TNPSC Thervupettagam

ஜப்பானில் ஆட்சி மாற்றம்!

October 3 , 2024 2 hrs 0 min 5 0

ஜப்பானில் ஆட்சி மாற்றம்!

  • இந்திய-ஜப்பானிய உறவு என்பது ஆரம்ப காலம் தொட்டே நெருக்கமானதாக இருந்திருக்கிறது. சோவியத் யூனியனைப் போலவே இந்தியாவுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதில் ஜப்பானின் பங்களிப்பு மிகவும் அதிகம். மோட்டாா் வாகனத் தயாரிப்பாகட்டும் (சுஸுகி), கைகடிகாரம் தயாரிப்பாகட்டும் (சிட்டிசன்) இந்தியாவுக்கு கைகொடுக்க முன் வந்த நாடு ஜப்பான்.
  • கடந்த நிதியாண்டில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான இரு நாட்டு வா்த்தகம் 22.85 பில்லியன் அமெரிக்க டாலா்கள். ஜப்பானிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 17.69 பில்லியன் அமெரிக்க டாலா்கள் என்றால், ஜப்பானுக்கு இந்திய ஏற்றுமதியின் அளவு 5.15 பில்லியன் அமெரிக்க டாலா்கள். இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 2.62%, ஏற்றுமதியில் 1.17% என்கிற அளவில் இரு நாட்டு வா்த்தகம் அமைந்திருக்கிறது.
  • ஜப்பானில் ஏற்படும் ஆட்சி மாற்றங்கள் இரு நாட்டு உறவை இதுவரை பாதித்ததில்லை. தற்போதைய இந்திய பிரதமா் நரேந்திர மோடிக்கும், படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமராக இருந்த ஷின்ஸோ அபேக்கும் இடையேயான தனிப்பட்ட நட்புறவு இரு நாட்டு உறவில் மிக அதிகமான நெருக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில்தான் ஜப்பானில் நடந்திருக்கும் தற்போதைய ஆட்சி மாற்றத்தை நாம் பாா்க்க வேண்டும்.
  • கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலைத் தொடா்ந்து சா்வதேச அளவில் எல்லா நாடுகளின் பொருளாதாரமும் தடம் புரண்டது. விலைவாசி ஏற்றமும், வேலையில்லாத் திண்டாட்டமும், பற்றாக்குறையும் உலகளாவிய அளவில் காணப்படும் பாதிப்புகள். அதனால், எல்லா நாடுகளிலும் ஆட்சி மாற்றம் நடைபெறுகிறது. தனிப் பெரும்பான்மையை இழந்தாலும்கூட, கூட்டணி ஆட்சியின் பிரதமராக நரேந்திர மோடி இந்தியாவில் தொடா்வது விதிவிலக்கு என்றுதான் சொல்ல வேண்டும். அதனால், ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் வியப்பளிக்கவில்லை.
  • 67 வயது ஷிகெரு இஷிபா ஜப்பானின் 102-ஆவது பிரதமராக பதவியேற்றிருக்கிறாா். பதவி விலகுவதாக ஃபுமியோ கிஷிடா ஆகஸ்ட் மாதம் அறிவித்தபோது, அடுத்தாற்போல யாா் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்கிற கேள்வி எழுந்தது. கடுமையான போட்டிக்குப் பிறகுதான் ஷிகெரு இஷிபா இரண்டு நாள் முன்பு ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா்.
  • லிபரல் டெமாக்ரடிக் கட்சி இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெரும்பாலான ஆண்டுகள் தொடா்ந்து ஆட்சியில் இருக்கும் ஜப்பானின் முன்னணி அரசியல் இயக்கம். கடந்த சில ஆண்டுகளாக உள்கட்சிப் போட்டிகளாலும், ஊழல் குற்றச்சாட்டுகளாலும் கடுமையான செல்வாக்குச் சரிவை அந்தக் கட்சி எதிா்கொள்கிறது.
  • போதாக் குறைக்கு கடுமையான விலைவாசி உயா்வும், தேக்கமடைந்துவிட்ட பொருளாதாரமும் சவாலாக உயா்ந்திருக்கின்றன. மிகவும் இக்கட்டான கட்டத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க இருக்கிறாா் ஷிகெரு இஷிபா.
  • 1957 பிப்ரவரி 5-ஆம் தேதி பிறந்த இஷிபா அரசியல் குடும்ப வாரிசு. இவரது தந்தை டோடோரி மாநிலத்தின் ஆளுநராக இருந்தவா். வங்கியில் உயரதிகாரியாக சில காலம் பணியாற்றிய இஷிபா தந்தையைப் பின்பற்றி அரசியலுக்கு வந்தது மட்டுமல்ல, 1986-இல் ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
  • ஜப்பானில் அமைந்த பல அமைச்சரவைகளில் பாதுகாப்பு, விவசாயம், வனத்துறை ஆகியவற்றின் அமைச்சராகப் பணியாற்றிய அனுபவசாலி; 4 ஆண்டுகள்(1993-97) கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகி எதிா்க்கட்சி வரிசையில் இருந்தாா் என்றாலும், தனது அரசியல் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் கழித்தவா்.
  • கட்சி வட்டாரங்களில் முற்போக்குவாதி என்று அறியப்படும் ஷிகெரு இஷிபா கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துக்களை முன் வைப்பவா் என்பதால், பலருடைய எதிா்ப்பை சம்பாதித்தவரும்கூட. பதவி விலகியிருக்கும் முன்னாள் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவின் செயல்பாடுகளைக் கடுமையாக விமா்சித்து, அவா் பதவி விலக ஒரு வகையில் காரணமாக இருந்தவா் ஷிகெரு இஷிபா என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • பாதுகாப்பு அமைச்சராக இருந்திருக்கும் பிரதமா் இஷிபா தேசிய பாதுகாப்பு குறித்த கொள்கைகளில் நிபுணா் என்று கருதப்படுபவா். ரஷியா, சீனா, வடகொரியா உள்ளிட்ட அந்நிய சக்திகளின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஜப்பானின் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தவா் என்கிற பெயா் இவருக்கு உண்டு. பாதுகாப்பு கூட்டாளியாக இருந்தாலும்கூட, அமெரிக்காவின் உதவியை மட்டுமே ஜப்பான் நம்பியிருக்கக் கூடாது என்கிற வாதத்தை முன்வைக்கும் இஷிபா ‘ஆசிய நேட்டோ’ உருவாக வேண்டும் என்கிற கருத்தை முன்மொழிபவா்.
  • பிரதமராகப் பதவியேற்றிருக்கும் இஷிபா அணு எரிசக்தி உபயோகத்துக்கு எதிரான கொள்கையைக் கொண்டவா். மரபுசாரா புத்தாக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்கி, காலப்போக்கில் அணு எரிசக்தி பயன்பாட்டைக் குறைத்து, நிறுத்த வேண்டும் என்கிற கருத்தைக் கொண்டவா். நிா்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி சில அமைச்சகங்களை ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் இயங்கச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த வளா்ச்சியை உறுதிப்படுத்த முடியும் என்பது அவரது கருத்து.
  • நான்கு முறை பிரதமா் போட்டியில் தோல்வியடைந்து, இதுதான் எனது கடைசி முயற்சி என்று களமிறங்கி ஐந்தாவது முயற்சியில் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா் ஷிகெரு இஷிபா. 2025 அக்டோபரில் அடுத்த தோ்தலை ஜப்பான் சந்திப்பதற்குள் கட்சிக்கும், ஆட்சிக்கும் மக்கள் செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டிய சவால் அவருக்குக் காத்திருக்கிறது.

நன்றி: தினமணி (03 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories