சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?
- 2024 ஆம் ஆண்டில் நாட்டின் ஆகப் பெரிய சாதனைகளில் ஒன்றை யாருமே பொறுப்பேற்றுக் கொள்ள முன்வராததால் ஒருவராலும் கண்டுகொள்ளப்படாமல் கழிந்துபோய்விட்டது.
- ஆனாலும், விடாது கருப்பு என்பதைப் போல அதுவே ஆக்ரோஷமாக முட்டி மோதிப் போராடி விரைவில் செஞ்சுரி அடிக்கும்போது அனைவரும் அதைக் கொண்டாடித்தான் தீர வேண்டியிருக்கும், வேறு வழியே இல்லை, விதி!
- ஆமாம், வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத அளவில் அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே சென்றுகொண்டிருக்கிறது. ஒரு டாலரின் விலை அல்லது மதிப்பு 85 ரூபாய் வரை சென்றுவிட்ட நிலையில் ஜன. 3-ல் ரூ. 85 ரூபாய் 79 காசுகள்!
- இதே நிலைமை நீடித்தால், அமெரிக்காவில் வரும் 20 ஆம் தேதி புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில் (வெளிநாட்டு வணிகத்தில் நிறைய அதிரடிகளை, புதிய வரி விகிதங்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால்), தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும்போதேகூட டாலர் மதிப்பு 100 ரூபாயைத் தொட நேரிடலாம்.
- 2024 டிசம்பர் மாதத்தில் ஒரு டாலரின் மதிப்பு ரூ. 85 ஆக உயர்ந்தது - ரூபாயின் மதிப்பு குறைந்தது (வரலாற்றுச் சாதனை!). இன்னமும் டாலரின் மதிப்பு குறைவதாகத் தெரியவில்லை.
- இத்தனைக்கும் இந்த உயர்வைத் தடுத்து நிறுத்த இந்திய ரிசர்வ் வங்கியே நேரடியாக, அதிரடியாக அன்னியச் செலாவணிச் சந்தைக் களத்தில் இறங்கி வேலைகளையெல்லாமும் பார்க்கிறது.
- வெளிநாட்டு முதலீடுகளின் தீவிர வெளியேற்றம் மற்றும் டாலர் மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, இந்திய ரூபாய் மதிப்பை வலுப்படுத்த (மேலும் குறைந்துவிடாமல் தடுக்க) கடந்த அக்டோபர் மாதத்தில் 4,450 கோடி டாலர் ( ரூ. 3.82 லட்சம் கோடி!) தொகையை செலாவணி சந்தையில் இறக்கியதாக இந்திய ரிசர்வ் வங்கியே மாதாந்திர அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது. இதற்காகப் பணச் சந்தையில் (ஸ்பாட் மார்க்கெட்) 9.3 பில்லியன் டாலர்களையும் முன்பேர வர்த்தகத்தில் 35.2 பில்லியன் டாலர்களையும் ரிசர்வ் வங்கி விற்றிருக்கிறது (எனவேதான், 1,090 கோடி டாலர் வெளிநாட்டு முதலீடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டபோதிலும் அக்டோபரில் ரூபாயின் மதிப்பு டாலருக்கு 30 காசுகள் மட்டுமே குறைந்து ரூ. 84.06-ல் நிலைத்திருந்தது - ரிசர்வ் வங்கி தலையிட்டிருக்காவிட்டால் அக்டோபரிலேயேகூட சதம் அடிக்கப்பட்டிருக்கலாம்!).
- அக்டோபரிலும் நவம்பரிலும் நிறுவனரீதியிலான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முறையே ரூ. 1.14 லட்சம் கோடி, ரூ. 45,974 கோடியைத் திரும்ப எடுத்துக்கொண்டுவிட்டனர் (நம் நாட்டிலிருந்து வெளியேறிவிட்டது). இதனால் பணத்தின் மதிப்பு குறைந்து டாலருக்கான தேவை அதிகரித்துவிட்டது.
- தொடர்ந்து, என்னென்னவோ முயற்சிகள் செய்தபோதிலும் குறையாமல் ஆண்டு இறுதியிலிருந்து ரூ. 86-க்கு அருகிலேயே ஊசலாடிக் கொண்டிருக்கிறது மதிப்பு.
- இவ்வாறு ரூபாயின் மதிப்பு கண்டமேனிக்குக் குறைந்துகொண்டே செல்வதற்குப் பல காரணங்கள் – பங்குச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகளின் வெளியேற்றம், பங்குகளின் விலை வீழ்ச்சி, பெரு நிறுவனங்களின் மோசமான நிலை, பன்னாட்டு சந்தை நிலவரங்கள், ரஷியா – உக்ரைன் போர், அமெரிக்கா – சீனா பகைச் சூழல், இன்னமும் அறிஞர்களோ ஆய்வாளர்களோ அல்லாத சாதாரண மக்களுக்குப் புரியவராத வேறு பல சந்தைச் சிக்கல்கள்.
- எப்படியாவது டாலரின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதில் கறாராக இருக்கும் டொனால்ட் டிரம்ப், ஏற்கெனவே, (இந்தியாவும் இடம்பெற்றுள்ள) பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தங்களுக்குள் செலாவணியை உருவாக்கிக் கொள்வது பற்றியெல்லாம் கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார் – அதிபர் பொறுப்பேற்றவுடன் அடுத்தடுத்து என்ன செய்யக் காத்திருக்கிறாரோ? அமெரிக்க நிதிக் கொள்கையில் எத்தகைய புதிய மாற்றங்களை எல்லாம் கொண்டுவரப் போகிறாரோ?
- எது எப்படியிருந்தாலும் புரிந்தாலும் புரியாவிட்டாலும் எல்லாருக்கும் தெரிய வந்துள்ள ரிசல்ட் ஒன்றுதான் – ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்துகொண்டே இருக்கிறது.
- 2014 ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, ஒரு டாலருக்கான ரூபாய் மதிப்பு – ரூ. 60.95. மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் கடந்த பத்தாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து தற்போது ரூ. 86-க்குப் பக்கத்தில்!
- ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி 2022, அக்டோபரில் ஒருமுறை நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், இந்திய ரூபாய் மதிப்பு குறையவில்லை, உள்ளபடியே அமெரிக்க டாலர் மதிப்புதான் உயருகிறது என்றோர் கருத்தைத் தெரிவித்தார் (அப்போது ரூபாய் மதிப்பு 8 சதவிகிதம் குறைந்தது). நிதி அமைச்சரின் அந்தக் கருத்து அப்போது பெரியளவில் ‘மீம்’களுக்கான விஷயமாக மாறி சமூக ஊடகங்களில் வலம் வந்தது; இன்னமும்கூட வந்துகொண்டிருக்கிறது.
- [கடந்த ஏப்ரலில் (மக்களவைத் தேர்தலுக்கு முன்) ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழாவில், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் சக்திகாந்த தாஸ் முன்னிலையில் பேசியபோது, இந்திய ரூபாயை உலகளாவியதாக மாற்றப் பத்தாண்டு உத்தியொன்றை உருவாக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்; உருவாக்கிவிட்டார்களா என்று தெரியவில்லை].
- ஆனால், இப்போது இந்திய ரூபாயில் 3.82 லட்சம் கோடியை, 4,450 கோடி டாலரை விற்றும் ரூபாய் மதிப்பு சரிவிலிருந்து மீள முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது நம் நாடு.
- “பொருளாதாரத்தைப் பற்றியோ சரிந்துவரும் ரூபாய் மதிப்பு பற்றியோ மத்திய அரசு கவலைப்படாமல் இருப்பது கண்டு நாடு அதிருப்தி அடைந்துள்ளது. மத்திய அரசு தனது பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வது பற்றி மட்டுமே கவலைப்படுகிறது.
- “ரூபாய் மதிப்பு கடந்த மூன்று மாதங்களாக வேகமாகச் சரிந்துவருகிறது. ஆனால், அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பை வலுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- “இவ்வாறு ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தால் மற்ற நாடுகள் இந்தியாவின் பலவீனத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கும்.
- “இதுபோன்றதொரு பொருளாதார நெருக்கடியைச் சந்திப்போம் என்று நாடு எப்போதும் கற்பனை செய்திருக்காது. ஆனால், இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்தில் நாட்டின் தலைமை எந்தத் திசையில் செல்வது என்பதே தெரியாமல் இருந்தால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.
- “மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி குறையும் என்றும் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்றும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அரசு அறிவித்து வந்துள்ளது. ஆனால், எதுவும் நடக்கவில்லை”.
- இவ்வாறு கடுமையாகக் குறை கூறியிருப்பவர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியோ காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ அல்லர்.
- 2013, ஆகஸ்ட் மாதத்தில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசைக் குறைகூறி குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடி ஆற்றிய உரைதான் இது!
- பிரதமர் மன்மோகன் சிங், இந்திய ரூபாய் இரண்டுமே மதிப்பிழந்துவிட்டனர் என்றும் குறிப்பிட்டிருந்தார் நரேந்திர மோடி.
- நரேந்திர மோடி ஆட்சி அமைந்ததும் டாலரின் விலை ரூ. 40 முதல் 45 ஆகக் குறையும் (அப்போது ரூ. 68.80) என்றொரு கணிப்புகூட ஊடகங்களில் வலம்வந்தது (அல்லது வலம்வரச் செய்யப்பட்டது). மத்தியில் ஆட்சியமைத்தால் டாலர் மதிப்பை ரூ. 40-க்குக் கொண்டுவருவோம் என்று நரேந்திர மோடியும் பேசியிருக்கிறார் – அப்போது டாலர் மதிப்பு ரூ. 56!
- வரலாற்றின் நகைமுரண், காலம் மாறி பாரதிய ஜனதா கட்சியே மத்தியில் ஆட்சி அமைத்து, இரு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், மோடியின் பேச்சு மோடிக்கே பொருந்திப் போவதாக மாறியிருக்கிறது.
- எப்படியோ, ‘டாலரின் மதிப்பு உயர்ந்துகொண்டே’ போவது பற்றி எல்லா தரப்பினரையுமே பேசவைத்து விடும்போல 2025!
நன்றி: தினமணி (05 – 01 – 2025)