TNPSC Thervupettagam

டிரம்ப்பின் நடவடிக்கைகள்: கவனமாகக் கையாள வேண்டும் இந்தியா

January 31 , 2025 2 hrs 0 min 6 0

டிரம்ப்பின் நடவடிக்கைகள்: கவனமாகக் கையாள வேண்டும் இந்தியா

  • அமெரிக்க அதிபராக இரண்டாம் முறையாகப் பதவியேற்றிருக்கும் டிரம்ப், முதல் நாளிலிருந்தே சர்ச்சைக்குரிய உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறார். அந்த வகையில், சட்டவிரோதக் குடியேறிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும், பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் உள்படப் பல்வேறு நாடுகளின் தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
  • இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்படவிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், இந்தச் சவாலை இந்தியா எப்படி எதிர்கொள்ளவிருக்கிறது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீண்ட காலமாக நல்லுறவு நிலவிவருகிறது. டிரம்ப்பின் முந்தைய ஆட்சிக் காலத்தில், அவருடன் நெருங்கிய உறவைப் பிரதமர் மோடி பேணிவந்தார்.
  • டிரம்ப் மீண்டும் அதிபராவதால் இருதரப்பு உறவு மேலும் வலுப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளையில், அமெரிக்கத் தயாரிப்புகளுக்கு இந்தியா அதிக வரிவிதிப்பதாக முன்பே பேசிவந்த டிரம்ப், தேர்தல் பிரச்சாரத்தின்போதும் அதை வலியுறுத்தினார். அதேபோல், டிரம்ப்பின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி நேரடியாகப் பங்கேற்காததும் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது.
  • இந்தச் சூழலில், ஜனவரி 27இல் டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்துத் தொலைபேசியில் உரையாடியது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, ‘பிரதமர் மோடி, பிப்ரவரி மாதம் அமெரிக்காவுக்கு வருகிறார்; வெள்ளை மாளிகையில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவோம்’ என்று டிரம்ப்பும் அறிவித்துவிட்டார். மோடியுடனான தொலைபேசி உரையாடலின்போது, இருதரப்புக்கும் இடையே நியாயமான வர்த்தக உறவின் அவசியம் குறித்து டிரம்ப் அழுத்தம் கொடுத்துப் பேசியிருக்கிறார்.
  • இதற்கிடையே, அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட கொலம்பியாவைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகள் பயணித்த இரண்டு விமானங்கள் தரையிறங்க கொலம்பிய அதிபர் குஸ்தாவோ பெத்ரோ அனுமதி மறுத்த நிலையில், அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரியை 25%இலிருந்து 50%ஆக அதிகரித்துவிட்டார் டிரம்ப்.
  • இதன் மூலம், சட்டவிரோதக் குடியேறிகள் விஷயத்தில் தனது பிடிவாதத்தை டிரம்ப் வலுவாக உணர்த்தியிருக்கிறார். வேறு வழியின்றி அந்த விமானங்களை அனுமதித்த பெத்ரோ, கொலம்பியக் குடியேறிகள் மனிதாபிமான முறையில் நடத்தப்படாதது குறித்துக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பதிலடியாக, அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கவிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்தியாவுக்கு அப்படியான சாத்தியக்கூறுகள் இல்லை.
  • சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றும் விஷயத்தில், இந்தியா சரியான நடவடிக்கையை எடுக்கும் என்று கூறியிருப்பதன் மூலம், இந்தியா மீது அந்தப் பொறுப்பைச் சாமர்த்தியமாகச் சுமத்தியிருக்கிறார் டிரம்ப். கூடவே, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு, இயல்பாகவே அந்நாட்டின் குடியுரிமை கிடைக்கும் என்கிற நிலையை மாற்ற டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள், முறையான விதிமுறைகளின்கீழ் அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியர்களுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது.
  • இந்த உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தாலும், இதுதொடர்பான சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர டிரம்ப் முயற்சிப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணுவது தவிர்க்க முடியாதது. குறிப்பாக, பாதுகாப்புத் துறைத் தளவாடங்கள் இறக்குமதியில் அமெரிக்காவை இந்தியா பெரிதும் சார்ந்திருக்கிறது. அதேபோல், இந்திய மாணவர்கள் மூலம் அமெரிக்காவுக்கு பில்லியன் கணக்கில் வருவாய் குவிகிறது.
  • இந்தியாவைச் சேர்ந்த பணியாளர்கள் அமெரிக்கத் தொழில் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிக்கின்றனர். சீனாவின் நகர்வுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘குவாட்’ அமைப்புக்கு இந்தியாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தச் சூழலில், டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகள் இந்தியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடாத வகையிலான ராஜதந்திர நகர்வுகள் அவசியம். ‘இனிய நண்பர்’ என்று டிரம்ப்பை விளிக்கும் பிரதமர் மோடி, இதைக் கவனமாகக் கையாளுவார் என்று நம்புவோம்!

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories