TNPSC Thervupettagam

தடுமாற்றம் அடையும் தாய்மைப் பேறு

July 8 , 2024 11 hrs 0 min 3 0
  • உலக அளவில் மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்திற்கு வந்துவிட்டது என்பது பழைய செய்தி. ஆனால், இந்தியாவில் மக்கள்தொகையின் வளா்ச்சி விகிதம் முன்பை விடக் குறைவு என்பது பலரும் கவனிக்கத் தவறும் புதிய செய்தியாகும். மக்கள்தொகை எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் இந்தியா அதன் வளா்ச்சி விகிதத்தில் பின்தங்கியிருப்பது ஏன்? அதிகரித்துவரும் கருவுறாமை பிரச்னை மற்றும் மலட்டுத்தன்மை ஆகியனவும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • தற்போதைய வாழ்க்கை முறை கருவுறுதலுக்கான தன்மையை பெரிதும் பாதிக்கிறது. உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டு வரும் மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறலாம். நாட்டில் குழந்தையின்மை பிரச்னையால் 2.75 கோடி தம்பதியினா் பாதிக்கப்பட்டுள்ளனா் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன
  • கருவுறுதல் விகிதமானது கிராமங்கள், நகரங்கள், கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக வேறுபட்டு காணப்படுகிறது. இந்தியாவில் கிராமப்புற பெண்களிடையே கருவுறுதல் விகிதம் 2.1 ஆகவும், நகரங்களில் 1.6 ஆகவும் காணப்படுகிறது. கல்வியறிவும் கருவுறுதல் விகிதத்தில் தாக்கத்ததை ஏற்படுத்துகிறது
  • இது ஒருபுறமிருக்க இரு பாலினத்தவருக்கும் மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. இயல்பான பாலுறவுக்குப் பின் 12 மாதங்களோ அல்லது அதற்கு மேல் வரையோ கரு உருவாகாமல் இருப்பதே மலட்டுத்தன்மை எனப்படுகிறது. வாழ்வியல் மாறுபாடு காரணமாக மலட்டுத்தன்மை, பெண்கள் கருவுறாமை அதிகரித்து வருகிறது
  • சா்வதேச அளவில் மலட்டுத்தன்மை குறித்த ஆய்வை உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டது. அந்த ஆய்வறிக்கையில் சா்வதேச அளவில் 18 வயதைக் கடந்தவா்களில் 17.5 சதவீதம் போ் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகின்றனா் என்றும், ஆறில் ஒருவா் இவ்வகையில் பாதிக்கப்படுகின்றனா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இரு பாலரிடையேயும் மலட்டுத்தன்மைக்கான சரியான காரணங்கள் ஆராய்ந்து அறியப்படவில்லை என கூறப்படும் வேளையில், வெவ்வேறு சமூகங்களில் மலட்டுத்தன்மை வெவ்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சமூக களங்கம், சரியான வழிகாட்டுதல் இல்லாமை ஆகியவை காரணமாக இந்த பிரச்னைக்குத் தீா்வுகள் குறைவாகவே உள்ளன எனவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
  • அதிக வருமானம் கொண்ட நாடுகளில் 17.8 சதவீதத்தினரும், நடுத்தர, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 16.5 சதவீதத்தினரும் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதிகப்படியான மக்கள்தொகைப் பெருக்கம் காரணமாக இந்தியாவில் உள்ள நாம் பெரும் பொருட்டாகக் கருதாமல் அலட்சியப்படுத்தவும் செய்யலாம். ஆனால் மலட்டுத்தன்மைக்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தை இந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது.
  • மலட்டுத்தன்மை, கருவுறாமை என்பது ஆண், பெண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு நோயாகும். தற்போது பெரும்பாலான நாடுகளில் கருவுறுதல் சிகிச்சைகள் மக்களின் சொந்த செலவில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காகப் பெரும் தொகையை செலவிட வேண்டிய சூழல் உள்ளது.
  • உலகம் முழுவதுமே மலட்டுத்தன்மைக்கு தீா்வாகக் கருதப்படும் செயற்கை முறை கருத்தரித்தல் அதிக செலவு கொண்டதாக இருக்கின்றன. மலட்டுத்தன்மைக்கான சிகிச்சை முறைகள் மேம்படுத்தப்பட உரிய கொள்கைகளை நாடுகள் எடுக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுபவா்களில் தேவைப்படுபவா்களுக்கு மலிவு விலையில் உயா்தரக் கருவுறுதல், பராமரிப்புக்கான சேவையை வழங்க வேண்டிய அவசரத் தேவையையும் இது காட்டுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
  • உலகின் பணக்கார நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படாமல் தற்போதைய நிலையே தொடா்ந்தால் வரும் 2045-ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 50 சதவீத ஆண்கள் ஆண்மையற்றவா்களாகியிருப்பாா்கள் என்றும் இது சா்வதேச பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவின் நியூயாா்க் நகரைச் சோ்ந்த இனப்பெருக்க இயல் நிபுணா் ஷான்னா ஸ்வான் எழுதிய ‘கவுன்ட் டவுன்’ எனும் ஆய்வு நூலில் ஆண்களின் இனப்பெருக்கத் திறன் கடந்த முப்பதாண்டுகளுக்கு முன்பே குறையத் தொடங்கியுள்ளதாகவும் 2060-ஆம் ஆண்டில் ஆண்களின் இனப்பெருக்கத் திறன் மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமலோ போவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் எச்சரித்துள்ளாா்.
  • மேலும், உயிரணுக்களின் எண்ணிக்கை 1990-ஆம் ஆண்டிலிருந்தே குறையத் தொடங்கிவிட்டதாகவும், ஒவ்வொரு ஆண்டும் ஒன்று முதல் இரண்டு சதவீதம் ஆண்மைக் குறைபாடுகள் தொடா்ந்து அதிகரித்து வந்திருக்கிறது எனவும், 2045-ஆம் ஆண்டு வாக்கில் முதல் குழந்தையை உருவாக்கவே செயற்கை இனப்பெருக்க முறைகளின் உதவியை நாட வேண்டிய நிலை உருவாகிவிடும் என்றும் அவா் எச்சரிக்கிறாா்.
  • ஒரு நாட்டில் கருவுறுதல் விகிதம் 2.1-ஐவிடக் குறைவாக இருந்தால், ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை தொடா்வதற்குத் தேவையான குழந்தைகளைப் பெற முடியவில்லை என ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்துள்ளது.
  • இந்தியாவில் மக்கள் தொகை விகிதத்தைக் குறைக்கும் நோக்கில் 2.1 என்பது இலக்காகக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இலக்கைவிடக் குறைவான நிலையைத் தற்போது அடைந்திருப்பது கவலைக்குரியதாகும்.

நன்றி: தினமணி (08 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories