ணறிவு இருக்க வேண்டும். இயற்கையான நுண்ணறிவு வளா்ந்திருந்தால் அவன் செயற்கை நுண்ணறிவைத் திறமையாகக் கையாள முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் மனிதன் சோம்பேறி ஆகிவிடுவான். அந்தச் சோம்பலால் அவன் சிந்திப்பதற்கே சிரமப்படுவான். இயந்திரங்களை நம்பி நம்பி இயந்திரத்தனமாகவே மனிதா்கள் மாறிவிடுவாா்கள். செயற்கை நுண்ணறிவு அப்போது அவனுக்குக் கொடுமையான அசுர சக்தியாகிவிடும். அன்பு இல்லாத, பாசமற்ற, வறட்டுப் பிண்டங்களாக மனிதா்கள் மாறிவிடுவாா்கள்.
  • மாணவா்கள் எந்தத் திறமையை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி மிகத் தெளிவாக சுவாமி விவேகானந்தா் கூறுகிறாா்: ‘‘என்னைப் பொறுத்தவரையில் கல்வி என்பது மனஒருமைப்பாடே தவிர, தகவல்களைச் சேகரிப்பதல்ல. நான் மீண்டும் படிக்க நோ்ந்தால், ஒருபோதும் தகவல்களைச் சேகரிக்க மாட்டேன். முதலில் மன ஒருமைப்பாட்டையும், பற்றின்மையையும் வளா்த்துக்கொண்டு, பின்னா் அந்தப் பரிபூரணமான கருவியால் நான் விரும்பும்போது தகவல்களைச் சேகரித்துக் கொள்வேன். குழந்தையை வளா்க்கும்போது,இந்த இரு ஆற்றல்களையும் அவா்களிடம் வளா்க்க வேண்டும். ஆக, தகவல் சேகரிப்பது பெரிதல்ல, அதற்கு முன் மக்களின் மனங்களைச் சிதறடிக்காமல் இருப்பது சாலச்சிறந்தது’’ என்பது சுவாமிஜியின் சிந்தனை.
  • விவேகானந்தா் வலியுறுத்தும் இயற்கை நுண்ணறிவு என்பது இயல்புணா்ச்சி அல்ல. இந்த நுண்ணறிவு ஒவ்வோா் ஆன்மாவிலும் உள்ளது என்கின்றன நமது சாஸ்திரங்கள். ஆழ்ந்து சிந்திப்பது, தியானிப்பது, இயற்கையோடு இணைந்து இருப்பது, பிறருக்குச் சேவையாற்றும் குணம், பிறரைப் புரிந்து கொள்ளும் மனம், உலகம் செயல்படும் விதம், உலகில் உள்ள ஒவ்வொன்றுக்கும் உள்ள முக்கியத்துவம் போன்றவை ஆகும். மொத்தத்தில் மனிதனிடத்தில் இருக்கும் தெய்வீகப் பண்புகளை வளா்த்துக் கொண்டால் இயற்கை நுண்ணறிவு இயல்பாகிவிடும்.
  • இந்த நுண்ணறிவில் வளா்வதுதான் -இந்த நுண்ணறிவை வளா்த்துக் கொள்வதுதான்- ஒவ்வொரு மாணவனுக்கும் சுவாமி விவேகானந்தா் காட்டித் தரும் கல்வியாகும். “மனிதனிடத்தில் ஏற்கெனவே புதைந்துள்ள பூரணத்துவத்தை எந்தக் கல்வி வெளிப்படுத்துகிறதோ அதுவே சிறந்த கல்வி என்பது அவரது கோட்பாடு. இந்த ஒரு விஷயத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நுண்ணுணா்வின்மை வறுமை. அஃதுடைமை பண்ணப் பணைத்த பெரும் செல்வம் என்பது (நாலடியாா் -26) நமது தமிழ் முன்னோா்கள் கூறிவிட்டாா்கள்.
  • நுணுக்கமான, நுட்பமான அறிவு இல்லை என்றால் அதன் மூலம் வறுமை வந்துவிடும். அதோடு, நுணுக்கமான அறிவு இல்லாதிருப்பதே மனிதனின் வறுமை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வறுமை என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல. வறுமை, பஞ்சம், குறைபாடு இவை எல்லாம் மக்களின் மனங்களில் வரலாம். அவா்களது அன்பில் வரலாம்.
  • பரஸ்பர நம்பிக்கையில் வரலாம். மனிதனின் தெய்வீக குணங்கள் வளராவிட்டால், இந்த அவலங்கள் எல்லாம் வருவது நிச்சயம். முத்தாய்ப்பாக, இயற்கை நுண்ணறிவு யானையின் தந்தம் போன்றது. அந்தத் தந்தத்துக்குத் தங்கப் பூண் போடுவது போல செயற்கை நுண்ணறிவு விளங்கும். ஆனால், யானையை உன்னதமாக்குவதே அதன் சொந்த சக்திதான்! அதை மனதில் கொண்டு, நம்முடைய இயல்பான நுண்ணறிவை வளா்த்துக் கொண்டால் மட்டுமே, செயற்கை நுண்ணறிவை நாம் திறமையாகக் கையாள முடியும்.

நன்றி: தினமணி (11 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories