தகுதியுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா?
- பதினான்கு ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைவாழ்க்கையை அனுபவித்துவிட்ட ஆயுள்தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை (premature release) செய்யத் தடையாக உள்ள சட்ட விதிகளை மறுபரிசீலனை செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அண்மையில் அறிவுறுத்தியுள்ளது.
- குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் அளிப்பதைப் போலவே, உரிய தண்டனைக்காலத்தை முடித்த சிறைவாசிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதும் மக்கள் நல்வாழ்வு அரசின் பொறுப்பாகக் கருதப்படுவதால், இந்த அறிவுரை வரவேற்கத்தக்கது.
- ஒரு கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட ராஜ்குமார் என்பவர், பதினான்கு ஆண்டுச் சிறைவாசம் முடிந்த நிலையில், தன்னை முன்கூட்டியே விடுவிக்கும்படி தமிழக அரசிடம் மனு அளித்தார். வரதட்சிணைக் கொடுமைக்கான இரண்டு ஆண்டுத் தண்டனை உள்ளதாகக் கூறித் தமிழக அரசு அவரை விடுவிக்க மறுத்தது.
- அதை ஆயுள் தண்டனையோடு சேர்த்து அனுபவித்துவிட்டதாகக் கூறிய ராஜ்குமார், தனது விடுதலைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை பிப்ரவரி 21 அன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் ராஜ்குமார் தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்டதோடு, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.
- ‘ஓர் ஆயுள் தண்டனைக் கைதி முன்கூட்டியே விடுதலை செய்யும்படி கேட்பதைத் தகுதியிழக்கச் செய்வதாகச் சில குற்றங்கள் நவம்பர் 15, 2021இல் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் பட்டியலிடப்பட்டுள்ளன. தகுதி உடைய கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கு அவை தடையாக உள்ளன. அந்தக் குற்றங்களுக்கான தண்டனை குறித்த சட்ட விதிகளை அரசு மறுபரிசீலனை செய்ய இது சரியான தருணம்’ என நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருப்பது தீர்ப்பின் முக்கிய அம்சமாகும்.
- கொலை வழக்கு ஒன்றில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள்தண்டனை அனுபவித்து வந்த வீரபாரதி என்பவரது வழக்கை ஒரு முன்னுதாரணமாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அவரது விடுதலைக் கோரிக்கை அரசாலும் பின்னர் ஆளுநராலும் நிராகரிக்கப்பட்டது. 2024இல் உயர் நீதிமன்றம், ‘ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்.
- அவரது விடுதலையை மறுக்க ஆளுநருக்குத் தார்மிக உரிமை இல்லை’ என்கிற தீர்ப்பின் மூலம், தண்டனைக் காலத்தை விடுபடல்கள் இன்றி முழுமையாகக் கழித்த, நன்னடத்தையை வெளிப்படுத்திய ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதற்கான தனது ஆதரவை உணர்த்தியது.
- குற்றத்தைச் செய்யும்போது ஒருவருக்கு இருக்கும் மனநிலை, ஆண்டுக்கணக்கான சிறைவாழ்க்கைக்குப் பின்னர் முற்றிலும் மாறிவிடுகிறது. குற்றவாளியால் பாதிக்கப்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களுடனான அரசின் பேச்சுவார்த்தை, மக்களிடம் பரப்புரை போன்றவையும் தேவைப்படுகின்றன.
- கைதிகளைச் சார்ந்த குடும்பங்கள் கையறுநிலையில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. வழக்கு நடத்தத் தேவையான பொருளாதார வசதி இல்லாமல், சட்ட நடைமுறை குறித்த புரிதலே இல்லாமல் குற்றச்சாட்டுகளில் சிக்கிக்கொண்டிருப்பவர்கள்கூட, ஆபத்தான ஆயுள் தண்டனைக் கைதிகளாகக் கருதப்படுவோரில் இருக்கக்கூடும்.
- தீவிர உடல்நலக் கோளாறுகளுக்குச் சிறையில் தகுந்த மருத்துவச் சிகிச்சை கிடைக்காமல் கைதிகள் உயிரிழப்பதுகூட அவ்வப்போது நிகழ்கிறது. ஆளும் கட்சிகளைச் சேர்ந்த, பரபரப்பாகப் பேசப்பட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட கைதிகள் விடுதலை செய்யப்படுவதும் இங்கு புதிதல்ல.
- விடுவிக்கப்பட்ட கைதிகள் மீது அரசின் கண்காணிப்பு பெரும்பாலும் தொடர்கிறது. எனவே, தகுதியுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை எந்தப் பாரபட்சமும் இன்றி விடுவிக்க அரசு முன்வர வேண்டும். இதனால் சிறைத் துறை எதிர்கொள்கிற நெருக்கடி குறைவதோடு, அதன் சீர்திருத்தப் பணிகளுக்கு அர்த்தம் கிடைக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 03 – 2025)