தட்டச்சு பயிற்சி: தூங்கி எழுந்து போட்ட உத்தரவு மாதிரி தெரியுதே?
- தமிழகம் முழுவதும் உள்ள தட்டச்சு பயிலகங்களில் இனி புதிதாக சேரும் மாணவர்களுக்கு ‘தமிழ் 99’ விசைப்பலகை மூலம் மட்டுமே பயிற்சி அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- தட்டச்சு பயிலகங்களில் பல ஆயிரம் மாணவர்கள் தமிழ், ஆங்கில தட்டச்சு பயிற்சியையும் சுருக்கெழுத்து பயிற்சியையும் பெறுகின்றனர். வேலைவாய்ப்புகளைப் பெற முக்கிய திறனாக தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி இருப்பதால் இந்த பயிற்சி இளைஞர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக இருந்து வருகிறது. தட்டச்சு பயிற்சி மையங்களில் தற்போது பழைய தட்டச்சு இயந்திரங்களின் விசைப்பலகை மூலமே பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
- ‘தமிழ் 99’ என்பது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் விசைப்பலகையாகும். உலகம் முழுவதும் ஆங்கிலத்திற்கு ஒரே விசைப்பலகை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ் மொழிக்கு அழகி+, தேஷ் தமிழ், மயிலை, அஞ்சல், பாமினி, ஐசிடிஏ, ஆங்கில எழுத்துக்கள் மூலம் தமிழ் உச்சரிப்பை உருவாக்கும் ‘ஃபொனடிக்’ விசைப்பலகை என பல விசைப்பலகைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்கிரிப்ட் விசைப்பலகை பெங்காலி, தேவநாகரி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ், ஒடியா, தெலுங்கு உட்பட 12 மொழிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட விசைப்பலகையாக உள்ளது. ஒவ்வொரு பணியிடங்களிலும் தனித்தனி விசைப்பலகை குழப்பத்தால், தொழில்நுட்ப யுகத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சியே பாதிக்கப்படுகிறது என்று தமிழறிஞர்கள் நீண்டகாலமாக கவலையை வெளிப்படுத்தினர். இதை சரிசெய்ய மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழறிஞர்களைக் கூட்டி, 99-ம் ஆண்டு மாநாடு நடத்தி, விசைப்பலகை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் ‘தமிழ் 99’ விசைப்பலகை.
- ஆனால், நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று என்பதைப் போல இருக்கின்ற விசைப்பலகை பட்டியலில் பத்தோடு பதினொன்றாக ‘தமிழ் 99’ சேர்ந்துவிட்டது. அனைத்து இடங்களிலும் ஒரே சீராக ‘தமிழ் 99’ விசைப்பலகையை பயன்படுத்த அரசு தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போது தூங்கி எழுந்ததைப் போல், 25 ஆண்டுகள் கழித்து தட்டச்சு மையங்களில் புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு ‘தமிழ் 99’ விசைப்பலகை மூலம் பயிற்சி அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத தாமதமாகும்.
- இந்த விசைப்பலகையில் பயிற்சிபெறும் மாணவர்கள் மத்திய அரசு அலுவலகங்களுக்கு வேலைக்குச் சென்றால், மத்திய அரசு அங்கீகரித்துள்ள இன்ஸ்கிரிப்ட் விசைப்பலகையில் பணியாற்ற தனியாக பயிற்சி பெற வேண்டும். இந்த குழப்பம் ஏற்படக் கூடாதென்றால் மத்திய அரசுடன் பேசி, ‘தமிழ் 99’ விசைப்பலகையை மத்திய அரசு அலுவலகங்களில் அங்கீகரிக்க முயற்சி எடுக்க வேண்டும்.
- ஏற்கெனவே மும்மொழி திட்டத்தால் மத்திய அரசும் தமிழக அரசும் போரிட்டு வரும் நிலையில், இதுபோன்ற கோரிக்கைகளை மத்திய அரசு எந்த அளவுக்கு ஏற்கும் என்பதும் சந்தேகமே. எனவே, அலுவலகங்களில் குழப்பமில்லாமல் தமிழ் மொழியை வளர்ப்பதற்கான முயற்சிகளில் தமிழக அரசு இறங்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 03 – 2025)