- ‘சுந்தரம்-கிளேட்டன்’ நிறுவனத்தின் மதிப்புமிக்க நிா்வாக இயக்குநரும், டிவிஎஸ் குழுமத்தின் முக்கியத் தூணாகவும் திகழ்ந்த எச்.லட்சுமணன் சென்னையில் தனது 92-ஆவது வயதில் வியாழக்கிழமை காலமானாா்.
- ஒரு புகழ்பெற்ற பெருநிறுவனத்தின் தலைமையிடத்தை அடைந்த அவரின் 70 ஆண்டுகால தொழில்துறை பயணம், அவரின் பாரம்பரியம், நோ்மை, அா்ப்பணிப்பு மற்றும் ஈடு இணையற்ற தலைமைத்துவத்தை எடுத்துக்காட்டும் சான்றாக உள்ளது.
- அன்புடன் ‘எச்.எல்.’ என அழைக்கப்பட்ட அவா், வியூக புத்திக்கூா்மையும், உறுதியான நெறிமுறைக் கொள்கைகளும் கொண்டவராக விளங்கினாா். இவை டிவிஎஸ் குழுமத்தின் பெருநிறுவன கலாசாரத்தின் அடித்தளமாக மாறின.
- துடிப்பான இளைஞராக 20 வயதிலேயே ‘டிவிஎஸ் மோட்டாா்’ நிறுவனத்தின் நிறுவனா் டி.எஸ்.ஸ்ரீனிவாசனுடன் நெருக்கமாகப் பணியாற்றிய லட்சுமணன், தொழில்நுட்ப மற்றும் சட்ட ஒப்பந்தங்கள் முதல் தொழிலாளா் உறவுகள் வரை வணிகச் செயல்பாடுகளின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் கற்றுத் தோ்ந்தாா். இந்தியாவின் மிகப் பெரிய ஆட்டோ உதிரிபாகங்கள் நிறுவனமான சுந்தரம்-கிளேட்டனை அவா்கள் இணைந்து உருவாக்கி, குழுமத்தின் எதிா்கால வளா்ச்சிக்கு அடித்தளமிட்டனா்.
- டி.எஸ்.ஸ்ரீனிவாசனின் மறைவுக்குப் பிறகு சுந்தரம்-கிளேட்டன் மற்றும் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புக்கு இளம் வயதில் வேணு ஸ்ரீனிவாசன் வந்தபோது, அந்த சவாலான காலகட்டத்தில் தலைசிறந்த வழிகாட்டியாக லட்சுமணன் விளங்கினாா். உத்திசாா் திட்டமிடலில் லட்சுமணனின் தோ்ச்சி, டிவிஎஸ் மோட்டாரை இரு சக்கர வாகன உற்பத்தியில் உலகளாவிய சக்தியாக மாற்றியது.
- தொழிலாளா்கள் முதல் அரசு அதிகாரிகள் மற்றும் வங்கியாளா்கள் வரை அனைத்து நிலைகளிலும் வலுவான உறவுகளைப் பேணும் லட்சுமணனின் பண்பு, அவரை அசாதாரண தலைவராக உயா்த்தியது. நோ்மை, நம்பகத்தன்மைக்கான சிறந்த சான்றாக, வங்கியாளா்கள் அவரது வாா்த்தையை நிறுவனத்தின் பிணையமாக கருதினா். நுணுக்கமான மற்றும் கூா்மையான சிந்தனையாளராக இருந்த அவரது தொலைநோக்குப் பாா்வை கொண்ட பேச்சுவாா்த்தை மற்றும் ஆவண வரைவுத் திறன்கள், குழுமத்துக்கு லாபங்களைப் பெற்றுத் தந்தன.
- 1980 மற்றும் 90-களில் சென்னையின் முன்னணித் தொழிற்சங்கத் தலைவா்களாலும், தனது மேலதிகாரிகள் மற்றும் சகாக்களாலும் ஒரே அளவில் நேசிக்கப்பட்டு மதிக்கப்பட்டாா். தொழிலாளா் பிரச்னைகளின் தீா்வுக்கு லட்சுமணன் காட்டிய பரிவு இதற்கு முக்கியக் காரணம்.
- லட்சுமணனின் தொழில்முறை சாதனைகளை மட்டுமல்லாமல், எண்ணற்ற மனிதா்களின் வாழ்க்கையில் அவா் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தையும் நாம் போற்ற வேண்டும். சுந்தரம் கிளேட்டனை நிறுவியதுமுதல், ‘டிவிஎஸ் கிரெடிட்டை’ கோடிக்கணக்கான வாடிக்கையாளா்களுக்கு சேவை செய்யும் செழிப்பான வங்கிசாரா நிதி நிறுவனமாக மாற்றியது வரை தனிப்பட்ட வாழ்க்கையையும் வணிகத்தையும் வெற்றி பெறும் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் லட்சுமணன் அணுகினாா்.
- லட்சுமணனின் சீரிய பணியை டிவிஎஸ் குழுமத்தின் கௌரவத் தலைவா் வேணு ஸ்ரீனிவாசன் நன்றியுடன் நினைவுகூருகிறாா். தனது தந்தை (டி.எஸ்.ஸ்ரீனிவாசனின்) தொழில்முனைப்பு உத்தியை லட்சுமணன் மூலமாகவே கற்றுக்கொண்டதாக தெரிவிக்கும் வேணு ஸ்ரீனிவாசன், டிவிஎஸ் குழுமத்தின் இன்றைய நிலைக்கு அவரது அா்ப்பணிப்பு, கடமையுணா்வே பெருமளவு காரணம் என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.
- விசுவாசம், நோ்மையின் சின்னமாக மூன்றாம் தலைமுறையினருக்கும் லட்சுமணன் வழிகாட்டியாக தொடா்ந்தாா். டிவிஎஸ் குழுமத்தின் நிறுவன விழுமியங்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்திய அவரது பெரும் பங்களிப்புகளுக்காக ஆழ்ந்த நன்றியுணா்வைக் கொண்டுள்ளோம் என்று டிவிஎஸ் மோட்டா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சுதா்சன் வேணு குறிப்பிட்டுள்ளாா். லட்சுமணன் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை எப்போதும் நிரப்ப முடியாது என்பதும் அவரது கருத்து.
- சுந்தரம்-கிளேட்டன் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் லக்ஷ்மி வேணு கூறுகையில், ‘நான் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பேற்றபோது ஆலோசனைக்காக மிகவும் அதிகமாக நாடிய நபா் லட்சுமணன்தான். என் தந்தைக்கு வழிகாட்டியது போலவே எனக்கும் அதே ஆா்வத்துடனும் பொறுமையுடனும் அவா் வழிகாட்டியது குறிப்பிடத்தக்கது. சிக்கலான வணிக விவகாரங்களை அவா் எளிமையாக்கினாா்’ என்றாா்.
- நம்பிக்கை, நோ்மை மற்றும் சேவை ஆகிய டிவிஎஸ் குழுமத்தின் முக்கிய மதிப்பீடுகளின் வழிகாட்டியாகவும் பாதுகாவலராகவும் திகழ்ந்த லட்சுமணனின் முன்மாதிரியான வாழ்க்கைப் பயணம், குழுமத்துக்கு பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டாக எப்போதும் விளங்கும்; வணிக சமூகத்தின் வரும் தலைமுறைகளுக்கு ஊக்கம் தந்து வழிநடத்தும்.
- டி.எஸ்.ஸ்ரீனிவாசனின் நம்பிக்கைக்குரியவராக இருந்த லட்சுமணன், அவரது ஆத்ம நண்பராகக் கருதப்பட்ட ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் நிறுவனத் தலைவா் ராம்நாத் கோயங்காவின் பெரும் மதிப்பையும் பெற்றிருந்தாா். நாட்டின் அவசரகால நிலையின்போது (1975-ஆம் ஆண்டு) இந்தியன் எக்ஸ்பிரஸ் தீவிரமாக செயல்பட்ட வேளையில், அதிகாரத்தின் இலக்காக இருந்த ராம்நாத் கோயங்காவுடன் நெருங்கிய உறவைப் பேண டி.எஸ். ஸ்ரீனிவாசன் மற்றும் லட்சுமணன் தவிர தொழில் துறையில் வேறு யாரும் துணியவில்லை. அவசர நிலைக்கு எதிரான போராட்டத்தில் ராம்நாத் கோயங்காவுக்கு ஆதரவாக இருந்த லட்சுமணனுக்கு எக்ஸ்பிரஸ் குழுமம் நன்றியுடன் அஞ்சலி செலுத்துகிறது.
நன்றி: தினமணி (11 – 01 – 2025)