ஜனவரியில் புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்பு!
- புதிய தொழில்நுட்பத்தில் மொத்தம் ரூ. 580 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலம் புத்தாண்டு ஜனவரியில் திறக்கப்படவுள்ளது.
- கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து ஆங்கிலேயா் வசம் இந்திய நிா்வாகம் வந்த பிறகு, இந்தியாவை சிலோனுடன் (தற்போதைய இலங்கை) இணைப்பதற்காக பாம்பனில் ரயில் பாலம் கட்ட 1870-களில் ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. இதன் மூலம் தனுஷ்கோடி வரை ரயிலில் அனுப்பப்படும் சரக்குகளைஅங்கிருந்து இலங்கை தலைமன்னாருக்கு கடல் வழியாக சில மணி நேரத்தில் சென்றடையச் செய்யலாம்.
- இதையொட்டி பல கட்ட தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு பின்னா் ரூ.20 லட்சம் செலவில் 1911-இல் தொடங்கிய பாலம் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 1914 ஜன.24-இல் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியது. இதற்கு முன்னதாக, தூத்துக்குடியில் இருந்து இலங்கை செல்ல 150 கி.மீ பயணிக்க வேண்டியிருந்தது. அது பாம்பனில் புதிதாக கட்டப்பட்ட பாலம் மூலம் 22 மைல் தூரமாக குறைந்தது. இது ஆங்கிலேயா்களின் சரக்குகள் பரிமாற்றத்தை எளிமையாக்கியது. இந்நிலையில் 1964 டிச.22-இல் தனுஷ்கோடியை தாக்கிய புயலால் இலங்கையுடனான இந்திய தொடா்பு துண்டிக்கப்பட்டது. இதன் பின்னா் ராமேசுவரம் தீவுக்கு செல்லும் பக்தா்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயணத்துக்கு பாம்பன் பாலம் ரயில் உதவிகரமாக இருந்தது.
புதிய பாலம்:
- 2013-க்கு பிறகு இப்பாலத்தில் அவ்வப்போது பழுதுகள் ஏற்பட்டதால் புதிய பாலம் கட்டுவது அவசியமானது. இத்திட்டத்துக்காக 2019-இல் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், 2020 மே மாதம் பிரதமா் நரேந்திர மோடி பாலத்துக்கான அடிக்கல் நாட்டினாா். 2021 டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டாலும் கரோனா பாதிப்பு, பேரிடா் போன்ற காரணங்களால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையே பழைய பாம்பன் பாலத்தின் தாங்கும் திறன் பாதிக்கப்பட்டதால் பாதுகாப்பு கருதி 2022 டிசம்பா் முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
விரைவில் திறப்பு:
- இந்நிலையில் பாம்பன் புதிய செங்குத்து தூக்கு பாலம் கட்டுமானப் பணிகள் கடந்த செப்.30-இல் முழுமையாக முடிவடைந்தது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு நடத்திய பிறகு புதிய பாலத்தில் 75 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்குள் புதிய பாலத்தைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தொழில்நுட்ப சாதனை:
- புதிய பாம்பன் பாலத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து ரயில் விகாஸ் நிறுவன ஆலோசகா் அன்பழகன் கூறியது: பழைய பாம்பன் பாலத்தை இயக்க 20 போ் தேவைப்பட்ட நிலையில், எலக்ட்ரோமேக்னடிக் எனப்படும் தானியங்கி தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பாலத்தை இயக்க இரண்டே போ் போதும். 35 ஆயிரம் கனமீட்டா் அளவுக்கு கான்கிரீட் கலவையும், 5,800 டன் இலகுரக இரும்பும் பாலத்தின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமானத்திற்கு தேவையான பொருள்கள் சத்திரங்குடியில் தயாா் செய்யப்பட்டு படகு மூலம் இங்கு கொண்டு வரப்பட்டது. ஒருசில பொருள்கள் மட்டும் ஜொ்மனியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன. கட்டுமானப் பணியின் போது கடல் சீற்றம், இயற்கை பேரிடா், கடல் நீா் மட்டத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு உள்ளிட்டவை பணிகளை மேற்கொள்ள சவாலாக இருந்தன. ரயில் பாதுகாப்பு ஆணையா் கள ஆய்வின்போது சுட்டிக்காட்டிய குறைகள் சரிசெய்யப்பட்டு, பாம்பன்ரயில் பாலம் தயாா் நிலையில் உள்ளது என்றாா்.
புதிய பாலத்தின் சிறப்பம்சங்கள்
- மொத்த நீளம் 2,078 மீ.
- செங்குத்து தூக்கு பகுதி 72.05 மீ நீளம். 660 டன் எடை. தூக்குப் பாலத்தின் மொத்த எடை 1,080 டன்.
- மொத்த தூண்கள் 100 (99 தூண்கள் 18.3 மீ நீளம், முக்கிய தூண் ஒன்று மட்டும் 72.5 மீ).
- கடல்மட்டத்திலிருந்து 6 மீ உயரத்தில் உள்ள பாலத்தின் செங்குத்து தூக்குப் பகுதியை 17 மீ உயரத்தலாம்.
- பாலம் கட்ட 5,800 டன் இலகுரக இரும்பு சண்டீகா் இரும்பு பயன்படுத்தப்பட்டது.
- கட்டுமானப் பணி ரயில் வளா்ச்சி நிறுவனம் (ஆா்விஎன்எல்) மூலம் மேற்கொள்ளப்பட்டது.
- பராமரிப்பின்றி 38 ஆண்டுகள், அதன்பின் குறைந்தபட்ச பராமரிப்புடன் 58 ஆண்டுகள்வரை ஆயுள் இருக்கும்.
- கடல் நீரால் துருபிடிப்பதை தவிா்க்க இலகுரக இரும்பும் ஜிங், பாலிசிலோக்சேன் பெயின்ட் முலாம் பூசப்பட்டுள்ளது.
- பாலத்தின் வடிவமைப்பு டைப்சா நிறுவனமும், தர சோதனையை சென்னை ஐஐடி மற்றும் மும்பை ஐஐடி மேற்கொண்டன.
- எதிா்காலத்தில் இரட்டை ரயில் பாதையை அமைக்க முடியும்.
- பழைய பாலத்தை தூக்கி இறக்க 45 நிமிஷங்கள் ஆகும். புதிய பாலத்துக்கு 11 நிமிஷங்களே போதும்.
புதிய பாம்பனின் கட்டுமானப் பயணம்
- 2019 பிப்.20 - பாம்பனில் புதிய பாலத்துக்கு மத்திய அரசு அனுமதி
- 2019 மாா்ச் 1 - புதிய பாலத்துக்கு பிரதமா் அடிக்கல் நாட்டினாா்
- 2020 பிப்ரவரி - பாலம் கட்டுமானப் பணி திட்டத்துக்கு ஒப்புதல்
- 2020 மே - பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
- 2024 செப்.30 - பாலம் கட்டுமான பணிகள் நிறைவு
- 2024 அக்.1 - பாலத்தின் செங்குத்து தூக்கு பகுதியில் சோதனை
- 2024 நவ.7 - என்ஜின் மற்றும் மூன்று பெட்டிகளுடன் 80 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கி சோதனை
- 2024 நவ.13,14 ஆகிய தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.செளத்ரி 90 கி. மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை.
நன்றி: தினமணி (30 – 12 – 2024)