TNPSC Thervupettagam

தமிழக பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத குழுமம்...!

December 23 , 2024 3 hrs 0 min 12 0

தமிழக பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத குழுமம்...!

  • தமிழக தொழில் துறை வரலாற்றில் முருகப்பா குழுமத்துக்கு சிறப்பு இடம் உண்டு. செராமிக்ஸ், மின்சார வாகனங்கள்,
  • வாகன உதிரி பாகங்கள், மின்விசிறிகள், மின்மாற்றிகள், ரயில்வே சிக்னல் உபகரணங்கள், கியர்கள், சைக்கிள்கள், உரம், சர்க்கரை, டீத்தூள் உள்ளிட்டவற்றை தயாரிக்கிறது. இந்த குழுமம் உருவான வரலாற்றை அதன் முன்னோடிகளில் முதல்வரான ஏ.எம்.எம். அருணாச்சலம் வழியாக விவரிக்கிறது ‘Looking Back From Moulmein’ என்ற புத்தகம்.
  • 1918-ம் ஆண்டு நாட்டுக்கோட்டை செட்டியார் குடும்பத்தில் பிறந்த அருணாச்சலம், தனது தந்தை திவான் பகதூர் முருகப்பா செட்டியாரின் வழிகாட்டுதலில் வளர்ந்தவர். கடின உழைப்பு, நேர்மை, சமூக, சமுதாய சேவை ஆகியவற்றின் மீது நன்மதிப்புகளை கொண்ட இவர் வணிகத்தில் மட்டுமல்லாது சமூக நலனிலும் பெரிதும் கவனம் செலுத்தியவர்.
  • அடிப்படையிலேயே வசதியான குடும்பம் என்பதால் முருகப்பா செட்டியார் தெற்கு பர்மாவில் உள்ள (மியான்மர்) மவுல்மெய்ன் நகரில் வெற்றிகரமாக தொழில் நடத்திக் கொண்டிருந்தபோது, குடும்பத்தின் எதிர்காலத்துக்காக சென்னையில் சொத்துகளை வாங்கி அடித்தளம் அமைத்தார். ஏ.எம்.எம். அருணாசலம் அவரது சகோதரர்கள் முருகப்பா மற்றும் வெள்ளையன் ஆகியோருடன் இணைந்து ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுவதில் நம்பிக்கை கொண்ட பரஸ்பர நன்மைக்கான கூட்டாண்மை ஒத்துழைப்பின் கொள்கையினால் வழிநடத்தப்பட்டனர்.
  • இந்த அணுகுமுறையை இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச கூட்டாளிகளுடனும் தங்கள் தொழில் தொடர்புகளில் எல்லா காலகட்டத்திலும் அவர்கள் வெளிப்படுத்தினர். குழுமத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வலுவான நீடித்த உறவுகளை வளர்ப்பது முருகப்பா குழுமத்தின் தாரக மந்திரமாகவே இருக்கிறது என சொல்லலாம். சுதந்திரத்துக்குப் பிறகு நகரத்தார்களின் பரம்பரை தொழிலான வங்கி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து தொழில் துறைக்கு மாறிய அருணாச்சலம், அந்த காலகட்டத்தில் சைக்கிள்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் ஏன் சைக்கிள் தயாரிக்கக் கூடாது என்ற முயற்சியில் ஈடுபட்டார்.
  • சர் ராமசாமி முதலியாரின் உதவியோடு ஹெர்குலஸ் நிறுவனத்துடனான கூட்டு முயற்சியில் 1949-ம் ஆண்டு டிஐ சைக்கிள் ஆப் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டது. பொருளாதாரத்தில் தற்சார்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டார் அருணாச்சலம். இதனால், இறக்குமதிக்கு பதிலாக உள்நாட்டிலேயே சைக்கிள் உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதற்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
  • சைக்கிள்களுக்கு தேவையான இரும்பு குழாய்களை தயாரிப்பதற்கு டியூப் ப்ராடக்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனமும், செயின்களை உற்பத்தி செய்ய TI டைமண்ட் செயின் நிறுவனமும் தொடங்கப்பட்டன. அவரது தெளிவான தொழில்நுட்ப அணுகுமுறையும் தொலைநோக்கும் முருகப்பா குழுமத்தை பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைய வழிவகுத்தது.

எல்ஐசி கட்டிடடம்:

  • கார்பரண்டம் யுனிவர்சல் நிறுவனம் முதலில் எமரி ஷீட் என்ற உப்புத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டது. இப்போது, பல்வேறு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சாணைக் கற்கள் என்னும் கிரைண்டிங் வீல்களை தயாரிப்பதில் உலக அளவில் பெயர் பெற்று விளங்குகிறது. நியூ அம்பாடி - ரப்பர் எஸ்டேட், சிடபிள்யுஎஸ் இந்தியா - டீ எஸ்டேட் போன்ற நிறுவனங்களை வெற்றிகரமாக கைப்பற்றினார்.
  • ஒரு காலத்தில் சென்னையில் உயரமான கட்டிடமாக விளங்கிய எல்ஐசி கட்டிடம், TI சைக்கிள், அசோக் லேலண்ட் தொழிற்சாலை, வெலிங்டன் மருத்துவமனை, சோழா, ட்ரைடென்ட் ஓட்டல்கள், கருமுத்து சென்டர் ஆகியவற்றை முருகப்பா குழுமத்தின் கோரமண்டல் இன்ஜினியரிங் நிறுவனம் கட்டியது என்கிற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது.
  • அசோக் லேலண்ட் பின்னணி ஆஸ்டின் கார்களை இந்தியாவில் அசெம்பிள் செய்ய டெல்லியைச் சேர்ந்த ரகுநந்தன் சரண், டி.டி.கிருஷ்ணமாச்சாரி (டிடிகே) ஆகியோரின் முயற்சியினால் அசோக் மோட்டார்ஸ் நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது. டி.டி.கே.வுடன் கொண்டிருந்த முருகப்பா செட்டியாரின் நட்பும், ஏ.எம்.எம். குடும்பத்தினரின் பெரிய முதலீட்டு தொகையும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு கை கொடுத்தது.
  • ஆரம்பகட்டத்தில் ஆஸ்டின் மோட்டார்ஸ் உடன் தொழில் தொடங்கிய சரண், பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த லேலண்ட் நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பித்ததுதான் அசோக் லேலண்ட் நிறுவனம். சவாலாக இருந்த ஆரம்ப காலகட்டங்களில் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அருணாச்சலம் அயராது பாடுபட்டதோடு, 70-களில் நிலவிய தொழிலாளர் பிரச்சினைகளின்போது உறுதியாக நின்று நிர்வாகத்துக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கினார். ஏ.எம்.எம். அருணாச்சலம், தனது வியாபார அணுகுமுறையில் மிகவும் தனித்துவமான தலைமைத்துவத்தைக் காட்டினார்.
  • ஈ.ஐ.டி. பாரி நிறுவனத்தை கையகப்படுத்தியது அவரது வியாபார நுட்பத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இதை அவர் ஒரு வெறும் நிறுவனமாக பார்க்கவில்லை, மாறாக ஒரு சமூக வளப்பொருளாக அதைப் பார்த்தார். அவரது வியாபார மேலாண்மை என்பது மிகவும் பரந்த மற்றும் ஆழமான சிந்தனையைக் கொண்டது.
  • நிதி மட்டுமல்லாமல் மனித வளம், சந்தை நிலை, தொழில்நுட்ப வளர்ச்சி, எதிர்காலப் பார்வை ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பார்த்தார். ஒரு வணிகம் என்பது சமுதாயத்துக்கு சேவை செய்யும் கருவி என்ற கண்ணோட்டத்தின் மூலம் லாப நோக்கை கடந்து கல்வி, சுகாதாரம், கிராமப்புற மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை முருகப்பா பவுண்டேஷன் மூலமாக முன்னெடுத்தார்.
  • சிஎன்பிசி-டிவி18 இந்தியா ஊடகம் இந்த ஆண்டுக்கான பிசினஸ் லீடர் விருதுகளை (ஐபிஎல்ஏ) சமீபத்தில் வழங்கியது. இதில், முருகப்பா குழுமத்தின் டியூப் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் (டிஐஐ) செயல் துணைத் தலைவரும், சோழமண்டலம் பைனான்ஸ் தலைவரும், இயக்குநருமான வெள்ளையன் சுப்பையாவுக்கு சிறந்த வணிகத் தலைவர் என்ற விருது வழங்கப்பட்டது. இவர் முருகப்பா குழுமத்தின் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஜி பவர் கையகப்படுத்தல்:

  • கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த சி.ஜி. பவர் அண்ட் இன்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை டிஐஐ கையகப்படுத்தி, அதை மேம்படுத்தியது வெள்ளையனின் நிர்வாகத் திறனுக்கு சான்று ஆகும். கவுதம் தாப்பர் தலைமையிலான அவந்தா குழுமத்துக்குச் சொந்தமான சிஜி பவர் நிறுவனம், டிஐஐ துணை நிறுவனமான சாந்தி கியர்ஸ் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாமல் இருந்தது.
  • அந்த நேரத்தில் (2019) சிஜி பவர் நிறுவனத்தின் கடன் ரூ.2,000 கோடிக்கு மேல் இருந்தது. நவம்பர் 2020-ல் வெள்ளையன் தலைமையிலான டிஐஐ நிறுவனம், சிஜி பவரின் 57% பங்குகளை ரூ.800 கோடிக்கு வாங்கியதோடு அதை கடனில்லா நிறுவனமாக மாற்ற ஐந்தாண்டு திட்டத்தை நிர்ணயித்தது.
  • ஆனால், திட்டமிடப்பட்டதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 2022-ம் ஆண்டிலேயே சிஜி நிறுவனத்தின் எல்லா கடன்களையும் அடைத்துவிட்டது. இந்த ஆண்டின் யர்னஸ்ட்யங் உலகத் தொழில் முனைவோராக வெள்ளையன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முருகப்பா குடும்பத்தில் தலைமைப் பொறுப்புக்கு வரும் ஒவ்வொருவரும், அந்த குழுமத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் தொடர்ந்து வெற்றி கண்டுள்ளனர்.
  • முருகப்பா குழுமம் 2024 நிதியாண்டில் ரூ.77,881 கோடி விற்றுமுதலை பதிவு செய்துள்ளது. 83,500 ஊழியர்களுடன் தமிழக பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத இடத்தில் முருகப்பா குழுமம் உள்ளது. Looking Back From Moulmein புத்தகம், அருணாச்சலத்தின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமல்லாமல் சுதந்திரத்துக்கு பிந்தைய இந்திய தொழில் துறையின் பரிணாம வளர்ச்சி பற்றிய பார்வையையும் வழங்குகிறது.
  • ஒரு காலத்தில் சென்னையில் உயரமான கட்டிடமாக விளங்கிய எல்ஐசி கட்டிடம், TI சைக்கிள், அசோக் லேலண்ட் தொழிற்சாலை, சோழா, ட்ரைடென்ட் ஹோட்டல்கள், கருமுத்து சென்டர் ஆகியவற்றை முருகப்பா குழுமத்தின் கோரமண்டல் இன்ஜினியரிங் நிறுவனம் கட்டியது.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 12 – 2024)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories