டங்க்ஸ்டன் சுரங்க அனுமதி ரத்து: மக்கள் குரலுக்குக் கிடைத்த வெற்றி
- தமிழகத்தின் நாயக்கர்பட்டி, அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்க்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தன்னெழுச்சியாகப் போராடிய மக்களுக்குக் கிடைத்த வெற்றி இது.
- மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாப்பட்டி உள்பட 2015.51 ஹெக்டேர் பரப்பில் டங்க்ஸ்டன் சுரங்கம் தோண்ட 2024 நவம்பரில் ஏலம் மூலம் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி மேலூர், தெற்குத் தெரு, முத்துவேல்பட்டி, குளனிப்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் சுரங்கத்துக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
- இவற்றில், உயிர்ப்பன்மை மிகுந்த பகுதியும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியும் இடம்பெற்றதால் சுற்றுச்சூழல், வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியது. ஏற்கெனவே, 2022இல் அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் 193.215 ஹெக்டேர் அளவிலான நிலப்பகுதியை உயிர்ப்பன்மைச் சட்டம் 2002இன் கீழ் பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாகத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இப்பகுதிகளில் சுரங்கம் தோண்டப்பட்டால் தங்கள் விவசாய நிலங்கள், வீடுகள் ஆகியவற்றை இழக்கும் அபாயம் ஏற்படும் என்று கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் இத்திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு அரசும் எதிர்ப்புத் தெரிவித்தது. திட்டத்துக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பல்வேறு வழிகளிலும் மத்திய அரசுக்குத் தமிழ்நாடு அரசு உரிய அழுத்தத்தைக் கொடுத்தது. என்றாலும் சுரங்கம் அமைக்க ஏலம் விடுவதற்கான பணிகள் நடைமுறையில் இருந்தபோது, மாநில அரசு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு சுட்டிக்காட்டியது; கனிம வளத்துக்குப் பொறுப்பு வகிக்கும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இதை மறுத்தார். எனவே, இந்த விவகாரம் அரசியல்ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
- இந்தச் சூழலில், டங்க்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்களுக்குச் செவிசாய்க்கும் வகையில் டங்க்ஸ்டன் சுரங்கத் திட்ட அனுமதியை மத்திய நிலக்கரி - சுரங்கத் துறை அமைச்சகம் ரத்துசெய்திருக்கிறது. பல்லுயிர் பாரம்பரியத் தளத்தின் முக்கியத்துவம், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, மேலூரில் சுரங்கம் அமையவிருந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
- ஏற்கெனவே தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து நீண்ட காலமாக நடைபெற்ற போராட்டங்களைப் போல அல்லாமல், 3 மாதங்களுக்குள் தீர்வு கிடைத்திருப்பது கவனிக்கத்தக்கது. சுரங்கங்கள், கனிமங்கள் (வளர்ச்சி - ஒழுங்குமுறை) 1957 சட்டத்தில் 2023 ஆகஸ்ட் 9ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தத்தின் அடிப்படையில், மதுரையில் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
- இந்தச் சட்டத் திருத்தம் மத்திய அரசுக்கு அதற்கான அதிகாரத்தை வழங்குகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மத்திய அரசு நேரடியாக ஒரு திட்டத்தை அறிவிக்கும்போது, அதை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றால், அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் சட்டம் - ஒழுங்கைக் காக்கும் கடமையும் மாநில அரசுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.
- சுற்றுச்சூழலை மையப்படுத்திய திட்டங்களை அறிவிக்கும்போது, மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுப்பதையும், கருத்துக் கேட்புக் கூட்டங்கள் மூலம் மக்களின் கருத்தை அறிந்த பிறகே திட்டத்துக்கான அனுமதி வழங்கும் நடைமுறையையும் மத்திய அரசு பின்பற்ற வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் மீது ஆபத்தான திட்டங்களைச் செயல்படுத்தும்போது கூடுதல் கவனமும் மக்கள் மீதான அக்கறையும் அவசியம்!
நன்றி: இந்து தமிழ் திசை (30 – 01 – 2025)