தனித்திறனில் கவனம் செலுத்தலாமா?
- ஏழாம் வகுப்பு படிக்கும் முகில் கீபோர்டு இசைப்பதிலும் கால்பந்து விளையாட்டிலும் கில்லி. பல விஷயங்களில் மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தபோதிலும் எழுதுவது, படிப்பது, கணக்குப் போடுவதற்கு அவர் பெரிதும் சிரமப்படுகிறார். எவ்வளவு முயற்சி செய்தாலும் சக மாணவர்களைப் போல அவரால் பாடத்தைக் கற்க முடிய வில்லை என வருத்தப்படுகிறார்.
என்ன சவால்?
- மற்ற விஷயங்களில் கெட்டிக்காராக இருந்தாலும் படிப்பில் ஆர்வமில்லாமல் இருப்பதால், முகில் வேண்டுமென்றே இப்படிச் செய்வதாக அவருடைய பெற்றோரும் ஆசிரியர்களும் நினைக்கத் தொடங்கினர். முகிலின் கற்றல் சார்ந்த இயலாமையைப் பற்றி அறிந்து கொள்ளாமல், அவர் மீது கோபப்பட்டு எதிர் மறையாக அணுகினர். இதனால் வகுப்பில் நன்றாகப் படிக்கக்கூடிய நண்பர்களிடம் இருந்து விலகி, தனிமையில் இருக்கத் தொடங்கினார் முகில். படிப்பைத் தவிர இதர திறமைகளை வெளிப்படுத்த, வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்காத சூழலில் கூடுதல் மன உளைச்சலுக்கும் உள்ளானார்.
- முகிலுக்கு அவர் படிக்கும் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் மீது அன்பு அதிகம். தான் எதிர்கொள்ளும் கற்றல் தொடர்பான சவால் குறித்து ஒரு நாள் அவரிடம் மனம்விட்டுப் பேசினார். கேட்பதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் படிப்பதிலும் எழுதுவதிலும் சிரமம் உள்ளதாகவும், கணக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளதாகவும் சொன்னார். தாழ்வு மனப்பான்மை, மனக்கவலை, மனப்பதற்றம் ஆகியவற்றால் அவதிப் படுவதாகவும், பள்ளிக்கு வருவது மன உளைச்சலாக இருப்பதாகவும் சொன்னார்.
- இதைத் தொடர்ந்து, அவருடைய வகுப்பு ஆசிரியரிடம் முகிலின் கற்றல் தொடர்பான சிக்கல் குறித்து கலந்தாலோசித்தார். முகிலின் கற்றல் திறன் 3ஆம் வகுப்பு மாணவர் அளவில் இருப்பதாக ஆசிரியர் சொன்னார். எழுதுவது, வாசிப்பதில் அதிக அளவில் தடுமாறுவதாகவும், அதிகமான எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் காணப் படுவதாகவும், முகில் அடிக்கடி விடுப்பு எடுப்பதாகவும், எளிதில் கோபப்படுவதாகவும் சில நேரம் கீழ்ப்படியாமல் நடந்துகொள்வதாகவும் வகுப்பாசிரியர் சொன்னார்.
- பின்னர் விளையாட்டு ஆசிரியர் முகிலின் பெற்றோரிடம் பேசி, அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச்சென்று ‘கவுன்சலிங்’ பெற ஆலோசனை சொன்னார். முகிலிடம் பொறுமையாகக் கலந்துரையாடிய மருத்துவர், சில பரிசோதனைகளை, மதிப்பீடு களை (Assessment) செய்த பின்னர், அவர் எதிர்கொண்டிருக்கும் சவால் பற்றி விளக்கினார்.
கற்றலும் கசக்குமா?
- முகிலுக்கு அடிப்படையில் எழுத்துருவை அடையாளம் காண்பதில், எழுத்துகளைச் சேர்த்து வார்த்தையாகச் சேர்ப்பதில், வார்த்தைகளைக் கோத்து வாக்கியமாக அமைப்பதில், வார்த்தைகளுக்கு இடையேயான இடைவெளி, எழுத்துகளுக்கிடையே இடைவெளியை அமைப்பதில், வார்த்தைகளை வாக்கியமாக அமைப்பதில் அவரது மூளை சிரமப் படுகிறது. மேலும், எழுத்துருவையும் அதன் ஒலி வடிவத்தையும் அடையாளம் காண்பதில் இயலாமையும் உள்ளது.
- எண்களை அடையாளம் காணுதலில், கற்றுக்கொள்ளுதலில், எண்கள் பற்றிய அடிப்படைப் புரிதலில் சிக்கல், கூட்டல், பெருக்கல் உள்ளிட்ட அடிப்படை கணிதத்தைக் கற்றுக்கொள்வதில் இயலாமை ஆகியவற்றால் முகில் அவதிப்படுவதாக விளக்கினார். இதை அவர் வேண்டுமென்று செய்யவில்லை, அது அவரால் முடியவில்லை, அவரை மீறிய விஷயம் என்பதைப் புரிய வைத்தார்.
- இது ‘குறிப்பிட்ட கற்றல் சார்ந்த இயலாமை’ என்று அறிவியல் ரீதியாக வகைபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். இதைப் புரிந்துகொண்டு செயலாற்றும் போது, மனக்கவலையை நீங்கி தனது இதர திறன்கள் மூலமாக வாழ்வில் சிறப்பாக வளர முடியும் என்று அவருக்கு நம்பிக்கை ஊட்டினார். தனது கற்றல் சவாலுக்கான காரணத்தைப் புரிந்துகொண்டதால் முகிலும் அவரின் பெற்றோரும் மன நிம்மதியோடு விடைபெற்றனர்.
கற்றல் இயலாமை:
- முகில் போன்று சில மாணவர்கள் அவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவை யான கற்றலை, அனுபவங்களை எளிதாகக் கற்றுக்கொள்வார்கள். மற்றவர்களிடமிருந்து தேவையான விஷயங்களைக் கேட்டுப் பெறுவதிலும் அவர்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது. வகுப்பறையில் சக மாணவர்களை வழிநடத்தக்கூடிய திறன்கள், கலைத் திறன்கள், மற்றவரோடு பழகுதல் போன்ற இதர திறன்கள் நன்றாகவே இருக்கும். அதே வேளையில், பள்ளிக் கல்விக் கற்றலில் மட்டும் சக மாணவர்களைவிட மிகவும் பின்தங்கி இருப்பார்கள்.
- இவ்வாறு வாழ்க்கைக்குத் தேவை யான பொதுவான அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் சக வகுப்பினர்போல ‘சாமர்த்தியசாலி’யாக இருந்தாலும் பாடக் கல்வியைக் கற்றுக் கொள்வதில் மிகவும் பின்தங்கி இருக்கும் நிலையைக் ‘குறிப்பிட்ட கற்றல் சார்ந்த இயலாமை’ (Specific Learning Disability) என்று குறிப்பிடுகிறோம். கல்வியைக் கற்பதில் சிக்கலை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்குக் குடும்பச் சூழல், கற்றலுக்கான போதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா, இதர பிரச்சினைகளால் கற்றல் குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டியது அவசியம்.
ஆசிரியர் - பெற்றோர் கடமை:
- இத்தகைய கற்றல் தொடர்பான சவாலை எதிர்கொள்ளும் மாணவர்களை மாற்றுத்திறன் கொண்டவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோரும் ஆசிரியரும் மாணவர்களின் நிலையைப் புரிந்துகொண்டு செயல்படுவதே முதன்மையான சிகிச்சை.
- அவர்களுக்கு ‘நிவாரணக் கல்வி’ (Remedial Education) வழங்கும்போது மீண்டு எழுவார்கள். இதர மனநலச் சிக்கலுக்கு ஆளாகவும் மாட்டார்கள். அவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து வளர்த்தெடுத்தால் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 01 – 2025)