- சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள், குலசேகர ஆழ்வார் போன்றோர் கேரளாவில் பிறந்து தமிழுக்குப் பணி செய்தனர். கி.பி.3-ஆம் நூற்றாண்டில் பாண்டியனின் அமைச்சராக விளங்கிய மாணிக்கவாசகர் வைக்கம் சென்றார். 63 சைவ நாயன்மார்களுள் ஒருவரான விறல் மிண்டன் நாயனார் மத்திய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள செங்களூரில் பிறந்தவர். சைவ நால்வருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் சேரகுலத்துக்கு நெருங்கியவராக இருந்தார்.
- கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கோயில் கட்டினான். இதனால் கேரளாவில் ‘பகவதி வழிபாடு’ என்ற பெயரில் கண்ணகி வழிபாடு வழக்கத்தில் உள்ளது. கண்ணகி விழாவுக்கு இலங்கை அரசன் கயவாகுவும், வெற்றிவேற்செழியனும் வந்துள்ளனர். இவர்கள் காலம் ஏறத்தாழ கி.பி.175 ஆகும்.
- கி.பி.10-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு நம்பூதிரி பிராமணர்கள் வட இந்தியாவிலிருந்து வந்து, சேர நாட்டில் குடியேறினர். சேர மன்னர்கள் சத்திரியர்களாக மாறி ‘சூரிய வம்சத்தினர்’ என அழைத்துக் கொண்டனர். கி.பி.1534-க்கு முன்பே ‘திருவடிராஜ்யம்’ என வழங்கப்பட்ட திருவிதாங்கூர் அரசனான மார்த்தாண்டவர்மன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து பல பகுதிகளைக் கைப்பற்றினார். ஸ்ரீவல்லப பாண்டியன், விஜயநகர வேந்தனான அச்சுதராயரிடம் உதவி கேட்டார். விஜயநகர படைகளின் உதவியுடன் திருவிதாங்கூர் படைகளைத் தோற்கடித்து பாண்டியன் இழந்த பகுதிகளை மீட்டார்.
- கி.பி.18-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை தமிழ்நாட்டு அரசர்களுக்கு உரிமை உடையதாகவே நாஞ்சில் நாட்டுப் பகுதி இருந்தது. திருவிதாங்கூர் அரசு 1941-ஆம் ஆண்டு வெளியிட்ட Topographical List of Inscription–இன் படி இந்தப் பகுதியில் உள்ள 1,100 கல்வெட்டுகளில் தமிழ்க் கல்வெட்டுகள் மட்டும் 828 உள்ளன. கல்குளம், முன்சிறை போன்ற ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் கி.பி.900 ஆண்டைச் சார்ந்தவை. அவை தமிழிலேயே உள்ளன. திருவனந்தபுரம் ஆவணக் காப்பகத்தில் காணப்படும் கி.பி.16, 17, 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாஞ்சில் நாடு தொடர்பான ஓலைச்சுவடிகள், தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டு இருப்பதை இன்றும் காணலாம்.
மொழிவாரி மாநில கோரிக்கைகள்
- 1920-ஆம் ஆண்டில் இருந்தே தனி ஆந்திரா மாநிலம் கோரி, ஆந்திரர்கள் போராடி வந்தனர். அவர்கள் ‘விசால ஆந்திரா’ என தனி மாநிலம் கேட்டுக் குரல் கொடுக்கத் தொடங்கினர். இதற்காகவே ஆந்திர மகா சபை அமைக்கப்பட்டது. ஆங்கிலேயரின் தவறான நிர்வாகத்தால் தேசிய இனம் மற்றும் மொழிவாரியாக மாநிலங்கள் அமையாத நிலை ஏற்பட்டுவிட்டது. வங்கத்தை சூழ்ச்சியால் இரண்டாகப் பிரித்தனர் ஆங்கிலேயர். அன்றைக்கு காங்கிரஸ் இதை கடுமையாக எதிர்த்தது. இந்நிலையில், ஐக்கிய தமிழகம், விசாலா ஆந்திரம், நவ கேரளம் - ஐக்கிய கேரளம், சம்யுக்த கர்நாடகம், மகா மகாராஷ்டிரம், சம்யுக்த குஜராத் என மொழிவாரியான மாநில கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
- 1954-ல் பசல் அலி தலைமையில் அமைக்கப்பட்ட மொழிவாரி மாநில எல்லைகளின் சீரமைப்பு ஆணையம் வழங்கிய தீர்வுகளில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கவில்லை. அதனால்தான் இன்றைக்கு பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இந்தக் குழுவில் இடம்பெற்ற பணிக்கருடைய ஆளுமையால் தமிழகத்துக்கு அநீதி கிடைத்தது என்று அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
- மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பு என்று 1956-இல் இன்றைய தமிழகத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டன. அன்றைக்கு இதை ஏற்றுக் கொள்ளாமல் சரியான முறையில் எல்லைகளை வரையறை செய்திருந்தால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோயிருக்காது. இன்றைக்கும் கர்நாடகமும் மராட்டியமும் எல்லைப் பிரச்சினையில் பெல்காம் மாவட்டத்தில் மோதிக் கொண்டிருக்கின்றன.
- தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி 1952 அக்டோபர் 13-ம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு தொடங்கிய 65 நாள் உண்ணாவிரதம், டிசம்பர் 15-ல் அவருடைய மரணத்தில் முடிந்தது. இப்போராட்டம் ஆந்திரத்தில் பெரும் புயலைக் கிளப்பியதால், 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதன் விளைவாக கர்நூலை தலைமையகமாகக் கொண்டு ஆந்திரம் தனி மாநிலமாக ஆக்கப்பட்டது. இருப்பினும் ஆந்திரர்கள் தமிழகத்துக்கு சொந்தமான வேங்கடமலையையும் தன் வசப்படுத்திக் கொண்டது மட்டுமன்றி, ‘மெட்ராஸ் மனதே’ என்ற கோஷத்தை முன்வைத்து அர்த்தமற்ற முறையில் போராடினார்கள்.
- இந்த நேரத்தில் ராஜாஜி, ‘ஒருகாலும் சென்னையை தமிழகம் விட்டுத் தராது, சென்னை தமிழகத்துக்குத்தான் சொந்தம்’ என்று வலியுறுத்தியது மட்டுமல்லாமல், பிரதமர் நேருவிடம் கறாராகச் சொல்லி கடிதமும் எழுதினார். ம.பொ.சியும், ராஜாஜியோடு இணைந்து இப்பணியை மேற்கொண்டார். சென்னை மாகாணம், தமிழகம் உருவாகியதற்கு பலரின் தியாகங்கள் அளப்பரியவை. அந்த வகையில், தமிழகத்தின் வட எல்லையான திருத்தணியையும், திருப்பதியையும் தமிழகத்துக்குப் பெற சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நடத்திய போராட்டங்கள் இன்றைக்கும் வரலாற்றில் உள்ளன.
நதிநீர் பிரச்சினைகள்
- கேரளத்திடம் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, பாலக்காடு, அட்டைப்பாடி போன்ற பகுதிகளை இழந்தோம். கர்நாடகத்திடம் வெங்காலூர் என்று அழைக்கப்பட்ட பெங்களூரு, கோலார் தங்கவயல், கொள்ளேகால், குடகுப் பகுதிகள் போன்ற பல பகுதிகளையும் நாம் இழந்துள்ளோம். இதனால் தமிழகத்தின் காவிரி, தென்பெண்ணை மீதும், ஒகேனகல்லில் நமது ஆதிபத்தியங்கள் அவ்வப்போது கேள்விக்குறியாகி விடுகின்றன.
- கேரளத்திடம் இழந்த பகுதியால் தெற்கே கன்னியாகுமரியில் நெய்யாறு, திருநெல்வேலி மாவட்டம் அடவி நயினாருக்கு நீர் வரத்து, செண்பகவல்லி பிரச்சினை, அச்சங்கோயில் - பம்பை - தமிழகம் வைப்பாறு இணைப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகர் அணை, முல்லை பெரியாறு, ஆழியாறு பரம்பிக்குளம், சிறுவாணி, பம்பாறு, அமராவதி, பாண்டியாறு, புன்னம்புழா போன்ற பல நதி நீர் பிரச்சினைகளும், கம்பம் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோட்டப் பிரச்சினையிலும் இன்றைக்கும் சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை.
- இதில், குறிப்பாக ஆந்திரத்திடம் பாலாறு, பொன்னியாறு, கர்நாடகத்தில் காவிரி, தென்பெண்ணை, ஒகேனக்கல் மற்றும் மேற்குறிப்பிட்ட நதிநீர் சிக்கல்கள் குறித்தும், இந்திய தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்ற வழக்கில் இந்த நதி தீரங்களும் தீர்க்கப்பட வேண்டும் என்று 1983-ஆம் ஆண்டு நான் பொதுநல வழக்கு தொடுத்தேன். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்து, 2012, பிப்.27-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. ஆனால், இன்னும் நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
- கண்ணகி கோயிலைப் பொறுத்தவரை, 82 - 83-ம் ஆண்டு காலகட்டத்தில், வழிபடச் சென்ற தமிழக மக்களை காவல் துறையினர் அடித்து விரட்டினர். இதை அறிந்து அன்றைக்கு அண்ணன் நெடுமாறன், என் போன்றோர் எல்லாம் இன்றைக்கு கண்ணகி கோயில் உள்ள வண்ணாத்திப் பாறை சென்று கண்ணகியினுடைய விக்கிரகத்தை எடுத்துவைத்து பூஜைகள் செய்ததெல்லாம் உண்டு. அந்த நிகழ்வுக்கு குமரி அனந்தனும் திடீரென வந்து விட்டார். இத்தகைய சூழ்நிலைகளுக்குப் பிறகு, இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தேன். அதன் பிறகுதான் தமிழக மக்கள், ஓரளவுக்கு பிரச்சினை இல்லாமல் கண்ணகி கோயிலுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
- பாலக்காடு பகுதியில் உள்ள சாம்பாறை, மூங்கில் மடை, வண்ணாமடை போன்ற 100 கிராமங்களில் தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழர்களுக்கு அங்கு எந்த சலுகையும் இல்லை. ஓணம் பண்டிகைக்கு தமிழக அரசு இங்கு விடுமுறை தருவதுபோல, தைப் பொங்கலுக்கு அங்கு விடுமுறை இல்லை என்று அந்த பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர். இவர்கள் பயிர் செய்கின்ற காய்கறிகள் யாவும் கொச்சி போன்ற நகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்குள்ள ரப்பர் தோட்ட தமிழ் விவசாயிகளுக்குக்கூட சலுகைககள் மறுக்கப்படுகின்றன என்ற செய்திகள் வருகின்றன.
- கடந்த 10 - 15 ஆண்டுகளாக கேரளா, நம்முடைய எல்லைப் பகுதி மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுப் பகுதிகளிலும் மருத்துவக் கழிவுகள், குப்பைகளை கொட்டி விட்டுச் செல்லும் நிலை தற்போதும் நீடிக்கிறது.
ம.பொ.சி. போராட்ட வரலாறு
- வடக்கு எல்லை போராட்டத்தில் ம.பொ.சி., கொ.மோ.ஜனார்த்தனம், சோமா.சுவாமிநாதன், விநாயகம், ஆ.தாமோதரன், கிருஷ்ணமூர்த்தி, அ.லூயிஸ், மு.வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் ஆகியோருடன் ‘திருப்பதி மீது படையெடுப்பு’ என்ற போராட்டத்தையும் பிரச்சார பணியையும் மேற்கொண்டார். மங்களம் கிழார் அழைப்பை ஏற்று வட எல்லைப் பகுதிக்கு புகைவண்டி மூலமாக திருப்பதி வரை செல்ல ம.பொ.சி. பயணப்பட்டார். அவரின் திருப்பதி நுழைவைத் தடுக்க பலர் முனைந்தபோதும் கீழ் திருப்பதியில் உள்ள குளக்கரை கூட்டத்தில் அவர் பேசினார்.
- அப்பொழுது, திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு, மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினர். அதைப் பொருட்படுத்தாமல் ‘வேங்கடத்தை விடமாட்டோம்’ என்று ஒரு மணி நேரம் கர்ஜித்தார், ம.பொ.சி. திருப்பதி, சித்தூர், திருக்காளகஸ்தி, திருத்தணி, பல்லவநேரி, கங்குந்திகுப்பம் போன்ற பகுதிகளை நியாயமாக தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.
- 09.04.1953 முதல் 24.4.1953 வரை கடையடைப்பும், பொது வேலைநிறுத்தமும் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற்றது. புத்தூர் கலவரத்தில் ம.பொ.சி.யை தாக்க சதிகளும் தீட்டப்பட்டன. அந்த கலவரத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி.யைக் காப்பாற்றியதாகவும், அவரை ‘நெல்லை தமிழன்’ என்று ம.பொ.சி. போராட்ட வரலாற்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1953-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி எல்லை தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத் தண்டனை பெற்றார் ம.பொ.சி.
- ம.பொ.சி. தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக தமிழக - ஆந்திர முதல்வர்கள் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசி, வடவேங்கடம் போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் செல்லாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஒரு காலத்தில் வடஆற்காடு மாவட்டத்தில் இருந்த சித்தூர், திருப்பதி ஆகியவற்றை ஆந்திரர் எடுத்துக் கொண்டனர். இப்பிரச்சினை குறித்து திரும்பவும் திருப்பதியில் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசியதன் விளைவாக தமிழக - ஆந்திர சட்டமன்றங்களில் ஒரே நாளில் இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ம.பொ.சி. திருத்தணி எல்லைப் போராட்டம் மட்டுமல்லாமல் நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டத்தையும், கூடலூர், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தில் இணைக்க வேண்டும் என்ற போராட்டங்களுக்கும் துணை நின்றார்.
- செங்கோட்டையை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் சட்டநாதக் கரையாளர் ஆவார். அதேபோல் குமரி மாவட்ட கோரிக்கை சாம் நத்தானியல், நேசமணி போன்ற போர்க்குணம் கொண்டோரின் தலைமையில் பிறப்பெடுத்தது. அழைப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும், தமிழகத்தில் நடக்கும் அனைத்து மாநாட்டுக்கும் சென்று குமரியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானங்களை முன்மொழிய வேண்டிக் கொள்வது பி.எஸ்.மணியின் சலியாத நடவடிக்கை ஆகும்.
- மணியினுடைய கோரிக்கையை காதில் போடாமல் அவரை பலர் தவிர்த்தபொழுதும் கூட, அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் தொடர்ந்து போராடினார். மணிக்கு ம.பொ.சி.யின் ஆதரவு இருந்து வந்தது. குமரியில் 1954 ஜூனில் நேசமணி தலைமையேற்று போராட்டங்களை நடத்தி சிறை சென்றார். அச்சமயத்தில் ம.பொ.சி. மூணாறு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதானதைக் கண்டித்து ம.பொ.சி. குரல் கொடுத்தார். திருவிதாங்கூர் கல்குளத்தில் நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர்.
- 1950-ல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் எடுத்தது. இதுகுறித்து கொச்சி முதலமைச்சர் பானாம்பள்ளி கோவிந்தமேனனும், அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டை பயணியர் விடுதியில் சந்தித்துப் பேசினர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மணி ஏற்றுக்கொள்ளாமல் கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்றும், எந்த சமரச திட்டத்துக்கும் தயார் இல்லை என்றும் தெரிவித்தார்.
- குஞ்சன் நாடார் போன்ற பல்வேறு போராட்ட தளபதிகள் இப்பிரச்சினையில் அணிவகுத்தனர். அரசு அலுவலகங்கள் முன்பு மறியல், பொதுக் கூட்டங்கள் போன்றவை தினமும் குமரி மாவட்டத்தில் நடைபெற்றன.
- நேசமணியின் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்ட பின்பும், குஞ்சன் நாடார் போன்ற தளபதிகள் போலீஸாரின் தடியடிகளுக்கு ஆட்பட்டனர். அச்சமயம் தலைமறைவாக இருந்து போராட்டத்தை நடத்தி வந்த மணியை, திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலீஸார் கைது செய்து, திருவனந்தபுரம் சிறையில் வைத்தனர். அதேபோல், செங்கோட்டையில் போராட்டங்கள் நடத்திய சட்டநாதக் கரையாளரும் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் வைக்கப்பட்டார்.
- இறுதியாக காமராஜரும் திருவிதாங்கூர் - கொச்சி உள்ளடக்கிய கேரள முதல் அமைச்சர் பானாம்பள்ளி கோவிந்தமேனன் ஆகியோரும் பேசியபின் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை கேரளம் எடுத்துக்கொண்டது. தேவிகுளம், பீர்மேடு கேரளத்துக்கு சென்றதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. கன்னியாகுமரி, செங்கோட்டை தமிழகத்தில் இணைந்தது. பெரியாறு அணையை கையகப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் கேரளம் இறங்கியபொழுது காமராஜர் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
- மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிலும் சிலர் ஆதரவாக இருந்தனர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்த ஜீவா போன்ற தலைவர்களும் மொழிவாரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
- ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தியாகி சங்கரலிங்கனார் விருதுநகரில் தேசபந்து திடலில் 77 நாட்கள் உண்ணாநோன்பு இருந்து தன்னுடைய உயிரையே அர்ப்பணித்தார். தனது கோரிக்கையை கம்யூனிஸ்ட் தலைவரான ஐ.மாயாண்டி பாரதிக்கு கடிதம் மூலமாகத் தெரியப்படுத்தினார். பிற்காலத்தில் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையை அண்ணா முதல்வராகி நிறைவேற்றினார்.
தமிழர் இழந்த நிலப் பகுதிகள்
- தமிழகத்துக்கும் கேரள மாநிலத்துக்கும் இடையே உள்ள எல்லை 830 கி.மீ. ஆகும். கோவை மாவட்டம் முதுமலை தொடங்கி தெற்கே நெய்யாற்றங்கரை, கொல்லங்கோடு வரை நீண்டுள்ளது. தமிழக - கேரள மாநிலங்கள் எல்லை தூரம் 203 கி.மீ. அளவில்தான் இதுவரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 627 கி.மீ. தூரம் எல்லைகள் நிர்ணயிக்கப்படாமலேயே உள்ளன. இதற்கு கேரளா அரசு ஒத்துழைப்புத் தரவில்லை.
- இதற்கிடையே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கேரள அரசு, தமிழக - கேரள எல்லையை மறு ஆய்வு செய்தது. இது தேனி மாவட்டத்தில் பெரும் பிரச்சினையாகி, விவசாயிகள் போராடினார்கள்.
- கன்னியாகுமரி மாவட்டம், வடக்கே தோவாளையில் இருந்து தெற்கே களியாக்காவிளை வரை தமிழகத்தோடு இணைந்தது. நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு ஆகியவற்றை இழந்ததால் காமராஜர் ஆட்சியில் நாம் கட்டிய நெய்யாறு அணையை கேரளா மூடிவிட்டது.
- விசாகப்பட்டணம், கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர், கடப்பை, கர்நூல், பல்லாரி, அனந்தபுரம், செங்கற்பட்டு, சித்தூர், வடஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, மலையாளம், தென்கன்னடம், சென்னபட்டணம் ஆகியவையாகும்.
- தியாகங்கள் பல செய்து மீட்டுத் தந்த தணிகை, குமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க போராடிய தியாகச் செம்மல்களின் கீர்த்தியை நினைவில் கொள்வோம். அதேபோல், நாம் இழந்த மண்ணை எப்படி மீட்பது என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 03 – 2025)