TNPSC Thervupettagam

சொல்லப் போனால்... இல்லாத தரவுகளும் செல்லாத சாதனைகளும்

February 23 , 2025 1 hrs 0 min 11 0

சொல்லப் போனால்... இல்லாத தரவுகளும் செல்லாத சாதனைகளும்

  • தரவுகள் எதுவும் இல்லை. (வயநாடு நிலச்சரிவு பற்றிய கேள்விக்கான பதிலில்)  பேரழிவுகளின் உயிரிழப்புகள், காயங்கள், குறைபாடுகள் பற்றி மத்திய அரசு எந்த விவரங்களும் வைத்துக்கொள்வதில்லை.
  • கேஒய்சி சரிபார்ப்புகளைத் தொடர்ந்து - குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிற - நீக்கப்பட்ட குடும்ப அட்டைகள் எவ்வளவு?
  • தரவுகள் எதுவும் இல்லை. இந்தச் சரிபார்ப்பை மாநில அரசுகள்தான் பார்க்கின்றன. அவர்கள்தான் பொறுப்பு.
  • நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தற்கொலை செய்துகொண்ட பயிற்சி மருத்துவர்கள் எத்தனை பேர்?
  • தரவுகள் எதுவும் இல்லை. மத்திய அரசு இத்தகைய கணக்குகளைப் பராமரிப்பதில்லை.
  • கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவ, மாணவியர் இழிவாக நடத்தப்பட்ட நிகழ்வுகள் எத்தனை?
  • தரவுகள் எதுவும் இல்லை. இதுபற்றிய விவரங்களை மத்திய அரசு  பராமரிப்பதில்லை.
  • மத்திய அமைப்புகள் நடத்துகிற தேர்வுகளில் இதுவரை வினாத் தாள் கசிந்த சம்பவங்கள் எத்தனை?
  • தரவுகள் எதுவும் இல்லை. குறிப்பான சம்பவங்கள் பற்றி ஆவணங்கள் எதுவும் பராமரிக்கப்படுவதில்லை.
  • 2019 முதல் நாட்டில் எத்தனை பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? அவர்கள் மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன?
  • தரவுகள் எதுவும் இல்லை. காவல்துறை, சட்ட - ஒழுங்கு எல்லாமும் மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
  • நாட்டில் தகவல்பெறும் உரிமைச் செயற்பாட்டாளர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது தாக்கப்பட்டுள்ளனர்?
  • தரவுகள் எதுவும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் இத்தகைய சிலர் தாக்கப்பட்டதாகவும் கொல்லப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், இதுபற்றிய தகவல்கள் எதுவும் மத்திய அரசால் பராமரிக்கப்படுவதில்லை.
  • இந்தியாவில் செயலிகள்வழி கடன் தரும் வணிகம் புரியும் சீன நிறுவனங்கள் எத்தனை? என்ன செய்கிறார்கள்?
  • 53 நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால், அவர்களுடைய வணிகச் செயற்பாடுகள் பற்றி அரசிடம் எத்தகைய தரவுகளும் இல்லை.
  • (ராஜஸ்தானில் கோட்டாவில் மாணவர் தற்கொலையையொட்டி) நாடு முழுவதும் தற்கொலை செய்துகொண்ட மாணவ, மாணவியர் எத்தனை பேர்?
  • தரவுகள் எதுவும் இல்லை. மாணவ, மாணவியர் தற்கொலை பற்றிய விவரங்கள் எதையும் கல்வித் துறை அமைச்சகம் பராமரிக்கவில்லை.
  • கழிவறைத் தொட்டிகள், பாதைகளைச் சுத்தம் செய்யும்போது உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளர்கள் எத்தனை பேர்?
  • தரவுகள் எதுவும் இல்லை. இதுபற்றிய தகவல்கள் எதையும் மத்திய அரசு, சமூக நீதி அமைச்சகம், பராமரிக்கவில்லை.
  • நாட்டில் ‘வெறுப்புணர்வு காரணமாக நடந்த குற்றங்கள்’ எத்தனை?
  • தரவுகள் எதுவும் இல்லை. இத்தகைய தகவல்கள் எதையும் தேசிய குற்ற ஆவணப் பதிவகம் பராமரிக்கவில்லை. ஏனெனில், இவை இந்திய தண்டனைச் சட்டத்திலும் (இப்போது பெயர் மாற்றப்பட்டுவிட்டது) வரையறுக்கப்படவில்லை.
  • அப்படியே, இன்னும் கொஞ்சம் பின்னோக்கி கரோனா காலத்துக்குச் சென்றால்...
  • கரோனா காலத்தில் வேலை இழந்த, உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
  • தரவுகள் எதுவும் இல்லை. இதுபோல பட்டியல் எதுவும் பராமரிக்கப்படவில்லை.
  • கரோனா காலத்தில் நாடு முழுவதும் மருத்துவமனைகள், மருத்துவக் கழிவுகள் கையாளும் பணிகளில் ஈடுபட்டிருந்த நேரத்தில் உயிரிழந்த துப்புரவுப் பணியாளர்கள் எத்தனை பேர்?
  • தரவுகள் எதுவும் இல்லை. மத்திய அரசால் இத்தகைய தகவல்கள் எதுவும் பராமரிக்கப்படுவதில்லை.
  • கரோனா காலத்தில் உயிரிழந்த மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் எண்ணிக்கை எவ்வளவு?
  • தரவுகள் எதுவும் இல்லை. உயிரிழந்த மருத்துவர்கள், பணியாளர்கள், காவல்துறையினர் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.
  • ம். இவை மட்டுமல்ல;
  • நாடு முழுவதும் மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் இருக்கின்றன?
  • கும்பல்களால் கொலை செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை எவ்வளவு? எனப் பல கேள்விகளுக்கான பதில்களும் இந்த மாதிரிதான்.
  • ஒரு தொடக்கப் பள்ளியாக இருந்தால்கூட இத்தனை கேள்விகளுக்குத் தொடர்ந்தாற்போல ஒரு மாணவன், எனக்குத் தெரியாது, தெரியாது, விவரங்கள் எதுவும் இல்லை என்றே பதிலளித்துக் கொண்டிருந்தால் அந்த ஆசிரியர் என்ன மதிப்பெண் வழங்குவார்? அந்த மாணவனின் தேர்ச்சி நிலைமைதான் என்ன?
  • நல்லவேளை, இந்தக் கேள்விகள் எல்லாமே இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் அல்லது மாநிலங்களவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகள் எழுப்ப, அமைச்சர்களோ அல்லது அமைச்சர்கள் சார்பிலோ தெரிவிக்கப்பட்ட பதில்கள்தான். ஸோ, நோ டென்ஷன்!
  • அப்படியென்றால் வேறு என்னென்ன விவரங்கள்தான் அரசின் கைவசம் அப்-டு-டேட் ஆக இருக்கின்றன? யாருக்கும் தெரியாது, யாராலும் உறுதியாகக் கூற முடியாது.
  • உள்ளபடியே உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக, இந்தியா முதலிடத்தைப் பெற்று இரு ஆண்டுகளாகிவிட்டன. பல்வேறு காரணங்களால் குழந்தைப் பிறப்புகளும் குறைய, சீனா இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
  • 2022-ல் இந்தியாவின் மக்கள்தொகை 145.74 கோடி. சீனாவின் மக்கள்தொகை – 141.77 கோடி!
  • ஆனால், இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமானதாகக் கொள்ள முடியாது. ஏனெனில்
  • இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டு 13 ஆண்டுகளாகிவிட்டன. கடைசியாக 2021-ல் எடுத்திருக்க வேண்டிய கணக்கெடுப்பை இன்னும் தொடங்கவேயில்லை.
  • நாட்டில் விடுதலைக்கு முன், பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில், 1872 ஆம் ஆண்டில் முதன்முதலாக மக்கள்தொகை (சென்சஸ்) கணக்கெடுக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது கணக்கெடுப்பு 1881 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போதிருந்து தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு ஒரு முறை – ஒவ்வொரு பதிற்றாண்டின் முதல் ஆண்டில் – கணக்கெடுக்கப்பட்டு வருகிறது, எத்தனையோ இடர்கள் வந்தபோதிலும் இடைவிடாமல்.
  • விடுதலைக்குப் பின் 1951-ல் முதல் கணக்கெடுப்பு. தொடர்ந்து 6 பதிற்றாண்டுகளிலும் – 2011 வரையிலும் - மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுத் தேவையான புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு வந்துள்ளன.
  • 2021-ல் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. கரோனா பெருந்தொற்று காரணமாக நடத்தவில்லை என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறது அரசு. ஓராண்டு விடுபட நேர்ந்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் விரைந்து நடத்தியிருக்கலாம்; ஏனோ இன்னமும் அரசுத் தரப்பில் யாரும் கொஞ்சமும் அக்கறைப்படவில்லை, அசைந்தும் கொடுக்கவில்லை!
