தகவல் சரிபார்ப்பு: கடமையிலிருந்து விலகுவது சரியல்ல!
- சமூக வலைதளங்களில் வெறுப்புப் பேச்சுகள், போலிச் செய்திகள் அதிகரித்துவரும் நிலையில், முன்னணிச் சமூக வலைதள நிறுவனமான மெட்டா, தகவல் சரிபார்க்கும் கடமையிலிருந்து விலகத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 2016 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்புக்கு ஆதரவான பதிவுகள் - குறிப்பாக, போலிச் செய்திகள் ஃபேஸ்புக்கில் அதிகம் பரப்பப்பட்டதாகவும், அவரது வெற்றிக்கு இத்தகைய பதிவுகள் கணிசமாக உதவியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
- இதையடுத்து, அதுபோன்ற பதிவுகளின் உள்ளடக்கத்தைச் சரிபார்க்க ஃபேஸ்புக் (மெட்டா என 2021இல் பெயர் மாற்றம் கண்டது) முன்வந்தது. இதற்கெனத் தகவல் சரிபார்ப்பு வலைப்பின்னல் (ஐ.எஃப்.சி.என்.), ஐரோப்பியத் தகவல் சரிபார்ப்புத் தர நிர்ணய வலைப்பின்னல் (இ.எஃப்.சி.என்.) உள்ளிட்ட நிறுவனங்களுடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
- பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையை இந்நிறுவனங்கள் சரிபார்த்து வழங்க, ஃபேஸ்புக் நிறுவனம் அதற்கேற்பப் பயனர்களுக்குத் தகவல் தெரிவிப்பது, எச்சரிக்கை விடுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்துவந்தது.
- போலிச் செய்திகள், வெறுப்புப் பேச்சுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும் களையவும் இந்த நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றின. குறிப்பாக, பெருந்தொற்றுக் காலத்தில் அறிவியலுக்குப் புறம்பான தகவல்களைக் கட்டுப்படுத்தியதில் இந்நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தகைய நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.
- இந்தச் சூழலில், ஜனவரி 7 அன்று காணொளி ஒன்றை வெளியிட்ட மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், த்ரெட்ஸ் ஆகிய சமூக வலைதளங்களின் பயனர்கள் பகிர்ந்துகொள்ளும் பதிவுகளின் உள்ளடக்கத்தைச் சரிபார்க்கும் பணியை மேற்கொண்டுவந்த நிறுவனங்களிடமிருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்தார்.
- இந்தப் பணியைச் செய்துவந்த நிறுவனங்கள் அரசியல்ரீதியாக அதீதப் பாரபட்சத்துடன் நடந்துகொண்டதாகவும், நம்பகத்தன்மையை அதிகரிப்பதைவிடவும், சிதைக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
- ஸக்கர்பெர்க்கின் கூற்றுப்படி, அமெரிக்காவில் இயங்கிவரும் தகவல் சரிபார்ப்பு நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் இருந்துதான் மெட்டா விலகுவதாகத் தெரிகிறது. டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகியிருக்கும் நிலையில், இத்தகைய முடிவை மெட்டா நிறுவனம் எடுத்திருப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்தத் தேர்தலில், டிரம்ப்பை ஸக்கர்பெர்க் வெளிப்படையாகவே ஆதரித்தார். வெள்ளையின வெறி கொண்டோரில் பலர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் என்பதும்,அவர்களில் பலர் வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபடுபவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
- இன்னொரு புறம், அரசியல் நிலைத்தன்மையின்மை, தேர்தல்களில் குறுக்கீடுகள், வன்முறையைத் தூண்டும் கருத்துகள் பரப்பப்படுதல் போன்ற பிரச்சினைகள் பல நாடுகளில் அதிகரித்திருக்கின்றன. இப்படியான சூழலில், உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் தகவல் சரிபார்க்கும் பணி நிறுத்தப்படுவது பரவலானால், விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படக்கூடும். மெட்டா நிறுவனத்தின் இந்த முடிவை ஐ.எஃப்.சி.என். நிறுவனம் பகிரங்கமாகவே விமர்சித்திருக்கிறது.
- கூடவே, சமூகவலைதளப் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும், மிக மோசமான வசைச் சொற்கள் சரளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது இளம் பயனாளர்களின் சொல்லாடல்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. ஏஐ யுகத்தில்கூட இத்தகைய தீய சொற்கள் பிரயோகிக்கப்படுவதைத் தடுக்கவும், தொடர்ந்து இப்படி எழுதுபவர்களைச் சமூகவலைதளங்களிலிருந்து விலக்கிவைக்கவும் ஸக்கர்பெர்க் போன்றோர் முன்வராதது விமர்சனத்துக்குரியது.
- ஏற்கெனவே, ‘எக்ஸ்’ (டிவிட்டர்) சமூக வலைதளத்தில் வெறுப்புப் பேச்சுகளும் தனிநபர் தாக்குதல்களும் அதிகரித்திருப்பதாகப் பரவலாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ‘தி கார்டியன்’ போன்ற முன்னணிச் செய்தி ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் ‘எக்ஸ்’ தளத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கின்றனர்.
- சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இப்படியான போக்குகள் கவலை அளிக்கின்றன. இதுதொடர்பாக, கருத்தொற்றுமை உருவாகவும், தகவல் சரிபார்க்கும் பணி தொடரவும் சர்வதேசச் சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டிய தருணம் இது!
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 01 – 2025)