- தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிதாகக் கட்சி தொடங்கியுள்ள திரைப்பட நடிகர் விஜய்யைக் கடந்த சில நாள்களுக்கு முன் ‘பொலிடிகல் ஸ்ட்ரேடஜிஸ்ட்’ [அரசியல் உத்தியாளர், உத்தி வகுப்பாளர், தேர்தல் வியூக வகுப்பாளர், அரசியல் தந்திரி, கொஞ்சம் லெவலை மாற்றினால் தேர்தல் / அரசியல் ஆலோசகர், கூகுள் பாஷையில் அரசியல் மூலோபாயவாதி!] பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார்.
- இந்த மாதிரியான சந்திப்புகள் பற்றியெல்லாம் - அவரவருக்கு இருக்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் காரணமாக - மக்கள் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் கடந்துபோனாலும் ஊடகங்கள் (சமூக-ங்களும்தான்) அப்படியெல்லாம் சும்மா விட்டுவிடுவதில்லை. இவர்கள் இருவருமாகச் சேர்ந்து எதிர்காலத்தில் என்னென்ன செய்யப் போகிறார்கள்; செய்வார்கள் என்று அலசி ஆராய்ந்து, கழுவிக் காயப் போட்டு விடுகிறார்கள். வெளியே விவாதிப்பவர்கள் பேசுகிறவற்றில் பல விஷயங்கள் அவர்கள் இருவருக்குமேகூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
- ஒரு காலத்தில் மக்களிடமிருந்து தோன்றி மக்களோடு மக்களாக வளர்ந்து தேர்தல்களின்போது மக்களைச் சந்தித்த அரசியல் கட்சிகளுக்கு இப்படியெல்லாம் யாரும் தேவைப்பட்டதில்லை. அரசியல் கட்சிகளில் ஒவ்வோர் ஊரிலும் தேர்தலையும் தேர்தல் பிரசாரத்தையும் மக்களையும் எதிர்கொள்வதற்கென்றே சில உள்ளூர்த் தலைவர்கள் இருப்பார்கள். அவர்களே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள்.
- வாக்காளர் பட்டியலில் தொடங்கி, சரிபார்ப்பு, வாக்களிப்பு வரையிலும் கவனித்து, கண்காணித்துக் கொள்வதற்கென்றே கொஞ்சம் கட்சிக்காரர்களும் இருப்பார்கள். பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள்தான் இந்த வேலையைப் பொறுப்பெடுத்துக் கொள்வார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த அணியில் இருக்கிறதோ, அதற்கு அதுவே கூடுதல் பலமாகக் கருதப்பட்டதெல்லாம்கூட உண்டு. இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
- காமராஜர், அண்ணா காலங்கள் எல்லாம் ஒருவிதம். தமிழ்நாட்டில் எல்லா ஊர்களையும் காமராஜருக்குத் தெரியும். அந்தக் காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் அல்லது பகுதியிலும் அவருக்குத் தெரிந்த ஒருவர் இருப்பார்; பெயர் சொல்லி விசாரிப்பார் என்பார்கள். கருணாநிதியும் அப்படித்தான்.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எல்லாம் வேறு பாணி. திரையுலகில் இருந்து வந்தவர்கள் என்றாலும் மக்களுடனான நெருக்கத்தைத் தங்களுக்கேற்றார் போல உருவாக்கிக்கொண்டார்கள்.
- இவர்களுக்கு எல்லாம் தேர்தலுக்கான உத்திகளை வகுத்துக் கொடுக்க, அவரவர் கட்சியிலேயே மக்களை நன்கு அறிந்த அடுத்தகட்டத் தலைவர்கள் இருந்தார்கள். அந்தத் தலைவர்களுக்கேகூட அத்தகைய நண்பர்களும் இருந்தார்கள். எனவே, அவர்களே அதைப் பற்றியெல்லாம் யோசித்தார்கள். முடிவெடுத்தார்கள். அறிவித்தார்கள்.
- அதிமுகவில் ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப்பயணத்தை கே.ஏ. செங்கோட்டையன் போல யாராலும் திட்டமிட முடியாது என்பார்கள்; உண்மையுங்கூட. சில நேரங்களில் தள்ளியிருந்தாலும்கூட தேர்தல் காலத்தில் செங்கோட்டையனைத் தோட்டத்திலிருந்து ஜெயலலிதா அழைத்துவிடுவார். இதேபோலதான், திமுகவில் கே.என். நேருவைப் போல ஒரு மாநாட்டையோ, தேர்தல் பிரசார பயணங்களையோ யாராலும் நடத்த முடியாது என்பார்கள். இவற்றுக்காக இருவருமே அவர்களுடைய தலைவர்களால் வெளிப்படையாகவே பாராட்டப்பட்டும் இருக்கிறார்கள்.
- தேர்தலுக்கான முழக்கங்களை, வாக்குறுதிகளை, தேர்தல் அறிக்கைகளைக் கட்சியின் அடுத்தடுத்த கட்டத் தலைவர்களைக் கொண்ட குழுக்களே வகுத்தன. வழிநடத்தின. சுவரொட்டிகளை அச்சிட்டன, பிரசாரங்களைத் திட்டமிட்டன, கூட்டங்களை நடத்தின, வெற்றி தோல்விகளையும் எதிர்கொண்டன. அந்த அளவுக்குத் திறமையான தலைவர்கள் இருந்தார்கள், அணிகளும் இருந்தன. கூடவே கட்சிகளுக்குத் தன்னம்பிக்கையும் இருந்தது.
- இப்போது அரசியல் கட்சிகளில் அத்தனை வேலைகளுக்குமே ஆள்கள் தேவைப்படுகிறார்கள். சுவரொட்டிகள் ஒட்டுவதில் தொடங்கி, கொடி கட்டுவது, மேடை அமைப்பது, மக்களைப் பணம் கொடுத்து அழைத்து வருவது என எல்லாவற்றுக்குமே ஆள்கள் தேவைப்படுகின்றனர். காசு இல்லாமல் எதுவுமே நடைபெறுவதில்லை. எந்தத் தொண்டரும் எதையும் சும்மா செய்ய முன்வருவதில்லை. பொதுக்கூட்டங்களுக்கேகூட கட்சிகள் பணத்தைக் கரைத்துவிட வேண்டியிருக்கிறது.
- இவை ஒரு பக்கம் என்றால், கட்சிக்கும் தலைவர்களுக்குமே யோசனைகள் சொல்லவும் பிரசாரங்களை, கூட்டங்களைத் திட்டமிடவும் செயற்படுத்தவும் கூலிக்கு, வாடகைக்கு அல்லது குத்தகைக்கு ஆள்கள் தேவைப்படுகிறார்கள்; அவர்களுக்குக் கோடிகளில் பணம் கொடுத்து, உத்திகள் என்ற பெயரில் அவர்கள் சொல்கிறவற்றை எல்லாம் கேட்கிறார்கள், இடுகிற வேலைகளை எல்லாம் செய்கிறார்கள் இன்றைய தலைவர்கள்!
- 2004 மக்களவைத் தேர்தலின்போது - அனேகமாக நாடு தழுவிய அளவில் இதுதான் பெரியளவில் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியாக இருக்க வேண்டும் - ஒரு விளம்பர நிறுவனத்தின் உதவியுடன் (அன்றைய மதிப்பில்) கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் செலவில் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற முழக்கத்தை, வரியைத் திருப்பித் திருப்பி பிரசார உத்தியாக வகுத்து விளம்பரப்படுத்தினர் பாரதிய ஜனதாவும் பிரதமராக இருந்த வாஜபேயியும்; ஆனால், தேர்தலில் இந்த விளம்பரம் வெற்றியைத் தரவில்லை. மக்களுக்குக் கேட்கவே கசந்துபோய் எதிர்மறையான விளைவை ஏற்படுத்திவிட்டது.
- எனினும், இன்றைக்கு இந்தியாவில் இதுபோல கட்டணம் பெற்றுக்கொண்டு – அதாவது ‘கூலிக்கு’ அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனைகள் கூறுகிற, திட்டமிட்டுத் தருகிற ஏழு, எட்டுப் பெரு நிறுவனங்கள் இருக்கின்றன.
- பாரதிய ஜனதா கட்சி, ஆம் ஆத்மி, தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கான உத்திகளை வகுத்துக் கொடுத்துப் பணியாற்றியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். காங்கிரஸ், பாரதிய ஜனதா, சிரோமணி அகாலிதளம், தெலுங்குதேசம் போன்ற கட்சிகளுக்குப் பணியாற்றியிருக்கிறார் சுகேல் பிரதாப் சிங். இவர்களைப் போல இன்னும் சிலர் இருக்கின்றனர்.
- கடந்த சில ஆண்டுகளாக எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆலோசனை கூறும் வாய்ப்பு பிரசாந்த் கிஷோருக்கு அமையவில்லை. தொடர்ந்து, அவரே கடந்த ஆண்டில் சொந்த மாநிலமான பிகாரில் தனக்கென அரசியல் கட்சியொன்றையும் – ஜன் சுராஜ் – தொடங்கியிருக்கிறார் (வெற்றிக்கு யோசனை சொல்பவரின் கட்சி எந்த அளவுக்கு வெற்றி பெறப் போகிறது எனத் தெரியவில்லை!).
- இவற்றுக்கு இடையேதான் விஜய்யைச் சென்று பிரசாந்த் கிஷோர் சந்தித்திருக்கிறார். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இவர்கள் விவாதித்தார்களாம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்தபடி விஜய்யை அழைத்து விழா நடத்திப் பின்னர், விஜய் கட்சியிலேயே இணைந்துவிட்ட ஆதவ் அர்ஜுனாவும் உடனிருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இலக்கு என்னவோ, 2026 சட்டப்பேரவைத் தேர்தலாகத்தான் இருக்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் தங்களுடைய கட்சி எங்கே பலமாக இருக்கிறது, எங்கே பலவீனமாக இருக்கிறது என்பதையேகூட இந்த மாதிரி அரசியல் தந்திரிகள் சொல்லிதான் நம்முடைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. என்கிறபோது, மக்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதை எல்லாம் யார் போய் சொல்லுவார்கள்? இவர்களுக்கு எப்படித் தெரியப் போகிறது?
- இந்த பிரசார – அரசியல் உத்தி வகுப்பாளர்கள் அல்லது பொதுக்கூட்ட / மாநாடுகளுக்கான ஈவன்ட் மேனேஜர்கள் என்னதான் செய்கிறார்கள்?
- தேர்தல் காலத்தில் மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகள் தர வேண்டும்? எத்தகைய வாக்குறுதிகள் ‘கிளிக்’காகும்? எந்தெந்த ஊர்களில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும்? எப்போது நடத்த வேண்டும்? இந்த ஊர்களில் என்னென்ன பேச வேண்டும்? மேடைக்கு எப்போது வர வேண்டும்? எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும்? எல்லாவற்றையும் கட்சித் தலைவர்களுக்கு டிக்டேட் செய்கிறார்கள். தலைவர்களே இவற்றையெல்லாம் அப்படி அப்படியே கேட்டு நடந்துகொள்வதால் தொண்டர்களும்கூட புகைந்துகொண்டே அவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டியவர்களாகிறார்கள்.
- தொண்டர்களை அரவணைப்பதில் தொடங்கி மாலை, துண்டுகளை வழங்குவது வரை, மக்களைத் தேடிச் சென்று உரையாடுவதிலிருந்து அவர்களுடன் செல்பி எடுத்துக்கொள்வது வரை எல்லாமுமே ஏறத்தாழ திரைப்படத்தைப் போலவேதான்; திட்டமிட்டு நடத்தப்படுபவையே – எவரிதிங் ஸ்க்ரிப்டட்!
- ஒட்டுமொத்த நிகழ்வுகளும் திரைப்பட ஷூட்டிங் மாதிரிதான் என்றாலும் இங்கே கட் கட் என்று கூற முடியாது; ரீ டேக் எடுக்க முடியாது, எடுத்து மீண்டும் எடிட்டிங்கில் இணைத்துக் கொள்ள முடியாது.
- விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற கட்சி மாநாட்டையோ, கடந்த தேர்தலின்போது திமுக தலைவரான முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சில பிரசார நிகழ்ச்சிகளையோ முழுவதுமாக ஒருசேர இப்போது மீண்டும் பார்த்தாலே தலைவர்கள் எவ்வாறு இயக்கப்படுகிறார்கள் என்பது எளிதில் விளங்கிவிடும்.
- அப்படியென்றால், இவர்களுடைய செயல்பாடுகள் எல்லாவற்றையும் என்னவென்று எடுத்துக்கொள்வது? அத்தனையும் நடிப்பா, கோபால்? என்று சரோஜா தேவி மாதிரி இழுக்கத்தான் வேண்டும்!
- பாவம், தொண்டர்கள் எல்லாரும் தலைவர்களை நம்பிக்கொண்டிருக்க, இப்போதைய டிரெண்டில், பெரும்பாலான கட்சித் தலைவர்களோ இந்த மாதிரியான கூலி ஆலோசகர்களையும் அரசியல் மூலோபாயவாதிகளையும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் (கூலி என்றதும் குறைச்சலாக நினைத்துவிடக் கூடாது, எல்லாமும் ரூ. 200 கோடி, 300 கோடி ரேஞ்சில்தான் - ஒரு படத்துக்கான நடிகர் விஜய்யின் சம்பளம்?).
- சுற்றிவளைக்காமல் சினிமா பாணியிலேயே ஸ்டோரியோட ஒன்லைன் மட்டும் சொல்லலாம் என்றால், ரொம்ப சிம்பிள், மக்களை எப்படித் திட்டமிட்டு நம்ப வைத்து அல்லது ஏமாற்றி வாக்குகளை – அதாவது வெற்றியைப் பெறுவது? ம். மக்களை ஏமாற்றப் போவதில் என்ன பெரிய அரசியல் உத்தி?
- குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சுற்றி, குறிப்பிட்ட தலைவரைச் சுற்றி, உண்மை பற்றி மக்கள் ஒருபோதும், ஒருவகையிலும் உணர்ந்துகொள்ளவோ, அறிந்துகொள்ளவோ முடியாத விதத்தில் பிரமாண்டமான ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இதற்காக அச்சு, காட்சி, சமூக என சர்வ ஊடகங்களும் பயன்படுத்தப்படுகின்றன. எல்லாமும் ஊதிப் பெருக்கப்படுகிறது. மக்களுடைய மனமும் மதியும் மயக்கப்படுகின்றன (அவ்வளவும் பணத்தை வைத்துதான்!).
- இவற்றையெல்லாம் நம்பி எப்படியாவது, மக்களைக் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துவிட வேண்டும் என்பது மட்டுமே ஒற்றை இலக்கு!
- கையிலிருக்கும் முதலைப் போட்டு ஏதோவொரு வணிகம் தொடங்குபவர்கள் பொருளை எப்படியெல்லாம் விற்கலாம், வியாபாரத்தைப் பெருக்கலாம், தொழிலை வளர்க்கலாம் என்பதற்காக இப்படியானவர்களை, ஏஜெண்ட்களை அணுகுவார்கள்; அணுகத்தான் வேண்டியிருக்கும். மக்களுடன் தொடர்பு அற்றவர்களுக்குத்தானே மக்களைத் தொடர்புகொள்ள ஆள்கள் தேவைப்படுவார்கள். ஆனால், இப்போது அரசியல் கட்சிகளுக்கும் தேவைப்படுகிறார்கள்.
- கிடக்கட்டும், இப்படியெல்லாம் திட்டமிட்டுச் செயற்படுத்தினாலும்கூட தேர்தலில் வெற்றி பெற முடியாமல் மரண அடி வாங்கி அரசியல் கட்சிகள் தோற்றுப் போகின்றனவே, எப்படி? சூப்பர் ஸ்டாரை வைத்துப் படமெடுத்து அட்டர் பிளாப் தருவதைப் போல.
- கட்சி தொடங்கி ஓராண்டில் மக்களைச் சந்திப்பதற்காக அனேகமாக நான்கு முறை மட்டுமே வெளியே வந்திருக்கிறார் நடிகர் விஜய். ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க, தக்க ஆலோசகர்கள் அமையப் பெற்றதும், படம் பிடிக்காமலேயே நிறைய ஷூட்டிங்குகளைப் பார்க்கலாம். தவிர, இன்னும் எந்தெந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் யார் யாருடைய இயக்கத்தில் நடிக்க, ஸாரி, செயல்படப் போகிறார்களோ?
- பாவம், அந்தக் காலத் தலைவர்கள். இந்த அரசியல் தந்திரத் தொழில்நுட்பங்கள் எதுவும் தெரியாமலேயே, இப்படியாகப்பட்ட தந்திரிகளையும் அறியாமலேயே மக்களுடன் உறவாடி வாழ்ந்திருந்து அரசியல் செய்து மக்களுக்கும் இயன்றதைச் செய்துவிட்டு, நல்லவேளையாகச் செத்தும் போய்விட்டார்கள், இந்தக் கூத்துகளில் எதையும் பார்க்காமல்!
நன்றி: தினமணி (16 – 02 – 2025)