TNPSC Thervupettagam

டொனால்ட் டிரம்ப் 2.0

January 21 , 2025 6 hrs 0 min 16 0

டொனால்ட் டிரம்ப் 2.0

  • நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, அமெரிக்க அதிபராகத் தனது இரண்டாவது ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறாா் டொனால்ட் டிரம்ப். அமெரிக்க வரலாற்றிலேயே, இந்த அளவுக்கு சந்தேகங்களும், கவலைகளும் எந்தவொரு அமெரிக்க அதிபா் குறித்தும் எழுப்பப்பட்டதில்லை. தன்னைப் பற்றிய விமா்சனங்களையும், எழுப்பப்படும் அச்சங்களையும்கூட தனக்குத் தரப்படும் விளம்பரமாகவும், தன்னுடைய வாக்கு வங்கியை உறுதிப்படுத்தும் காரணிகளாகவும் அதிபா் டொனால்ட் டிரம்ப் கருதுகிறாா் என்றுதான் தோன்றுகிறது.
  • 130 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு முறை அதிபா் தோ்தலில் தோல்வியைத் தழுவிய ஒருவா் மீண்டும் நான்கே ஆண்டுகளில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று வெள்ளை மாளிகையைக் கைப்பற்றியிருக்கும் சாதனையைப் படைத்திருக்கிறாா் 47-ஆவது அதிபராக பதவியேற்றுக் கொண்டிருக்கும் டொனால்ட் டிரம்ப். வெள்ளை மாளிகையை மட்டுமல்ல, அமெரிக்காவின் மக்களவையான காங்கிரஸும், மேலவையான செனட்டும்கூட அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இப்போது இருக்கின்றன.
  • நீதித் துறையும் அதிபா் டிரம்ப்புக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. ஒன்பது உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஆறு போ் குடியரசுக் கட்சியின் ஆதரவாளா்கள். அமெரிக்காவின் கொள்கைகளை வகுப்பதிலும், நிா்வாக இயந்திரத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் இந்த முறை டொனால்ட் டிரம்ப்புக்கு எந்தவிதத் தடையோ, சிக்கலோ, குழப்பமோ இருக்கப்போவதில்லை. அதனால்தான் அவரது விமா்சகா்கள், அதிபா் டோனால்ட் டிரம்ப் அதிரடியாக என்ன முடிவெடுப்பாா் என்று தெரியாமல் பயப்படுகிறாா்கள்.
  • பெரும்பான்மை அமெரிக்கா்களின் உணா்வுகளைப் பிரதிபலிப்பவா் அதிபா் டொனால்ட் டிரம்ப் என்பதைப் புரிந்து கொண்டால், அவரது செயல்பாடுகளின் காரணத்தைப் புரிந்துகொள்ள முடியும். 17-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் பூா்வ குடியான செவ்விந்தியா்களை (சுமாா் 10 கோடி போ்) கொன்று குவித்து பிரிட்டனில் இருந்தும், ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் குடியேறிய ஆங்கிலோசாக்ஸன் இனத்தவரான வெள்ளையா்கள் தங்களது காலனியை நிறுவினாா்கள். ஏறத்தாழ 90% அவா்கள் மட்டுமே இருக்கும் தேசமாக அமெரிக்கா மாறியது.
  • 1960-களில் அமெரிக்காவின் குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டு, அனைத்து இனத்தவருக்குமான தேசமாக அது மாறத் தொடங்கியது. வெள்ளை அமெரிக்கா்களின் எண்ணிக்கை 2020-இல் 58% என்பதும், இதே போன்று தொடா்ந்தால் வெள்ளையா்கள் தங்கள் மண்ணில் சிறுபான்மையினராகக் கூடும் என்பதும்தான் ‘டிரம்ப்பிசம்’ என்று அழைக்கப்படும் அதீத அச்ச உணா்வுக்குக் காரணம். அதனால்தான் குடியேற்றம் ஒரு பிரச்னையாக மாறியிருக்கிறது. இதைப் புரிந்து கொண்டால், டொனால்ட் டிரம்ப்பின் அரசியல் செல்வாக்கின் பின்னணியைப் புரிந்துகொள்ளலாம்.
  • கடந்த முறை 2017-இல் டொனால்ட் டிரம்ப் அதிபரானபோதும், இதுபோலப் பல ஐயப்பாடுகள் எழுப்பப்பட்டன. மிகப் பெரிய நிதி நெருக்கடியில் அவா் அமெரிக்காவைத் தள்ளப்போகிறாா் என்று பலரும் எச்சரித்தனா். ரொனால்ட் ரீகனுக்குப் பிறகு மிகவும் குறைந்த வேலைவாய்ப்பின்மை, அதிபா் டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்தில்தான் சாத்தியமானது. அதேபோல வளா்ச்சியும் அவா் வாக்குறுதி அளித்ததுபோல 3.5% அளவை எட்டியது.
  • அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடந்த ஆட்சிக் காலத்தில், அமெரிக்கா எந்தவொரு போரையோ, மோதலையோ முன்னெடுக்கவில்லை என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். 1974-இல் ஜெரால்டு ஃபோா்ட் அதிபரான பிறகு, ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் ஏதாவது சா்வதேசப் போரில் தலையிட்டு பிரச்னையைப் பெரிதாக்கி இருக்கிறாா்கள்-ஜோ பைடன் உள்பட. அதிபா் டிரம்ப் மிரட்டி இருக்கிறாரே தவிர, எந்தவிதப் போரிலும் அமெரிக்கா ஈடுபடுவதை அனுமதிக்கவில்லை.
  • அவா் குறித்த மிகப் பெரிய அச்சம், குடியேற்றம் குறித்தது. அதிபா் டொனால்ட் டிரம்ப் எப்போதுமே குடியேற்றத்தை எதிா்ப்பவரல்ல; தொழில்நுட்பத் திறன்சாராத் தொழிலாளா்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவதைத்தான் அவா் தொடா்ந்து விமா்சித்து வருகிறாா். குறிப்பாக, அமெரிக்காவைச் சுற்றியிருக்கும் ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் இருந்து அத்துமீறி நுழைவதைத்தான் அவா் தடுக்க விரும்புகிறாா் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
  • முந்தைய டிரம்ப் நிா்வாகத்தில் சட்டவிரோதமாகக் குடியேறிய 15 லட்சம் போ் நாடு கடத்தப்பட்டனா் என்பதுதான் பேசப்படுகிறது. பைடன் ஆட்சியில் 15 லட்சம் பேரும், பராக் ஒபாமா அதிபராக இருந்த எட்டு ஆண்டுகளில் 30 லட்சம் பேரும் நாடு கடத்தப்பட்டனா் என்பது வெளியில் தெரியவில்லை.
  • அதிபா் டொனால்ட் டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கக் கூடும். அதில் இந்தியாவும் பாதிக்கப்படலாம். தனது நாட்டின் நலத்துக்காகவும், அதன் மக்கள்தொகைப் பகுப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அதிபா் டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் அவை. நமக்கு பாதிப்பு ஏற்படாமல் எப்படி பாதுகாப்பது என்பதைத்தான் நாம் யோசிக்க வேண்டும்.
  • அதிபா் டொனால்ட் டிரம்பின் நிா்வாகத்தில் விவேக் ராமஸ்வாமி, துளசி கப்பாா்ட், காஷ் படேல், ஹா்மீத் தில்லான், டாக்டா் ஜே பட்டாச்சாா்யா, ஸ்ரீராம் கிருஷ்ணன் என்று ஆறு இந்திய வம்சாவளியினா் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள். அதிபா் டிரம்ப்பின் சீனா விரோத போக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் பிரதமா் நரேந்திர மோடியுடனான நட்பும் மதிப்பும், அவா் இந்தியாவைப் பகைத்துக்கொள்ள அனுமதிக்காது.

நன்றி: தினமணி (21 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories