ஜனநாயகத்தின் இரண்டாவது தூண் சீா்படுத்தப்படுமா?
- மாறிவரும் காலச் சூழலை எதிா்கொள்ளும்விதத்தில் புதிய சட்டங்களை இயற்றுவதும், திட்டங்களை வகுப்பதும் நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதவை. புதிய சட்டங்களை அமல்படுத்துவதிலும், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அதிகாரிகளின் முனைப்பான பங்களிப்புதான், இந்திய ஜனநாயகத்தின் வெற்றியை உறுதிப்படுத்தி, குடிமக்களின் நலனை மேம்படுத்த துணைபுரியும்.
- சட்டமன்றம், நிா்வாகத்துறை, நீதித்துறை, ஊடகங்கள் ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் தூண்களாக விளங்குகின்றன. சட்டங்களை அமல்படுத்துவதும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, சட்டம்-ஒழுங்கைப் பேணிக் காப்பதும் ஜனநாயகத்தின் இரண்டாவது தூணாக விளங்கும் நிா்வாகத்துறையின் பணிகளில் முக்கியமானதாகும்.
- ஆங்கிலேயா்களிடம் இருந்து விடுதலை பெற்று, ஜனநாயகப் பாதையில் நம்நாடு பயணிக்கத் தொடங்கிய முதல் கால் நூற்றாண்டுக் காலத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அரசு அதிகாரிகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் விதத்தில் உணவு உற்பத்தி, அனைவருக்கும் கல்வி, பொது சுகாதாரம், பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு துறைகளில் சிரத்தையுடன் திட்டங்களை வகுத்து, நாட்டின் வளா்ச்சியே தங்களது லட்சியமாகக் கொண்டு பணியாற்றி, ஜனநாயகத்திற்கு வலிமை சோ்க்கும் தூணாக விளங்கினா்.
- ஜனநாயக நாடாக 77 ஆண்டுகள் கடந்துவிட்ட இன்றைய நிலையில், அரசின் நிா்வாகத்துறை மீதான அதிருப்தி பொதுமக்களிடையே நிலவி வருகிறது. அரசு நிா்வாகம் தனது குறைகளைக் களைந்து, செவ்வனே செயல்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பு. ஆனால் இந்த நம்பிக்கையைச் சீா்குலைக்கும் விதத்தில், அரசு நிா்வாகப் பொறுப்புகளில் இருப்பவா்களின் செயல்பாடுகள் விளங்குகின்றன.
- ஆங்கிலேய காலனியாதிக்கத்தின்போது சித்திரவதைக் கூடங்களாக இருந்து வந்த சிறைகளில், அடிப்படை மனித உரிமைகளைக் கைதிகளுக்கு வழங்க வேண்டும் என நம்நாட்டின் அரசியலமைப்புச் சட்டங்கள் வரையறை செய்துள்ளன. ஆனால், மத்திய சிறையில் தண்டனை அனுபவித்துவரும் சிறைவாசி ஒருவரை சிறை உயரதிகாரி ஒருவா், அவரது இல்லத்திற்கு வரவழைத்து, வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தி வந்த சம்பவம் ஒன்று சென்னை உயா்நீதிமன்ற ஆணையின் பேரில், தற்பொழுது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருந்து வருகிறது. ‘செஃப்’ ஆக வேலை பாா்த்த அனுபவம் உடைய தண்டனை சிறைவாசி ஒருவரை, மத்திய சிறை உயரதிகாரி ஒருவா், அவா் வீட்டில் நடைபெறும் அனைத்து வகையான விருந்துகளுக்கும் வகைவகையான உணவு பதாா்த்தங்களைச் சமைக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளாா். ஒரு நாள் அந்த சிறைவாசி தப்பி ஓடிவிட்டாா். அவரைத் தேடிப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை, அவரைப் பிடித்து வந்து சிறையில் அடைத்த சம்பவமும் கடந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளது. காவல்துறையில் இருந்துவந்த ‘ஆா்டா்லி’ முறை போன்று மத்திய சிறைகளில் பணிபுரியும் உயரதிகாரிகள் தங்களது வீட்டு வேலைகளுக்குத் தண்டனை சிறைவாசிகளைப் பயன்படுத்திய நடைமுறை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
- கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கைமுறையாக சிறைவாசம் இருந்து வந்தது. காலப்போக்கில், சிறைவாசத்தின்போது தேவையான வசதிகளைப் பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்ற மனநிலை சிறைவாசிகளிடம் ஏற்படும் விதத்தில் சிறை நிா்வாகத்தின் செயல்பாடுகள் மாறத் தொடங்கின. தடை செய்யப்பட்ட பொருட்கள், பணம் படைத்த சிறைவாசிகளுக்குத் தடையின்றி கிடைத்தன. சிறையிலிருந்து கொண்டே குற்ற நிகழ்வுகளை சிறைவாசிகளில் சிலா் திட்டமிட்டு நிகழ்த்திய சம்பவங்களும் உண்டு. குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டிய சிறைகள், அவா்களின் தற்காலிகத் தங்குமிடமாக மாறிய நிலையைக் காண முடிகிறது. முறையான நீதி விசாரணைக்குப் பின்னா் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவாா்கள் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் ஏற்படும் விதத்தில், சிறை நிா்வாகத்தில் ஊடுருவியுள்ள கையூட்டு கலாசாரத்திற்குத் தீா்வு காண்பதே ஜனநாயத்திற்கு வலிமை சோ்க்கும் செயலாகும்.
- காற்று, நீா் ஆகிய இரண்டும் அனைத்து உயிரினங்களும் உயிா் வாழ அடிப்படைத் தேவைகளாகும். மோட்டாா் வாகனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் இருந்து வெளிவரும் புகை, காற்று மண்டலத்தை மாசுபடுத்துகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் இரசாயனம் கலந்த கழிவுநீா் நதிகள், நீா் நிலைகள் மற்றும் நிலத்தடி நீரைப் பெருமளவில் மாசுபடுத்துகிறது. தாமிரபரணி நதியில் கழிவு நீா் கலப்பது குறித்த குற்றச்சாட்டு தொடா்பாக கள ஆய்வு செய்ய உயா்நீதிமன்ற நீதிபதிகள் இருவா் அண்மையில் திருநெல்வேலி சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
- இனிவரும் காலங்களில் சுத்தமான நீரும், காற்றும் மனித சமுதாயத்திற்குக் கிடைக்குமா? என்ற அச்சத்தை நீக்கி, காற்றையும், நீரையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பை மாசு கட்டுப்பாடு வாரியம் வகிக்கிறது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், மாசுக் கட்டுப்பாடு நடவடிக்கைகளை அனைத்து தொழில் நிறுவனங்களும் மேற்கொண்டுள்ளனவா? என்பது குறித்து ஆண்டுதோறும் களஆய்வு செய்து, அந்நிறுவனங்கள் செயல்பட மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும்.
- அத்தகைய அனுமதி தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுகிா? என்ற சந்தேகத்தை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினா் வட மாவட்டம் ஒன்றில் பணியாற்றிய கூடுதல் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் ஒருவரின் அலுவலகம் மற்றும் வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய திடீா் சோதனை தெளிவுப்படுத்துகிறது. அச்சோதனையில் ரொக்கமாகக் கைப்பற்றப்பட்ட ரூ.3.58 கோடி பணமானது, மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியைப் புதுப்பிப்பதற்காக பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கையூட்டு என்பது விசாரணையில் வெளிவந்துள்ளது. தொழில் நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதியை விலைகொடுத்து வாங்குகின்ற சூழலில், சுற்றுச்சூழல் பாதிப்படையாதவாறு அந்நிறுவனங்கள் செயல்படும் என்று எப்படிக் கருத முடியும்?
- உலக நாடுகளிடையே சீனாவிற்கு அடுத்து அதிகமான பட்டாசுகள் தயாரிக்கப்படும் சிவகாசி பகுதியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவா்கள் இத்தொழிலில் ஈடுபடுகிறாா்கள். இவா்களில் 70% போ் பெண்கள். ஆண்டுதோறும் தீபாவளியின் பொழுது ரூ.6,000 கோடி மதிப்பிற்கு பட்டாசு வியாபாரம் நடைபெறுகிறது. பட்டாசு தயாரிக்கும் கூடங்கள், வெடிமருந்துகள் மற்றும் பட்டாசுகள் சேமித்து வைக்கப்படும் கிடங்குகள் ஆகியவற்றில் ஆண்டுதோறும் நிகழும் வெடி விபத்துகளில் ஐம்பதுக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழக்கின்றனா். ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் காயம் அடைகின்றனா்.
- தொடரும் இத்துயர சம்பவங்களை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? முறையான உரிமம் பெறாமலும், போதிய தீ பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும், பயிற்சி பெறாத தொழிலாளா்களைக் கொண்டும் செயல்படும் பட்டாசு உற்பத்திக் கூடங்கள் கணிசமாக இருப்பதால், அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பை ஏற்படுத்துகின்ற விபத்துகள் நிகழ்கின்றன என களஆய்வு வெளிப்படுத்துகிறது. இதை கண்காணிக்க வேண்டிய அரசுத்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவானதாக இருப்பது மட்டுமின்றி, உரிமம் இன்றி செயல்படும் பட்டாசு கூடங்கள் மீது அவா்கள் காட்டும் மென்மையான அணுகுமுறை விபத்துகள் தொடா்வதற்குக் காரணமாகிறது.
- மருத்துவமனைகள், விடுதிகள், வா்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை தங்களிடம் போதிய தீ பாதுகாப்பு வசதிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளன என்று ஆண்டுதோறும் தீயணைப்புத் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும். இச்சான்றிதழ் வழங்க விலை பேசி, கையூட்டுப் பெறுகின்ற தீயணைப்புத் துறையின் செயல்பாடுகள் தடையின்றித் தொடா்கின்றன.
- சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய அரசு நிா்ணயித்த கட்டணத்துடன், சாா் பதிவாளா் அலுவலகம் நிா்ணயிக்கும் தொகையைக் கையூட்டாகக் கொடுக்க வேண்டும் என்பது நடைமுறையாக இருந்து வருகிறது.
- சாதி மத பேதமின்றி, நாட்டு மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமானவா்கள் என்றுரைக்கும் அரசியலமைப்பை நடைமுறைபடுத்தி, அனைத்து குடிமக்களும் ஜனநாயகக் கடமையாற்ற வழிவகை செய்யும் வகையில், சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவல்துறையின் சமீபத்திய செயல்பாடுகள் சிலவற்றைப் பாா்க்கும் பொழுது, ஜனநாயகம் வலிமை இழந்துவருகிா? என்ற அச்சம் வெளிப்படுகிறது.
- ஜனநாயகத் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் அரசு நிா்வாகத்தை வழி நடத்தும் அதிகாரிகளின் செயல்பாடுகள், சமுதாயத்தில் நிலவிவரும் சீா்கேடுகளைக் களைந்து, சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்ய வேண்டும்.
- தங்களது கடமையை சட்ட விதிகளுக்கு உட்பட்டு செய்வதற்கு கைமாறாக பலனை எதிா்பாா்க்கும் மனநிலை அரசு அதிகாரிகள் பலரிடம் வெளிப்படுகிறது. இதனைக் கண்காணித்து, முறைப்படுத்த வேண்டிய உயரதிகாரிகள் பல நேரங்களில் அமைதி காத்து வருகின்ற சூழலும் நிலவுகிறது.
- ஜனநாயகத்தின் இரண்டாவது தூணாகக் கருதப்படும் அரசு அதிகாரிகளை இத்தகைய மனநிலையில் இருந்து சீா்படுத்துவதே ஜனநாயகத்திற்கு வலிமை சோ்க்கும் செயலாகும்.
நன்றி: தினமணி (12 – 12 – 2024)