  • உலகில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தாத நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துவைத்திருக்கிறது இந்தியா - 233 நாடுகளில் இந்தியா உள்பட 44 நாடுகள் மட்டுமே கணக்கெடுப்பைக் கண்டுகொள்ளாதவை!
  • என்னங்க, பெரிய கணக்கு எடுப்பு?
  • நாட்டின் நிதியையும் வளங்களையும் பகிர்வது, கொள்கைகளை உருவாக்குவது, மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளைத் திட்டமிடுவது, நாட்டின் பொருளாதாரத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் திட்டமிடுவது, மக்களுக்கான சமூக நீதியை உறுதி செய்வது என எத்தனையோ அதிமுக்கியமான செயற்பாடுகள் அனைத்தும் இந்த மக்கள்தொகைக் கணக்கை நம்பியே இருக்கின்றன – இதை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்படவும் வேண்டும்.
  • நாட்டு மக்களின் சமூக - பொருளாதார நிலை, வாழ்க்கைச் சூழல் பற்றித் துல்லியமாகவும் நேரடியாகவும் அறிந்துகொள்ள இருக்கும் ஒரே வழி – மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மட்டும்தான்.
  • 2011-க்குப் பிந்தைய பதிற்றாண்டிலும் கடந்த சில ஆண்டுகளிலும் நாட்டில் மிகப் பெரிய மாற்றங்கள் – சாதகமாகவும் பாதகமாகவும் முனைப்பாகவும் விரைவாகவும் - நிகழ்ந்திருக்கின்றன. லட்சக்கணக்கான மக்கள் மாநிலங்களை விட்டு மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்திருக்கின்றனர். வெறிகொண்டதாக நகர்மயம் நடந்துகொண்டிருக்கிறது.
  • [ நாட்டில் பெருந்தொகையிலான மக்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அவர்களுக்குரிய உரிமையும் பங்கும் கிடைக்கப் பெறவில்லை எனக் குறிப்பிட்டு, மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கையும் இணைந்தே எடுத்து வெளியிட வேண்டும் என காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. மத்தியிலுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு இன்னமும் இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.]
  • இத்தகைய சூழலில் பதினான்கு ஆண்டுகளுக்கு முந்தைய பழைய தரவுகளை  வைத்துக்கொண்டுதான் இன்னமும் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன; செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
  • கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதிகள், நலத் திட்டங்கள் என எதைத் தொட்டாலும் மக்கள்தொகைக் கணக்கு அவசியம். ஆனால், இன்றைக்குப் பழைய  கணக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உத்தேசமான மதிப்பீடுகளின் (Projection - புரஜக்சன்) அடிப்படையில்தான் – புரிகிற மாதிரி சொன்னால் குத்துமதிப்பாகத்தான் - எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன.
  • வரி வருமானத்தைப் பிரித்துக் கொள்வதிலிருந்து மத்திய, மாநில நிதிப் பகிர்வு வரை பல்வேறு வகையிலும் நாட்டின் அச்சான – முதுகெலும்பான - நிதித் துறை இன்னமும் பழைய நினைப்பிலேயே அல்லது பழைய கணக்கிலேயேதான் இருக்கிறது.
  • நாட்டில் இவ்வாறான எத்தகைய தரவுகளும் துல்லியமாக இல்லாமல் இருப்பதே, அல்லது யாருக்கும் கிடைத்துவிடாமல் இருப்பதேகூட ஆளும் அரசுக்கு வசதியான ஒன்றாக அமைந்துவிடுகிறது.
  • ஒரு சின்ன (அல்ல, பெரிய) எடுத்துக்காட்டு – இந்தியாவில் கரோனா பெருந்தொற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4.81 லட்சம் மட்டுமே என்று இந்திய அரசு சொல்கிறது. ஆனால், உலக சுகாதார நிறுவனமோ 47 லட்சம் - உலகிலேயே மிக அதிகமானோர் இறந்த நாடு என்று குறிப்பிடுகிறது, எவ்வளவு பெரிய வித்தியாசம்? – ஆனால், மேற்கோள்காட்ட ஒரு கணக்கு வழக்கும் இல்லை. அரசு சொல்வதைத்தான் அனைவரும் நம்பியாக வேண்டும்.
  • இன்னொன்று, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாட்டில் 81.35 கோடி பேர் பயன்பெறுவதாகக் கடந்த ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் ஐஸ்வர்யா பாடி தெரிவித்தார்; ஆனால், உண்மையில் தகுதியுள்ள 10 கோடி பேர் விடுபட்டிருப்பதாக உணவு உரிமை இயக்க வழக்குரைஞர்கள் குறிப்பிடுகின்றனர் – எல்லாம் கணக்கெடுப்பு இல்லாத – தரவுகள் இல்லாததன் கைமேற்பலன்!
  • எவ்வளவோ மாறிவிட்ட நாட்டின் தற்போதைய சமூக -  பொருளாதார நிலையில் உள்ளபடியே வறுமைக் கோட்டை எவ்வாறு வரையறுப்பது? எங்கிருந்து வரையறுப்பது? எவ்வளவு பேர் வறுமைக்கோட்டுக்கு கீழேயும் மேலேயும் இருக்கிறார்கள்? ஏழை எளியவர்கள் என்பவர்கள் யார் யார்? நடுத்தர வகுப்பினர் எல்லாம் யார் யார்? இவற்றுக்கான இன்றைய அடிப்படை என்ன?
  • சர்வம் குழப்ப மயம்!
  • ஆக, தரவுகள் இல்லை, மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் இல்லை. எனவே, மக்கள் மனங்குளிரும் வகையில் ஆளும் அரசு என்ன வேண்டுமானாலும் அள்ளிவிடலாம். இத்தனை கோடி பேருக்குக் குடிநீர் கிடைக்கச் செய்துவிட்டோம், இத்தனை கோடி பேருக்கு இன்னின்ன வசதிகள் செய்யப்பட்டு விட்டன, இத்தனை கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது... இத்தனை கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுவிட்டார்கள்... நாடே தொழில்மயமாகிவிட்டது... எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களால் பசி என்பதே இல்லை... மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்… பாலும் தேனும் பெருகியோடுகிறது... விரைவில் உலகின் நாலாவது பொருளாதாரமாகப் போகிறது இந்தியா... இத்தனை டிரில்லியன் இந்தியா, வல்லரசு இந்தியா!
  • இன்னமும் இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
  • தரவுகள்? ஊஹூம்!
  • உள்ளபடியே, அன்றாட வாழ்க்கையைக் கழிப்பதென்பது எத்தனை கடினமானதாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும் ஒரு சவரன் தங்கம் வாங்குவதென்பதே (டாலர் விலை நமக்கு எதற்கு?) எந்த அளவுக்குக் கனவாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும் சாதாரண குடிமக்களால் மட்டுமே எளிதில் உணர முடியும்!
  • ஆனாலும் தரவுகள் இல்லாமல் நாடே தத்தளித்தாலும் இப்போது நாள்தோறும் வெளியிடப்படும் ஒரே ஒரு புள்ளிவிவரம் – தரவு மட்டும் மக்களை அதிசயப்படச் செய்துகொண்டிருக்கிறது.
  • மகா கும்பமேளாவில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் ‘துல்லியமாக’ வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது – பிப். 20 ஆம் தேதி வரையிலும் பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை – 53.03 கோடி!
  • இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத, நாட்டின் மக்கள்தொகையே 145 கோடிதான். ஆனால், இதுவரை கும்பமேளாவில் நீராடியவர்கள் 53 கோடி பேர் என்றால் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் வந்து குளித்திருக்கிறார்கள் என்றாகிறது, அடேங்கப்பா!
  • இந்தத் தரவுகளை எவ்வாறு சேகரிக்கிறார்கள் என்கிற நுட்பத்தை நம் புள்ளியியல் வல்லுநர்கள் தெரிந்துகொள்வது சிறப்பு, எதிர்காலத்தில் எல்லாருக்கும் உதவியாக இருக்கும்.

ஏதோ ஒரு நினைவு

  • நம் ஊர்களில் இருக்கிற சிறு மளிகைக் கடைகளில்கூட எதையும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள். உண்மையிலேயே இல்லை என்றாலும்கூட வேறு ஏதோவொன்றைக் கூறி இருக்கிறது என்பார்கள், என்னவோ அப்படியொரு நம்பிக்கை. நாம இப்படி நாடாளுமன்றத்திலேயே எப்பப் பார்த்தாலும் இல்லை, இல்லை என்று உச்சரித்துக் கொண்டிருக்கிறோமே, ஓகேவா?

நன்றி: தினமணி (23 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories